உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆமெசான் ஆறு

விக்கிமூலம் இலிருந்து

ஆமெசான் ஆறு தென் அமெரிக்காவிலுள்ள ஆறு. நீளம் 4.000 மைல். அமெசான் என்னும் கிரேக்கப் புராண வீரப் பெண் பெயரை ஸ்பானியர்கள் இட்டதாகக் கூறுவர். அதற்குக் காரணம் அவர்களை எதிர்த்த இந்தியர்களுள் பலவீரப் பெண்கள் சேர்ந்திருந்ததேயாம். இந்த ஆறு சில இடங்களில் மிகுந்த அபாயகரமாயிருப்பதால் அதன் பெயர் அமெரிக்க இந்தியச் சொல்லாகிய அமசானா (தோணி அழிப்பது) என்பதிலிருந்து உண்டாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாயும் நீரின் அளவிலும், வடிநிலத்தின் பரப்பிலும் உலகிற் பெரிய ஆறு இதுவே. டோகான்டின்ஸ் நதியை வேறாகக் கொண்டால் இதன் வடிநிலத்தின் பரப்பு : 23,68,000 ச. மைல். இதில் ஒரு விநாடிக்கு 35 இலட்சம் கன அடி நீர் பாய்கிறது. இதன் வடிநிலத்தில் சில பகுதிகளை இன்னும் ஆராய்ந்தபாடில்லை.

மத்தியப் பெருவில் ஆண்டீஸ் மலைத்தொடரின் கீழ்ப்பகுதியிலுள்ள பனியாறுகள் உருகுவதால் தோன்றும் ஏரிகளிலிருந்து இது உற்பத்தியாகி, 27° தீர்க்கரேகைகள் தொலைவிற்குக் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. மாரனான் என்ற உபநதி கலந்த பிறகு, கீழ்ப் பாகத்தில் வெள்ளம் பெருகும் போது இது 15 மைல் அகலமும், மானாஸ் நகரின் கீழ்ப்பாகத்தில் 30 மைல் அகலமும் உள்ளது. வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பல உபநதிகள் இதை வந்தடைகின்றன. தெற்கிலுள்ள உபநதிகள் முக்கியமானவை. இவற்றுள் சிங்கு (Xingu), டபாஜஸ், மடைரா, புருஸ், ஜூருவா ஆகியவை முக்கியமானவை. ரையோ நீக்ரோ, யபுரா, இகா ஆகியவை வடக்கிலிருந்து வரும் உபநதிகளில் முக்கியமானவை. நீர் குறைவான காலத்தில் ஆமெசானின் ஆழம் 70-லிருந்து 90 அடிவரை இருக்கும். ஒபிடாஸ் என்னுமிடத்தில் இது மிகவும் குறுகி ஒரு மைல் அகலமுள்ளதாக இருக்கிறது. இங்கு இதன் ஆழம் 200 அடி. இப்படி ஆழமாக இருப்பதால் முகத்துவாரத்திலிருந்து 2,300 மைல் தொலை உள்ளே இருக்கும் இக்லிடாங் நகரம்வரை இதில் சமுத்திரக் கப்பல்கள் செல்லலாம்.

வடிநிலத்தின் பல பகுதிகளில் பருவத்தையொட்டி மழையின் அளவு வேறுபடுவதால் இதன் பரப்பு மாறுகிறது. பிரதம நதி பூமத்தியரேகைப் பகுதிகளில் ஓயாத மழையைப் பெறுகிறது. இது தெற்கிலிருந்து கோடை மழையினால் பெருகும் நீரையும், ஆண்டீஸ் பகுதிகளில் வெண்பனி உருகுவதால் தோன்றும் நீரையும் ஏராளமாகப் பெறுகிறது. ஆகையால் ஆமெசான் ஆற்றில் ஜனவரியிலிருந்து ஜூன்வரை வெள்ளப்பெருக்கு இருக்கும். கடலின் ஏற்றவற்ற விளைவுகள் 500 மைல் உள்ளே இருக்கும் ஒபிடாஸ்வரை தெரிகின்றன.

ஆமெசான் ஆற்றின் வடிநிலம் அடர்ந்த பூமத்திய ரேகைக் காடுகளையும், நீர் சரியாக வடியாத சதுப்பு நிலங்களையும் கொண்ட பெருஞ் சமவெளி. இது மிகவும் பிற்போக்கான பிரதேசம். ஜன நெருக்கம் குறைவான இப்பகுதியில் அங்கங்கே காட்டை அழித்து நாகரிகமற்ற மக்கள் வாழ்கிறார்கள். மகாகனி, எபனி, ஈட்டி முதலிய வெப்பநாட்டு மரவகைகள் இங்கு உள்ளன. ஆனால் இவை இங்குமங்கும் சிதறிக் கிடப்பதாலும், இவற்றைக் கொண்டுவருவதில் உள்ள தொல்லைகளாலும் இவை பயன்படத்தக்க நிலையில் இல்லை. மலேயா முதலிய நாடுகளில் தோட்டக்காலில் ரப்பர் பயிரிடுமுன் இங்குக் கிடைக்கும் ரப்பரைச் சேகரித்து வந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின் இத்தொழில் நசித்துவிட்டது. பிரேசில் கொட்டைகள், பிசின்கள், மெழுகுகள், தோல் பதனிடுதலில் பயனாகும் பட்டைகள் ஆகிய பொருள்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியில் நடைபெறும் வாணிபத்திற்கு மூன்று இடங்கள் முக்கியமானவை. இவற்றுள் முகத்துவாரத்திலுள்ள பாரா நகரம் பெரியது. ரையோ நீக்ரோவின் மேலுள்ள மானாஸ் வடிநிலத்தின் மத்தியப் பகுதியின் முக்கியமான நகரம். ஆற்றின் மேற்பகுதியில் ஈக்விடாஸ் முக்கியமான நகரம். இவ்வாற்றுப் பிரதேசத்தில் நடைபெறும் வாணிபம் மிகக் குறைவு. என். அ.