கலைக்களஞ்சியம்/ஆவாரை

விக்கிமூலம் இலிருந்து

ஆவாரை உயரமாக வளரும் குற்றுச் செடி. நன்றாக வளர்ந்தது 16 அடி உயரம்கூட இருக்கும். பல கிளைகளுள்ளது. பட்டை வழுவழுப்பாக, செம்பழுப்பாக இருக்கும். இளங்கிளைகள் மென்மயிர் படிந்திருக்கும். இரட்டைக் கூட்டிலைகள் 3-4 அங்குல நீளம். முதற்காம்பில் ஒவ்வொரு ஜதை சிற்றிலைக்கும் நடுவே ஒரு சுரப்பியிருக்கும். இலையடிச் செதில்கள் இலைபோன்று பின்னுக்கு மடிந்து பெரிதாகக் காது வடிவமாக இருக்கும். செதிலின் அடிப்பாகத்தில் நீண்ட முனை ஒன்று இருக்கும். சிற்றிலைகள் 8-12 ஜதைகள் -1 அங்குல நீளமும், அங்குல அகலமும் இருக்கும்.

ஆவாரை
காயும் கிளையும்

பூக்கள் பெரியவை. பூக்கொத்து இலைக்கணுச் சந்தில் அல்லது கிளை நுனியில் வளர் நுனிச் சமதள மஞ்சரியாக இருக்கும். புறவிதழ் , அகவிதழ் 5 ; பளிச்சென்ற மஞ்சள் நிறம். அதில் கிச்சிலி நிறக் கோடுகள் இருக்கும். கேசரம் 10. அவற்றில் 3 போலிக் கேசரங்கள். 7 நன்கு வளர்ந்தவை. 3 பெரியவை. 1 சிறியவை கனி, சிம்பு; 3-5 அங்குல நீளம், சுமார் அங்குல அகலம்; தட்டையாக மெல்லியதாகக் காகிதம் போன்று இருக்கும்; விதைகளுக்கு நடுநடுவே அழுந்தியிருக்கும். விதை 10-20. பூக்கள் ஜனவரி முதல் ஜூலை வரையில் இருக்கும். விதை மருந்துக்கு உதவும். தழை எருவாகும். இலையைத் தேயிலை போலப் பயன்படுத்துகின்றனர். பூவைக் கறி சமைப்பார்கள். பூவிதழ்களிலிருந்து குல்கந்துபோன்ற பொருள் செய்கிறார்கள். அது குளிர்ச்சியானது என்பார்கள்.

ஆவாரம்பட்டை தோல் பதனிடுவதற்கு மிகச் சிறந்த பொருள். செடி 2, 3 ஆண்டானதும் கிளைகளை வெட்டிப் பட்டையை உரித்துக் காய வைப்பார்கள். தென்னிந்தியாவில் இதுதான் முக்கியமான பதனிடு பொருள். ஆவாரந் துவர் தோலில் விரைவில் உட்புகுந்து இலேசான நிறமும், மீள் சக்தியுள்ள அமைப்பும், இழுசக்தியைத் தாங்கும் வலிமையும் கொடுக்கிறது. காசியா ஆரிக்குலேட்டா என்பது இச் செடியின் விஞ்ஞானப் பெயர். இது லெகுமினோசீ குடும்பத்தில் சீசால்பினீ உட்குடும்பத்தைச் சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆவாரை&oldid=1458040" இலிருந்து மீள்விக்கப்பட்டது