உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆப்பிள்

விக்கிமூலம் இலிருந்து

ஆப்பிள்: (சீமை இலந்தம்பழம்,சேபு): உலகத்தின் பல பாகங்களிலே மிகுதியாகப் பயிராவதும் மிக்க பயன்படுவதுமான மரக்கனி ஆப்பிள் பழமே. இது வரலாற்று முன் காலந்தொட்டே பயிர் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழு வகையான ஆப்பிள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க, எபிரேய, ஐரோப்பிய மக்களுடைய பழங்கதைகளிலும் பாடல்களிலும் சமய நூல்களிலும் இந்தப் பழத்தைப்பற்றிய பேச்சு உண்டு. மரத்தின் அழகையும் பழத்தின் பண்பையுங் குறித்துப் புலவர் பாடியிருக்கின்றனர்.

ஆப்பிளில் சில காட்டு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மாலஸ் புமிலா முதன்மையானது. பாரசீகம் முதல் கருங்கடற் பிரதேசம் வரையில் காக்கசஸ் மலைத்தொடர்களுக்குத் தெற்கே ஆசியாவின் தென்மேற்கு, ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதிகளிலே இருப்பது. இதிலிருந்தே பயிர்செய்யும் ஆப்பிள் பெரும்பாலும் உண்டாயிருக்கிறது. ஆதலால் பயிர் செய்துவரும் ஆப்பிளுக்கும் மாலஸ் புமிலா என்பதே விஞ்ஞானப் பெயராக வழங்கி வருகிறது. மற்றக் காட்டினங்களும் சிலவகை ஆப்பிள் பரம்பரையில் கலந்திருக்கலாம்.

இந்தக் காட்டு ஆப்பிள் வளரும் பகுதியிலேயே முதன்முதல் நல்ல ஆப்பிள் பயிர் செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்குக் குடியேறினபோது இதை அங்குப் பயிராக்கினர். நாளடைவில் இது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து முதலிய இடங்களுக்குச் சென்று நன்றாகப் பல்கி வருகின்றது. ஆசியாவில் சீனா, ஜப்பான் இந்தியாவிலும் இது பயிராகின்றது.

ஆப்பிள் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் 30° 60° நெடுக்கு வரைகளுக்கு உட்பட்ட சம

ஆப்பிள் பறித்தல்
நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம்.

தட்பவெப்ப வலயத்தில் மிக நன்றாக விளைகின்றது. நடுக்கோட்டுக்கு அருகிலும்கூடக் கடல் மட்டத்திற்கு 2,500-3,000 அடிகளுக்கு மேல் உயரமான இடங்களில் சாதாரணமாகப் பயிராகிறது. உதாரணமாக இந்தியாவில் காச்மீரத்தில் விளைகிறது. தென்னிந்தியாவில் நீலகிரியிலும் பெங்களூரிலும் ஓரளவுக்கு உண்டாகிறது. ஆப்பிள் வளமாக வளரவேண்டுமானால் ஆண்டுதோறும் மிகக்குளிரான ஒரு பருவம் இருக்கவேண்டும். அதில் இந்த மரம் இலை, தளிர் ஒன்றுமின்றிச் செயலற்று ஒடுங்கி உறங்கினதுபோல இருக்க வேண்டும்.

சில ஆப்பிளிலே ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஏழாயிரம் வகைகளுண்டு. ஆயினும் சுமார் முப்பது முப்பத்தாறு வகைகளே மிகுதியாகப் பயிராவன. அவற்றுள்ளும் பத்துப் பன்னிரண்டு மிகச்சிறந்தவை. இவ் வகைகள் பழத்தின் வடிவம், அளவு, நிறம், மணம், சுவை, சாறு, மென்மை, நெசவு முதலிய பல பண்புகளில் வேறுபடும். செடியின் தோற்றம், இலையின் வடிவம், விளிம்பு, பூக்குங் கிளைகள் முதலியவற்றிலும் இவை சிறிது மாறுபடும். வகைகள் தமக்கு வரும் நோய்களைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை. கனிந்த ஆப்பிள் பச்சை, சிவப்பில் பல சாயைகள், மஞ்சள், இந்நிறங்கள் கலந்தவையாகப் பல வர்ணமாக இருக்கும். சில அழுத்தமாகவும் புளிப்பாகவும் இருக்கும். அவற்றை வேகவைத்தே உண்பார்கள். அல்லது அவை மது வகைகள் செய்யவுதவும். சில வகைகள் மெதுவாகவும் மென்மையான மணமுடையனவாகவும் இருக்கும். அவற்றைப் பச்சையாக உண்ணலாம்.

ஆப்பிள் பயிர் செய்வதற்கு நல்ல மண் வேண்டும். அது நிரம்ப ஆழமாக இருக்கவேண்டியதில்லை. ஆயின், நீர் விரைவில் வடிந்துவிடக்கூடியதாக இருக்க வேண்டும். விதையிலிருந்து இதைப் பயிர் செய்யலாம். சற்று எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும். பழம் தர நாள் செல்லும். பழம் தாய்ச்செடியின் பழத்தை ஒத்திருக்கலாம். அதற்கு நிரம்ப வேறாகவும் இருக்கலாம். தாய்ப்பழத்தை ஒத்திருந்தாலும் அளவில் சிறிதாகவும், மற்றப் பண்புகளில் குறைவுடையதாகவும் இருக்கும். ஆதலால் ஒட்டுச் செடிகளிலிருந்தே அப்பிளைப் பயிர் செய்வர். எப்போதாவது விதையிலிருந்து நல்ல பண்புகளுள்ள பழம் விளையுமானால், அந்தச் செடியை முதலாகக்கொண்டு ஒட்டுச்செடிகளை உண்டாக்கி ஒரு புதிய வகையை ஏற்படுத்தலாம். காட்டுச்செடி வகைகளிலும் வேறு வகைகளிலும் வேரிலிருந்து செடிகள் உண்டாகும். அவற்றை வளர்த்து, அவற்றிற்கு நல்ல வகைச் செடிகளின் குருத்துக்களை ஒட்டிப் புதிய செடிகளை உண்டாக்குவதுதான் வழக்கமாகப் பயிர்செய்யும் முறை. நன்றாக வளரும் நாடுகளில் செடிகளை 30, 40 அடிக்கு ஒன்றாக, வரிசையாக நடுவர். தென்னிந்தியாவில் 10, 12 அடிக்கு ஒன்றாக நடுகின்றனர். இங்கு இவை சிறு குற்றுச் செடிகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றன. மரம் 7,8 ஆண்டு வளர்ந்து பழம் தரத்தொடங்கும். 30 ஆண்டுகள் நல்ல பலன் கொடுக்கும். பெங்களூரில் 4, 5 ஆண்டுகளில் பழம் கொடுக்கத் தொடங்குகிறது. 10, 12 ஆண்டுகளுக்கப்புறம் குன்றிவிடுகிறது. நன்றாக வளர்ந்த மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சுமார் இலட்சம் பூப்பூக்கலாம். அவற்றிலிருந்து 2,000, 3,000 பழம் உண்டாகலாம். தென்னிந்தியாவில் அப்படி ஏராளமாகப் பழுப்பதில்லை. 4-5 வயதில் 4, 5 டசன் பழம் உண்டாகலாம். நன்றாகக் காய்த்தால் 300, 350 பழம் உண்டாகலாம். பொதுவாக ஆப்பிள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். சில வகைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும். பெங்களூரில் மரத்தைச் சுற்றிலும் சற்றுத்தொலைவில் குழி வெட்டி, அதன் வேர்கள் சிறிதளவு வெட்டுப்படச்செய்து, ஆண்டுக்கு இருமுறை பூக்கச்செய்கின்றனர். ஆப்பிள் செடிக்கும் கனிக்கும் பலவித நோய்கள் பற்றுவதுண்டு. எங்கெங்கு அது விளைகிறதோ அங்கெல்லாம் ஒருவகை விட்டிலின் புழு உண்டு. அது பழத்தினுள்ளே வளர்ந்து அதைப் பாழாக்கும். அசுகுணி, செதில் பூச்சி; பூஞ்சணம் முதலியவற்றாலும் தீங்கு நிகழும். சிலகாலங்களில் பூக்கள் மிகுதியாக உதிர்ந்து விடும். இவற்றிற்கெல்லாம் பலவித மருந்துகளை நீராகவும் தூளாகவும் தெளிக்கின்றனர்.

மரத்தை விதையிலிருந்து பயிர் செய்யாவிடினும் விதைகள் உண்டானால்தான் பழம் பெருக்கும். சுவையுடையதாகும். மகரந்தச் சேர்க்கையும் சூல்கள் கருவுறலும் நிகழ்ந்த பிறகே பழம் வளரத் தொடங்கும். இல்லாவிட்டால் கரடாக நிற்கும்; அல்லது உதிர்ந்து விடும். ஒரு பழத்திலேயே விதையுள்ள பாகம் நன்றாக வளர்ந்திருக்கும். விதை வளராத பக்கம் அப்படி வளர்ந்திராது. ஒரே வகையின் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதினும் வேற்றுவகைச் செடிகளின் மகரந்தம் சேருமானால் காய் மிக நன்றாக வளர்கின்றது.

ஆப்பிள் 1. கிளை, 2. பூ-நெடுக்கு வெட்டு. 3. கனி-நெடுக்கு வெட்டு

ஆதலால் ஆப்பிள் தோட்டங்களில் ஒரே வகையான செடியை நடாமல் பலவகையானவை அருகருகே இருக்குமாறு நடுகின்றனர்.

ஆப்பிள் சிறு மரமாக அல்லது குற்றுச் செடியாக வளர்வது. இதன் இலைகள் தனியானவை; மாறியமைந்தவை ; விளிம்பில் பற்களுள்ளவை; இலையடிச்செதில்கள் காம்புடன் ஒட்டாமல் தனித்திருக்கும். இலை விடும் தண்டு நெடிதாக வளரும். இலைக் கணுச்சந்திலிருந்து குறுகிய கிளைகள் உண்டாகும். அவற்றில் சிறிய இலைகளும் பூக்களும் தோன்றும். பூவிற்கு 5 புற விதழ்களும், 5 அகவிதழ்களும், சுமார் 20 கேசரங்களும், 5 சூலிலைகளும் உண்டு. சூலகம் 5 அறைகளுள்ளது. ஓரறைக்கு 2 சூல்கள் இருக்கும். சிலவற்றில் அதிகமிருக்கலாம். ஆப்பிள் பழத்தில் நாம் தின்னும் பாகம் அதன் உண்மையான கனியன்று. பொய்க்கனி. உண்மையான கனி பழத்தின் நடுவில் சுவையின்றிச் சக்கையாக முருந்துபோல இருக்கும் பகுதியே. உண்ணத்தக்க சதைப்பகுதி பூவின் உறுப்புக்கள் வளர்வதற்கு இடமாயுள்ள பூக்காம்பின் முனையாகிய ஆதானமே. பூவிலிருந்து காய் வளரும்போது ஆதானம் பக்கங்களிலே வளர்ந்து செல்கிறது. அதனோடு புறவிதழ், அகவிதழ், கேசரங்கள் ஆகியவற்றின் அடிப்பாகங்களும் சேர்ந்து வளர்கின்றன. இவை சூலகத்தைச் சுற்றி வளர்ந்து அதை மூடிக்கொள்கின்றன. இவ்விதமாக உண்டாகும் பொய்க் கனியை போம் (Pome) என்று அழைப்பர்.

ஆப்பிள் பழம் மிக நல்ல உணவுப் பொருள். இதைப் பச்சையாகத் தின்பதல்லாமல் வேக வைத்தும் பலவகையாகச் சமைத்தும் உண்கின்றனர். இதிலிருந்து சாறு, குழம்பு, பாகு, வெண்ணெய் என்னும் பல உணவுகள் செய்கின்றனர். பழத்தைத் துண்டாக்கி உலர்த்தியும், சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும், வேறு வகைகளில் அமைத்தும் சேமித்து வைக்கின்றனர். பழத்தைக் குளிர்வித்தும், பாரபின் மெழுகு தடவியும், காகிதத்தில் சுற்றியும் பலவிதமாகப் பத்திரப்படுத்தி மிக்க விளைவுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். ஆப்பிள் விளைவில் பேரளவானது சிடர், ஒயின், பிராந்தி முதலிய மதுவகைகள் செய்யவும் காடி செய்யவும் பயனாகிறது.

ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, பீச், ஏப்ரிக்காட், ஆல்பகோடா,பிளம் முதலிய பழ மரங்களுக்கு உறவானது. இவையெல்லாம் ரோஜாச்செடிக்குச் சொந்தம். காட்டு ஆப்பிள் பழத்தைப் பார்த்தால் காட்டு ரோஜாவின் பழம் போலவே தோன்றும். இவை ரோசேசீ குடும்பத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆப்பிள்&oldid=1456762" இலிருந்து மீள்விக்கப்பட்டது