கலைக்களஞ்சியம்/ஆப்பிரிக்கா

விக்கிமூலம் இலிருந்து

ஆப்பிரிக்கா : இது உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டம். இக்கண்டத்திலேயே உலகில் இரண்டாவது பெரிய ஆறும், இரண்டாவது பெரிய ஏரியும் இருக்கின்றன. சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் ஐரோப்பியர்கள் இக்கண்டத்தை இருண்ட கண்டம் என்று கூறிவந்தனர். ஏனெனில் இக்கண்டத்தின் உட்பகுதியில் வாழ்ந்துவந்த மக்களினம், விலங்கினம் முதலியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள இயலாதவாறு ஆப்பிரிக்காவின் வடபகுதியில் சகாரா என்னும் பெரிய பாலைவனம் அமைந்து கிடப்பதால், அதைக்கடந்து தெற்கே வந்து, மத்திய, தென் ஆப்பிரிக்காப் பகுதிகளைப்பற்றி யறிந்துகொள்ளப் பண்டையர்களால் முடியவில்லை. இப்பெரிய கண்டத்தின் நெடிய கடற்கரையில் கப்பல்கள் வந்து தங்குவதற்கு வசதியான இடங்கள் அதிகமாக இல்லாமையும் இதற்கு ஒரு காரணமாகும்.

வடக்கே மத்தியதரைக் கடலும் ஐரோப்பாவும், தெற்கே இந்திய, அட்லான்டிக் சமுத்திரங்களும், மேற்கே அட்லான்டிக் சமுத்திரமும், கிழக்கே தென் ஆசியாவும் இந்திய சமுத்திரமும் சூழ அமைந்துள்ளது இக்கண்டம். பரப்பு : 1.17,10, 424 ச. மைல். மக்கள் சு.15 கோடி. ஆட்லெஸ், ருவன்சோரி, டிராக்கன்ஸ்பர்கு என்பவை முக்கிய மலைத்தொடர்களாம். கிலிமாஞ்சாரோ (19,320 அடி), கெனியா (17,040 அடி) என்பவை உயரமான சிகரங்கள். காங்கோ, நைல், நைஜர், ஆரஞ்சு, சாம்பசி முதலியவை முக்கியமான ஆறுகள். ஆல்பர்ட், சாடு, எட்வர்டு, நியாசா, டாங்கன்யீகா, விக்டோரியா என்பவை முக்கியமான ஏரிகள். சகாரா, கலகாரி என்பவை முக்கியமான பாலைவனங்கள். ஸ்டான்லி, விக்டோரியா என்பவை முக்கியமான நீர்வீழ்ச்சிகள்.

இக்கண்டத்தை யடுத்துள்ள முக்கியமான தீவுகள் மடகாஸ்கர், ரீயூனியன், மோரீசு, கனேரி, கேப்வர்டு, மடீரா என்பவை. இவற்றுள் முதல் மூன்றும் இந்திய சமுத்திரத்திலும், ஏனையவை அட்லான்டிக் சமுத்திரத்திலும் அமைந்திருப்பவை.

இக்கண்டத்தை மூன்று முக்கிய இயற்கைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம் : பாலைவனம், புல்வெளிப் பிரதேசம், காடுகள். ஆப்பிரிக்கக் காடுகளில் அயன மண்டல மரவகைகளே மிகுதியாகவுள்ளன. அங்குப் பாம்பு, பறவை, பூச்சிகளைத் தவிர வேறு உயிர் இனங்கள் மிகுதியாக இல்லை. பூமத்தியரேகைப் பிரதேசத்திலிருந்து மத்திய ஆப்பிரிக்காவரை காடுகள் அடர்ந்துள்ளன.

இக்காட்டுப் பகுதிக்கு வடக்கேயும் தெற்கேயும் புல்வெளிப் பிரதேசங்கள் அடர்ந்துள்ளன. இப்பிரதேசங்களே மாடு மேய்ப்பதற்கும் சாகுபடி செய்வதற்கும் ஏற்ற இடங்கள். வட ஆப்பிரிக்காவில் 'சூடான்' என்றும், தென் ஆப்பிரிக்காவில் 'வெல்டு' என்றும் இவை பெயர் பெறும். சூடானுக்கு வடக்கேயும், வெல்டுக்குத் தெற்கேயும் பாலைவனங்கள் உள்ளன. வடக்கே சகாரா பாலைவனமும், தெற்கே கலகாரி பாலைவனமும் இருக்கின்றன. சகாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் பரப்பில் ஐந்தில் ஒன்று உடையது. சகாராவிற்கு வடக்கேயுள்ள மத்தியதரைக் கடற்கரைப் பகுதியும், கலகாரிக்குத் தெற்கேயுள்ள இந்திய சமுத்திரக் கடற்கரைப் பகுதியும் செழிப்பான நிலப்பகுதிகளாம்.

கிழக்காப்பிரிக்காவில் உள்ள இத்தியோப்பியாப் பிரதேசம் ஒரு பெரிய பீடபூமி. ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஏரிகள் பல இப்பிரதேசத்தில் உள்ளன. மிக உயரமான மலையுச்சிகளும் கிழக்காப்பிரிக்காவிலேயே இருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள ஆறுகளில் மிக நீளமானது நைல். ஆயினும் காங்கோவிலேயே மிக அதிகமான தண்ணீர் ஓடுகிறது. உலகில் உள்ள ஆறுகளில் ஆமெசானுக்கு அடுத்தபடியாகக் காங்கோவே அதிக நீரைக் கொண்டு செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள ஆறுகளில் நைல் மத்தியதரைக்கடலிலும், சாம்பசி இந்திய சமுத்திரத்திலும், ஏனைய முக்கியமான ஆறுகள் அட்லான்டிக் சமுத்திரத்திலும் சேர்கின்றன.

ஆப்பிரிக்காவில் மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்கா ஏனைய பகுதிகளைக் காட்டிலும் சிறிது வெப்பம் குறைவாக உள்ள பகுதி. இப்பகுதி பீடபூமியாக இருப்பதே இதற்குமுக்கியக்காரணம். பூமத்தியரேகைப் பிரதேசம் தவிர ஏனைய பிரதேசங்களில் மழை மிகக் குறைவு.

பாலைவனப் பகுதிகளில் மிகுதியாக வளர்வது பேரீச்ச மரமே. பாலைவனச் சோலைகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கியமான உணவு பேரீச்சம் பழம். ஆட்லெஸ் மலைத் தொடருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் ஒலிவ மரம், ஒக், தக்கை முதலிய மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. வடகோடியிலும் தென்கோடியிலும் கடற்கரையோரப் பகுதிகளில் கோதுமை, பார்லி முதலிய தானியங்களும், ஏனைய இடங்களில் கரும்பு, புகையிலை சோளம் முதலியவையும் பயிராகின்றன. பருத்தி எகிப்தில் ஏராளமாகப் பயிராகிறது. காடுகளில் மகாகனியும் எபனியும் மிகுதியும் வளர்கின்றன. தென் ஐரோப்பாவில் உள்ள விலங்கினங்கள் யாவையும் வட ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. சகாரா, சூடான் பிரதேசங்களில் ஒட்டகம் முக்கியமான விலங்கு. சூடானுக்குத் தெற்கே எண்ணிறந்த காட்டு விலங்குகள் வாழ்கின்றன. காட்டு எருமை,நீர்யானை, வரிக்குதிரை, கலைமான், ஒட்டைச் சிவிங்கி முதலிய சாகபட்சிணிகளும், சிங்கம், சிவிங்கி, சிறுத்தை,நரி,கழுதைப்புலி முதலிய கொடிய விலங்குகளும் திரிகின்றன. கரடியும் புலியும் ஆப்பிரிக்காவில் இல்லை. முன்பு மிக அதிகமாக இருந்த யானைகள் இப்பொழுது குறைந்துவிட்டன. அவற்றின் தந்தங்களை நாடி மக்கள் அவற்றை வேட்டையாடிக் கொன்று குறைத்தனர். மிக அடர்த்தியான காடுகளில் விலங்குகள் நுழைந்து வெளிவரவும் இடமின்றியிருப்பதால் இங்குப் பூச்சிகளும் பறவைகளும் வாழ்கின்றன. கொரில்லா, சிம்பன்சி முதலிய பெருங்குரங்குகள் இக்காடுகளில் வசிக்கின்றன. தென் ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் நெருப்புக்கோழி காணப்படுகிறது. ஆறுகளிலும் சதுப்பு நிலங்களிலும் நீர்க்குதிரை, காண்டாமிருகம், முதலை முதலியவை வாழ்கின்றன. பசுவும் ஆடும் தென் ஆப்பிரிக்கப் பிரதேசங்களில் மிகுந்துள்ளன.

வைரமும் தங்கமும் தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றன. வைரம் கிடைக்கும் பகுதிகளில் கிம்பர்லி முக்கியமானது. டிரான்ஸ்வால் பகுதியில் தங்கம் அதிகமாகக் கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்க ஐக்கியப் பிரதேசத்தில் கரியும் இரும்பும் சிறிது கிடைக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு இக்கண்டத்துக் கரி உற்பத்தி மிகுந்துள்ளது.

இக்கண்டத்தில் பல பெரிய நீர்வீழ்ச்சிகள் இருப்பினும், மின்சார சக்தி 1% மட்டும் பெறப்படுகிறது.

(Upload an image to replace this placeholder.)

பெரிய கைத்தொழில்களை அமைப்பதற்கு வசதியில்லாத இடங்களில் இவ்வீழ்ச்சிகள் இருப்பது இதற்கொரு காரணமாம்.

மானிடவியல் : உலகத்திலுள்ள முக்கியமான மக்கள் இனவியல் பகுதிகளுள் ஒன்று ஆப்பிரிக்கா. மக்: 18 கோடி. இங்குள்ளோர் பல்வேறு உடல் அமைப்பு உடையவர்களாகவும், பல்வேறு மொழிகள் பேசுவோராகவும், பல்வேறு பண்பாட்டினராகவுமுளர். ஆப்பிரிக்காக்கண்டத்தின் பெரும்பாகம் சகாராபாலைவனத்துக்குத் தெற்கே இருக்கிறது. அதில் 15 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியதரைக் கடற்கரை ஓரத்தில் வாழ்பவரினின்றும் பல வகையிலும் வேறுபட்டவராவர். தெற்குப் பகுதியில் வாழ்பவர் நீக்ராயிடு இனங்கள். வடக்குப்பகுதியில் வாழ்பவர் காக்கசாயிடுகள். வட ஆப்பிரிக்காவை ஐரோப்பாவுடனும் அண்மைக் கிழக்குப் பகுதியுடனும் சேர்ந்த நிலப்பகுதியாகவே கருதவேண்டும். அப்பகுதியில் வழங்கும் மொழி அரபு ; மதம் இஸ்லாம் ; கிழக்கு மத்தியதரைக் கடற் பகுதியின் பண்பாடு இங்குக் காணப்படுகிறது.

சகாரா பாலைவனத்துக்கு, தெற்கேயுள்ள பகுதியில் பல்வேறு உடல் அமைப்புக்கள் காணப்படுகின்றன. சுத்தமான நீக்ரோ வசிப்பது கினிகோஸ்ட்டு என்னும் பகுதியிலாகும். இவர்கள் குள்ளமானவர்கள்; கட்டான உடலும், மிகுந்த கறுப்பு நிறமும், நீண்ட தலையும், மிகுதியாகச் சுருண்ட மயிரும் உடையவர்கள். அப்பகுதிக்கு வடக்கே கண்டத்தின் குறுக்கே கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள பகுதியில் தென் பகுதியைச் சார்ந்த சுத்தமான நீக்ரோ அமைப்பும், வடபகுதியைச் சார்ந்த காக்கசாயிடு அமைப்பும் ஆகிய இரண்டும் கலந்த அமைப்புக்களுடைய பெர்பெர் என்று தவறாகக் கூறும் ஒரு கலப்பு இனம் காணப்படும். ஆங்கிலோ-எகிப்திய சூடானிலிருந்து கெனியா வரையுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்கப்பகுதியில் ஹாமிட்டிக் இனத்தாரும் நிலோட்டிக் இனத்தாரும் வசிக்கிறார்கள். அவர்கள் திடமில்லாத உடலும், மிகுந்த உயரமும், நீண்ட முகமும், ஒடுங்கிய மூக்குப்புழையும், மிகுந்த கறுப்பு நிறமும், அறல்போன்ற கறுப்பு மயிரும் உடையவர்கள். ஆண்கள் ஆறேகால் அடி உயரமிருப்பார்கள்.

பான்டூ மொழி பேசுவோர் காமரூன் - பெல்ஜியக் காங்கோப் பகுதி முதல் இந்துமகா சமுத்திரம் வரைத் தென் கிழக்காகவும். சான்சிபார் முதல் நன்னம்பிக்கை முனைவரைத் தெற்காகவும் நீண்டு கிடக்கும் பெரும் பகுதியில் வாழ்கிறார்கள். அவர்களுடைய உடலமைப்பு. நிலோட்டிக், ஹாமிட்டிக் அமைப்புக்களை அடிப்படையாகக்கொண்டிருந்தும், பல்வேறு நீக்ராயிடு அமைப்புக்கள் கலந்ததாகும். ஆயினும் அடிப்படையில் நீக்ராயிடு தோற்றமே உடையவர்கள். குள்ளர்கள் (பிக்மி) என்போர் காங்கோவின் கிழக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். அவர்கள் கறுப்பு நிறமும், அகன்ற தட்டை மூக்குப்புழையும், நெருக்கமாகச் சுருண்ட மயிரும் உடையவர்கள். ஆண்கள், ஐந்து அடி உயரமிருப்பர். தெற்குக் கோடியில் கோய்சான், புஷ்மன், ஹாட்டன்டாட்டுக்கள் ஆகியோர் வசிக்கிறார்கள்.

மொழிகள் : ஆப்பிரிக்காவில் வழங்கும் மொழிகளின் தொகை தெரியவில்லை. ஆயினும் ஆராய்ச்சியாளர் அறிந்தனவாக உள்ள பல்வேறு தனி மொழிகளின் தொகை எழுநூற்றுக்குக் குறையாது என்று கூறுவது மிகையாகாது. பொதுவாக வழங்கும் பாகுபாட்டு முறைப்படி பார்த்தால் இந்த மொழிகள் பல குடும்பங்களாகப் பிரியும் : 1. கினி கோஸ்ட்டுக்கும் சகாரா பாலைவனத்தின் தென் எல்லைக்குமிடையில் சூடான் மொழிக் குடும்பமும், 2. ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியில் பான்டூ மொழிக் குடும்பமும், 3. வடகிழக்கில் ஹாமிட்டிக், ஹாமிட்டோ-செமிட்டிக் மொழிக் குடும்பமும், 4. தென் கோடியில் ஹாமிட்டிக்கின் கிளை என்று சிலரால் கருதப்படும் கோய்சான் மொழிக் குடும்பமும் வழங்குகின்றன. இந்தப்பாகுபாட்டு முறையைத் தவறு என்று கிரீன்பெர்க் என்பவர் பான்டூவும் சூடன் மொழிகளில் பெரும்பாலனவும் நைகர்-காங்கோகுடும்பத்தையும், ஹாமிட்டோ- செமிட்டிக் மொழிகள் பண்டை எகிப்திய மொழியையும், குஷைட்மொழி ஆப்பிரோ-ஆசிய மொழியையும் சேரும் என்பர். நிலோட்டிக் மக்களின் மொழிகளைத் தனி கிழக்குச் சூடான் குழுவாகவும், கோய்சான் மொழிகளைக் கிளிக்குக் குடும்பமாகவும் கூறுவர். மற்ற மொழிகளையெல்லாம் பன்னிரண்டு சிறு குடும்பங்களாக வகுப்பர்.

ஆப்பிரிக்க மொழிகள் தொனி வேறுபாடுடையவை. காங்கோ மொழிகளும் ஓரளவு கினிகோஸ்ட்டு மொழிகளும் பொருள் வகைகளையும் நிகழ்ச்சி வகைகளையும் குறிப்பதற்குப் பகுதி முறைகளைக் கையாள்கின்றன. புஷ்மன், ஹாட்டன்டாட்டு மொழிகளில் உள்ள சில ஒலிகள் உலகத்தில் எந்த மொழியிலும் காணப்படாதவை. அம்மொழி பேசுவோர் வாயில் வெற்றிடம் உண்டாக்கிக் காற்றை உட்புகச் செய்து ஆறுவிதமான ஒலிகளை உண்டாக்குகிறார்கள்.

பண்டை ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் ஒன்பதாகும்.

கோய்சான் : இதில் புஷ்மன், ஹாட்டன்டாட்டு என இரண்டு உட்பிரிவுகள் உண்டு. 1. புஷ்மன் பண்பாடு: இம்மக்களிடம் வீட்டு விலங்குகள் இல்லாமையாலும், வேளாண்மை இவர்களுக்குத் தெரியாதாகையாலும் குறைந்த உடையும் கருவிகளும் உடையவராதலாலும், இவர்களுடைய பண்பாடே உலகத்தில் மிகவும் எளிமை வாய்ந்ததாகும். இவர்கள் கலஹாரிப் பாலைவனத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொருளாதாரத்தின் அடிநிலை வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். தேவதைகளில் நம்பிக்கை உடையவர்கள். 2. ஹாட்டன்டாட்டுப் பண்பாடு: இது புஷ்மன் பண்பாட்டைவிடச்சற்று வளர்ச்சி பெற்றதாம். மிகுந்த கலைப்பண்புடைய பலநிற ஓவியங்கள் பாறைகளில் தீட்டியுளர். அவர்களுடைய பொருளாதாரத்திற்கு அடிநிலை கால்நடை வளர்த்தல். அடிப்படையான அரசியலமைப்பும் காணப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்கக் கால்நடைப் பிரதேசம் நைல் நதி உற்பத்தித் தானத்திலிருந்து நன்னம்பிக்கை முனை கிழக்குக் கடற்கரை ஓரமாக நீண்டு கிடப்பதாகும். இது நியாசா ஏரிக்குக் கிழக்கேயுள்ள ஒரு துண்டு நிலத்தால் இரண்டு மாகாணங்களாகப் பிரிந்து கிடக்கிறது. அதற்குக் காரணம் அந்தத் துண்டுப் பகுதியில் ட்ஸெட்ஸி (Tsetse)என்னும் ஒருவகை ஈ இருக்கிறது. அது கால்நடை வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது. அங்குள்ள மக்களிடையே பிழைப்புப் பொருளாதாரம், பெருமைப் பொருளாதாரம் என இரண்டுவகை காணப்படுகின்றன. பிழைப்புப் பொருளாதாரம் வேளாண்மையை அடிநிலையாக உடையது. மற்றதில் கால்நடை வளர்ப்பது முக்கியமாகும். அவர்கள் கால்நடைகளை வளர்ப்பது உண்பதற்காகவோ விற்பதற்காகவோ அன்று ; சமூகத்தில் தங்கள் நிலை இது என்று காட்டுவதற்காகவே, மனைவியரை விலைக்கு வாங்குவதில்லை. ஆயினும் மணமகன் குடும்பத்திலிருந்து கால்நடைகள் மணமகள் குடும்பத்துக்குப் போய்ச்சேர்ந்தால் மணம் உறுதியாகும். தாய்க்காகக் கொடுத்த கால்நடையின் அளவைப் பொறுத்ததே அவளுடைய குழந்தையின் அந்தஸ்து. இயற்கைச் சக்திகளைத் தேவதைகளாகச் செய்து வணங்கும் வழக்கமும், அதற்கேற்ற சடங்குகளும் காணப்படினும், அவர்களுடைய முக்கியமான சமய வழிபாடு மூதாதையர் வழிபாடேயாம். இசை, நடனம், கதாகாலட்சேபம் ஆகியவை உண்டு. ஓவியமும் சிற்பமும் இல்லை.

கிழக்குக் கோடிப் பிரதேசப் பண்பாடு நீக்ரோ ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தொடர்புடையதாகும். இவர்களிடையே பெருமைப் பொருளாதார விலங்கு பசுவன்று, ஒட்டகமாம். வாரிசுமுறை தந்தை வழியேயாகும். கிழக்குப் பகுதியில் இஸ்லாமும், மத்திய பீடபூமியில் காப்டிக் கிறிஸ்தவ மதமும் காணப்படுகின்றன. கலை அமைப்புக்கள் குறைவு.

காங்கோ பண்பாடுகள் தொழில் நுணுக்க முறையிலும், பொருளாதார அரசியல் அமைப்பிலும், மத, கலை வளர்ச்சியிலும் மற்றப் பண்பாடுகளைவிட மேம்பட்டவை. பெல்ஜிய காங்கோ பகுதியில் மட்டுமே நாற்பத்துநான்கு ஆதிக்குடிகள் இருப்பினும், குள்ளர்களுடைய பண்பாடு தவிர, ஏனையோர் பண்பாடுகள் அனைத்தும் அடிப்படை ஒற்றுமை உடையனவாக இருக்கின்றன. அவர்களுடைய பொருளாதாரம் விவசாயத்தை அடிநிலையாகக்கொண்டது. சிறு விலங்குகளைத்தான் வளர்க்கிறார்கள். கலைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மரத்தாலும் தந்தத்தாலும் அழகான செதுக்கு வேலைகளும், நேர்த்தியான துணி நெசவும், இரும்பு வேலையும், மட்கலத் தொழிலும் காணப் படுகின்றன. ஆதிக்குடிகள் தங்களுக்குள் வியாபாரம் செய்கிறார்கள். கிராமத்தை ஆட்சி செய்ய ஒரு தலைவனுண்டு; மூத்தோர் குழு ஒன்றும் உண்டு. கிராமத்துக்குமேல் பெரிய அரசியல் அமைப்புக்கள் இருக்கின்றன. உத்தியோகம் பரம்பரை பாத்தியமானது. அவர்களுடைய கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுத் திறமையாகப் பரிபாலிக்கப்படுகின்றன. நியாய மன்றங்கள் ஒழுங்காக நியாயம் வழங்குகின்றன. தீமை செய்வோரையும் விதிகளை மீறுவோரையும் தண்டிக்கும் ஒரு பெரிய தெய்வம் உண்டு என்று நம்புகிறார்கள். நெறி பிறழ்ந்தவரைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்காக இரகசியச் சங்கங்களும் உள.

கினிகோஸ்ட்டு: இதுவே ஆப்பிரிக்காவில் மிகுந்த மக்கள் தொகையுள்ள பகுதி. ஐரோப்பாவில் மத்திய காலத்திலிருந்த சமூக அமைப்பே இங்குக் காணப்படுகிறது. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடிநிலை. கிராமமே அரசியல் அமைப்பின் தொடக்க நிலை. இந்தப் பகுதியில் பெரிய நகரங்களும் காணப்படுகின்றன. நைஜீரியாவிலுள்ள ஈபாடான் என்னும் நகரம் மூன்றரை இலட்சம் மக்களையுடையது. இரும்புப் பொருள்கள், துணி, மட்கலங்கள், மரப்பொருள்கள் நல்லவிதமாகச் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலங்களில் பெரிய சந்தைகள் கூடும்; ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். சமூக அமைப்பின் அடிநிலை பலதார மணம் நடைபெறும் குடும்பமாகும். குடும்பங்கள் சேர்ந்தது கூட்டம். பரம்பரை வாரிசு தந்தை வழியதேயாம். கோல்டு கோஸ்ட்டில் தாய் வழியதும் உண்டு. கூட்டுறவுச் சங்கங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இரகசியச் சங்கங்கள் ஒரோவிடத்துக் காணப்படும். நைஜர் கழிமுகம், லைபீரியா, ஐவரி கோஸ்ட்டு ஆகிய பகுதிகளில் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுயாட்சியுடையதாம். எங்கும் அரசியல் தொடர்புடையதும் மதத் தொடர்புடையதுமான சடங்குகள் மிகுதி. இயற்கைத் தேவதைகளுடைய கருத்தைப் புரோகிதர்கள் அறிந்து கூறுவர். உலகத்திலேயே மிக நேர்த்தியான மரச் செதுக்குச் சித்திரம் செய்யும் இடங்களில் ஒன்று. ஆயினும் பித்தளையாலும் வெண்கலத்தாலும் இரும்பாலும் துணியாலும் செய்யும் கலை வேலைப்பாடே அதிகம்.

மேற்குச்சூடான் பல இயல்புகளில் கினிகோஸ்ட்டை ஒத்ததாகும். மேற்கு ஆப்பிரிக்காவில் இப்பகுதி வரையில்தான் இஸ்லாம் எட்டியுள்ளது. இங்குக் கால்நடைகள், குதிரைகள் போன்ற பெரிய வீட்டு விலங்குகள் காணப்படுகின்றன. அவை வெறும் பெருமைப் பொருள்களாக இல்லாமல் பிழைப்புப் பொருள்களாக இருக்கின்றன. கால்நடைகளை உணவுக்காக வளர்த்தாலும் வேளாண்மையே முதன்மையான பிழைப்புத் தொழில். இங்குக் கைத்தொழிலும் வியாபாரமும் மிகுதி. இஸ்லாம் மதத்தொடர்புடையதாயிருப்பதால் எங்கும் வாரிசு முறை தந்தை வழியதாகும். இந்தப் பகுதிகளில் ஆட்சி புரிந்தவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்த போதிலும், இங்குள்ள பழைய மதக் கொள்கைள் கினிகோஸ்ட்டுக் கொள்கைகளைப் போன்றனவே. கலைத்திறமை அதிகமாயினும் கிழக்கே போகப்போகக் குறையும்.

கிழக்குச்சூடான்: இது பாலைவனம் போன்றது. இங்குள்ள மக்களில் சிலர் நாடோடிகளாகவும், சிலர் விவசாயிகளாகவும் இருக்கின்றனர். சமூக, அரசியல், சமய அமைப்புக்களும் பல்வேறுபட்டனவாகவுள்ளன. வடக்கே இஸ்லாம் ஆட்சிபுரிகிறது. தெற்கிலும் தென் கிழக்கிலும் காங்கோ பிரதேசம் போன்றுளது.

பாலைவனப்பகுதி: இங்குள்ள துவாரெக் (Tuareg) போன்ற சாதியார்களைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை.

ஆப்பிரிக்கப் பண்பாடு என்று தனியாகப் பிரித்துக் கூறுவது கடினமாயினும் சில முக்கியமான அமிசங்களைக் கூறலாம். மூதாதையர் வணக்கம் எங்கும் காணப்படுகின்றது. மூதாதையரை அடிப்படையாகக் கொண்டு சாதியார் பிரிந்துளர். அரசியல் அமைப்புக்கும் அதுவே அடிநிலை. வழக்குக்களைத் தீர்க்க நியாய மன்றங்கள் எங்கும் காணப்படுகின்றன. பல பகுதிகளிலுள்ள மதங்கள் வேறுபட்டிருப்பினும், இயற்கைத் தேவதை வணக்கம், மூதாதையர் வழிபாடு, மந்திரவாதத்தில் நம்பிக்கை போன்றவை எங்கும் ஒன்று போலவே காணப்படுகின்றன. அதுபோலவே கலை வேலைப்பாடுகளும், இசை, நடனம், கதைபோன்ற பண்பாட்டு அமிசங்களும் எங்கும் பிகுதியாகக் காணப்படுகின்றன மெ. ஜே. ஹெ.

வரலாறு : ஆப்பிரிக்காவின் வடபாகம் நாகரிக வளர்ச்சி யடைந்த பகுதி. மத்தியபாகமும் தென் பாகமும் காடுகள், மலைகள் அடர்ந்த பகுதியாகையால் வெளிநாட்டு மக்களால் குடிபுக முடியவில்லை. அவர்கள் நாட்டின் நிலைமையைப் பற்றி ஒன்றும் அறிந்துகொள்ள முடியாதிருந்தனர். ஆகையால் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் நன்னம்பிக்கை முனை கண்டு பிடிப்பதற்குமுன் ஆப்பிரிக்காக் கண்டம் 'இருண்ட கண்டம்' என அழைக்கப்பட்டது. ஆனால் ஆப்பிரிக்காவின் வடபாகம் சிறப்பாக நைல் நதிப் பிரதேசமாகிய எகிப்து தேசம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எகிப்தின் பழங்கால மக்கள் நாகரிகத்தில் முன்னேற்றமடைந்தவர்கள். அவர்கள் விவசாயம் செய்தனர். மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தனர். மண் பாண்டங்கள் செய்தனர். பாபைரஸ் கோரையிலிருந்து காகிதஞ் செய்தனர். கல் வேலையில் மேம்பாடடைந்தனர். இவை வரலாற்றுச் சின்னங்களால் நமக்குத் தெரியவருகின்றன. இறந்தவர்களின் ஆவி மறுபடியும் உடலில் சேரும் என்ற நம்பிக்கை எகிப்தியரிடமிருந்தபடியால் அவர்கள் பிரேதங்களை வாசனைத் திரவியங்களால் காப்பாற்றி வைக்கக் கல்லறைகள் கட்டினர். மன்னர், பிரபுக்கள் முதலியோருடைய பிரேதங்களை அடக்கஞ் செய்த கல்லறைகளின் மீது பிரமிடுகள் கட்டுவித்தனர். பிரமிடுகள் கட்டப்பட்ட காலம் கி. மு. 3000-2500 என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிரமிடுகளை கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பார்வையிட்ட ஹிரோடட்டஸ் (Herodotus) என்ற கிரேக்க அறிஞர், ஒவ்வொரு கோபுரமுங் கட்ட ஓர் இலட்சம் தொழிலாளிகள் இருபது ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டுமென்று கருதினார்.

எகிப்தை கி.மு. 3000-1200 வரை ஆண்டுவந்த பாரோ (Pharaoh) மன்னர்களுள் முக்கியமானவர்கள் டூட்டான்காமன், III-ம் தட்மோஸ், ராமசீஸ் என்பவர்கள். 1922-23-ல் கார்னார்வன் பிரபுவும். எட்வர்டு கார்ட்டரும் டூட்டான்காமன் கல்லறையிலிருந்து விலை உயர்ந்த பொருள்களை யெடுத்து, அநேக வரலாற்றுக் குறிப்புக்களைக் கண்டு பிடித்தனர். தட் மோஸ் என்பவர் மேற்கு ஆசியா, ஈஜியன் தீவுகள் முதலியவற்றை வென்று ஒரு சாம்ராச்சியத்தை நிறுவினார். ஆகவே அவர் 'எகிப்தின் நெப்போலியன்' என்றழைக்கப்படுகிறார். ராமசீஸ் அநேக கட்டடங்கள் கட்டியதுமன்றித் தம்முடைய முன்னோர்கள் கட்டிய கட்டடங்களில் குறிப்புக்கள் எழுதியும் வைத்துள்ளார். இவர் காலத்தில்தான் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தனரென்று வரலாற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ராமசீஸுக்குப் பின்பு ஹிட்டைட்டுச் சாதியினர் எகிப்தின் ஆசிய சாம்ராச்சியத்தைக் கைப்பற்றினர். இதற்குப்பின் எகிப்தே அடிமை நாடாயிற்று. கி. மு. ஏழாம் நூற்றாண்டில் அசீரியாவின் ஆதிக்கத்தின் கீழும், அதற்குப்பின் கிரேக்க ஆதிக்கத்தின் கீழும் இருந்துவந்தது. கிரேக்க அரச வம்சமாகிய டாலமி வமிசம் எகிப்தை அரசாண்டபோது அந்நாட்டில் கலைகள் பலவும் செழித்து வளர்ந்தன. மகா அலெக்சாந்தர் நிறுவிய அலெக்சாந்திரியா நகரில் பல அறிஞர்கள் வசித்து வந்தனர். டாலமி வமிசத்துக் கடைசி அரசி கட்டழகி கிளியோபாத்திரை. கிளியோபாத்திரைக்குப் பின் எகிப்து, ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு மாகாணமாயிற்று. அப்பொழுதுதான் எகிப்து மக்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டில் அராபியர்கள் எகிப்தின்மீது படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றி மக்களை முஸ்லிம்களாக்கினர். ஆனால் ஒரு சிலர் கிறிஸ்தவ மதத்தை விடவில்லை. அவர்களுடைய சந்ததியார் இன்றும் கோ-ஆப்டிக் (Co-optic) கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். எகிப்து முதலில் அரேபியாவின் ஆதிக்கத்தின் கீழும், பின்பு கி. பி. 19ஆம் நூற்றாண்டுவரை துருக்கியின் ஆட்சியின் கீழும் இருந்து வந்தது.

எகிப்தில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதுபோல், ஆப்பிரிக்காவின் ஏனைய வடபாகங்களிலும் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது. அதற்குக் காரணம் பிற நாட்டாரின் குடியேற்றமே. பினீஷிய சாதியினர் நிறுவிய கார்த்தேஜ் நகரம் ஒரு பெரிய சாம்ராச்சியத்தை நிறுவி, ரோமாபுரியுடன் கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் போர் புரிந்து கடைசியில் வீழ்ச்சியடைந்தது. பழங்காலத்தில் சிறந்த வீரராக விளங்கிய ஹானிபால் கார்த்தேஜ் நகரத்தைச் சார்ந்தவர். கார்த்தேஜ் வீழ்ச்சியடைந்ததும், வட ஆப்பிரிக்கா ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாயிற்று. பின்பு கி. பி. ஏழாவது நூற்றாண்டில் எகிப்துடன் வட ஆப்பிரிக்காவின் ஏனைய பாகங்களாகிய லிபியா, டூனிஷியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகியவை அரேபியரின் ஆதிக்கத்துக்குட்பட்டு, மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாயினர். பல நூற்றாண்டுகளாக வட ஆப்பிரிக்கா கலை, விஞ்ஞானம், தொழில் முதலியவைகளுக்குப் பெயர் பெற்றதாயிருந்தது. மொராக்கோவிலுள்ள பெஸ் (Fez) என்னும் நகரத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு பல்கலைக் கழகம் இருந்து வந்தது. மொராக்கோ மக்கள் தோல் வேலையில் மேம்பட்டிருந்தனர்.

அரேபியப் படையெடுப்பின் பயனாக நீக்ரோ மக்கள் சகாரா பாலை வனத்தின் தெற்கே குடி புகுந்தனர். 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தபோது, நீக்ரோ மக்கள் இராச்சியம் ஒன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தது. அதற்கு மோனோ மோட்டபா (Mono motapa) என்று பெயர். இந்த நீக்ரோ இராச்சியத்திற்கும் ஆசியாக் கண்டத்திற்கும் அராபிய, இந்திய வியாபாரிகள் மூலம் வாணிபம் நடந்து வந்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியாவிற்குக் கிழக்கே மற்றொரு நீக்ரோ இராச்சியமிருந்தது. அதற்குச் சாங்கே (Sanghay) இராச்சியமென்று பெயர். அதன் தலை நகரம் டிம்பக்டூ.

வடஆப்பிரிக்காவில் பிறநாட்டார் படையெடுப்பினால் மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில் இதியோப்பியாவில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. இதியோப்பிய மக்கள் ஆப்பிரிக்க ஆசிய மக்களின் கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள். சாலமன் அரசனும் ஷீபா அரசியும் வாழ்ந்த காலத்திலிருந்து இதியோப்பியர் தம் சுதந்திரத்தை இதுகாறும் காப்பாற்றி வந்திருக்கின்றனர். இடையில் சில ஆண்டுகள் மட்டும் இத்தாலியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். பழங்கால கோ ஆப்டிக் கிறிஸ்தவ மதம் இன்றும் இருந்து வருகிறது.

நன்னம்பிக்கை முனை போர்ச்சுகல் தேசத்து வாஸ்கோட காமாவால், 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து காடுகள், மலைகள், ஏரிகள் அடங்கிய மத்திய ஆப்பிரிக்காவிற்குச் சென்று பார்க்கவேண்டுமென்ற அவர் ஐரோப்பிய மக்களுக்கு ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் மாங்கோ பார்க் நைஜர்நதி தீரத்தையும், டாக்டர் லிவிங்ஸ்டன் என்னும் ஆங்கிலப் பாதிரி சாம்பசி நதி தீரத்தையும் நைல் உற்பத்தித் தானத்தையும், ஸ்டான்லி என்பவர் காங்கோநதி தீரத்தையும் ஆராய்ந்தனர். இவர்கள் ஆராய்ச்சியினால் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை ஆப்பிரிக்காவிலிருந்து பெறக் கூடுமென்றும், அக்கண்டத்திற்குத் தொழிற்சாலைச் சாமான்களை அனுப்பலாமென்றும் ஐரோப்பிய மக்களுக்கு விளங்கிற்று. ஆகவே 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் போட்டியிட்டு, ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக்கொள்வதில் முனைந்தன.

பெல்ஜிய அரசரான II-ம் லியப்பால்டு காங்கோ பிரதேசத்தைப் பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ்1879-85 ஆண்டுகளில் கொண்டுவந்தார். 1880-ல் சகாராப் பாலைவனம் அடங்கிய மேற்கு ஆப்பிரிக்காவைப் பிரான்சு கைப்பற்றியது. 1881-ல் ஆப்பிரிக்காவின் வடபாகத்திலுள்ள டூனிஸ், அல்ஜீரியா முதலிய நாடுகளைப் பிரான்சு தன்னுடைய பாதுகாப்பிற் குட்படுத்தியது. பின்பு செனிகால் நதிப்பிரதேசமும், சோமாலிலாந்தின் ஒரு பாகமும், மடகாஸ்கர் தீவும், பிரான்சின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. பழங்காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் ஆப்பிரிக்காவின் வடபாகம் முழுவதும் பரவியிருந்தது. ஆகவே இத்தாலி 1870-ல் ஐக்கியப்பட்டு, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தவுடன், ஆப்பிரிக்க ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்டது. அதற்குள்ளாக வடஆப்பிரிக்கா பிரான்சின் ஆதிக்கத்தின்கீழ் வந்துவிட்டது. ஆகவே, இத்தாலி கிழக்கு ஆப்பிரிக்காப் பக்கம் திரும்பி, எரிட்ரியாவையும், சோமாலிலாந்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றியது. இதியோப்பியாவையும் கைப்பற்ற 1896-ல் போர் தொடுத்தது. ஆனால் போரில் தோல்வியடைந்து பின்வாங்கியது. 1935-ல் முசொலீனி இதியோப்பியாவின் மீது போர்தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினார். ஆனால் இரண்டாம் உலகயுத்தத்தில் இத்தாலி தோல்வியடையவே இதியோப்பியா மறுபடியும் சுதந்திர நாடாயிற்று.

இத்தாலியைப்போல ஜெர்மனியும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஐக்கியப்பட்டது. அதற்குப்பின் ஆப்பிரிக்க ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்டு, தென்மேற்கு ஆப்பிரிக்காவையும், தென் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியது.

ஆப்பிரிக்காவின் தென்முனையைக் கண்டுபிடித்த போர்ச்சுகல் அங்கோலாவையும், மொசாம்பிக் என்னும் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியது.

ஸ்பெயின் ஆப்பிரிக்காவின் வடமேற்கில் ஸ்பானிய சகாரா மாகாணத்தையும் மொராக்கோவின் ஒரு பாகத்தையும் பெற்றது.

ஆப்பிரிக்காவில் பிரான்சுக்கு அதிக நிலப்பரப்பு கிடைத்தபோதிலும் வளம்பெற்ற பிரதேசங்கள் பிரிட்டனுக்குத்தான் கிடைத்தன. எகிப்து நாடு கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை துருக்கிச் சாம்ராச்சியத்தின் கீழிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் எகிப்து மன்னன் துருக்கி ஆட்சியை உதறித் தள்ளிச் சுதந்திர மன்னனாயினன். அப்போது பெர்டினாண்டு டலெஸ்ஸெப்ஸின் முயற்சியால் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. எகிப்து மன்னன் அக் கால்வாயின் கம்பெனியில் தனக்குண்டான பங்குகளைப் பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு விற்று, மேற்கொண்டும் அவர்களிடம் கடன்வாங்கினான். கடனைக் கொடுக்க முடியாமல் வருந்தவே, ஆங்கில அரசாங்கமும், பிரெஞ்சு அரசாங்கமும் எகிப்தில் இருதலைக் கண் காணிப்பை (Dual control) நிறுவின. இதை எகிப்தியர் வெறுத்துக் கலகஞ் செய்தனர். கலகத்தை அடக்கப் பிரான்சு தயங்கிற்று. பிரிட்டன் ஒரு படையை அனுப்பிக் கலகத்தை அடக்கி, எகிப்தைத் தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டது. எகிப்தின் பாஷா பெயரளவிலே மன்னனாயிருந்தான். ஆங்கிலேயப் பிரதிநிதியிடம் முழு அதிகாரமுமிருந்தது. எகிப்துக்கு முதலில் அனுப்பப்பட்ட ஆங்கிலப் பிரதிநிதியாகிய குரோமர் பிரபு அநேக சீர் திருத்தங்கள் செய்து நாட்டை மேம்பாடடையச் செய்தார். ஆகையால் இவருக்கு 'நவீன பாரோ' (Pharaoh) எனப் பெயர் வழங்கலாயிற்று.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தியர் சாக்லுல் பாஷாவின் தலைமையில் சுதந்திரமடையக் கிளர்ச்சி செய்தனர். 1936-ல் பிரிட்டனும் எகிப்தும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டன. அதன் முக்கிய ஷரத்துக்கள்: 1. எகிப்து சுதந்திர நாடென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. 2. சூடானை ஆங்கிலேயரும் எகிப்தியரும் கூடி ஆளவேண்டும். 3. சூயஸ்கால்வாய் ஆங்கிலப் பாதுகாப்பில் சிலகாலம் இருக்கவேண்டும். இந்த உடன்படிக்கை எகிப்தியருக்கு முற்றிலும் திருப்தியளிக்கவில்லை. சூடானை எகிப்துடன் இணைத்து, எகிப்தின் ஆட்சிக்கு விட்டுவிட வேண்டுமென்று எகிப்தியர் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.

ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைக் கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுக்கேசியர். ஆனால் அப் பிரதேசத்தில் குடி புகுந்தவர்கள் டச்சுக்காரர்கள். அவர்களுக்குப் போயர்கள் என்று பெயர். அவர்கள் சுதேசிகளை அடிமைகளாக்கி அவர்களுதவியால் வேளாண்மை செய்துவந்தனர். நெப்போலிய யுத்தம் 1815-ல் முடிவடைந்ததும், கேப் (முனைக்)குடியேற்றநாடு ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டது. 1833-ல் ஆங்கில அரசாங்கம் அடிமை வர்த்தகத்தை யொழிக்கவே, போயர்கள் கேப் குடியேற்றத்திலிருந்து வெளியேறி, நெட்டால், ஆரஞ்சுக் குடியேற்றம், டிரான்ஸ்வால் முதலிய இடங்களில் குடிபுகுந்தனர். இதற்குப் பெருவலசை (The Great Trek) என்று பெயர். 1843-ல் நெட்டாலைப் பிரிட்டன் தன்னுடைய சாம்ராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டது. ஆகவே பல போயர்கள் நெட்டாலில் இருக்க விரும்பாது, ஆரஞ்சுக் குடியேற்றத்திற்கும் டிரான்ஸ்வால் குடியேற்றத்திற்கும் சென்று, தங்கள் இனத்தாருடன் சேர்ந்தனர். டிரான்ஸ்வால் ஜனாதிபதியான பால் குருகர் ஆங்கிலேயரிடம் ஆறாத கோபங்கொண்டனர். ஆங்கிலேயரைத் தென் ஆப்பிரிக்காவிலிருந்து விரட்ட வேண்டுமென்று திட்டம் போட்டார். ஆனால் அப்பொழுது கேப் குடியேற்றத்தின் பிரதம மந்திரியாக இருந்த செசில் ரோட்ஸ் ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைப் பரப்ப வேண்டுமென்னும் நோக்கமுடையவர். இவ்விருவருடைய கருத்து முரண்பாட்டினால் போயர் யுத்தம் மூண்டது. போயர் யுத்தத்தில் பிரிட்டனுக்கு வெற்றி கிடைத்தது. 1906-ல் ஆரஞ்சுக் குடியேற்றத்திற்கும் டிரான்ஸ்வாலுக்கும் பிரிட்டன் பொறுப்பாட்சி அளித்தது. 1909-ல் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகள் எல்லாம் ஒன்றுபட்டுத் தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாடாயிற்று.

ஆப்பிரிக்காக் கண்டத்தில் லைபீரியா, இத்தியோப்பியா, எகிப்தைத் தவிர ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாட்டினர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் பொருட்செல்வமே ஐரோப்பிய வல்லரசுகளின் போட்டிக்குக் காரணம். அந்நாட்டு நீக்ரோ மக்களின் அநாகரிகமே அவர்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம். மேனாட்டார் ஆப்பிரிக்காவில் வந்ததிலிருந்து, போக்குவரவுச் சாதனங்கள் வளர்ந்து, ஆலைகள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டின் கச்சாப் பொருள்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் ஆப்பிரிக்காவில் சிறுபான்மையோராக இருந்தபோதிலும், தங்களுடைய விஞ்ஞான அறிவாலும் ராணுவ பலத்தாலும், பெருவாரியான நீக்ரோ மக்களை அடக்கி யாளுகின்றனர். வெள்ளையர்களின் முக்கியக் கடமை சுதேசிகளை நாகரிக வாழ்க்கையில் திருப்பி முன்னேற்றமடையச் செய்வது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இக்கொள்கை வெள்ளையரின் சுயநலத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது என்று மற்றவர்கள் கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்யும் வெள்ளையர்கள் தாங்கள் உயர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும், தங்களுக்குச் சிறப்பு உரிமைகள் இருக்கவேண்டுமென்றும் வாதிக்கின்றனர். மகாத்மா காந்தி அங்குள்ள இந்தியர்களின் இடையூறுகளை நீக்கச் சத்தியாக்கிரகப் போர் நடத்தியும் அவர்களுடைய துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. நிறவெறுப்பு ஒழியும்வரை ஆப்பிரிக்காவில் இந்திய மக்கள் பிரச்சினையும் சுதேசமக்கள் பிரச்சினையும் இருந்துதான் வரும். எம். வீ. சு.

ஆப்பிரிக்க மொழிகள்: ஆப்பிரிக்காவின் சுதேசிகள் பிக்மி - புஷ்மென் நீக்ரோ, ஹாமிட்டிக், செமிட்டிக் என நான்கு முக்கியப் பிரிவினராவர். அதனால் ஆப்பிரிக்க மொழிகளும் ஒவ்வொரு மக்கட்பிரிவுக்கும் ஒரு மொழிப் பிரிவாக நான்கு பிரிவுகளாகும். நீக்ரோக்கள் சூடானியர் என்றும் பான்டூ என்றும் இரு குழுவினராவர். அதனால் ஆப்பிரிக்க மொழிகளின் பிரிவுகள் புஷ்மன், சூடானிக், பான்டூ, ஹாமிட்டிக், செமிட்டிக் என ஐந்தாம்.

செமிட்டிக் மொழிகள் அபிசீனியாவில் பேசப்படும். இவற்றுள் அரபு மொழியே வட ஆப்பிரிக்காவிலும் கிழக்குச்சூடானிலும் அரசியல் மொழியாகும். இஸ்லாத்துடன் சேர்ந்ததால் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் சூடானிலும் இதுவே இலக்கிய மொழியாக ஆயிருக்கின்றது.

புஷ்மன் மொழிகள் புஷ்மன் மக்கள் பேசுவன. இவற்றின் முக்கியமான அமிசம் இழுத்து உச்சரித்தலாகும். பிக்மி மொழி என்று ஒன்றில்லை. பிக்மிகள் பக்கத்து மக்களுடைய மொழியையே பேசுபவர்களாயிருக்கிறார்கள்.

சூடான் மொழிகள் அட்லான்டிக் சமுத்திரத்திற்கும் அபிசீனியாவின் மேற்குப் பகுதிக்குமிடையில் பேசப்படுவன. இவை பல வகைகளாகப் பிரிந்துள. சூடான் பல முறை வேற்றுமொழியினரால் படையெடுக்கப்பட்டு வந்திருப்பதால், அதன் மொழிகள் பலவிதமான மாறுதல்கள் அடைந்துள்ளன.

பான்டூ மொழிகள் ஆப்பிரிக்காவின் தென்பாதியில் வழங்குகின்றன. இழுத்து உச்சரித்தல் என்பது இதில் காணப்படவில்லை. இம்மொழிகளை ஹோம்பர்கர் என்பவர் பத்து வகைகளாகப் பிரித்துளார்.

ஹாமிட்டிக் மொழிகள் செமிட்டிக் மொழிகள் வகையை ஒட்டியவை.

புஷ்மன் மொழிகள் 11, சூடானிக் 264. பான்டு 182, ஹாமிட்டிக் 47, செமிட்டிக் 10 என்று ஸ்ட்ரக் என்பவர் கூறுகிறார். இவற்றுள் சுமார் 12 மொழிகளே பத்து இலட்சம் மக்களால் பேசப்படுபவை.

ஆப்பிரிக்க இலக்கியம் என்பது சகாராவின் தெற்கேயுள்ள ஆப்பிரிக்கப் பகுதியிலும் வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலுமுள்ள நீக்ரோ மக்களுடைய நாடோடி இலக்கியமே யாகும். அது கதைகளாகவும் பிதிர்களாகவும் பழமொழிகளாகவுமே காணப்படுகிறது. இதுவரை ஆப்பிரிக்காவில் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அமெரிக்காவிலும் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. கதைகளைப் போலவே பழமொழிகள் முதலியனவும் மிகுதியாக இருக்கின்றன. ஆப்பிரிக்கக் கதைகளும் அமெரிக்கக் கதைகளும் அடிப்படையில் ஒற்றுமை உடையனவாகவே காணப்படுகின்றன. நீக்ரோ மக்களுள் ஒரு கூட்டத்தினரின் இடையே காணப்படும் கதைகள் முதலியன அக் கூட்டத்தினரின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதற்கு ஓரளவு பயன்படுகின்றன.

நீக்ரோ நாடோடி. இலக்கியத்தைச் சேர்ந்த கதைகள் பெரும்பாலும் விலங்குகளைப் பற்றிய கதைகளாகவே உள்ளன. ஆனால் விலங்கு பற்றியனவல்லாத கதைகளும் நீக்ரோக்களிடையே உண்டு. விலங்குக் கதைகள் பலவற்றில் விலங்குகளுடன் மனிதர்களும் காணப்படுகின்றனர். எங்கும் பரவியுள்ள ஒரு கதை மனிதனுக்கு விலங்குகளின் மொழி கடவுளால் கற்றுக்கொடுக்கப்பட்டதாயும், கடவுள் கட்டளையை மீறி அவன் பிறர்க்குக் கற்றுக் கொடுத்ததால் துன்புற்றதாயும் கூறுகிறது.

மனிதக் கதைகளில் பல புராணக் கதைகளும், அறவழி கூறும் கதைகளும் காணப்படுகின்றன. அங்கோல மக்கள் கதைகளுள் சில வரலாற்றுக் கதைகளும், சில கவிதையும் இசையும் கூடியனவாகவுமுள்ளன. கம்பா மக்கள் கதைகளுள் சில வாழ்க்கையைச் சித்திரிப்பன. தோங்கா மக்கள் கதைகளுள் சில நடந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக உடையன.

ஒவ்வொரு நீக்ரோக் கூட்டத்தாரிடையிலும் கடவுளரைப் பற்றிய புராணக் கதைகள் காணப்படுகின்றன. அவை கூட்டத்திற்குக் கூட்டம் வேறுபட்டனவாக இருக்கின்றன. இந்தக் கதைகள் பிரபஞ்சத்தின் தோற்றம், கடவுளர் தோற்றம், கடவுளர் செயல்கள், அவர்கள் உறவுகள், அவர்களுக்கும் மனிதர்க்குமுள்ள உறவுகள், மந்திரத்தின் பண்புகள், ஆற்றல் ஆகியவற்றைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் கூறுகின்றன.

அமெரிக்காவில் பிரேசில், ஹெயிட்டி, கூபா, டச்சு, கயானா ஆகிய பகுதிகளில் தவிர, மற்றப் பகுதிகளில் ஆப்பிரிக்க நீக்ரோக் கதைகள் காணப்படுவதில்லை. கத்தோலிக்க நாடுகளிலுள்ள நீக்ரோக்கள், ஆப்பிரிக்கக் கடவுளரைக் கிறிஸ்தவ முனிவர்களாக ஆக்கியுள்ளனர். புரோட்டஸ்டன்டு நாட்டு நீக்ரோக்களும் விவிலியக் கதைகளைத் தங்கள் ஆப்பிரிக்க முறையிலேயே வியாக்கியானம் செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒழுக்கமுறை பற்றிய வாக்கியத்துடனேயே முடியும். இவ்வாறின்றி அத்தகைய வாக்கியங்கள் தனித்துப் பழமொழிகளாக நிற்பதுமுண்டு. கதைகள் சொல்லத் தொடங்குமுன் பிதிர்களைப் பயில்வார்கள். பழமொழிகள் நீக்ரோ மக்களுடைய வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்பது அவர்களிடையே ஏராளமான பழமொழிகள் காணப் படுவதிலிருந்து தெரியவரும். பொதுவாக அவை சுருங்கச் சொல்வதாக இருக்கும். சில செய்யுள் வடிவத்துடனுமிருக்கும். பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களும் காணப்படும். நீக்ரோக்கள் அன்றாட வாழ்க்கையில் பழமொழிகளை மிகுதியாகக் கையாள்கிறார்கள். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்துக்குத் துணையாகப் பழமொழிகளைப் பயன்படுத்துவார்கள். அதைப் பயில்பவர் புலமை உடையவராகக் கருதப்படுவர். மற்றவற்றைவிடப் பழமொழிகளே நீக்ரோக்களுடைய பண்பாட்டை மிகுதியாக விளக்குவனவாகும்.

ஒருவன் வேலை செய்ய மறுத்துவிட்டு நன்றாக உண்ணும்போது, “சோம்பேறி சுருக்கமாக உண்பான்” என்ற பழமொழியைக் கூறி, அவனை நாணமுறச் செய்வர். அளவுக்கு மிஞ்சிச் செலவு செய்பவனிடம், ”எடுத்ததைப் போட்டால் எதுவும் காலியாகாது” என்னும் பழமொழியைக் கூறி அறிவு கொளுத்துவர். ”ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு” என்று நாம் கூறுவதை அவர்கள் ”ஆத்திரப்பட்டு எய்தால் அம்பு குறியை அடியாது” என்பர்.

பிதிர்கள் கேள்வி உருவத்தில் இரா. ”தலைவர் தலைமை வகித்தார்; மக்கள் சூழ்ந்திருந்தனர்” என்னும் பிதிர் திங்களையும் விண்மீன்களையும் குறிக்கும். ”சிறுவன் ஓடப் பெரியவன் பிடிக்க முயன்றும் முடியவில்லை” என்பது சக்கரத்தையும் வண்டிக் கூண்டையும் குறிக்- . கும். “ஒரு கண்ணும் ஓர் அடியும் உடையது” ஊசியாகும். பலர் உட்கார்ந்து கேட்க இந்தப் பிதிர் ஆட்டம் நடைபெறும். பிதிர்கள் அறிவைக் கூர்மை செய்யும் என்று எண்ணிக் குழந்தைகளைக் கற்கும்படி சொல்வார்கள்

கதைகள் இரவிலேயே கூறப்பெறும். இரவு கண் விழிப்பதற்கும் இது பெரிதும் துணை செய்கின்றது. பகலில் கதை சொன்னால் பிதிரர் கதை சொல்பவர்க்குத் தீங்கு விளைப்பார்கள் என்பர். கதை சொல்லும்போது அதைச் சொல்லுவோர் அதிலுள்ள பாத்திரங்களாக நடிக்கவும் செய்வர். கதை நடுவில் பாடல் வரும் போது கேட்போரும் சேர்ந்து பாடுவர். கதை சொல்பவர் இடையில் கேள்விகள் கேட்பர். கேட்போர் விடை கூறுவர்.

கதைகள் கல்விக்குப் பெருந்துணை என்பது நீக்ரோக்கள் கருத்து. “நீங்கள் புத்தகங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் கதைகளைக் கூறிக் கற்றுக் கொடுக்கிறோம்” என்று அவர்கள் ஐரோப்பியரிடம் கூறுவார்களாம். குழந்தைகள் விலங்குக் கதைகளையும், பெரியவர்கள் காதற் கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றையும் பயில்வர். இவர்கள் கதைகள் பெரும்பாலும் பஞ்சதந்திரக் கதைகளையும், சீனாவின் ஜாதகக் கதைகளையும், ஈசாப் கதைகளையும், பிலிப்பீன் கதைகளையும் ஒத்திருப்பதால் இந்த நாடுகளிலிருந்து சென்றிருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இங்கிருந்து அங்குப் போயினவா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலாது.

நீக்ரோக்களுடைய கதைகள் பாத்திரச்சித்திரத்திலும், நிகழ்ச்சி உச்சநிலையடையும் முறையிலும் மிகுந்த இலக்கியத் திறமை உடையனவாகக் காணப்படுகின்றன. நாடகச் சுவையும் கற்பனா சக்தியும் மிகுதியாக உள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க ஐக்கியம், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் மேற்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவைகளைப்பற்றியும், இத்தியோப்பியா, எகிப்து முதலான முக்கிய நாடுகளைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் உண்டு.