கலைக்களஞ்சியம்/ஆசியா மைனர்

விக்கிமூலம் இலிருந்து

ஆசியா மைனர் கருங்கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கு மிடையே மேற்கு ஆசியாவிலுள்ள ஒரு தீபகற்பமாகும். இப்போது இது துருக்கி வசமுள்ளது. இது உலகத்தில் முதன்முதல் நாகரிகமடைந்த நிலப்பகுதிகளில் ஒன்று. இங்கேயே மனிதன் 3500 ஆண்டுகட்கு முன்னர் இரும்பின் உபயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கலாம் என்று கூறுவர். பண்டைக் கிரேக்க நாகரிகம் ஆசியா மைனரிலேயே தொடங்கிற்று. இது கி.மு.50 முதல் ரோமானியர் வசத்திலிருந்து வந்தது. ஏழாம் நூற்றாண்டில் அராபியர் அரசு செய்தனர். 11ஆம் நூற்றாண்டு முதல் துருக்கியர் வசம் இருந்து வருகிறது. அவர்கள் இதை அனட்டோலியா என்று அழைப்பர். அது பெரும்பாலும் பீடபூமியாகும். இங்கு அவிந்த எரிமலை உள. ஆசியா மைனரில் தாதுப் பொருள்கள் மிகுதி. நல்ல தட்ப வெப்ப நிலை. காடுகளில் ஓக் போன்ற சிறந்த மரங்கள் கிடைக்கும். விவசாயம் சிறப்பாக நடைபெறவில்லை. ஒட்டகங்களும் கழுதைகளும் பாரம் சுமக்கப் பயன்படுகின்றன. இங்குள்ள அங்கோரா ஆட்டின் மயிர் மிகப் பேர்போனது.