கலைக்களஞ்சியம்/ஆஸ்திகம்
ஆஸ்திகம்: அஸ்தி என்னும் சமஸ்கிருத பதத்தின் பொருள் 'உள்ளது' என்பதாகும். ஆஸ்திகம் என்பது உள்ளது என்னும் கொள்கை என்று பொருள்படும்.
அஸ்தி என்பதன் பொருள் உள்ளது என்று பொதுவாக இருப்பதால் முதலில் பரலோகம் உளது என்றும், பின்னர் நாளடைவில் ஈசுவரன் உளன் என்றும், வேதப்பிரமாணம் உளது என்றும் பொருள் செய்திருக்கிறார்கள். பரலோகம், ஈசுவரன், வேதப் பிரமாணம் மூன்றும் உள்ளனவாக ஏற்றுக்கொள்பவர் ஆஸ்திகர்; ஏற்றுக் கொள்ளாதவர் நாஸ்திகர்.
இந்தியாவில் தோன்றிய மதங்கள் பன்னிரண்டு. அவையாவன: சாருவாகம், சௌத்திராந்திகம், வைபாஷிகம், யோகாசாரம் அல்லது விஞ்ஞானவாதம், மாத்தியமிகம் அல்லது சூனியவாதம், ஜைனம், வைசேஷிகம், நையாயிகம், சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம்.
1. ஆஸ்திகம் என்பதற்குப் பரலோகம் உண்டு என்று நம்புவது என்று பொருள் கொண்டால், சாருவாகம் ஒன்றே நாஸ்திக மதம். 2. ஆஸ்திகம் என்பதற்கு ஈசுவரன் உளன் என்று நம்புவது என்று பொருள் கொண்டால் சாருவாகம், சாங்கியம், மீமாம்சம் மூன்றும் நாஸ்திக மதங்கள். சாருவாகம் ஈசுவர உண்மையை மறுப்பதாலும், சாங்கியமும் மீமாம்சமும் ஈசுவர சம்பந்தமில்லாமலே எல்லா விஷயங்களையும் முடிவு செய்வதாலும் அவற்றை நாஸ்திக மதங்கள் என்று கூற வேண்டியதாயிருக்கிறது. ஆயினும் சிலர் சாங்கியமும் மீமாம்சமும் ஈசுவர உண்மையை நேராக மறுக்காதிருப்பதாலும், ஈசுவர உண்மைக்குரிய குறிப்புக்கள் அவற்றில் காணப்படுவதாலும் அவைகளை நாஸ்திகம் என்று கூறாமல் ஆஸ்திகம் என்று கூறலாம் என்று சொல்லுவர். 3. ஆஸ்திகம் என்பதற்கு வேதத்தை நம்புவது என்று பொருள் கொண்டால் முதல் ஆறு மதங்களும் நாஸ்திகம், பின் ஆறு மதங்களும் ஆஸ்திகம். இதை வைத்தே முன் ஆறு மதங்களையும் நாஸ்திகஷட்தர்சனி என்றும், பின் ஆறு மதங்களையும் ஆஸ்திகஷட்தர்சனி என்றும் வழங்குகிறார்கள்.
ஆதியில் மக்ககள் தமக்கு உதவியாயுள்ள ஆறு, மலை, காடு முதலியவைகளைத் தேவதைகளாகக் கருதி வழிபட்டார்கள். அந்தத் தேவதைகளுக்கு வேள்விகள் வழியாகத் தங்கள் நன்றியைத் செலுத்தினர். இதுவே கரும மார்க்கம் என்பது. நாளடைவில் தேவதைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரதேவதை இருக்கவேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. அதைக் கூறவே ஆரணியகங்கள் எழுந்தன. அப்பொழுதே உபாசனா மார்க்கமும் உண்டாகி வளர்ந்து வந்தது. அதன்பின் மீண்டும் மீண்டும் செய்த விசாரணைகளின் பலனாக எல்லாம் பரம்பொருளே, பரம்பொருளைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்னும் சித்தாந்தம் உண்டாயிற்று. அதை உபநிஷதங்கள் வாயிலாக வெளியிட்டார்கள். அப்பரம்பொருளை அறிவது ஞானமார்க்கம். கருமம், உபாசனை,ஞானம் என்ற இம்மூன்று மார்க்கங்களை ஒட்டியே ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை தோன்றியிருக்கின்றன.
இந்த மத வளர்ச்சி முறையைக் கவனித்தால், ஆஸ்திகத்துக்குப் பரலோக உண்மை என்ற பொருள் வேதகாலத்திலும், ஈசுவர உண்மை என்ற பொருள் ஆரணியகக் காலத்திலும், வேதப் பிரமாண உண்மை என்ற பொருள் வேதங்கள் பிரமாணங்கள் அல்ல என்று போதிக்கத் தொடங்கிய பெளத்தர், ஜைனர் காலத்திலும் உண்டாயிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.
கருமம், உபாசனை, ஞானம் என்ற மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயில வேண்டும் என்ற கருத்தினாலேயே அவை இந்த வரிசையில் வேதத்தில் கூறப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றையும் பயின்று வருவதே பாரத தேசத்தினுடைய ஆஸ்திகத்தின் தனிச் சிறப்பாகும். இதை உட்கொண்டே பகவத் கீதையானது சரியை, கிரியை, சன்னியாசம், பக்தி, ஞானம் என்று சகல தருமங்களையும் உபதேசிக்கின்றது. டி. வீ. ரா.