உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆமை

விக்கிமூலம் இலிருந்து

ஆமை முதுகெலும்புள்ள பிராணிகளில் ஊர்வன வகுப்பைச் சேர்ந்தது. இதன் உடம்பை மூடியிருக்கும் ஓடு மற்றெல்லாப் பிராணிகளிலிருந்தும் இதை எளிதாக வேறு பிரித்துக் காட்டிவிடும். ஓடு ஆமையின் வீடு போல இருக்கிறது. இந்த வீட்டை அது எங்குப் போனாலும் உடன் கொண்டு போகின்றது. முதுகெலும்புப் பிராணிகளிலே இத்துணைச் சிறந்த பாதுகாப்பு வேறு எதற்கும் இல்லையென்றே சொல்லலாம். ஆமைகள் சுமார் பதினேழு, பதினெட்டுக்கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றன. மேலைத் திரயாசிக் காலமுதல் இவற்றின் உடலின் பகுதிகள் பாசில்களாகக் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்திலே மிகப் பெரிய தினோசார் முதலிய எண்ணிறந்த உயிர்வகைகள் தோன்றி மறைந்தன. ஆயினும் ஆமை வகைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.

ஆமை

ஆமைகளில் சுமார் 275 வகைகள் இருக்கின்றன. இவற்றுள் பல அயனமண்டலத்திலும் சமதட்ப வெப்ப வலயத்திலேயுள்ள வெப்பமான பகுதிகளிலும் வாழ்பவை. ஆமைகள் மிகக்குளிரான பருவங்களிலே நிலத்தினுள்ளோ, நீரினுள்ளோ ஒடுங்கி உறங்கிக் கிடக்கும். அவ்வாறே கோடையில் வற்றிப்போகும் நீர் நிலைகளில் வாழ்பவை சேற்றினுள்ளே புதைந்து வேனிலில் உறக்கம் கொண்டிருந்து, திரும்ப நீர் வரும்போது உறக்கம் நீங்கி வெளிவரும். சில ஆமைகள் நீரிலேயே வாழும். கடலாமைகள் அவ்வகையின. சில நிலத்தின் மேலே வாழும். பல நீரிலும் நிலத்திலும் வாழும். ஆமைகளில் பெரும்பாலானவை நன்னீரில் வாழ்வன.

ஆமையின் உடம்பு அகன்று, நீள்வட்ட அல்லது அண்ட வடிவமாக இருக்கும். இதன் தோலில் எலும்புத் தகடுகள் உண்டாகின்றன. இவை ஒழுங்கான வரிசைகளில் அமைந்திருக்கின்றன. இந்தத் தகடுகள் ஒன்று சேர்ந்து ஆமை ஓடாகின்றன. ஆமையோட்டில் மேலோடு ஒன்றும் கீழோடு ஒன்றும் உண்டு. மேலோட்டோடு முதுகெலும்பு முட்களும் பழுவெலும்புகளும் உறுதியாகக் கூடியிருக்கின்றன. ஆமைகளுக்கு மார்பெலும்பு இல்லை. ஆதலால் கீழோட்டிலே தோலிலிருந்து உண்டான எலும்புகள் மட்டுமே உண்டு. பல ஆமைகளில் மேலோட்டிலிருப்பது போலக் கீழோட்டிலுள்ள எலும்புகள் அடிப்பாகம் முழுவதையும் ஒரே ஓடாக மூடுவதில்லை. மேலோடு மிகவும் வளைந்தும் கீழோடு தட்டையாகவும் இருக்கும். தரை ஆமைகளின் முதுகு மேடாகக் காணும். நீராமைகள் நீரில் எளிதாகச் செல்வதற்கு ஏற்றவாறு அது சற்றுத் தட்டையாக இருக்கும்.

ஓடுகளுக்குப் புறம்பாகப் பெரும்பாலானவற்றில் மேல் தோலிலிருந்து கொம்புப் பொருளாலான கேடகங்கள் வளர்கின்றன. இவை மேலோடு, கீழோடு இரண்டுக்கும் அழுத்தமாகப் பொருந்தியிருக்கும். இவையும் எலும்புத் தகடுகளைப்போல ஒருவித ஒழுங்காக அமைந்திருக்கும். ஆயினும் எலும்புத் தகட்டின் பரப்பும் கேடகத்தின் பரப்பும் ஒன்றாக இருப்பதில்லை. சிலவகை ஆமைகளிலே கொம்பாலான இந்தப்புறவோடு மிகவும் அழகாக இருக்கும். கடலில் வாழும் அழுங்கு ஆமையின் கொம்போடு விலையுயர்ந்தது. கரும் பழுப்பும் மஞ்சளும் இந்த ஓட்டில் காணும் அழகிய நிறங்கள்.

ஆமை வளர வளர ஓடும் வளரும். முதலில் உண்டான கேடகத்துக்கு அடியில் ஒன்றன்கீழொன்றாகப் புதிய கேடக அடுக்குக்கள் உண்டாகிக்கொண்டே போவதால் இந்தக் கேடகங்களிலே ஆண்டுக்கு ஒன்றாக உண்டான வளர்ச்சி வளையங்களைக் காணலாம். மேலுள்ள அடுக்குக்கள் நாளடைவில் தேய்ந்து கொண்டே போவதுண்டு. அப்பிரகம் போலப் பக்காக மேல் அடுக்கு உரிந்தும் விடுவதுண்டு. கொம்போடுகள் உண்டாகாத ஆமைகளில் இப்படிப்பட்ட வளர்ச்சி வளையங்கள் தெரிவதில்லை. வளர்ச்சி நின்றுபோகும்.

ஆமை

எலும்புச் சட்டகம். கீழ்ப்புறப் பார்வை. கீழோட்டை ஒரு புறமாகத் தள்ளிக் காட்டியிருக்கிறது.

முன்கால் = கை. தோள்வளைய எலும்புகள் : Sc: தோள்பட்டை எலும்பு. Co: காரகாய்டு (காக்கை) எலும்பு. P Sc: அக்ரோமியான் என்னும் முன் காரகாய்டு எலும்பு. H : மேல் எலும்பு கை. R: ஆர எலும்பு. U: முழங்கை எலும்பு.
பின் கால் = கால். இடுப்புவளையம்: J1: பின் இடுப்பெலும்பு. js : பக்க இடுப்பெலும்பு. Pb : முன் இடுப்பெலும்பு. Fe: தொடையெலும்பு. T: கீழ்க்கால் உள் எலும்பு. F: கீழ்க்கால் வெளி எலும்பு.
மேலோடு. Nu: பிடரித்தகடு. V : தண்டுவடத் தகடுகளின் வரிசை. Py : வாலடித்தகடுகள். C: விலாத்தகடுகள். இந்தத் தகடுகளோடு முதுகெலும்புத் தண்டும் பழுவெலும்புகளும் கூடியிருப்பதைக் காணலாம்.
கீழோடு. Ep : முன்தகடு, e : உள்தகடு. Hyp : மார்புத்தகடு. Hpp : வயிற்றுத்தகடு . xp : பின் தகடு.

( சிட்டெல் எழுதிய தொல்லுயிர் நூல் என்பதிலிருந்து எடுத்தது). உதவி : மாக்மில்லன் கம்பெனி, லிமிடெட், லண்டன்.

குளிர்காலம் ஒன்று திட்டமாக உள்ள சம தட்பவெப்ப வளையங்களிலுள்ள ஆமைகளில் இந்த வளர்ச்சி வளையங்கள் நன்றாகத் தெரிகின்றன. ஆமையோடு எலும்பானாலும் கொம்பானாலும் உடைந்துபோனால் திரும்ப வளர்ந்துவிடும். வால், கால் முதலிய உறுப்புக்களை இழக்க நேரிட்டால் அவை திரும்ப வளர்வதில்லை.

ஆமைகள் தலையையும் கால்களையும் வாலையும் ஓடுகளுக்கு இடையே உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளும். சிலதரை ஆமைகள் அவற்றை நன்றாக இழுத்துகொண்டு ஓடுகளின் விளிம்புகளையும் நெருக்கிச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கேற்றவாறு அவற்றின் கீழோட்டின் நடுவில் குறுக்கே கீல்போல ஓர் அமைப்பு இருக்கிறது. ஓட்டின் முன்பின் பகுதிகள் அசைந்து மேலெழுவதற்கும் இறங்குவதற்கும் இந்த அமைப்பு இடந்தருகிறது. எல்லா ஆமைகளும் இந்த உறுப்புக்களை இதே அளவுக்கு உள்ளிழுக்கமுடியாது. தரையாமைகளுக்கே இவ்வகைத் தற்காப்பு வேண்டும். நீராமைகள் நீந்திச்சென்று இடையூற்றினின்று தப்பித்துக் கொள்ளலாம். அவற்றின் கால்விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்கும். துடுப்புப்போல நீந்த உதவும். கடலாமைகளிலே முன்கால்கள் அகன்று, நீண்டு, பலமான பெரிய துடுப்புக்களாக அமைந்திருக்கின்றன. அவற்றை உள்ளிழுக்க முடியாது. ஆமைகளில் பெரும்பாலானவை மல்லாக்கத் தள்ளிவிட்டால் குப்புறக் கவிழ முடியாமல் பலநாள்கிடந்து செத்துப் போகும். ஆமைகள் பெரும்பலும் பாசி முதலிய தாவரங்களை உண்கின்றன. சில புழு, நத்தை, மீன் முதலியவற்றை உட்கொள்ளும்.

பேராமை


இளம் பிராணி. முன் கால்கள் நீந்துவதற்கேற்ற பலமான பெரிய துடுப்புக்களாக இருக்கின்றன, 1. பிடரிக் கேடகம். 2. நடு முதுகுக் கேடக வரிசை. 3. விலாக்கேடக வரிசைகள். 4. விளிம்புக் கேடக வரிசைகள். 5. வால் கேடகங்கள்.

சில ஆமைகள் அழுகிய பொருள்களை உண்ணும். ஆமைக்குப் பல் இல்லை. அதன் தாடை எலும்புக்கு மேல் பறவைகளுக்கு இருப்பது போலக் கொம்புப் பொருளாலான கூர்மையான விளிம்புள்ள உறுதியான அலகுகள் உண்டு. இவை மிகவும் வலுவானவை. கடினமான பொருள்களையும் கத்தரிக்கும். இந்த அலகுகளால் கொடிய காயம் உண்டாகும்படி ஆமை கடிக்க முடியும். ஆமையின் நாக்கு அடிவாயில் ஒட்டிக் கொண்டிருக்கும்; வெளியே நீட்டமுடியாது. ஆமை பல மாதங்கள்கூட உணவின்றி இருக்கக்கூடும்.

ஆமைகள் மிக மந்தமான பிராணிகள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இவற்றின் சுவாசக் கருவிகளின் அமைப்பாகும். உடம்பைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால் அது விரியவும் சுருங்கவும் முடிவதில்லை. பழுவெலும்புகள் மேலோட்டோடு கூடி ஒன்றாகியிருப்பதால் அவை மூச்சு விடுவதற்குப் பயனாவதில்லை. நுரையீரலும் அந்த ஓட்டின் உட்புறத்திற்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆமை மூச்சுவிடும் விதம் விசித்திரமானது. கழுத்தும் கால்களும் வாலும் வெளியே நீளுவதனாலும் உள்ளடங்குவதாலும் அவை பிஸ்டன்போலக் காற்றை உள்ளிழுக்கவும் வெளியே விடவும் உதவுகின்றன. தொண்டையிலுள்ள ஹையாய்டு எலும்பும் அதைச் சேர்ந்த பகுதிகளும் இயங்குவதனால் விழுங்குவது போன்ற செய்கை நடைபெறுகிறது இதனால் காற்று நுரையீரலுக்குள் அழுத்தப்படுகிறது. நீராமைகள் பலவற்றில் ஆசனத்துக்கு அருகில் குடலின் கடைசியிலிருந்து பை போன்ற இரண்டு உறுப்புக்கள் வளர்ந்திருக்கின்றன. இந்த ஆசனப்பைகளின் உட்புறப் படலத்தில் இரத்த நாளங்கள் நிறைந்துள்ளன. பைகளுக்குள் நீரை இழுக்கவும் வெளியே பீச்சவும் முடியும். நீரில் கரைந்துள்ள காற்றைச் சுவாசிக்க இந்த அமைப்பு உதவுகிறது. தொண்டைக்கு அருகிலும் சில இடுக்குக்கள் இம்மாதிரி நீரிலுள்ள காற்றைப் பயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. பல ஆமைகள் மூச்சுவிடாமல் நெடுநேரம் இருக்கமுடியும். நீருக்குள் முழுகி இரண்டு மூன்று மணிநேரம் இருக்கும். ஆமைக்கு வெளிமூக்குத் தொளை முகத்தில் ஒன்றுதான் உண்டு.

ஆமைக்குக் கண் சிறியது. ஆயினும் பார்வை கூர்மையானது. காதும் நன்றாகக் கேட்கும். ஆமைகள் உஸ் என்று சீறுவதுண்டு. இணைகூடும் பருவத்தில் குழலொலிபோல ஒலிப்பது, உருமுவது அல்லது குரைப்பது போலச் சத்தம் செய்வதும் உண்டு. ஒருவர் தோட்டத்தில் வைத்திருந்த ஆமைகள் அருகில் மேளவாத்திய இசை கேட்டதும் அந்தத் திசையில் தோட்டச் சுவரருகே போய்த் தலையையும் கழுத்தையும் உயர்த்தி அசைவற்று நின்று கேட்குமாம். செவித்தொளை வெளியே தெரியாது. செவிப்பறை அல்லது தோல் மூடியிருக்கும். கடலில் ஆழத்தில் முழுகும்போது நீர் அழுத்தத்தைத் தாங்குவதற்காகக் கடலாமைகளின் செவித்தொளையில் மொத்தமான தோல் வளர்ந்து அடைத்துக்கொண்டிருக்கும். ஆமைகள் சுவையை நன்கு அறியும். பழம், காபேஜ் முதலியவற்றை விரும்பி நாடிச்சென்று உண்ணும். தடித்த ஓடு மூடியிருந்தாலும், ஆமையின் ஓட்டை மெல்லத் தொட்டாலும் அதற்குத் தெரிந்துவிடும். கேடகங்களுக்கெல்லாம் நுண்ணிய நரம்புக்கிளைகள் வருகின்றன.

ஆமைகள் முட்டையிடும். பெரும்பாலானவை சில முட்டைகளே இடும். கடலாமைகள் 100-200 இடுவதுண்டு. சாதாரணமாகக் கோழி முட்டையளவும் சற்றுச் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். சில உருண்டையாகவும், சில நீள்வட்டமாகவும், சில அண்ட வடிவாகவும் இருக்கும். ஒரே தாயின் முட்டைகளிலும் அளவிலும் வடிவிலும் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகைகளில் முட்டை தோல்போன்ற மெல்லிய உறையுள்ளது. சிலவற்றில் சுண்ணாம்பாலான உறுதியான பளபளப்பான ஓடு இருக்கும். ஆமை தரையில் வாலாலும் பின்காலாலும் குழிதோண்டி முட்டையிட்டுக் குழியை நன்றாக மண்ணால் நிறைத்துக் காலால் தட்டியும், உடம்பால் இடித்தும், இட்ட இடந்தெரியாமல் செய்துவிட்டுப் போகும். கடலாமைகள் சஞ்சாரமில்லாத கரைகளுக்கு வந்து, அலைநீர் வரும் எல்லைக்கு அப்பால் சென்று, குழிதோண்டி முட்டையிட்டு, மூடி விட்டு, வந்த வழியே திரும்பாமல் வேறு வழியாகப் போகும். முட்டை பொரிக்கச் சில மாதங்கள் செல்லும். சூரிய வெப்பத்தினால் அது பொரிக்கும். குஞ்சுகள் வெளிவரும்போது அவை பறவை, விலங்கு, மீன் முதலிய பல பிராணிகளுக்கு இரையாகும். ஆமை முட்டையையும் பல பிராணிகள் தேடி அலையும் ; மனிதரும் அலைவார்கள்.

ஆமைகளில் பல மிகப் பெரிதாக வளரும். தோணி ஆமை 6, 6½ அடி நீளம் வளரும் ; முக்கால் டன் எடை இருக்கும். பெருந்தலை ஆமை 500 இராத்தல் இருக்கும். முதுகெலும்புப் பிராணிகளிலெல்லாம் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பவை ஆமைகளே எனத்தெரிகிறது. பெரிய தரை ஆமைகளிற் சில 250 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கின்றன.

கடலாமைகள் : அயனமண்டலம், சமதட்ப வெப்ப வலயம் இவற்றிலுள்ள கடல்களில் உலகஞ் சுற்றிலும் இவை உலவுகின்றன. எனினும் சில இடங்களில் மிகுதியாக இருக்கின்றன. இவற்றுள் தோணியாமை இப்பொழுது வாழும் ஆமைகளிலெல்லாம் மிகப் பெரியது. இது அருமையாகவே காணப்படுகிறது. இதன் ஓடு நூற்றுக்கணக்கான சிறிய எலும்புகளாலானது. அது தோல் போலவே காண்பதால் இந்த ஆமை தாலாமை எனப்படும். இந்த எலும்புகளிற் சில சற்றுப் பெரியவாகி, உடம்பின் நீளத்தில் வரி வரியாக அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் ஆமையின் முதுகில் ஏழு உண்டு. ஆதலால் இது ஏழுவரியாமை எனவும்படும். இலங்கைக் கரையில் முட்டையிட வரும். இந்தியக் கரைக்கும் அருமையாக வருவதுண்டு. பேராமை அல்லது பச்சையாமை 3, 4 அடி வளரும். 3 அந்தர் எடையிருக்கும். இது பாசி முதலியவற்றை யுண்ணும். இதன் இறைச்சியும் கொழுப்பும் ஓட்டுக்குக் கீழே தோலுக்கு அடியில் வளரும் இணைப்புத் திசுவும் உயர்ந்த உணவுப்பொருள் எனப்படும் ஆமை ரசம் செய்ய உதவும். பருந்தின் அலகு போன்ற அலகுள்ள அழுங்காமையின் கொம்புக் கேடகங்களே உலகப் புகழ் பெற்ற ஆமையோடு. இந்தியக் கடல்களில் அகப்படும் மற்றொன்று பெருந்தலையாமை அல்லது பங்குனியாமை எனப்படும். இது பங்குனி மாதத்தில் பெரும் பாலும் முட்டையிட வருவதால் இப்பெயர் பெற்றுள்ளது.

தரையாமைகளில் தென்னிந்தியாவிலுள்ள ஓர் இனம் மஞ்சள் நிறமான நட்சத்திரம் போன்ற பூப் போட்டது. இந்தியப் பெருங்கடலில் சிஷேல் முதலிய தீவுகளிலும், பசிபிக் பெருங்கடலில் கலபகாஸ் தீவுகளிலும் உள்ள தரையாமைகள் மிகப் பெரியவை. இவற்றில் பெரும்பாலானவை அற்றுப்போய்விட்டன. மனிதன் அழித்துவிட்டான். இவற்றுள் சில 4½ அடி இருக்கும். இவை 150 ஆண்டுகளும், அதற்கு மேலும் உயிர் வாழும். மூன்று வரைகள் உள்ள ஆமை ஒன்றைக் கேணிகளிலும் கிணறுகளிலும் விட்டு வைப்பதுண்டு. இது இருநதால் பூச்சி, புழு, பாசி முதலியவையின்றி நீர் சுத்தமாக இருக்குமென்று எண்ணப்படுகிறது.

ஆமை ஓடு

நன்னிராமைகளில் பாலாமையின் உடல் மீது கொம்பாலான கேடகங்கள் இல்லை. இப்போது காணப்படுவதைப் பண்டைக் காலத்தில் பெரியனவாக இருந்த இச்சாதி ஆமைகளின் பாசில்கள் சிவாலிக் மலையில் காணப்படுகின்றன.

மனிதர் ஆமை முட்டையை உண்கின்றனர். சில இடங்களில் முட்டையிலிருந்து எண்ணெயெடுத்துக்கறி சமைக்கவும் விளக்கெரிக்கவும் உபயோக்கின்றனர். சில ஆமைகளின் இறைச்சியை உண்கன்றனர். அழுங்காமையோடு அருமையான பொருளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. மிகப் பழைய காலந்தொட்டே இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக இது ஐரோப்பாவுக்குப் போயிருக்கிறது. இதிலிருந்து பெட்டிகளுக்கு மேலே மெல்லிய தகடுபோல ஒட்டுவதும், சிமிழ், பொடி டப்பி, கத்திப்பிடி, சீப்பு முதலிய செய் வதும் உண்டு. தந்தம் போலச் செதுக்குப் பதிவு வேலைக்கும் உதவும்.

ஆமையைப் பிடிப்பது பலவிதமாக நடைபெறுகிறது. பல நாடுகளில் வாழும் நாட்டுக் குடிகள் நீருக்குள் இருக்கும் ஆமையை அம்பினால் எய்கின்றனர். ஈட்டியால் குத்துகின்றனர். நீருக்குள் முழுகிப் பற்றிக்கொண்டு வருவதுமுண்டு. திறமை விளங்கும் இச் செயல்களன்றி வலைபோட்டும் பிடிப்பார்கள். மடகாஸ்காரிலும், கியூபாவிலும், டாரெஸ் ஜலசந்தியிலும் உள்ள நாட்டு மக்கள் எக்கெனைஸ் என்னும் மீனைக் கொண்டு பேராமையைப் பிடிக்கின்றனர். இந்த மீனுக்குத் தலையிலும் கழுத்திலும் பெரிய ஒட்டுறுப்புக்கள் உண்டு. ஆமை மேயும் இடத்துக்குப் படகில் சென்று, இந்த மீன்களின் வாலில் கயிற்றைக்கட்டி விடுவார்கள். இவை பாதுகாப்பான இடத்துக்குத் தப்பியோட முயன்று, நீரின் அடியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆமையின் ஓட்டில் உறுதியாக ஒட்டுறுப்பால் பற்றிக் கொள்ளும். கயிற்றின் உதவியால் ஆமையை மெல்ல வெளியே தூக்குவார்கள். உணவாக மனிதர் விரும்பும் சில வகை ஆமைகளை வளர்க்கப் பண்ணைகள் வைத்திருக்கின்றனர். சில ஆமைகளை வீட்டில் நாய், பூனை போலச் செல்லமாக வளர்க்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆமை&oldid=1456818" இலிருந்து மீள்விக்கப்பட்டது