கலைக்களஞ்சியம்/அறிவுமுதற் கொள்கை

விக்கிமூலம் இலிருந்து

அறிவுமுதற் கொள்கை (Rationalism) 1. அரசியல் : தனி மனிதன் வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் அறிவு ஒன்றையே கொண்டு வகுப்பது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை நீண்ட காலமாக உலகில் நிலவி வந்திருக்கிறது. மனிதனுக்கும் மற்றப் பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குள்ள பகுத்தறிவுத் திறனேயாகும். அத்திறனைப் பயன்படுத்திக் கொள்வதால் அவன் மேன்மையடைகிறான். மனித வாழ்வில் இயல்பூக்கம் (Instinct) என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறதென்றாலும், முன்னேற்றமடைந்த சமூகங்களில் தன் இச்சையாகிய அறிவின் ஆதிக்கமே விரும்பத்தக்கது.

பண்டைய தத்துவஞானிகளான 'ஸ்டோயிக்குகள்' என்பவர்களும் ரோமானியர்களும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட விதிகள் மூலம் உலகப் பேரரசு விளங்கவேண்டும் என்னும் நோக்கமுடையவர்கள். அறிவினால் ஏற்படும் உள்ளத் தெளிவு எல்லோருக்கும் பொதுவான உடைமை. அதைச் சார்ந்த கருத்துக்கள் எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவை. சிசெரோ போன்றரோமானிய அறிஞர்கள் உலக வாழ்க்கைக்கே அவற்றை அடிப்படையாகக் கொண்டு, சர்வ வியாபகமாக ஏற்பாடுகளை அமைக்க முடியும் என்று எண்ணினார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிரான்சில் புகழ்பெற்றிருந்த அபிலார்டு (Abelard} என்பவருடைய அறிவுமுதற் கோட்பாடுகள் இத்துறையில் பிற்காலத்தில் உண்டான பல கருத்துக்களுக்கு வழிகோலின. மறுமலர்ச்சிச் சகாப்தத்தின்போது மறுபடியும் அறிவில் நம்பிக்கை தோன்றிற்று என்றாலும், பல வரலாற்று நிகழ்ச்சிகள் அறிவு என்னும் அளவுகோலால் அளக்க முடியாதவை என்னும் கருத்தும் ஓங்கி நின்றது.

17ஆம் நூற்றாண்டில் அறிவின் ஆதிக்கத்தில் நம்பிக்கை மீண்டும் தளிர்த்தது. 18ஆம் நூற்றாண்டில் “அதிகாரம் அறிவின் உறைவிடம்” என்பது போய்த் தனி மனிதனது சுதந்திரத்தை அறிவே தாங்கி நிற்கும் என்னும் கொள்கை பரவியது. 19ஆம் நூற்றாண்டில் ஹேகல் முதலிய தத்துவஞானிகள், வரலாற்றில் இத்தகைய கொள்கையை மாறாத உண்மையாகக்கொள்ளக் கூடாது என்றும், அறிவு என்பது வரலாற்றுப் போக்கில் அவ்வப்போது மாறுபட்டு விரிவடையும் சிந்தனையின் வழி என்றும் கருதினார்கள். ஹக்ஸ்லி முதலிய 19ஆம் நூற்றாண்டு அறிஞர்கள், 'அறியொணாமைக் கொள்கை'யைப் பற்றியும் இங்கு அறியவேண்டும்; கண்கூடு அல்லாதனவற்றை யறிய முடியாது என்பது அவர்கள் கொள்கை.

19ஆம் நூற்றாண்டில் வேறு ஒருவகை அறிவுமுதற் கோட்பாடும் பரவத் தொடங்கியது. மதம் முதலிய பண்டைத் தளைகளை நீக்கித் தனி மனிதன் சுய அறிவிற்குப் பூரண சுயேச்சையளிக்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் அடிப்படையான நோக்கம். அறிவு முதற் கொள்கை இயக்கத்தினரால் வெளியிடப்படும் கணக்கற்ற நூல்கள் நம் நாட்டிலும் ஓரளவுக்குப் பரவியிருக்கின்றன.

எல்லா மனிதர்களும் அறிவை யடிப்படையாகக் கொண்டுதான் செயல் புரிகின்றார்கள் என்னும் கொள்கை தற்காலத்தில் சில உளவியலாரால் மறுக்கப்படுகின்றது. பகுத்தறிவுக்குப் புறம்பான உணர்ச்சி வேகங்கள் மனிதனைப் பல செயல்களுக்கும் தூண்டுகின்றன என்று உளவியலார்கள் ஆராய்ச்சி வாயிலாகக் கண்டிருக்கின்றனர். ஸ்ரீ.தோ.

2. தத்துவம்: தத்துவ சாஸ்திரங்களெல்லாம் தொடக்கத்தில் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும், மேற்கொள்ளுகின்ற கையாளும் முறைகளைக் கொண்டும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அறிவுமுதற் கொள்கை என்பது அறிவையே உண்மையைக் கண்டு பிடிக்கும் அத்தாட்சிப் பிரமாணமாகவும், தத்துவ ஆராய்ச்சிக்கு முடிவான உற்பத்தி ஸ்தானமாகவும் கொள்ளுகிறது. அனுபவத்தையே பொறுத்திருப்பதான முறைக்கு மாறானது. அது சில முக்கியமான கருத்துக்களையாவது அல்லது காரணகாரிய முறைப்படி அமைந்துள்ள கொள்கைகளையாவது (A priori principles) அறிவுக்கு மூலாதாரமாகக் கொண்டுள்ளது. ஆதலால் இதன் போக்குக் கணித முறையாயும் ஒன்றைக்கொண்டு ஒன்றைத் தீர்மானிக்கிற பகுப்பு முறையாயும் (Deductive) இருக்கிறது.

இது ஐம்புலன் நுகர்ச்சியிலிருந்து உண்மையை அடையும் முறைக்கு மாறுபட்டதாகும். இதன் வரலாறு மேனாட்டில் கிரேக்க தேசத்து அயோனிய ஞானிகளிடமிருந்து தொடங்குகிறது. அவர்கள் அக்காலத்து வழங்கி வந்தவையும் மக்களால் விரும்பப்பட்டவையுமான புராணக் கருத்துக்களுக்கு மாறான சிந்தனைகளை எண்ணினார்கள். அவர்களுடைய கருத்துக்கள் எலியாட்டிக்ஸ், பைதாகரஸ், பார்மினைடிஸ், ஹெராகிளிடஸ் முதலியவர்களால் வளர்க்கப்பட்டு, பிளேட்டோவின் தத்துவசாஸ்திரத்தில் உச்சநிலையை அடைந்தது. மத்தியகாலத்தில் பகுத்தறிவுக்கும், சமய வைராக்கியத்திற்கும் அல்லது மதத் துணிபுக்கும் உள்ள மாறுபாடு அதி உச்சநிலையை அடைந்தது. வேத காலத்தைக் கடந்து உபநிடதத்தை ஆராய்ந்தபோதுதான் இந்தியத் தத்துவ சாஸ்திரத்தில் அறிவுமுதற் சிந்தனை (Rationalistic thinking) மிக்க முதன்மை பெற்றது. உபநிடதத்தின் அறிவுமுதல் தன்மை பிற்காலத்தில் வேதாந்திகளால் மிகுந்த வன்மையையும் தெளிவையும் அடைந்தது. புத்தியை ஆதாரமாகக் கொண்ட ஸ்வதப் பிராமாண்யம் அல்லது அகவழி உண்மைக்கொள்கை குமாரில்பட்டர், சங்கரர் ஆகிய இருவருடைய தத்துவத்திலும் காணப்படுகிறது. அறிவுமுதற் கொள்கையின் இலட்சியமாகிய நல்ல அஸ்திவாரத்தோடு கூடிய அறிவுக்கும் ஐம்புல நுகர்ச்சியை ஆதாரமாகக்கொண்ட வெறும் கருத்துக்கும் மாறுபாடு எப்பொழுதும் இருந்திருக்கிறது. மாயாவாதத்தின் தொடக்கம் என்றுகூட அறிவுமுதற் கொள்கையைச் சொல்லலாம்.

மதத்தில் எல்லா மனிதர்களாலும் ஒப்புக்கொள்ளக் கூடிய முறையில் மத சம்பந்தமான நம்பிக்கைகளை அமைப்பதிலும், மதக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும், புத்தியின் தனிப்பட்ட உபயோகத்தைத் தெரிவிப்பதற்குக் கடவுளைக் குறித்த சாஸ்திரங்களில் புத்தியைப் பிரமாணமாகக் கொண்ட இந்தக் கொள்கை பயன் பட்டிருக்கிறது. மத சம்பந்தமான நம்பிக்கைகளை அழிப்பதற்குப் புத்தியை (Reason) உபயோகிக்கின்ற மதத்தின் பழக்கமானது கடவுளைப்பற்றிய துணிபுகளுக்கு நேர்விரோதமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் மதத்தில்தான் புத்தியினால் துணிந்துரைக்கும் தன்மை மிகத் தெளிவாக உணரப்பட்டது.

தற்காலத்தில் புத்தியைக் கொண்டு ஆராயாமல் (Non-rational) பல விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதான போக்கைக்கண்டு திருப்தி அடையாததால் 17ஆம் நூற்றாண்டில் டேக்கார்ட் (Descartes) என்ற பிரெஞ்சு தேசத் தத்துவஞானி, தத்துவத்தின் புது அமைப்பை ஏற்றுக்கொண்டார். அவர் எல்லாவற்றையும் சந்தேகிப்பதிலேயே தொடங்கினார். நம்மையெல்லாம் ஏமாற்றுவதாகிய ஐம்புலன்களின் அத்தாட்சியைத் தள்ளினார். ஆனால் ஒன்றை மட்டும் அவரால் சந்தேகிக்க முடியவில்லை. அதுதான் அவர் உயிர் வாழ்ந்திருத்தல் (Existence). அதையும்கூட சந்தேகித்துப் பார்த்தார். ஏமாந்து போவதற்காவது, அல்லது சந்தேகிப்பதற்காவது, அல்லது தப்பு நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்காவது அவர் உயிரோடு இருந்துதான் ஆகவேண்டும் என்று எண்ணினார். அவருடைய பிரசித்தமான, உறுதியான கொள்கை, “நான் நினைக்கிறேன். ஆதலால் நான் உயிரோடிருக் கிறேன்” என்பதுதான். அவர் இதிலிருந்து தமது தத்துவ சாஸ்திரத்தை அமைக்க ஆரம்பித்தார். கடவுளின் உண்மையைப்பற்றிச் சந்தேகமறத் தெளிந்து கொண்டார். பொருள்கள் (Matter), உள்ளம் (Mind) இவைகளுக்குக் கடவுளோடு கூடிய சம்பந்தம் ஆகிய இவற்றையும் உணர்ந்துகொண்டார். ஐம்புலன்களின் நுகர்ச்சியினால் இவைகள் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் அறிவாராய்ச்சியினால் ஏற்பட்ட மிகவும் அவசியமான கருத்துக்கள் என்று ஆதாரங்கள் மூலமாகத் திருப்தி செய்விக்கப்பட்டமையால்தான் இவை ஒப்புக் கொள்ளப்பட்டன. அனுபவத்தினின்றும் வேறுபட்டவையாய் வேறொன்றையும் சாராதனவாயுள்ள சில கருத்துக்களை (Ideas) அவர் நிச்சயமாய் உணர்ந்து கொண்டார். இந்தக் கருத்தைக் காட்டிலும் உயர்ந்ததான ஒரு காரணப் பொருளினால்தான் இந்தக் கருத்துத் தம் மனத்தில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆதி காரண வஸ்துவே கடவுள். அவர் இருந்துதான் ஆகவேண்டும் என்று அவர் வாதித்தார். அவ்வாறே ஒவ்வொரு கருத்தும் ஒரு காரணத்தை உடையதாக இருக்கவேண்டும் என்று கருதினார். இதனை அவர் எவ்வாறு நிரூபித்தார்? அவர் கருத்துப்படி எல்லா அறிவுகளுக்கும் உண்மைக்கும் தோற்றும் இடமான (Source) ஞானத்தின் சுடராயுள்ள பேரறிவுச் சுடரொளியைப்பற்றிச் சிந்திக்கச் சொல்வதன் மூலமாகத்தான் நிரூபித்தார். தத்துவ விசாரணையில், உதவி வேண்டாத புத்தியில் (Unaided reason) நம்பிக்கை கொள்கின்ற அதே முறையைத்தான் ஸ்பினோசா, லைப்நிட்ஸ் என்பவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் எல்லோரும் அறிவுமுதற் கொள்கையை உடையவர்கள். இந்திய தத்துவ சாஸ்திரத்தில் பௌத்தமதம் தீவிரமான அறிவுமுதற் கொள்கைக்குச் சிறந்த உறுதியான உதாரணமாக அமைந்திருக்கின்றது.

குணதோஷ ஆராய்ச்சி: கேவலம் புத்தி தத்துவத்திலேயே தோற்றுவதுதான் அறிவுமுதற் கொள்கையின் முக்கிய முறையாகும். தருக்க ரீதியில் ஒற்றுமை யுடைமை (Logical consistency) என்பதைக் கொண்டு மனிதர்கள் திருப்தி அடைவார்கள் என்று இந்தக் கொள்கையினர் கருதுகின்றனர். உணர்ச்சியும் அனுபூதி நிலையாகிய காரணங் காண முடியாத அனுபவங்களும் (Mystical experience) சேர்ந்ததே மதத்தின் உயிர் நாடியாகும். தற்கால உளவியல் ஆராய்ச்சி இந்தக் கொள்கையின் வன்மையை மிகுதியாகக் குறைத்துவிட்டது. பா.

நூல்கள் : G.S. Fullerton, An Introduction to Philosophy ; Dr. S. Radhakrishnan, Indian philosophy.