கலைக்களஞ்சியம்/ஆரிகா
ஆரிகா (Auriga) என்னும் நட்சத்திர மண்டலம் வடக்கே பெர்னியர் நட்சத்திரத்திற்கும் ஜெமினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ளது. ஆரிகா என்னும் லத்தீன் சொல்லின் பொருள் சாரதி என்பதாகும். அவன் வலக்கையில் ஒரு கடிவாளத்தையும், இடத்தோளில் ஆட்டையும் வைத்திருப்பதாகக் கூறுவர். இதிலுள்ள பிரம இருதயம் (Carella) ஓர் இரட்டை நட்சத்திரம். 53 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. இரட்டைகள் ஒன்றையொன்று 104 நாட்களில் சுற்றுகின்றன. இவை சூரியனைப் போல் 105 மடங்கும் 80 மடங்கும் ஒளியுடையன. பெரியது சூரியனைப்போல் 11 மடங்கும்; சிறியது 5 மடங்கும் பெரியது. இவை இரண்டும் மஞ்சள் நிறமானவை. இவற்றில் சூரியனில் காணப்படும் உலோகங்கள் காணப்படுகின்றன.
பீட்டா ஆரிகா ஓர் இரட்டை நட்சத்திரம். இது சூரியனை விடப் பெரியது. சூரியனைப்போல் 50 மடங்கு ஒளியுடையது. ஒன்றையொன்று நான்கு நாட்களில் சுற்றுகின்றது. சுற்றும்போது ஒன்றுடன் ஒன்று சமாகமம் ஆகிறது. நூறு ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. ஆர். எல். கா.