உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலங்கட்டி

விக்கிமூலம் இலிருந்து

ஆலங்கட்டி : கார்மஞ்சு (Cumulo-nimbus) மேகத்திலிருந்து விழும் கடினமான பனிக்கட்டித் துணுக்கு ஆலங்கட்டி எனப்படும். சாதாரணமாக இது இடிமழையின் (த. க.) போது தோன்றும்.சில சமயங்களில் 2-3 அங்குல அளவுள்ள பெரிய ஆலங்கட்டிகள் விழலாம். இரண்டு ராத்தலுக்கும் அதிகமான நிறையுள்ள பெரிய ஆலங்கட்டிகள் ஒரு சமயத்தில் வங்காளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய அட்சரேகைப் பகுதிகளிலும் கண்டங்களின் உட்பகுதிகளிலும் கோடைக்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும்.

கார்மஞ்சு மேகத்தில் ஈரமான காற்றோட்டம் வெகு உயரம்வரை நிகழ்கிறது. இதனால் நீராவியின் வெப்ப நிலை விரைவாகக் குளிர்ந்து அது நீர்த்துளிகளாகிறது. இப்போது அதன் வெப்பநிலை பனிக்கட்டியின் உருகு நிலையைவிடக் குறைவாக இருக்கும். மேகத்தின் உச்சியில் பனிக்கட்டிப் படிகங்கள் தோன்றிக் காற்றோட்டத்திற்கு எதிராகக் கீழிறங்கி வருகின்றன. இப்படிகங்கள் பனிக்கட்டியின் உருகுநிலையைவிடக் குறைவான வெப்ப நிலையிலுள்ள நீர்த்துளிகளின்மேல் பட்டால் அத்துளிகள் உறைந்து இவற்றின்மேல் படியும். இவ்வகையில் பனிக்கட்டித் துணுக்கு வளர்ந்து கீழ்நோக்கி வருகிறது. இவ்வாறு அது வரும்போது மேகத்தில் நிகழும் காற்றோட்டத்தினால் மேலும் கீழும் பலமுறை சென்று கடைசியாகத் தரையை அடையும். இதுவே ஆலங்கட்டி. ஓர் ஆலங்கட்டி தோன்றினது முதல் அது தரையை அடையும்வரை அதில் நிகழும் மாறுதல்களையொட்டி அதன் அமைப்பு மாறுபடும். சில ஆலங்கட்டிகள் தெளிவான தோற்றங்கொண்டு ஒளி கசியவிடும் தன்மை கொண்டிருக்கும். வேறு சிலவற்றில் தெளிவான பனிக்கட்டியும், ஒளியைப் புகவிடாத வெண்பனியும் அடுக்கடுக்காக மாறி மாறி இருப்பதுண்டு. ஆலங்கட்டியில் இன்னொருவகை மிருதுவாகச் சிறு வெண்பனித் துணுக்குக்களைப்போல இருக்கும்.