கலைக்களஞ்சியம்/ஆப்கானிஸ்தானம்

விக்கிமூலம் இலிருந்து

ஆப்கானிஸ்தானம் மேற்குப் பாகிஸ்தானிற்கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானம்

இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந்நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்பமும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா. அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச் சராசரி 11 அங். மழை பெய்கிறது.

இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு. 120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானியர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்டடணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடைபெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவசாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல் சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன இங்குக் கொண்டுவரப்படுகின்றன. அந்நாடுகளுக்கு வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள் பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம் அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக் கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன. ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208 (1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்தகார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 (1948).

வரலாறு : இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது. இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும் மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக் கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது. இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவதுண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர்களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர்.

18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின்றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலைவனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண்டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன் தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச்சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவனுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக்குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய்தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகையிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர்களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர். ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன் காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதிகரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர்ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிகளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சியில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங்கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்டமெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந்தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்பதென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர். ஆயினும் ஆப்கானியர்கள் வெளி நாட்டாருடைய தலையீட்டை விரும்பாமல் கிளர்ச்சி செய்தபோது ஆங்கிலேயர்கள் படை கொண்டு தாக்கவே பெரும்போர் மூண்டது. ஆப்கானியர்களுடைய எதிர்த் தாக்குதலுக்கு ஆற்றாமல் ஆங்கிலேயர்கள், பல இடங்களில் தோல்வி கண்டனர்.

1891ஆம் ஆண்டிற்குள்ளாக அமீர் அப்துர் ரஹ்மான் என்னும் மன்னன் நாட்டை நல்ல முறையில் சீர்திருத்தி அமைத்தான். 1901-ல் ஹபீபுல்லா அவனுக்குப்பின் அமீரானபோது நாட்டின் நிருவாகம் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்தது. 1919-ல் ஹபீபுல்லா கொலையுண்டிறந்தான். அவனுக்குப்பின் பதவிக்கு வந்த அவன் சகோதரன் நசிருல்லாவை நீக்கிவிட்டு. ஹபீபுல்லாவின் மூன்றாம் மகனான அமானுல்லா பட்டமெய்தினான். 1919-ல் அமானுல்லாவிற்கும் பிரிட்டிஷாருக்கும் சிறு போர் ஒன்று மூண்டு, 1921-ல் சமாதானம் ஏற்பட்டது. இச்சமாதான வுடன்படிக்கைப்படி ஆப்கானிஸ்தானத்தின் பூரண சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். அமானுல்லா அரசியலில் மிகுந்த திறமையோடு நடந்துகொண்டான். துருக்கி, பாரசீகம் ஆகிய நாடுகளோடு நேசவுடன்படிக்கை செய்துகொண்டான். அவன் காலத்தில் ஆப்கானியர்களுடைய பண்டைய பண்பாடு ஓரளவு மறைந்து, அவர்கள் நவீன ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ளத் தொடங்கினர். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான கல்வி முதலிய உரிமைகளை யளிக்க அமானுல்லா அரசாங்கம் முற்பட்டபோது ஆப்கானிய மக்கள் அரசனை எதிர்த்துக் கலகம் செய்யத் தொடங்கினர். 1928-ல் நிலைமை மிக்க மோசமாயிற்று. 1929-ல் அமானுல்லா முடி துறந்தான். மறுபடியும் அரசனாகும் எண்ணம் அவனுக்கு இருந்ததாயினும் அது கை கூடவில்லை. நாதர்கான் என்பவன் அமானுல்லாவிற்குப் பிறகு ஆப்கானிய மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆயினும் 1933-ல் அவன் கொல்லப்பட்டு இறந்தான். அவனுக்குப்பின் பட்டத்திற்கு வந்த சாகிர்ஷாடு நாட்டில் அடிமை நிலையை யொழித்தான். கல்வியைக் கட்டாயமாக்கினான். மேற் படிப்புக்கும் மாணவர்களை ஜப்பானுக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று. 1934-ல் ஆப்கானிஸ்தானம் சர்வதேச சங்கத்தின் உறுப்பு நாடு ஆயிற்று; 1937-ல் ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளோடு ஒரு நேச ஒப்பந்தம் செய்துகொண்டது ; இதற்குச் சாதாபாத் உடன்படிக்கை என்று பெயர். 1946-ல் ஆப்கானிஸ்தானம் ஐ. நா. சங்கத்தின் உறுப்பு நாடாயிற்று. சை. அ. வா. பு.

அரசியல் அமைப்பு : இந்நாட்டின் ஆட்சிமுறை அரசியல் அமைப்பிற்குட்பட்ட முடியாட்சி. அரச பதவி வமிச பரம்பரையாக வருவது. அரசாங்க அமைப்பிற்கும், படைக்கும், சமய அமைப்பிற்கும் அரசனே தலைவன். அவசரச் சட்டங்கள் இயற்றவும், போர் தொடுக்கவும், சமாதானஞ் செய்துகொள்ளவும் அரசனுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் தேசிய சபை எனப்படும் கீழ்ச்சபை இவைகளைப் பின்னர் ஏற்றுக் கொள்ளவேண்டும். 1931ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி. இங்குச் சட்டமியற்றும் உயர்ந்த அதிகாரத்தை 1. மன்னன், 2. மேற்சபை, 3. கீழ்ச்சபை மூன்றும் சேர்ந்ததாகிய நாடாளும்மன்றம் பெற்றிருக்கிறது. மேற்சபை அரசனால் நியமிக்கப்பட்டுத் தம் ஆயுள் முழுதும் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களைக் கொண்டது. கீழ்ச்சபையில் பொதுமக்கள் வாக்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எந்த மசோதாவும் கீழ்ச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசனுடைய அங்கீகாரத்தையும் பெற்றே சட்டமாக வேண்டும். ஏறக்குறைய நான்காண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் பெரும் பிரச்சினைகளைப் பற்றி ஆலோசனை செய்ய அரசன் ஒரு பேரவை கூட்டுவான்.

அரசாங்கமானது உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள், மராமத்து, உழவு, வாணிபம், நீதி, சுரங்கங்கள், சுகாதாரம் போன்ற பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஓரமைச்சன் பொறுப்பில் இருக்கிறது. அமைச்சர்கள் நாடாளு மன்றத்தின் இரு சபைகளிலும் உறுப்பினர்களல்லராயினும் அச்சபைகளில் வந்திருந்து பேசலாம். அமைச்சர் குழுவில் மேற்சபை, கீழ்ச்சபைத் தலைவர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். தனித்தனியாகவும் கூட்டாகவும் நாடாளுமன்றத்திற்கு அமைச்சர்கள் பொறுப்பாளிகள். அமைச்சர்களை விசாரிப்பதானால் அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களை விசாரிக்கலாம்.

நாட்டின் பல்வேறிடங்களில் கீழ் மேல் நீதிமன்றங்களும், தலைநகராகிய காபுலில் உயர்நீதிமன்றமும் இருக்கின்றன. அன்றாடச் சச்சரவுகளையும், வணிக சம்பந்தமான வழக்குக்களையும் தீர்த்துவைக்க மத்தியஸ்த நீதிமன்றங்களும் நிறுவப்பட்டுள்ளன. நாட்டை ஏழு பெரு மாகாணங்களாகவும், மூன்று சிறு மாகாணங்களாகவும் பிரித்துள்ளனர். சிறு மாகாணங்கள் மேலும் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காபுலில் ஒரு கவர்னரும், மற்றப் பெரிய மாகாணங்களில் உதவி கவர்னர்களும், சிறிய மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளும் ஆட்சி புரிகின்றனர். ஆங்காங்குள்ள இலாகாத் தலைவர்களும், மக்களின் பிரதிநிதிகளும் இவ்வதிகாரிகளுக்கு ஆட்சியில் உதவி புரிகின்றனர். எல்லாப் பெரிய பட்டணங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின்கீழ் நகர சபைகள் நகராட்சி நடத்துகின்றன.

இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 25 வயதிற்கு மேற்பட்டு 70 வயதிற்குட்பட்டவர்களே தேசிய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் படலாம். படையிலும் ஊர்ப்பாதுகாவலிலும் பணியாற்றுவோர் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. அவர்கள் பிறரைத் தேர்ந்தெடுக்கவும் கூடாது. 18 வயதிலிருந்து 40 வயதுவரையுள்ள மக்கள் போர்ப்பணி செய்ய வேண்டும். அவர்கள் ஈராண்டு கட்டாயமாய்ப் போர்ப் பயிற்சி பெறுகின்றனர். நாட்டில் ஆரம்பப் படிப்பும் இடைத்தரக் கல்வியும் இலவசமாய் அளிக்கப்படுகின்றன. ஆப்கானியர் பாரசீகம், புஷ்டு, துருக்கி முதலிய மொழிகளைப் பேசுகின்றனர். 1932-ல் காபுல் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. தி. வை. சொ.