கலைக்களஞ்சியம்/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள திருப்பாவை, நாச்சியார் திருமொழி இவற்றை யருளிச்செய்த ஆண்டாளைப் பற்றிப் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம். இப்பிள்ளைத் தமிழைப் பாடியவர் இன்னாரென் அறியப்பட்டிலர். இந்நூலைப் பாடியவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடையவராக இருத்தலோடு, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், அதன் வியாக்கியானங்களிலும், அவற்றைப்பற்றி யெழுந்த பிற நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவராகக் காணப்படுகின்றார்.

இந்நூலில், அம்புலிப் பருவத்திற்குமேல் சிற்றிலிழைத்தல், சிறுசோறடுதல், பொன்னூசல், காமன் நோன்பு தவிர்தல் என்ற பொருள்களைப்பற்றிச் சிற்றிற்பருவம், சிறுசோற்றுப் பருவம், பொன்னூசற் பருவம், காமன்நோன்புப் பருவம் என்று நான்கு பகுதிகள் அமைத்துள்ளனர். இவை மற்றப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை. காமன் நோன்புப் பருவம் தனிச் சிறப்புடையது. ஆண்டாள், நாச்சியார் திருமொழி என்ற தம் நூலில் திருமாலையே காதலித்து, அவரையே அடைதல்வேண்டும் என்று கருதிக் காமனை நோக்கி நோன்பிழைத்தாராகக் கூறியுள்ளனர். அதனைக்கருதி, இந்நூலாசிரியர், "அப்பெருமானே உன்னை யேற்றுக்கொள்ள மிக்க ஆர்வமுடையவனாக இருக்கின்றானே ; நீ ஏன் காமன் நோன்பிழைத்தல் வேண்டும்? அதனைத் தவிர்க" என்ற கருத்தோடு இப் பகுதியை அமைத்துள்ளனர்.

பழிச்சினர் பரவலில் "அண்டர் திருவாய்ப்பாடி' என்று தொடங்கும் செய்யுளில், ஆண்டாள் திருப்பாவையை என்ன மனநிலையோடு பாடினர் என்பதை விவரித்துள்ளனர். இச்செய்யுள் திருப்பாவை வியாக்கியானக் கருத்துடையதாக உள்ளது. ஆண்டாள் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவராயினும், ஆழ்வார்கள் எல்லோருடைய திரு மகளாராகக் கருதுதல் முன்னையோர் மரபு. இதனை “அஞ்சுகுடிக் கொருசந்ததியாய்" என்ற உபதேச ரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். ஆண்டாள் பிள்ளைத்தமிழாசிரியர், ஆண்டாளை மாறன் (நம்மாழ்வார்) திருமகள் என்று பலவிடங்களிற் கூறுகின்றனர். ஆண்டாள் மிக்க இளமையிலேயே திருமாலைக் காதலித்ததனால் அவரைப் "பிஞ்சாய்ப் பழுத்தாள்" என்று கூறுவது மரபு. இதனையும் மேற் கூறப்பட்ட உப தேசரத்தினமாலைச் செய்யுளாலறியலாம். இப்பிள்ளைத்தமிழாசிரியர் 14ஆம் செய்யுளில் “பிஞ்சாய்ப் பழுத்த வண்ணமுத நற்கனியினை” என்று கூறுகின்றனர். மேற்கூறப்பட்டவற்றால் இப் பிள்ளைத்தமிழாசிரியர் உபதேச ரத்தின மாலையைப் பாடியருளிய மணவாள மாமுனிகளுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளலாம்.

இந்நூலில், அம்புலிப் பருவத்தில் ஏழு செய்யுட்களும், சிற்றிற் பருவத்தில் ஐந்து செய்யுட்களும், சிறுசோற்றுப் பருவத்தில் ஆறு செய்யுட்களும் உள்ளன.சப்பாணி, முத்தம், வாரானை இப் பருவங்களில் பத்துச் செய்யுட்கள் வீதம் உள்ளன. எஞ்சியவை பதினொரு செய்யுட்கள் வீதம் உடையனவாகவிருந்து, பின்னர் எஞ்சிய செய்யுட்கள் இறந்திருக்கலாம். பழிச்சினர் பரவலில் இராமானுசரைப் பற்றிய செய்யுளும் இவ்வாறே இறந்திருக்கலாம். ஆ. பூ.