கலைக்களஞ்சியம்/அறநூல் வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

அறநூல் வரலாறு : மனித இனத்தின் நடத்தை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கங்கள் முதலியவைகளைப் பரிசீலனை செய்யும் சாத்திரம் அற நூல் எனப்படும். மனிதர்கள் வழக்கமாகச் செய்யும் காரியங்களில் அடிப்படையான மூலத்தத்துவங்கள் என்ன? எந்த அளவுகோலைக் கொண்டு மனிதனுடைய குணஞ் செயல்களை மதிப்பிடுவது? இக்கேள்விக்கு விடை தருவது அற நூலின் தொழில்.

அறச் செயல் எது? தேர்ந்த அறிவுடன் சிந்தித்துச் சுயேச்சையாய்த் தீர்மானித்த விருப்பத்துடன் சங்கற்ப சக்தியால் இடையூறுகளையும் எதிர்ப்புக்களையும் வென்று எடுத்த காரியத்தை முடிப்பது தான் அறச் செயல் எனப்படும். அறத்திற்கு அடிநிலையாக இருப்பவை அறிவும் சுவாதீனமுமாகும். அறிவும் சுவாதீனமும் இல்லாவிட்டால் பொறுப்பில்லை ; பொறுப்பின்றேல் அறமில்லை. ஆனால் சுவாதீனத்துடன் சங்கற்பித்துச் செய்யப்படும் காரியங்கள் யாவும் அற முறையில் கருதப்படுவதில்லை. தரும காரியங்களில் கடமையுணர்ச்சி ஊறிக் கிடக்கின்றது. ஜீவனோபாயமாகவோ, ஓர் இலாபத்தைக் கருதியோ, அல்லது தண்டனைக்கு அஞ்சியோ வலுக்கட்டாயத்தாற் செய்யப்படும் காரியம் கடமையாகாது. கடமை யுணர்ச்சியே அறநிலையின் உயிர்நாடி.

கடமை சமூகத்தில் தான் பிறக்கிறது. கடமைகளைத் தன்னலங் கருதாது கடமைகளின் பொருட்டே செய்து முடித்தால்தான் ஒருவன் தன் கடமையைச் செய்தவனாவான். நற்செய்கைகளைப் புரியும் வரையில் தான் ஒருவன் தக்கோனெனப்படுவான். எனவே, அறவாழ்க்கையில் ஓய்ச்சல் ஒழிவே இல்லை.

அறவாழ்வின் தோற்றம் : அறவாழ்க்கையின் வரலாறும் மனித வாழ்க்கையின் வரலாறும் ஒன்றே. மனித வாழ்க்கையின் உண்மையை உள்ளபடி அறியவேண்டுமாயின், தொடக்கக் கால முதல் அது எப்படியெப்படி மாறிற்று, எந்தெந்த நிலைகளையடைந்து வளர்ந்தது, தற்காலம் இருக்கும் நிலைக்கு எங்ஙனம் வந்தது என்று விளக்கிக் காட்டுவது மிகவும் அவசியம்.

அறவளர்ச்சியின் மூன்று நிலைகள் : ஆதி மக்களுடைய வாழ்க்கையில் துல்லியமான அறப்பண்பைக் காண முடியாது. அறிவு முதிர்ச்சியும், சீர்தூக்கிப் பார்க்கும் மனப்பான்மையும் அறவுணர்வின் முக்கியக் கூறுகள். இவை இவர்களிடம் இல்லை. அறத்தின் வித்துக்கள் சில காணப்படுகின்றன. அவைகளும் சமுதாயக் கட்டுத் திட்டங்களுக்குள் அழுந்திக் கிடக்கின்றன. குலக் கட்டுப்பாட்டுக்கும் அதன் தண்டனைக்கும் பயந்து காரியங்கள் செய்யப்பட்டு வந்தன. “அவை நேர்மையானவை; சுயமாகவே மதிப்புடையவை ; அவைகளைச் செய்வது நம் கடமை என்ற அறிவுடன் மகிழ்ச்சியோடு செய்து முடித்தால்தான் அவை அறச் செயல்களாகும்” என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் சொன்னதை நாம் உணரவேண்டும். இப்படிப்பட்ட பூரண அறவாழ்க்கை நம்முள் பக்குவமடைவதற்கு மூன்று நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது.

அறவளர்ச்சியின் முதல் நிலை : காட்டுமிராண்டி, தன் முரட்டுப் போக்கையடக்கிக் கூட்டத்தார் அனுசரிக்கும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றித் தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியது மனித முன்னேற்றத்தின் முதற்படி யெனலாம். இது மனிதனுடைய அறிவையும், துணிவையும், குறிக்கோள்களையும் உயர்த்தியதோடு, அறவாழ்க்கையின் உயிர்நிலையான சமூக அமைப்பிற்கு அடிப்படையாகவும் அமைந்தது.

இந்நிலையில் அறத்தின் கூறுகள் தோன்றிய போதிலும், அவை இயற்கை இச்சைகளின் தூண்டுதல்களாகவோ, அல்லது புறக் கட்டுப்பாட்டின் விளைவுகளாகவோ இருக்கின்றன. பகுத்தறிவினால் ஏற்பட்ட நன்னெறி வாழ்வின் பண்புகளல்ல. ஆயினும் மனித வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இவை தோன்றியிராவிடின், அவன் விலங்காகவே வாழ வேண்டியிருந்திருக்கும். எனவே மனித குலத்திற்குச் சிறப்புக் குணமாக விளங்குவது அறம் என்பதும், அதன் மூலத் தத்துவங்கள் மனித வரலாற்றின் முதல் நிலையிலேயே தோன்றின என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.

அறவளர்ச்சியின் இரண்டாவது நிலை : வழக்கம், ஆசாரம், சம்பிரதாயம், சட்டம், ஸ்மிருதி, தேவகட்டளை என்பவைகளைக் கொண்டு சமுதாயம், தனி மனிதனுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தி வந்ததால் இந்நிலை சம்பிரதாய தரும நிலை யெனப்படும். இந்நிலையில், வாழ்க்கையின் குறிக்கோள் பொது நலனைப் பயக்கக் கூடியதாயினும், சமூகப் பிரமாணம் என்னும் ஆசாரத்திற்கு அஞ்சி, வழக்கத்தாலும் சம்பிரதாயத் திட்டத்தாலும் கட்டாயத்தினால் தூண்டப்பட்டு வாழ்க்கை நடைபெறுகிறது. ஆசாரம் என்பது சமூக வழக்கம். குழந்தைப் பருவம் முதற்கொண்டே ஒவ்வொருவனும் ஆசாரத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பழக்கப்பட்டான். மனிதன் எழுதக் கற்றுக்கொண்டதும், இந்த ஆசாரங்களை ஒழுங்காக்கிச் சட்டங்களாகத் திட்டப்படுத்தினான். அவை ஸ்மிருதிகளாகவும், தேவ கட்டளை களாகவும், வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமூகம் அறத்திற்குப் பிறப்பிடம். சமூக நன்மைக்குக் கருவிகளாயிருந்த ஆசாரங்களே தரும விதிகளாக உருவெடுத்தன. ஆசாரங்களும் அறச்சட்டங்களும் நடுநிலைமை தாங்கி, ஓரமின்றி, பொது நன்மையொன்றையே குறிக்கோளாகக்கொண்டு, அறத்தைக் காத்து வந்தன. முதியோரும், பூசாரிகளும், குலத் தலைவர்களும், சம்பிரதாய தருமத்தைக் காப்பவராக அமர்ந்தார்கள். இறுதியில் பூரண அதிகாரம் சமுதாயத்தினிடமே இருந்தது.

இந்த இரண்டாவது நிலையின் அறக்கூறு ஒருபடி உயர்ந்தது. “இது நல்லது, இது கெட்டது“ என்று துணிவதற்கேற்ற ஓர் அளவுகோல், ஒரு பிரமாணம் இந்நிலையில் விளங்குகிறது ; பகுத்தறிவும் சமூக மனப்பான்மையும் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆயினும் ஆசார தருமத்தின் மதிப்புக்களும் தீர்ப்புக்களும் பூரணப் பகுத்தறிவுடன் கூடியவை என்று சொல்வதற்கில்லை. சமுதாயம் தன் அங்கத்தினரைக் குல தருமத்திற்குக் கீழ்ப்படியப் பழக்கி, சுயேச்சையைப் போக்கி, சுயநிர்ணயத்தைக் கொன்று, சம்பிரதாயத்திற்கு அடிமைகளாக்கிவந்தது. இதை அறநெறி வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறவளர்ச்சியின் மூன்றாவது நிலை : அறவாழ்க்கை சம்பிரதாய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்றுத் தனிமனித மனச்சாட்சிப் பிரமாணமாகி, பூரணப் பக்குவநிலை எய்துகிறது. “இது நேரான காரியம் ; இதனால் யாவரும் நன்மையடைவர். ஆகையால் இதனை நான் செய்யக் கடவேன்” என்று சுய அறிவோடும், முழுமனத்தோடும் தீர்மானித்து நிறைவேற்றக் கூடிய ஆன்ம சக்தி பெற்றவனைப் பரிபூரணப் பக்குவ அறநிலையை அடைந்து விட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மனித முன்னேற்றத்திற்கும் அறவளர்ச்சிக்கும் முக்கியக் காரணங்களாயிருப்பவை : 1. அறியாமையையும் மூட நம்பிக்கையையும், ஆசார ஆட்சியையும் விடுத்து, விவேக ரீதியாய், எதேச்சையாய்ப் பொறுக்கியெடுத்த சுயயோக்கியதையுடைய இலட்சியங்களையும் அளவு கோல்களையும் நிருமாணித்தல். 2. கண்மூடித்தனமாய், உணர்வற்று, இயற்கையாலோ, அல்லது பழக்கத்தின் உத்வேகத்தாலோ சமூகத்திற்கு நன்மையான செய்கைகளைப் பொறுக்கி, அவைகளைக் கடமையெனக் கருதி, சுயநன்மையை எதிர்பாராது செய்து முடிக்கும் ஆற்றலுதித்தல். 3. தான் புரியும் அறச் செயல்களாலே மேன்மையான சமூகத்தைத் தோற்றுவித்து, அதில் தான் பொலிவு பெற்று, எல்லோருடைய முன்னேற்றத்திலும் தான் தன் சொந்த முன்னேற்றம் பொருந்தியிருக்கிறது என்ற உறுதியான கொள்கை தோன்றல்.

ஐரோப்பிய அறநூல் வரலாறு : பரிணாம நியதியை அனுசரித்து விவரித்த அறவளர்ச்சி முறைக்கு யூத, கிரேக்க, ரோம மக்களின் தரும அனுபவம் சிறந்த நிதரிசனமாக விளங்குகிறது. யூத மக்களிடம் சரித்திர ஆரம்பத்தில் சம்பிரதாயங்களும், சடங்கு விதிகளும் ஆதிக்கம் செலுத்திவந்தன. பிறகு கடவுள் மோசே வழியாக மக்களுக்கு அருளிய பத்துக் கற்பனைகளுக்கிணங்க வாழ்க்கை செம்மைப்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் வந்த தீர்க்கதரிசிகளும், 'சங்கீதங்களின்' ஆசிரியர்களும், ”வெளிக் காரியங்களும் அவைகளின் விளைவுகளும் அற நிலையின் முக்கிய அமிசங்களல்ல ; அந்தரங்க சுத்தியும் தூய மனமுமே அறத்தின் இருதய ஸ்தானம்; காரியங்கள் எந்த மனப்பான்மையுடன், எங்ஙனம் செய்யப்படுகின்றன என்பதை நிருணயிக்க வேண்டும். கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து நடந்து விடுவதால் மட்டும் அறவாழ்க்கை வந்து விடாது” என்று போதித்தார்கள். அதன்பின் இயேசு கிறிஸ்து செய்த அறவுரை, பழைய ஆசாரங்களையும் கட்டளைகளையும் விட்டு, உள்ளத் தூய்மையைக் குறிக் கோளாக்கி, அறத்தின் பெருமையை அகவாழ்வில் நிலைநாட்டி, அறவியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிற்று.

கிரேக்கர்களுடைய அற வாழ்க்கையிலும் சட்டங்களும் தேவ கட்டளைகளுமே ஆதி முதற்கொண்டு மக்களின் நடத்தையைப் பரிபாலித்து வந்தன. ஆயினும் அவைகள் எதையும் வரையறுத்து உத்தரவு செய்யவில்லை ; ஆகையால் அறிவிற்குப் போதிய சுதந்திரம் இருந்துவந்தது. கிரேக்கர்கள் மேதாவிகள் ; விஞ்ஞான நிபுணர்கள் ; தத்துவ ஞானிகள். எனவே அவர்களிடம் அற வளர்ச்சி உன்னத நிலையடைந்தது. சாக்கிரட்டீஸ், பிளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சான்றோர், அறத்துக்கு ஒப்பற்ற பணி செய்தனர். அறிவும், சிந்தனையும், சுய நிருணயமும் அறத்தின் உயிர் நாடிகள் என்றார் சாக்கிரட்டீஸ். ஏற்புடைய சூழ்நிலையையும், சிறந்த அரசியல் திட்டத்தையும் அமைத்து, உத்தம இலட்சியங்களைத் தருக்க முறையில் நிரூபணம் செய்து, மக்களை அறவாழ்க்கையில் ஈடுபடச் செய்யவேண்டுமென்றார் பிளேட்டோ. நல்லறிவும் நல்லெண்ணமும் இருந்தால் மட்டும் போதாது ; நற்பழக்கமும், திடமனமும், இடைவிடாப் பயிற்சியும், சங்கற்ப வன்மையுமிருந்தால் தான் இன்னல்களையும் இடையூறுகளையும் வென்று, கருதிய குறிக்கோளை அடையமுடியுமென்று அழுத்தமாக முழக்கம் செய்தார் அரிஸ்டாட்டில். ஞானம், தன்னடக்கம், தைரியம், நியாய உணர்ச்சி இவை அறத்தின் வேர்கள். இவைகளைத் தம்மக்கள் வாழ்க்கையில் ஆழப்பதித்துச் செழுமையாக வளர்த்து, அவர்களை உலகத்தார் எக்காலத்திலும் வியக்கத்தக்க அறம் நிறைந்த குடிமக்களாக்க இந்த ஞானிகள் முயன்றனர்.

இதைவிட ஒரு படி உயர்ந்த இடத்தை ஏற்றிருந்த ரோமர்கள், அரசியல், தலத்தாபனம், பொருளாதாரம், சமுதாயம் முதலிய மக்கள் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் நீதி நூல்களையும், நியாயப் பிரமாணங்களையும் ஏற்படுத்தித் திட்டமான சட்டங்களை நிறுவி, ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டினார்கள். இவர்கள் சிறந்த அரசியல் நிபுணர்கள் ; தரும சாஸ்திர விற்பன்னர்கள்; பரந்த நோக்குள்ளவர்கள்; தீர்க்க சிந்தனையும், முன்யோசனையும் உடையவர்கள்; சமபாவமும் பெருந்தன்மையும் படைத்தவர்கள். எனவே, இவர்கள் வகுத்த அறநெறித் திட்டம் தங்கள் சொந்த சாதியினர்க்கு மட்டுமேயன்றி, உலக மக்கள் யாவர்க்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டது. தற்கால ஐரோப்பிய நாகரிகமும் பண்பாடும் ரோம நன்னெறித் திட்டத்தின் விளைவுகளாகும்.

தருமப் பிரமாணங்களின் ஆராய்ச்சி : அற வாழ்க்கை வளர்ச்சியின் பல நிலைகளைக் கவனித்தால் பற்பல குறிக்கோள்கள் அவ்வப்போது அறத்தின் அளவுகோல்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்தன என்பதை அறியலாம்.

மனச்சாட்சி : நம்முள்ளிருந்து நம்மை நல்வழியிற் செலுத்தும் மனச்சாட்சியின் கட்டளைப்படி நடந்தால் அதுவே அறநெறி. சட்டமும் சம்பிரதாயமும் வெளிப்புறத்தவை ; அச்சத்தையும் தண்டனையையுங் கொண்டு வலுக்கட்டாயமாக மனிதர்களை நல்வழியிற் செலுத்துபவை. ஆனால் உளச்சான்றோ உட்புறத்தது ; நம்முடன் பிறந்தது ; தூயதும் மேலான மறைபொருளுமான சக்தி. அது நன்மை, தீமை என்பதை விவாதித்தற்கிடமின்றி, காட்சிப் பிரமாணமாகக் காட்டி, நல்வழி புகட்டும் சக்தியுடையது என்பர்.

எல்லாருக்கும் ஒரேவிதமான மனச்சாட்சி கிடையாது. அவரவருடைய விருப்பு வெறுப்புக்களும், தன்னலமும், பட்சபாதமுந்தான் மனச்சாட்சிகளாக இருந்து வருகின்றன. கல்வியறிவும், சமூகக் கட்டுப்பாடும், நல்லொழுக்கமும் முதிர்ச்சியடைந்த பின்னர்த்தான் உண்மையான மனச்சாட்சி தோன்ற முடியும். அது தானாகப் பிறக்கும்போதே தோன்றியதன்று; தண்டனை, கல்வி, நட்பு முதலியவைகளால் பக்குவமடைந்த சக்தியே யாகும்.

இன்பம்: கிரேக்க ஞானி எபிக்யூரஸ் இன்பத்தை நாடி அடைவதே அறத்தின் நோக்கம் என்று போதித்தார். இன்பத்தைத் தரும் செயல் அறம் ; துன்பத்தைத் தரும் செயல் மறம் என்பது இவர் கொள்கை. இந்தக் கொள்கை ஐரோப்பிய நாடுகளில் பரவி, தாமஸ் ஹாப்ஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், ஜெரிமி பெந்தம் முதலிய ஆங்கில அறிஞர்களால் பெருமையடைந்து, சமூக வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தரத்தின் உயர்விற்கும் காரணமாக இருந்துவருகிறது. இந்தக் கொள்கையில் பலவகைகள் உண்டு.

1. இயற்கை இன்பவாதம் : இது நாம் இன்பம் ஒன்றையே விரும்புகிறோம்; அதுதான் நம் செயல்கள் எல்லாவற்றையும் தூண்டுகிறது என்னும் கொள்கை. இவ்வாதம் சரியன்று. இன்பத்திற்காக நாம் செயலில் ஈடுபடுவதில்லை. நம் தேவையைத் தீர்த்து வைக்கும் பொருளை நாடியே நாம் செயலில் இறங்குகிறோம். பசியைப் போக்க உண்கின்றோமேயொழிய, இன்பத்தையடைய அன்று. தேவையின்றேல் செயல் இல்லை. செயல் இன்றேல் விருப்பம் நிறைவதில்லை. விருப்ப நிறைவின்றேல் இன்பமுமில்லை. ஆகையால் இன்பந்தான் மனித வாழ்க்கையின் நோக்கம் என்பது சரியன்று. மேலும் நான் இன்பம் அடையப் போகிறேன் என்று முழு உணர்வுடன் ஒரு செயலில் இறங்குவது, இன்பம் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் முடியும். குறிக்கோளைக் கருதியே ஒரு வேலையைத் தொடங்குகின்றோம். அந்தக் குறிக்கோள் உன்னதமானது, துல்லியமானது, வசீகரமானது என்று நினைக்க நினைக்க நாம் ஆனந்தப்படுகிறோம். குறிக்கோளை நினைக்கையில் உண்டாகும் ஆனந்தத்தில், மரணத் துன்பத்தைக்கூடத் திருணமாக மதித்து விடுகிறோம். எனவே இந்த இயற்கை இன்பவாதம், இயற்கைக்கும் உளவியலுக்கும் ஒவ்வாதது என்பது வெளிப்படை.

2. அற இன்பவாதம் : “இன்பம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள். அதை அடைவதே நமது கடமை. அதற்கு மாறாக நடப்பவன் தகுதியற்றவன்“ என்று அற இன்பவாதிகள் கூறுகிறார்கள். எனவே, இன்பத்தை நாடுவதே அறச்செயலாக ஆகிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவருக்கு இன்பந்தருவது பிறர்க்குப் பிடிக்காமலிருக்கலாம். அதனால் அவனவன் தன் தன் இன்பத்தைத்தான் நாடக் கடமைப்பட்டவன் என்றே தருக்க நியாயப்படி இன்பவாதிகள் கூற வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது முற்றும் தன்னலவாதமேயாகும். தர்மஸ் ஹாப்ஸ் என்ற ஆங்கில அறிஞர் ஒருவர் தாம் இக்கொள்கையைக் கடைப்பிடித்தார். ஆனால் பிற இன்பவாதிகளான ஜெரிமி பெந்தம், ஜான் ஸ்டூ வர்ட் மில் என்னும் ஆங்கில அறிஞர்கள், “மிகப்பல மக்களுக்கு மிகப்பல இன்பந்தரும் செயலே அறம்“ என்றும், தன் சொந்த இன்பத்தை நாடிப் புரியும் காரியம் அதருமம் என்றும் போதித்தார்கள்.

இன்பக்கணிதம் : நாம் தீர்மானித்த அறச்செயலானது 1. உறுதியாக, 2. ஆழ்ந்த, 3. நீடித்த, 4. தூய (துன்பங்கலவாத), 5. வளப்பமுள்ள (வேறு இன்பங்களை அளிக்கவல்ல), 6. விரைவில் (உடனடியாக), 7. பலர் அனுபவிக்கக்கூடிய இன்பம் பயப்பதாக இருக்கவேண்டும் என்று கணித்துத் துன்பத்தைவிட இன்பத்தை அதிகமாகத் தரக்கூடிய காரியங்களையே மனிதன் செய்யக் கடவன் என்று பெந்தம் கூறினார். ஆனால் 1. இன்பம் உள்ளத்தில் எழும் அனுபவம்; அளக்கக்கூடிய வஸ்துவன்று. 2. எல்லா இன்பங்களும் ஒரே தன்மையானவையல்ல. ஒரே பண்புடையனவா யிருந்தால்தான் இன்பக் கணிதப்படி அளக்க இயலும். 3. இன்பக் கணிதப்படி பெறப்பட்ட மொத்த இன்பத்தை மக்களுக்குள் எந்த முறைப்படி பங்கிட்டுத் தரவேண்டு மென்பதற்கு, பெந்தம் உத்தம சமத்துவ முறையைப் போதிக்கிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட இன்பத்தை அனுபவிக்க எல்லாருக்கும் சமமான தகுதியும், பயிற்சியும், விருப்பமும் இருக்கின்றனவா?

தருமானுசாஸனங்கள் : ஏன் பிறரின்பத்திற் காகப் பாடுபடவேண்டும் என்று இயல்பாகத் தோன்றும் கேள்விக்குப் பெந்தம் கீழ்க்கண்டவாறு விடை கூறுகிறார் : 1. இயற்கை விதி : பிறருடன் கலந்து கொள்ளாமலும், அதிகமாகவும் அனுபவிக்கும் இன்பங்கள் பல நோய்களை உண்டாக்குவது நிச்சயம். 2. அரச விதி : பொது நன்மைக்குத் தீங்கிழைத்தால் தண்டனையையும், பொதுநன்மைக்குப் பாடுபட்டால் பட்டம் பதவிகளையும் அரசாங்கம் அளிக்கிறது. 3. சமூக விதி : பொதுமக்கள் பரோபகாரிகளைப் புகழ்வர்; சுயநலக்காரர்களை வெறுப்பர். 4. சாய விதி : கடவுள் எல்லோரும் இன்புற்றிருக்க உழைப்பவர்க்கு மோட்சத்தையும், சுயநலத்தையே நாடி மக்களுக்குத் தீங்கிழைப்பவர்களுக்கு நரகத்தையும் கொடுப்பர். 5. மனச்சான்று விதி : மனச்சாட்சி என்னும் அறச் சக்தி பிறர் இன்பத்தை நாடினால் அகவின்பமளிக்கிறது. பிறர்க்குத் துன்பந்தரும் செயல்களைப் புரிந்தால், வேதனை உண்டாக்கி, உள்ளத்தின் அமைதியையழித்து, வாழ்க்கையைக் குலைத்துவிடுகின்றது.

இந்த ஐந்துவித தரும விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செய்யப்படும் காரியங்கள் பிறர்க்கு இன்பந்தந்தாலுங் கூட, அறச் செயல்களாகிவிடுமா என்பது கேள்வி. துன்பத்திற்கும் தண்டனைக்கும் அஞ்சிச் செய்யப்படும் செய்கை அறநிலை எய்தாது. புகழையும் சம்மானத்தையும் இலாபத்தையும் கருதிச் செய்யப்படும் செய்கைகளும் அறமாகா. மேலும் பிறர் இன்பத்தை நாடினால் தான் நமக்கு இன்பம் உண்டாகும் என்று கூறினால் பிறரின்பம் ஒரு கருவி; நம் சொந்த இன்பந்தான் நம் குறிக்கோள் என்று ஆகும். இது ஒரு மெருகிட்ட தன்னலவாதமே. இதனை அறநிலையெனக் கூறுவது சிறிதும் பொருந்தாது.

இன்பவாதத்தின் அடிப்படையான குற்றம் அதன் மனோ தத்துவப் பிழையாகும். “மனிதன் கேவல உணர்ச்சியுடைய பிராணி ; அவன் நாடுவது துன்ப நிவிர்த்தியும் இன்ப நுகர்ச்சியும் தான்“ என்று மனிதத் தத்துவத்தைத் தவறாக அனுமானித்தது தான் இந்த வாதத்தின் குற்றங்களுக்கெல்லாம் முதற் காரணம். மனிதன் அறிவும் உணர்ச்சியும் கலந்த ஜீவன் ; உணர்ச்சிகளை அடக்கி, உயர்ந்த குறிக்கோள்களை நாடி, வாழ்க்கையைச் செலுத்துவதே அறிவின் தொழில் என்ற உண்மையை இன்பவாதம் புறக்கணித்து விடுகிறது.

பரிணாம இன்பவாதம் : உயிரியலின் முக்கியக் கொள்கையான பரிணாமவாதம் எங்கும் பரவியதும், இன்பவாதிகள் அதைத் தங்களுக்குத் துணையாக ஏற்றுக் கொண்டு, இயற்கையின் விதிகளைப் பின்பற்றி வந்தால் இன்பம் தானே எய்தும் என்று போதிக்கலாயினர். இந்தக் கொள்கையை ஹெர்பர்ட் ஸ்பென்சர், அலெக்சாண்டர், சர் லெஸ்லி ஸ்டீபன் முதலிய ஆங்கில அறிஞர்களும், நீச்சே என்னும் ஜெர்மன் தத்துவ ஞானியும் உபதேசித்தார்கள். இவர்கள் இயற்கையோடியைந்த வாழ்க்கை என்கிற குறிக்கோள் இயற்கைக்கு முற்றிலும் எதிராவது என்பதை உணரவில்லை. இயற்கை வழியை அடக்கி, அறத்தினாலும் விவேகத்தினாலும் உயரிய வழியில் வாழ்க்கையை நடத்துவதில் தான் மனிதப் பெருமை அமைந்திருக்கிறது.

நிபந்தனையற்ற கடப்பாடு : இம்மானுவல் கான்ட் என்ற உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் தத்துவஞானி, பகுத்தறிவினால் தெரிந்தெடுக்கப்பட்ட காரியங்களை, அவற்றின் பொருட்டே செய்வது தான் கடமை அல்லது நிபந்தனையற்ற கடப்பாடு என்று உபதேசித்தார். பொதுவாகவும், சாசுவதமாகவும், விலக்கற்றதாகவு முள்ள கடமை, “இதைச் செய்; அதைச் செய்யாதே“ என்று குறிப்பாக ஒன்றையும் கட்டளையிடாமல், “சிந்தனை செய்து, பகுத்தறிவின் தீர்மானப்படி நட” என்றுமட்டும் கட்டளையிடுகிறது. பகுத்தறிவு ஒன்றுதான் மனிதர்கள் யாவர்க்கும் பொதுவானது; விருப்பும் வெறுப்பும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். பகுத்தறிவும் சுவாதீனமும் அறச் செயல்களுக்கு இன்றியமையாதவை. ஆகவே உணர்ச்சியின் விளைவுகளாகிய இச்சைகளை அகற்றி, அறிவின் ஆணைப்படிக் காரியங்களைச் செய்வதுதான் அறமாகும் என்று போதித்தனர்.

ஆனால் கடமைகளை வரையறுத்துப் போதிக்கும் சக்தி பகுத்தறிவுக்கு இருக்கிறதா என்று கேட்டால், கீழ்க் கண்டவாறு அவர் விடை அளிக்கிறார்: 1. அறச் செயல் என்பது எல்லோரும் முழு மனத்துடன் ஏற்றுச் செய்யக்கூடிய சட்டப்பிரமாணமாயிருக்க வேண்டும். 2. பிற மனிதர்களை நம் நலத்திற்குக் கருவிகளாகக் கருதாமல், அவர்களது நலமே நாம் மேற்கொள்ளவேண்டிய கடமையாய் இருத்தல் வேண்டும். 3. ஒவ்வொரு மனிதனும் ஆன்மாவுடன் கூடிய புருஷன், சடப்பொருள் அல்லனென்று உணர வேண்டும். இவ் வண்ணம் மூவகையான நிபந்தனையற்ற கடப்பாடுகளை, அறிவு நிலையை ஆதாரமாகக் கொண்ட தமது அறநூல் கொள்கைகளாகக் கான்ட் அமைத்தார்.

ஆனால் இவர் பகுத்தறிவை உயர்த்தி, உள்ளுணர்ச்சிகளைப் புறக்கணித்தது சரியன்று. உணர்ச்சியும் பகுத்தறிவும் தொடர்பு கொண்டவை. உணர்ச்சியற்றுப் பகுத்தறிவால் மட்டும் நடத்தப்படுவது சாரமற்ற வாழ்வாகும். மனிதன் ஓர் எந்திரமல்லன். கடமையென்று மட்டும் கருதிச் செய்யும் காரியம் உள்ளுணர்ச்சியின்மையால் ஊக்கமளிக்காது. அது நெறியாய்த் தோன்றினும் அறத்தின் சாரம் இழந்ததாகும். இதுவே கான்டின் சித்தாந்தத்திலுள்ள முக்கியமான குறை.

ஆன்மானுபவம் : ஜெர்மன் தத்துவ ஞானி ஹெகல் என்பவரின் போதனையால் வசப்பட்ட தாமஸ் ஹில்க்ரீன், பிராட்லீ, மெக்கன்சி, மூர் ஹெட் முதலிய ஆங்கில அறநூல் நிபுணர்கள், நாம் இதுவரை ஆராய்ச்சி செய்த தர்ம லட்சியப் பிரமாணங்களின் தவறுகளையும் ஊழல்களையும் அகற்றி, இக்காலத்திற்கேற்ற ஒரு புதிய இலட்சியத்தை நிருமாணித்துள்ளார்கள். அதை 'ஆன் மானுபவம்' என்றும், 'பகுத்தறிவினால் தேர்ந்தெடுத்து, ஆத்ம சக்தியினால் பக்குவப்படுத்தி ஒழுங்காக்கப்பட்ட, பரிபூரணச் சமுதாய ஸ்தாபனம்' என்றும் சொல்லலாம்.

மனிதன் பகுத்தறிவையும் சமுதாய உணர்ச்சியையும் தனக்குச் சிறப்பான பண்புகளாகப் பெற்றிருக்கிறான். ஆனால் அவை பரிணாமசேஷ வன்மையாலும், மடமையாலும், மிருகத் தன்மையாலும், சுயநலத்தாலும் மறைத்து அமுக்கப்பட்டுள்ளன. எனவே மனிதனுடைய ஞானத்தையும் சமூக உணர்ச்சியையும் வளர்த்துக் குற்றமற்ற சீரிய சமுதாயத்தை நிருமாணிப்பதுதான் அறவாழ்க்கையின் நோக்கம் என்றும், மனிதனுடைய விவேகமும் சமூக உணர்ச்சியும் வளர வளர, அவனுடைய தன்னல உணர்வு மறைந்து, நன் நலத்தை உலக நலத்துடன் இணைத்து, அதற்கு உழைப்பதே தன் கடமை என்று தீர்மானிக்கிறான் என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது. எம். எஸ். ஸ்ரீ.

இந்து அறநூல் வரலாறு : மனிதன் ஆசை வயப்பட்டவன். ஆசைகள் ஒன்றோடொன்று முரணும்போது ஓர் ஆசை வென்று செயலாகப் பரிணமிக்கும். அப்படி அந்த ஆசையைத் தேர்வது மனிதனுடைய முழு இயல்புமாகும். அதனால் ஒருவனிடம் தோன்றும் செயல் அறத்தின்பாற்பட்டதாக இருக்கவேண்டுமாயின், அவன் முழு மனத்துடன் அதைச் செய்ய ஆசைப்பட்டுப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்பது பெறப்படும்.

ஆனால், மனிதன் முற்றும் சுதந்திரம் உடையவன் தானா? அவன் விரும்பும் வண்ணம் செய்ய அவனுக்கு அதிகாரம் உண்டா? இந்தக் கேள்விக்கு விடையாக இந்து மதம் கருமக் கொள்கையைக் கூறுகின்றது. நாம் சில வேளைகளில் நம் விருப்பத்துக்கு மாறாக நடக்க வேண்டியிருப்பதற்குக் காரணம் நாம் முன்னால் செய்த கருமமே என்று அது சொல்லுகிறது.

நாம் விதைத்ததையே அறுக்க முடியும். இப்போதுள்ள நம்முடைய நிலைமை நாம் முன்னால் செய்த கருமங்களின் விளைவு. நாம் இனிமேல் அடையப்போகும் நிலைமை இப்போது நாம் செய்யும் கருமங்களின் விளைவு. அப்படியானால் மனிதனுக்குச் சுதந்திரம் இல்லை ; அவன் விருப்பம்போல் எதையும் செய்ய இயலாது என்று ஏற்படுகிறது அல்லவா? சுதந்திரமில்லையானால் அவன் செய்யும் செயலுக்கு அவன் பொறுப்பாளியாக மாட்டானே? பொறுப்புணர்ச்சியுடன் செய்யும் செயல்தானே அறச் செயல்?

இந்தக் கேள்விகளுக்கு இந்து மதம், கருமமானது மனிதனுடைய சுதந்திரத்தை முழுவதும் பறித்து விடுவதில்லை என்றும், மனிதன் கருமத்தை வெல்ல முடியும் என்றும் விடை கூறுகின்றது. கருமம் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என மூன்று வகைப்படும். சஞ்சிதம் என்பது அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்தது போக எஞ்சியது. பிராரப்தம் என்பது இம்மையிற் பலனளிக்கும் பழவினை. ஆகாமியம் என்பது இந்தப் பிறப்பில் தேடும் கருமமாகும். ஒரு வேடன் பல அம்புகளுள்ள தனது அம்பறாத் தூணியிலிருந்து ஓர் அம்பை எய்துவிட்டு, மற்றோர் அம்பை எய்யக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கொண்டு, முற்கூறிய மூன்று கருமப் பகுதிகளை விளக்குவதுண்டு. அம்பறாத் தூணிதான் சஞ்சிதம், எய்த அம்பு பிராரப்தம், எய்யப்போகும் அம்பு ஆகாமியம். சஞ்சிதமும் ஆகாமியமும் மனிதனுடைய வசத்திலுள்ளவை. பிராரப்த கருமத்தை அவன் துய்த்தே தீரவேண்டும். ஆகாமியம் சஞ்சிதத்துடன் சேரும். சஞ்சிதத்தில் ஒரு பகுதி அடுத்த பிறப்பின் பிராரப்தமாகும். இவ்வாறு கருமத்தின் தன்மைக்குத் தக்க பிறப்புக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

அப்படியானால் இந்தப் பிறப்புத் தளையை அறுத்து வீடு பெறுவது எப்படி?

நம்முடைய செயல்கள் வெண்மை (சுக்கிலம்) அதாவது அறச்செயல், கருமை (கிருஷ்ணம்) அதாவது மறச்செயல், வெண்மை கருமை (சுக்கில கிருஷ்ணம்) அதாவது அறமும் மறமுமான செயல், வெண்மை கருமையல்லன (அசுக்கில கிருஷ்ணம்) அதாவது அறமும் மறமும் அல்லாத செயல் என நான்கு வகைப்படும். நான்காவது வகையான வெண்மையுங் கருமையுமல்லாத செயல்களைச் செய்தால், அதாவது பயனில் பற்றில்லாமல் செயல்களைச் செய்தால், அப்போது ஆகாமிய கருமம் உண்டாவதில்லை. அதனுடன் கடவுளைத் துய்க்கும் மெய்யறிவு பெற்றால் சஞ்சிதம் பட்டுப்போகும். அவ்வாறு செய்துகொண்டவன் பிராரப்த கருமத்தை இந்தப் பிறப்பில் துய்த்து முடிந்ததும் வீடு பெறுவான். ஆகவே மனிதன் தான் செய்யும் கருமத்தினால் கட்டுண்டாலும் அதை அறுத்தெறியக்கூடிய சுதந்திரமும் உடையவனே என்பதும், அதனால் அறச்செயல் செய்வதற்கு வேண்டிய பொறுப்பு உடையவனே என்பதும் பெறப்பட்டன.

இனி ஒரு செயலைச் சீரானது என்றும், ஒரு செயலைத் தவறானது என்றும் கூறுவதற்கும், ஒரு செயலை நல்லதென்றும், ஒரு செயலைத் தீயதென்றும் கூறுவதற்கும் காரணம் யாது? சீரானது, தவறானது என்னும் சொற்கள் சட்டத்தைக் குறிக்கும் ; நல்லது, தீயது என்னும் சொற்கள் குறிக்கோளைக் குறிக்கும்.

அறிவு முதிராத தாழ்ந்த மக்களுக்காகச் சட்டங்கள் அல்லது விதிகள் வகுக்கப்படுகின்றன. கடவுள் கூறும் இந்த விதிப்படி நடந்தால் நன்மை உண்டாகும், நடவாவிட்டால் தீமை உண்டாகும் என்று கூறுவர். ஆனால் மனிதன் அறிவு முதிரும்போது இந்த நன்மை தீமைகளைப் பொருட்படுத்தமாட்டான். கடவுள் கூறுகிறார் என்று சொல்வதும் அவனுக்கு மனநிறைவை உண்டாக்காது. அதற்காகவே இந்து மதமானது அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு உறுதிப் பொருள்களைக் குறிக்கோள்களாகக் கூறுகிறது. பொருளும் இன்பமும் அறத்தைத் தேடவும், அறம் வீடு அளிக்கவும் பயன்படும் என்பர். இந்தக் குறிக்கோள்களை அடையச் செய்யும் செயல்களே அறச்செயல்களாகும்.

இனி இந்த அறச்செயல்களை வருண அறச்செயல்கள் ஆச்சிரம அறச்செயல்கள், சாமானிய அறச்செயல்கள் என மூன்றாகப் பிரித்துள்ளார்கள்.

மனிதனிடம் சத்துவம், ராஜசம், தாமசம் என மூன்று குணங்கள் காணப்படும். சத்துவம் மிகுந்தவன் பிராமணன், ராஜசம் மிகுந்தவன் க்ஷத்திரியன், தாமசம் மிகுந்தவன் வைசியன், மூன்று குணங்களும் முதிராதவன் சூத்திரன் என்பர். இந்தக் குணங்கட்கு ஏற்ற செயல்கள் எழுமாதலால், குணத்தையும் செயலையும் வைத்து நான்கு வருணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிராமணன் அறிவை வளர்க்கவும், க்ஷத்திரியன் சமூகத்தைப் பாதுகாக்கவும், வைசியன் பொருள் தேடித் தரவும், சூத்திரன் உடல் உழைப்பு நல்கவும் கடவர். இந்த நான்கு சாதிக்குப் புறம்பாக ஒரு சாதி கிடையாது. தந்தையின் குணம் மக்களிடம் காணப்படும் என்று எதிர்பார்க்கலாமாதலால், மக்களுடைய வருணம் தந்தையின் வருணம் என்றும், மக்கள் தந்தையின் தொழிலைச் செய்யக்கடவர் என்றும் வருணாச்சிரம தருமம் கூறும். ஆனால் பிராமணனுக்குப் பிறந்தாலும் வேதங்களைக் கற்காதவன் பிராமணன் ஆகான், சூத்திரனே என்றும், சூத்திரன் தன்னுடைய ஒழுக்கத்தால் யிராமணன் ஆவான் என்றும் மனு ஸ்மிருதி முதலிய பண்டைத் தரும சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன. அதனால் வருணம் என்பது பிறப்பை மட்டும் பற்றியதன்று. அதன் அடிநிலை குணமும் ஒழுக்கமுமேயாகும். மாணவர்கள் ஆசிரியருடன் குருகுலவாசம் செய்வர். பதவி வேறுபாடு பாராட்டாமல் நடந்துகொள்வர். கல்வி கற்றும், ஒழுக்கம் பயின்றும், குருகுலவாசம் முடிந்தபின் வீடு சென்று மணம் செய்துகொண்டும் இல்லறம் நடத்துவர். இல்லறநிலை மற்ற மூன்று நிலைகட்கும் ஆதாரம் என்று கருதப்படும். இல்லறத்திலுள்ளோர் பொருள் தேடி, வேதியர்,தெய்வம், பிதிரர், பிராணிகள், மனிதர் ஆகியோர்க்கு உதவி செய்யக்கடவர்; தம் மக்கள் வளர்ந்ததும், இல்லாளுடன் காடு சென்று ஆன்ம விசாரணை செய்வர்; அதன்பின் துறவிகளாகி யோகம் செய்து வீடு பெறுவர்.

இனி எல்லோரும் எந்த வருணமாயினும், எந்த ஆச்சிரமத்தில் இருப்பினும், செய்யவேண்டிய அறச்செயல்களைச் சாமானிய தருமம் என்பர். இந்த அறச்செயல்களுள் தூய்மை, அடக்கம், பற்றின்மை, உண்மை, கொல்லாமை என்பன தலையானவை. உடம்பையும் உள்ளத்தையும் தூய்மையாகச் செய்பவன் மனத்தை ஆசைவழிச் செலுத்தாது அடக்குவான். மனத்தை அடக்கியவன் பற்றில்லாதவன் ஆவான். பற்றில்லாதவனே உண்மையாக ஒழுக இயலும். உண்மையாக ஒழுகுபவன் எவ்வுயிர்க்கும் ஊறு செய்யான். இவ்வாறு பற்றின்றி எல்லோருக்கும் நன்மை செய்வது ஆகாமியம் சேராதவாறு தடுக்கும். இத்தகையவனே யோகம் பயின்று, ஆன்மகுணம் பெற்று வீடு பெறுவான். வீடு பேறு அளிக்கும் செயலே அறச்செயல் என்பது இந்து அறநூலின் முடிபாகும்.

தமிழர் அறநூல் வரலாறு: தமிழர் வாழ்க்கையில் அறத்தாறு மிக்க பழமையானது. இப்போதுள்ள நூல்களுள் மிக்க பழமையுடையதான தொல்காப்பியத்திலேயே அறத்தாறுகள் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன. புறத்திணை இயலில் வாகைத்திணையிலும் காஞ்சித்திணையிலும் அறத்தாறுகள் காணலாம். அற நூல்களால் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்தும் காட்சி எனக் 'கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை' என்று தொல்காப்பியம் அறத்தாறு கூறுகின்றது. இவ்வொழுக்கங்களை உளத்தால் குறிக்கொண்டு, ஐம்பொறியையும் வென்று தடுத்தல் வேண்டும் என்பது அதன் கருத்து. இவ்வொழுக்கங்களுள் இல்லறத்தார்க்கு உரியனவாகக் கூறப்படுவன : அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுைடமை முதலியனவாம். இடையீடில்லாத 'வண்புகழைப் பயக்கும் கொடையையுடையான் மூப்புப் பிணி, சாவு இவற்றிற்கு அஞ்சான்' எனவும், தன்னைப் பிழைத்தோரைப் பொறுத்தலோடு அவர்க்குத் துன்பம் வராமல் காத்தல் வேண்டும் எனவும், ஒருயிர்க்குத் துன்பம் வரும்போது தன் உயிரைக் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தம் தனதாக வருந்தலும், பொய்யாமை, கள்ளாமை முதலியனவும் ஏற்படின் துறவுள்ளம் பிறக்கும் எனவும், அது பிறந்த பின்னர் எப்பொருள்களிலும் பற்றறும் எனவும், இவையெல்லாம் வெற்றிச் சிறப்புக்களாக வாழ்க்கையில் சிறப்பிக்கப்படும் எனவும் வாகைத் திணையில் தொல்காப்பியம் துறவறத்தாறு உணர்த்துகின்றது. வீடு ஏதுவாக உலகியற் பொருள்கள் நிலையில்லாதன என்று கருதும் கருத்தே அறத்தாற்றில் மக்களை ஈடுபடுத்தும் என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியத்தால் உணர்த்தப்படுகின்றது.

எவ்விடத்தில் மக்கள் அறநெறிபற்றி நல்லவர்களாக இருக்கின்றனரோ, அவ்விடமே நல்ல இடம் எனக் கூறப்படும் எனவும், சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்தின் வழியே தோற்றம் பெறும் எனவும், பகைவர் நாட்டின்மீது அரசர் படையெடுக்குங்கால், ஆவும் பார்ப்பனரும் பெண்டிரும் பிணியுடையரும் புதல்வரைப் பெறாதவரும் பாதுகாவலான இடத்திற்குப் போய்த் தம்முயிரைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று முன்பாக அறத்தாறு நுவலும் மேற்கோள் உடையவர் எனவும், “மற்ற அறங்களைப் போற்றாத வர்க்குக் கழுவாய் உண்டு, செய்ந்நன்றி போற்றாதவர்க் குக் கழுவாய் இல்லை” என அறம் பாடிற்று எனவும், மழை பெய்யவும், மிக்க மழை பெய்யின் அஃது ஒழியவும் முருகனுக்குப் பலி தூவிக் குறவர் தெய்வ வழிபாட்டறம் போற்றுவர் எனவும், மகளிர் தம் கற்புடைமையால் மழை பெய்விக்கும் ஆற்றல் பெறுவர் எனவும் சங்க நூல்கள் அறத்தாறுகளை ஆங்காங்கு உணர்த்துகின்றன.

அறங்களையெல்லாம் தொகுத்து உணர்த்தும் நூல்களாகத் திருக்குறள் முதல் ஆத்திசூடி ஈறாக அளவற்ற நூல்கள் தமிழில் உள்ளன. அறம், சிறப்பு எனப்படும் வீடும்‌ தரும்‌; செல்வம்‌ எனப்படும்‌ தேவலோக வாழ்வும்‌. தரும்‌. அறத்தான்‌ வகுவதே இன்பம்‌. பின்னர்‌ ஆற்றலாம்‌ என்று இராமல்‌, ஒல்‌லும்‌ வகையால்‌ அறவினையை ஒழியாது செய்தல்‌ வேண்டும்‌. செயற்பாலது அறமே ; ஒழியற்பாலது பழியே. மனத்தின்கண்‌ ஒருவன்‌ குற்றம்‌. இலனாதலே அறமாகும்‌. அறவழியில்‌ அன்‌றி, வீணான வழியில்‌ பொருளையிழந்து வறுமை எய்தினவன்‌, ஈன்ற தாயினாலும்‌ பிறன்போல நோக்கப்படுவான்‌. அறத்‌தாற்றின்‌ ஒருவன்‌ இல்வாழ்க்கை ஈடத்‌துவானாயின்‌ அவன்‌ பிறவா நிலையடைவான்‌ ; அன்னான்‌ தவம்‌ செய்‌வாரின்‌ மேலானவனாக மதிக்கப்‌ பெறுவான்‌; அவனே அந்தணன்‌ என்று சிறப்பிக்கப்‌ பெறுவான்‌. அறவழியே ஒழுகி நீத்தவர்‌ பெருமையையே நூல்களெல்‌லாம்‌ பெருமையாகக்‌ கூறும்‌. எனவே ஒழுக்கம்‌ உயிரைவிட மேலானதாகப்‌ போற்றப்படும்‌. அறம்‌ சிறந்ததென்பது, இறைவன்‌ அறவாழியந்தணன்‌ என்‌று கூறப்‌படுதல்கொண்டு உணரலாம்‌. இவ்வாறெல்லாம்‌ அறங்‌கள்‌ திருக்குறளால்‌ போழ்றியுரைக்கப்பட்டுள்ளன.

தமிழருடைய தொன்றுதொட்ட அறம்‌, இல்லறம்‌, இறவறம்‌ என்று இருவகையாகத்‌ திருக்குறளால்‌ உணர்த்தப்பட்டுள்ளது. துறவறமும்‌ ஒருவரைவிட்டு ஒருவர்‌ நீங்கு தலன்‌றிப்‌ பற்‌றிலிருந்து நீங்குதல்‌ என்னும்‌ பொருண்மையே உடையது. உலகியற்‌ பொருள்களில்‌ பற்று நீங்குதற்குப்‌ பற்‌றற்‌றவர்‌ கூட்டமும்‌, பற்றற்ற இறைவனைப்‌ பற்றுதலும்‌ வழிகளாகும்‌. “அறம்புரி சுற்றமொடு கிழவனும்‌ இழத்தியும்‌ சிறந்தது பயிற்றல்‌ இறந்ததன்‌ பயனே” என்ற தொல்காப்பியச்‌ சூத்திரப்‌ பகுதியும்‌, “பற்றுக பற்றற்றான்‌ பற்றினை அப்பற்‌றைப்‌ பற்றுக பற்று விடற்கு” என்ற திருக்குறளும்‌ முறையே அவ்வழிகளைக்‌ குறித்தல்‌ காணலாம்‌. வீடு பயத்தற்கு முருகனிடம்‌, அவனருளையும்‌, அதனைப்‌ பெறுதற்குத்‌ தாம்‌ அவனிடத்துச்‌ செய்யும்‌ அன்பையும்‌, அவ்விரண்டினாலும்‌ வரும்‌ அறத்தையும்‌, கடுவன்‌ இளவெயினனார்‌ வேண்டுதலாக உணர்த்தும்‌, “யாஅம்‌ இரப்பவை பொருளும்‌ பொன்னும்‌ போகமுமல்ல, நின்பால்‌ அருளும்‌ அன்பும்‌ அறனும்‌ மூன்றும்‌” என்‌னும்‌ பரிபாடல்‌, அறத்தின்‌ இன்றியமையாமையையும்‌ சிறப்பையும்‌ விளக்கும்‌. மொ. அ. து.