கலைக்களஞ்சியம்/ஆண்டாள்
ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே நந்தனவனத்தில் துளசிவனத்திடையே பெரியாழ்வார் கண்டெடுத்துக் கோதையார் என்று பெயரிட்டு வளர்த்துவந்த பெண்மணி. இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டதால் 'ஆழ்வார் திருமகளார்' என்றும், தாம் சூடிக்களைந்த மாலையினை இறைவனுக்கு அணிவித்து வந்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார்' என்றும், பிரபந்தங்கள் மூலமாக உலக மக்களை உய்வித்து அடிமைகொண்டவராகக் கருதப்படுவதால் 'ஆண்டாள்' என்றும் அழைக்கப்படுவார்.
இளமையிலேயே எல்லாக் கலைகளும் நிரம்பி, இறைவனிடத்தில் கொண்ட பிரேமையே ஓர் உரு என்னலாம்படி அவனை விட்டு உயிர் ஆற்றகில்லாத நிலையினையடைந்து, மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லாத வைராக்கியத்தையும் உடையவராய்த் திகழ்ந்தார். பின்னர், ஆழ்வார் இறைவனுடைய நியமனப்படி கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துச் சென்று, அழகிய மணவாளன் திருமுன்னர் நிறுத்த, கோதையாரும் அவ்விறைவன் திருமேனியில் ஐக்கியமானார் என்பர்.
இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. இவற்றுள், 'இறைவனைக் காண வேண்டும்; கண்டு அவன் உவந்த அடிமை செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் பெருகி உள்ளடங்காமல் வழிந்த சொற்களே திருப்பாவையாகும். இது முப்பது பாசுரங்கள் கொண்டது. இதனை உபநிடதசாரம் என்பர். எளிதில் பொருள் விளங்கக்கூடியது; ஆயின், ஆழ்ந்து கற்பார்க்கு நுண் மணல் ஊற்று ஒப்பது. “விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுசந்திப்பது ; மாட்டிற்றிலனாகில், 'சிற்றஞ்சிறுகாலே' என்ற பாட்டை அநுசந்திப்பது; அதுவும் மாட்டிற்றிலனாகில், நாம் இன்று இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச் செய்வர். இறைவனை இப்பொழுதே சேரவேண்டும் என்று எழுந்த காதல் உள்ளடங்காமல் மீதூர்ந்து வெளிப்போந்த காதல் வெள்ளமே 'நாச்சியார் திருமொழி'. இது நூற்றுநாற்பத்து மூன்று செய்யுட்களையுடையது.
இவருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்றும், 731ஆம் ஆண்டு மார்கழிப் பௌர்ணிமையன்றே திருப்பாவை அருளிச் செய்த நாளாகும் என்றும் அறுதியிடுவர் மு. இராகவையங்கார் அவர்கள். பு. ரா.பு.