உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனகார்டியேசீ

விக்கிமூலம் இலிருந்து

அனகார்டியேசீ (Anacardiaceae) மாமரக் குடும்பம். இரட்டை விதையிலையுள்ளவை. அறுபது சாதிகளும் ஐந்நூறு இனங்களும் உண்டு. பெரும்பாலும் வெப்ப வலயத்தில் வளர்பவை. மத்தியதரைப் பிரதேசம், கிழக்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களிலும் உண்டு. இந்தியாவிலுள்ள மரங்களில் முக்கியமான சில இனங்கள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மா, முந்திரி, மரிமாங்காய், சேங்கொட்டை, ஒதியன், காட்டுமா இந்தக் குடும்பம். இதில் உள்ளவை மரங்கள் அல்லது குற்றுச் செடிகள். அவற்றில் பொதுவாக ஓலியோ - ரெசின் உள்ள பால் உண்டு. சிலவற்றின் பால் உடம்பில் பட்டால் கொப்புளிக்கும். இலைகள் மாறியமைந்தவை. பெரும்பாலும் முழு இலைகள். சிலவற்றில் மூன்று பிரிவு இலையும், சிலவற்றில் ஒற்றைக் கூட்டு இலையும் உண்டு. இலையடிச்செதில் கிடையாது. பூக்கள் சிறியவை; நிரம்பக் கொத்துக் கொத்தாகக் கலப்பு மஞ்சரியாக வளரும். ஒழுங்கான அமைப்புள்ளவை ; ஒருபால், இருபால் பூக்கள் கலந்து ஒரே கொத்தில் இருக்கும். புல்லி 3-5; அல்லி 3-5 பிரிந்தவை, தழுவு இதழமைப்புள்ளவை. கேசரம் சாதாரணமாக அல்லியிதழ்களத்தனை. சூலகம் மற்ற உறுப்புக்களுக்கு மேலுள்ளது, அல்லது அதற்கு அடியிலிருக்கும் ஆதான மண்டலத்தில் (Disc) சிறிதளவோ நிரம்பவோ அழுந்தியிருக்கும். சூலிலை 3-1. சூற்பை 1 அல்லது 2-6 அறைகள் உள்ளது. அறைக்கு ஒரு சூல் இருக்கும். பெரும்பாலும் கனிக்கு ஒரு சூலே முதிரும். கனி உள்ளோட்டுத் தசைக்கனி அல்லது கொட்டை. கொட்டை சிலவற்றில் வெடிக்கும்.

மாமரம் பலவிடங்களில் பயிர் செய்யப்படுகிறது. பழம் தின்னவும், காய் ஊறுகாய், வற்றல் போடவும் உதவும். மரம் வேலைக்கும் விறகுக்கும் பயன்படும். முந்திரிப்பருப்பு மிகுந்த சுவையுள்ளது. இதன் கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய், வர்ணம் கொடுப்பதில் பயன்படுகிறது. முந்திரிக் கொட்டை என்று கூறுவதே உண்மையான முந்திரிக்கனி. நாம் உண்ணும் பழம் பூவின் காம்பே. அதுவே கொட்டை முதிரும்போது வளர்ந்து, அழகிய நிறங்களுள்ளதாய் காரமும் இளிப்புமுள்ள சாறு நிறைந்த பொய்க் கனியாகின்றது. இது அமெரிக்காக் கண்டத்து மரம், பிஸ்தாக்கியோ கொட்டையின் பருப்பும் தின்னலாம். இதன் ஓரினத்திலிருந்து ஒருவித டசப்பென்டீன் எடுக்கிறார்கள். ஒதிய மரம் சாலைகளில் நடவும் ஏற்றம் போடவும் பயன்படுகிறது. வெயிற் காலத்தில் இதன் இலைகள் உதிர்ந்து விடுவதால் நிழல் கொடுப்பதில்லை. கிளைகளை வெட்டி ஈட்டால் அவை எளிதாக வளர்ந்து விடும். செல்கொட்டை {கேராள்கொட்டை} இளங்காயிலிருந்து எடுக்கும் கறுப்புப்பால் பருத்தி ஆடைகளுக்குக் குறி வைப்பதற்கு உதவும். சேங்கொட்டைப் பாலினால் ஒருவகை வார்னிஷ் செய்கினார்கள். காட்டு மாம்பழம் தின்னக்கூடிய சிறு பழம். அதன் விதையே சுவையான சாரப்பருப்பு. ரூஸ் (Rhus) மரம் தோல் பதனிடவும் சாயம் போடவும் உதவும். இதில் ஓரினம் லாக்கர் (Lacquer) மரம். மற்றோரினத்தின் காயிலிருந்து மெழுகு எடுக்கிறார்கள் மா, மூந்தில், சேங்கொட்டை முதலியவற்றைப் பற்றிய தனிக் கட்டுரைகள் உண்டு.