கலைக்களஞ்சியம்/ஆனந்த குமாரசுவாமி, டாக்டர்

விக்கிமூலம் இலிருந்து

ஆனந்த குமாரசுவாமி, டாக்டர் (1877-1947): இவர் 1877 ஆகஸ்ட் 22-ல் கொழும்பு நகரில் பிறந்தார். இவருடைய தகப்பனார் கீழைத்தேசங்களில் முதன்முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும், அரிச்சந்திர நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா ராணிக்கு உரிமையாக்கினவரும், சிறந்த இலங்கைத் தமிழர் தலைவராக விளங்கியவருமான சர் முத்துக்குமாரசுவாமியாவர். இவருடைய தாயார் எலிசபெத் கிளேபீபி என்னும் ஆங்கில மாது. ஆனந்த குமாரசுவாமி எட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போதே தாயார் இவரை எடுத்துக் கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றார். சர் முத்துக்குமாரசுவாமி 1879-ல் கொழும்பில் இறந்தபடியால் தாயாரும் மகனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். ஆனந்தகுமாரசுவாமி முதலில் விக்ளிவ் கல்லூரி (Wycliffe College)யிலும், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று, 1900-ல் பீ. எஸ்ஸி. தேர்வில் தாவரவியலிலும் புவியியலிலும் முதலாம் வகுப்பில் தேறினார். 1903-ல் முதன்முதலாக இலங்கைக்கு வந்து, 1906 வரைக்கும் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதிக்குத் தலைவராகக் கடமையாற்றி, தோரியனைட் என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இத்துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக இவருக்கு லண்டன் பல்கலைக் கழகம் டாக்டர் (டீ. எஸ்ஸி.) பட்டம் வழங்கிற்று.

ஆனந்த குமாரசுவாமி

இவர் தம் உத்தியோகக்கடமை சம்பந்தமாகக் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். அப்பொழுதுதான் அவ்விடங்களில் பாழ்பட்டுக் கிடந்த தாகோபாக்களையும் (Dagobas), விஹாரங்களையும், கோயில்களையும் கண்டு, அவற்றின் சிற்பத்திறன்களை ஆராயத் தொடங்கினர். மேனாட்டு நாகரிசுத்தில் மயங்கிக் கிடந்த இலங்கை மக்களின் போக்கை மாற்றும் பொருட்டு 1905-ல் இலங்கைச் சீர்திருத்தச் சபையைத் தாபித்தார். சுதேசிப் பொருள்களை ஆதரிக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும், இந்தியக் கலைகளைப்பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார். இவையே கலையும் சுதேசியும், தேசிய இலட்சியக் கட்டுரைகள் என்னும் ஆங்கில நூல்களாக வெளிவந்து இந்திய மக்களிடையே ஒரு பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணின. 1910-ல் இந்தியாவின் பல பாகங்களிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அரிய நுண்கலைப் பொருள்களைச் சேகரித்து, அலகாபாத் நகரில் ஒரு கலைக்காட்சியை ஏற்பாடு செய்தார். 1912-ல் சாந்திநிகேதனத்தில் சிலகாலந் தங்கினார். தாம் அரிதிற் சேகரித்த நுண்கலைப் பொருள்களைக் கொண்டு இந்தியாவில் ஒரு கலாபவனத்தைத் தாபிக்க முயன்றார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக்காதபடியால், அவற்றுடன் அமெரிக்காவுக்குச் சென்று, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சிச் சாலையைச் சேர்ந்தார். பின்னர் இவர் 1947-ல் இறக்கும் வரையில் அங்கேயே கடமையாற்றினார். இவர் அங்கிருந்த போதிலும் இந்தியக் கலைகளையும் பண்பாட்டையும் உலகுக்கு விளக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். இவர் எழுதிய சிவநடனம் (Dance of Siva) என்னும் நூலே முதன் முதலில் தெய்வாமிசம் பொருந்திய இந்தியக் கலைகளின் உண்மைத் தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியது. காந்தாரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த விக்கிரகங்கள் கிரேக்கச் சிற்பமுறையைப் பின்பற்றியவை என்னும் போலிக் கொள்கையைத் தக்க ஆதாரங் காட்டி மறுத்தவர் இவரே. மேலும் இவரே அமராவதி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைக்கொண்டு யாழின் வடிவம் இன்னதென்று முதன் முதலாக வரையறுத்துக் கூறியவர். இவர் கடைசிக் காலத்தில் வேதங்களின் தத்துவார்த்தங்களை விளக்குவதில் ஈடுபட்டிருந்தார். ச. அ.