உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆரிய சமாஜம்

விக்கிமூலம் இலிருந்து

ஆரிய சமாஜம் என்பதன் பொருள் சான்றோர் கழகம் என்பதாகும். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி என்பவர். அவருடைய இயற்பெயர் மூல்சங்கர், அவர் 1825ஆம் ஆண்டு குஜராத் நாட்டில் டங்காரா என்ற ஊரில் சைவப் பிராமண குலத்தில் பிறந்தார். சிறுவராக இருந்தபோது தந்தை முதலியவர்கள் கோயிலில் போய்ச் சிவராத்திரி விரதம் இருந்தபோது இவரும் அவர்களுடன் இருந்தார். எல்லோரும் உறங்கிவிட்டார்கள். இவர் மட்டும் உறங்கவில்லை. சிவலிங்கத்தின்மீது எலிகள் ஓடுவதைக் கண்டதும் இவர் கடவுளா என்று ஐயுற்றுத் தந்தையை எழுப்பிக் கேட்டார். தந்தை கூறிய விடை அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. அதுமுதல் ஐயம் அதிகரிக்கவே, சில ஆண்டுகளுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறித் துறவிகளை அணுகினார். இறுதியில் விரஜானந்தர் என்னும் பிறவிக்குருட்டுத் துறவி இவருக்கு நான்மறைப் பொருளைக் காட்டி, அதுவே உலகத்தை உய்விக்க வல்லது என்று உபதேசித்தார். உலக மக்கள் எல்லோரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் தயானந்தர் ஆரிய சமாஜத்தை 1875-ல் நிறுவினார்.

கொள்கைகள்: வேதங்கள் இறைவனுடைய அருள்வாக்கு. வேதங்களுக்கு மாறுபட்டவை நம்பத் தக்கனவல்ல. சகல மக்களையும் ஒரே சமுதாயமாக இணைக்கவல்ல சாதனம் வேத உபதேசமே. வேத சம்மதமின்மையால் உருவ வழிபாடு தவறு. கடவுள் ஒருவரே. அவர் குண, கரும சுபாவங்கட்கு ஏற்பப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கடவுள், சீவன். இயற்கை ஆகிய மூன்றும் நித்தியமானவை. இவற்றின் கூட்டுறவால் ஆக்கல், அளித்தல், அழித்தல் நடைபெறுகின்றன. வேத வாழ்க்கையே விமோசனம் அளிப்பதால் பிற மதத்தினரைச் சுத்தி செய்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். மக்கள் அனைவரும் ஒரே இனமாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும். இவைகளே ஆரிய சமாஜத்தின் முக்கியமான மதக் கொள்கைகள்.

ஆரிய சமாஜம் சாதி மத வேற்றுமைகளை ஒப்புக் கொள்வதில்லை. இளம்பெண் மணத்தையும் பலதார மணத்தையும் கண்டிக்கிறது. இளங் கைம்பெண் மணத்தையும் ஏகதார மணத்தையும் ஆதரிக்கிறது. பழங்காலக் குருகுலக் கல்வி முறையைப் பரவும்படி செய்ய விரும்புகிறது. பல இடங்களில் அத்தகைய குருகுலங்களை நடத்தி வருகிறது. சமஸ்கிருத மயமான இந்தியே இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. இந்தி மொழிக்கு நாகரி எழுத்துக்களை முதன் முதலில் பயன்படுத்தியவர் தயானந்தரேயாவர். ஜீ. க.