உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடம் காலம் காரணம்

விக்கிமூலம் இலிருந்து

இடம், காலம், காரணம் என்பன அறிந்து கொள்ள முடியாதவை என்று எண்ணக்கூடிய அடிநிலைப் பொருள்களாக எப்பொழுதும் தத்துவ சாஸ்திரிகளுக்குத் தோன்றி வருகின்றன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் என்று ஏதேனும் சொல்லத் தகுந்ததாக இருப்பின், அது சார்ல்ஸ் லாம் (Charles Lamb) என்பவர் கூறியது தான். “என் மனத்தை இடம், காலம் என்பவை குழப்புவதைவிட அதிகமாக வேறு எதுவும் குழப்பக் காணோம். அதுபோல அவற்றைவிடக் குறைவாகக் குழப்புவதும் வேறு எதுவுமில்லை. அதற்குக் காரணம் யாதெனில் நான் அவற்றைப் பற்றி ஒருபொழுதும் சிந்திக்காதிருப்பதுதான்” என்று அவர் தம் நண்பர் ஒருவருக்கு எழுதினார். இவற்றைக் குறித்து மேனாட்டில் நடந்துள்ள முக்கியமான ஆராய்ச்சி வரலாறு வருமாறு:

கிரேக்கத் தத்துவ சாஸ்திரிகளும் கணித சாஸ்திரிகளும் : உளநூல் முறையில் பார்த்தால், இடம் என்று அறிவது, காலம் என்று அறிவதைவிட அதிகமாகப் பொறிகளையே பொறுத்ததாகும். இடத்தைப் பற்றிய விஞ்ஞானமாகிய வடிவ கணிதம் (Geometry) நிலங்களை அளப்பதற்காகவே ஆதியில் எகிப்தியர்களால் விருத்தி செய்யப்பட்டது என்று எண்ணுவதற்குக் காரணங்கள் உள. அதன் பின்னர் யூக்ளீடு போன்ற கிரேக்க வடிவக் கணித அறிஞர்கள் அந்த நூலை வெளிப்படை உண்மைகளையும் வரையறைகளையும் ஆதாரமாகக் கொண்டு சிந்தனைப் பயிற்சி முறை கொண்டதொரு சாஸ்திரமாகச் செய்தனர். அது அறிவு நால்களின் வளர்ச்சி வரலாற்றில் அதிகமாகக் குறிப்பிடக்கூடிய சாதனைகளில் ஒன்றாகும். ஆனால் காலம் என்பது இவ்வாறு பொதுமைக் கருத்து (Conceptualism) ஆக்கலுக்கு இணங்கி வராததாக இருந்தது. பயிர்த்தொழிலைக் கண்டுபிடித்ததும் மக்கள் இயற்கைப் பருவகால நிகழ்ச்சிகளைக் கவனிக்கலாயினர். பண்டைக் காலத்து நாகரிக இனத்தாருட் சிலர் மிகவும் விரிவான சிறந்த பஞ்சாங்கங்களை வகுத்திருந்தனர். ஆயினும் மிகச் சுருங்கிய காலட்பொழுதை அளப்பதற்குரிய முறைகள் பொதுவாகவே வளர்ந்து வந்தன.

அடிநிலை உள்பொருள் அல்லது இயற்கை என்பது எண்ணங்களாலேயே ஆயது என்று வற்புறுத்தி வந்த பைத்தாகரஸ் கொள்கையினர் இடம் என்பது புள்ளிகளின் தொகுதியே என்றும், புள்ளிகள் எல்லையுற்ற பருமனுடையனவேயன்றி பரிமாணம் (Dimensions) உடையன அல்ல என்றும் கூறினர். பைத்தாகரஸ் கொள்கையினருள் ஒருவரும் பிளேட்டோ காலத்தவரு மான ஆர்க்கைடஸ் என்பவர், “காலம் என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் எண்ணே“ என்று காலத்துக்கு இலக்கணம் கூறினார். பிரபஞ்சம் என்பது இன்றியமையாத இணைப்புடைய ஒரு முழுப் பொருள் என்பது கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தில் உள்ள முக்கியக் கருத்துக்களில் ஒன்றாம். எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாகவுள்ள ஒரு பொருள் உண்டு என்று கூறுவதன் மூலம் அவர்கள் உள்பொருள் ஒன்றே என்று கூறினர். கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் மைலெட்டஸ் வாசியுமான தேல்ஸ் என்பவர், “எல்லாம் நீரே“ என்று கூறினர். சுமார் கி.மு. 514 - ல் பிறந்த எலியாட்டிக் தத்துவ சாஸ்திரி பார்மினைடிஸ் என்பவர் அடிநிலை உள்பொருள் காலங்கடந்தது என்றும், எப்பொழுதும் தானாகவே உள்ளது என்றும், இடையீடில் லாததும் பிரிக்க முடியாததுமான சடப் பிரபஞ்சம் என்றும் கூறினார். அவருடைய சீடரான மெலிசஸ் என்பவர் அதற்கு எல்லையற்றுப் பரவியுள்ள பொருள் என்று இலக்கணம் கூறினார். மற்றொரு சீடரான ஜீனோ பிரித்தல், பெருக்கல் என்பனவும், அதே காரணத்தால் காலம், இயக்கம் என்பனவும் அகத்தேயே முரண்பாட்டை உடைய கருத்துக்களாம் (Self contradic tory) என்று கூறினார்.

ஜீனோ கூறிய மூன்று புகழ் பெற்ற முரண்களில் ஒன்று எய்யப்பெற்ற அம்பு ஒவ்வொரு கணத்திலும் பைத்தாகரஸ் கூறிய புள்ளியிடம் தங்குவதால் பறந்து செல்லும்பொழுது அசையாதிருப்பதே யாகும் என்பது. இடையீடில்லாத இயக்கம் என்பது இயங்காத நிலைகளின் வரிசையே யாகும். தொட்டியில் வசித்துக் கொண்டிருந்த டயாஜெனீஸ் என்ற தத்துவ சாஸ்திரியிடம் இயக்கம் என்று ஒன்றில்லை என்றபொழுது அவர் ஒன்றும் பேசாமல் எழுந்து நடந்து அந்தக் கூற்றை மறுத்துக் காட்டியதாகச் சொல்வதுண்டு. சுமார் கி. மு. 535-475-ல் வாழ்ந்த ஹெராக்கிளிட்டஸ் என்பவர் பார்மினைடிஸ் கருத்தை மறுத்து, “முரணே அனைத்துக்கும் தந்தை“ என்று வற்புறுத்தினார். அடிநிலை உள்பொருள் என்பது வெறும் மாற்றமே என்றும், நிலைப்பு என்பதும் மாறாமை என்பதும் திரிபுக் காட்சிகளே என்றும் கூறினார். கிரேக்க அணுக் கொள்கையினரான சிப்பியஸ், டிமாக்கரெட்டஸ் என்பவர்கள் எல்லையற்ற அணுக்கள் சேர்வதாலும் பிரிவதாலும் மாற்றம் என்பது உண்டாவதாகக் கூறினார்கள். அணுக்கள் உள்பொருள் ; வெற்றிடம் இல்பொருள் (Non- being) என்பது அவர்கள் கருத்து.

சுமார் கி.மு. 429-ல் பிறந்த பிளேட்டோ அடி நிலை உள்பொருள் என்பது கருத்துக்களாலாயதோர் அமைப்பே என்று கருதினார். இவர் கூறிய 'கருத்துக்கள்' என்பவை பொருள்களைப் போன்றவையல்ல. எண்ணங்களையும் எண்களையும் போன்றவை. அவை இடத்துக்கும் காலத்துக்கும் புறம்பானவை. மனிதன் கருத்துக்களைத் தியானம் செய்யலாம். எல்லையுற்ற சடப் பிரபஞ்சத்துக்கு வெளியே எல்லையற்ற வெற்றிடம் உளது என்னும் கொள்கையை அவர் தமது டிமேயஸ் என்னும் சம்பாஷணையில் விவரிக்கிறார்.

கி.மு. 384-522-ல் வாழ்ந்த அரிஸ்டாட்டில் எல்லையற்ற வெற்றிடம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பரப்பு என்பதை அவர் எல்லையுள்ள கருத்தாகவே எண்ணினார். பண்பு (Quality) எல்லாம் பரிமாணத்தை ஆதாரமாகவுடையது என்னும் கற்பிதக் கொள்கை (Hypc thesis) யையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னால் பின்னால் என்பது சம்பந்தமாகவுள்ள இயக்கத்தில் அளவே காலம் என்பது என்று காலத்துக்கு இலக்கணம் கூறுகிறார். அதனால் காலம் என்பதன் உண்மை, இயக்கத்தையும் இயக்கத்தைப்பற்றி மனத்தில் உண்டாகும் வெறும் தெளிவையுமே (Awareness) பொறுத்தது என்று தோன்றுகிறது.

கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தில் அரிஸ்டாட்டில்தான் முதன்முதலாகக் காரணத்துவம் பற்றி ஓர் அமிசத்தையும் விடாமல் ஆராய்ந்தவராவார். அவருடைய இலக்கணப்படி 'காரணம்' என்பதில் ஒரு நிகழ்ச்சியைக் குறித்து அறிவதற்கு உதவுவன அனைத்தும் அடங்கும். காரணங்கள் உபாதானம் (Material), வடிவம் (Formal), (Final) நிமித்தம் (Efficient), நோக்கம் என்று நான்கு வகைப்படும். வெண்கலச்சிலை செய்யும் பொழுது வெண்கலம் உபாதானம், சிற்பி நிமித்தம், சிலை பற்றிய கருத்து வடிவம், சிற்பியின் குறிக்கோள் நோக்கம்.

பொருள்கள் உண்டாவதற்கு 'இன்றியமையாத அவசியம்' என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை அரிஸ்டாட்டிலுக்கு வெகுகாலத்துக்கு முன்னரே பாபிலோனியர்கள் உணர்ந்திருந்தார்கள் என்று தெரிகிறது. கி.மு. 500-ல் வாழ்ந்திருந்த அனக்சகோரஸ் என்பவர் 'பரம் அறிவு' (World Intelligence) என்று ஒன்று இருப்பதாகவும், அதுவே பிரபஞ்சத்துக்கு நோக்க காரணம் என்பதாகவும் குறிப்பிட்ட போதிலும், அணுக் கொள்கையினர் பிரபஞ்சத்தை உண்டாக்க ஒரு “நோக்க காரணம்“ கற்பிக்க வேண்டியதில்லை என்றும்,

பிரபஞ்சம் தானாகவே உண்டாயிருக்கும்; அது உண்டாகாமல் இருந்திருக்க முடியாது என்று கூறினால் போதும் என்றும் கூறினார்கள். பிளேட்டோ வடிவ காரணத்தைக் 'கருத்துக்கள்' என்றும், உபாதான காரணத்தை 'சடம்' என்றும் கூறுகிறார். 'நன்மை' என்னும் கொள்கையைக் கூறும்பொழுது அவர் நோக்க காரணத்தையும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. ஆனால் அது தெளிவாயில்லை.

மத்திய காலத் தத்துவ சாஸ்திரம் : ஐரோப்பியர்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தை மத்திய ““காலம்”” என்பர். அக்காலத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்தவை கிறிஸ்தவ மதமும், கிரேக்க ஞானமுமேயாகும். அவர்கள் காலத்துக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நோக்க காரணங்கள் உண்டு என்றும். நிகழக்கூடியதாயிருந்ததே நிகழ்ந்தது என்றும் கருதினார்கள். கடவுளே எல்லாவற்றையும் இயக்குகின்ற நித்தியமான இயக்க மற்ற கர்த்தா என்று கூறினார்கள். மத்திய காலத்து அறிஞர்கள் அநேகமாக இடத்தையும் காலத்தையும் அவற்றின் தன்மையை. வைத்தே ஆராய்ந்தார்கள். ஆயினும் அர்ச் அகஸ்டின் என்னும் கிறிஸ்தவத் துறவி, “காலம் என்பது யாது என்று யாரேனும் என்னிடம் கேட்காதிருப்பின் அதைப்பற்றி அறிவேன்; யாருக்கேனும் விளக்க விரும்பினாலோ அப்பொழுது அதுபற்றி எதுவும் அறியேன்” என்று அப்பிரச்சினை கடினமானதென்று ஒப்புக்கொண்டது ஆராய்ச்சிக்காலம் ஒன்று வரப்போவதை முன்கூட்டிக் குறிப்பிடுகின்றது.

நவீன காலத்துத் தத்துவ சாஸ்திரம் : கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னுள்ள காலத்தை ஐரோப்பியர்கள் நவீன காலம் என்பர். அந்தக் காலத்தில் வளர்ந்த பௌதிக சாஸ்திரத்துக்கு அஸ்திவாரமிட்ட காலிலீயோ (1564-1642) என்பவர் புறஉலகு என்பது இயங்கும் பொருள்களின் அமைப்பே எனப் பிரபஞ்சத்துக்கு இலக்கணம் கூறியதன் மூலம் அவர் கணிதநூலார் கூறும் இடத்தையும் காலத்தையும் அடி நிலை உள்பொருள்கள் என்னும் பதவியை அடையுமாறு செய்தார். யூக்ளிடு என்னும் கிரேக்க அறிஞர் வடிவ கணிதத்திற்கு வகுத்த முறைகளைக் காலம் சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்வதற்கும் பயன்படுத்தினார். ஒரு புள்ளியானது ஒரு கோட்டின் வழியே இயங்குவதே காலம் என்று கூறினார். காலக் கணங்கள் (Instants of time) பரிமாணங்களற்றவை. அவருக்கு முன்னாலிருந்தவர்கள் வடிவ காரணத்தையும் நோக்க காரணத்தையும் வற்புறுத்தினர். காலிலீயோ உபாதான காரணத்தையும் நிமித்த காரணத்தையுமே வற்புறுத்தினார். இடமும் காலமும் ஒன்றே என்றும், கடவுளே பிரபஞ்சத்தின் பிரதான நிமித்தகாரணம் என்றும், இயக்க விதிகள் துணை நிமித்த காரணங்கள் என்றும் டேக்கார்ட் கூறினார். ஸ்பினோசா என்பவர் உள்பொருள் ஒன்றே என்றும், சிந்தனையும் பரப்புமே அதன் இரட்டைப் பண்புகள் என்றும், அவை இரண்டும் எல்லையற்றன என்றும் கருதினார். அவரும் பார்மினைடிஸைப் போலவே காலம் என்று ஒன்று கிடையாது என்றார். அப்படிக் கூறுவதற்குக் காரணம் காலமானது பிரிக்கக் கூடியதாக இருப்பதே என்றும் சொன்னார். இடமும் காலமும் புறத்தேயுள்ள உள் பொருள்களல்ல என்றும், அவை உள்ளுணர்வின் வகைகளே என்றும் லைப்னிட்ஸ் கூறினார். அவர் காலத்திலிருந்த நியூட்டன் என்னும் பெரியார் பரவெளியும் காலமும் உள்பொருள்களே என்று கருதினார். அவருடைய கருத்தே பௌதிகத்தில் நீண்டகாலம் ஆட்சி பெற்றிருந்தது. ஆனால் கான்ட் என்னும் தத்துவ சாஸ்திரி, இடமும் காலமும் முற்றிலும் அகத்தே எழும். கருத்துக்களே என்று லைப்னிட்ஸ் கூறுவதையும் ஒப்புக் கொள்ளவில்லை, அவை புறத்தே காணும் உள்பொருள்களே என்று நியூட்டன் கூறுவதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவைகள் அனுபவம் உண்டாவதற்கு இன்றியமையாது வேண்டப்படுவன. அவற்றை உள்பொருள்களாகக் கருதினால், அவற்றின் எல்லையற்ற தன்மை பற்றியும், பிரிக்கக் கூடிய தன்மை பற்றியும் சில முரண்பாடுகள் விளைந்து அக்கருத்துக்களை அழித்து விடுவனவாக இருக்கின்றன.

டேக்கார்ட், ஸ்பினோசா, லைப்னிட்ஸ் ஆகிய மூவரும் காரணம் என்னும் பதார்த்தம் (Category) நிரூபணமில்லாமலே உள் ஒளியால் அறியக் கூடியதாகும் என்று கருதினர். ஆனால் காரணம் என்பது அனுபவத்திலிருந்து விளையும் ஒரு பொதுக் கருத்தாகும் என்று லாக் என்பவர் விளக்க முயன்றனர். ஹியூம் காரணத்துக்கு ஆதாரம் உள் ஒளி என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை, அனுபவம் என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மனித அனுபவங்கள் இணைந்த ஏகம் உண்டாவதற்கான ஆதாரத்தைப் பதார்த்தம் என்று கான்ட் வகுத்தார்.

ஐரோப்பியத் தத்துவ சாஸ்திரத்தில் அண்மையில் எழுந்த இரண்டு பெரிய கொள்கைகள் கருத்துக் கொள்கையும் (Idealism) புறப்பொருட் கொள்கையும் (Realism) ஆம். பிராட்லி, போசன்கிட், மக்டகார்ட் ஆகிய கருத்துக் கொள்கையினர் இடம், காலம் பற்றிய கருத்துக்கள் அகத்தேயே முரண்பாடு உடையன என்று வாதிக்கிறார்கள். அதனால் இடமும் காலமும் வெறுந் 'தோற்றங்கள்' அல்லது திரிபுக் காட்சிகள் மாத்திரமே. 'காலம் என்பது நித்தியம் இயங்குவதின் பிம்பமே' என்பது பிளேட்டோவின் உவமை. அனுபவக் கொள்கையினர் இடம், காலம் என்பவை உள் பொருள்களே என்று வற்புறுத்துகிறார்கள். பௌதிகவியல் கூறுகின்ற கணிதகாலம் அல்லது 'இடமாகச் செய்யப்பெற்ற' காலம் வேறு; அனுபவம் கூறும் தன்மை உருவாயுள்ள காலம்வேறு என்றும், அதனால் 'சிருஷ்டிப் பரிணாமமே' பிரபஞ்சத்தின் சாரம் என்றும் பெர்க்சன் கூறுகிறார். காலம் என்பதன் உண்மையை ஏற்றுக் கொண்ட போதிலும், அது காலத்துடன் சேர்ந்து, ஒரே 'பூரண இடம் கால'மாகஆகிறது என்று அலெக்சாந்தர் வற்புறுத்துகிறார். பெர்க்சன், அலெக்சாந்தர் ஆகிய இருவருடைய கருத்துக்களே ஒயிட்ஹெட் எழுதிய தத்துவ சாஸ்திரத்தில் காணப்படுகின்றன.

நவீன விஞ்ஞானம் : கான்டும் அவர் காலத்திய பிறரும் யூக்கிளிடின் வடிவகணிதம் பௌதிகத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் விசேஷமாகப் பொருந்துவது என்று கருதினார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த லோபாசெவ்ஸ்கியும் போல்யாயியும் யூக்கிளிடு தத்துவத்துக்கு மாறான வடிவ கணித முறைகளை வகுக்க முடியும் என்று காட்டினார்கள். உண்மையான உலகம் பற்றி வடிவ கணிதம் யூக்கிளிடு தத்துவத்துக்கு மாறானதாக இருக்க முடியுமா என்பதே பிரச்சினையாகத் தோன்றிற்று. இடம், காலம் இரண்டையும் ஐன்ஸ்டைன் தமது சார்புக் கொள்கை (Theory of Relativity) மூலம் நான்கு பரிமாணங்களுடைய ஒரே இடங்காலத்தின் அமிசங்களே என்று கூறுகிறார். ஆகவே காலம் என்பது விசேஷ இயல்பு எதுவும் இல்லாததாகத் தோன்றுகிறது. ஆயினும் ராப், மில்ன் இருவரும் செய்த ஆராய்ச்சியின் பயனாக இடத்தைக் குறிப்பிடும் 'இடையில்' என்ற கருத்தைவிட, 'முன்னால் பின்னால்' என்று காலத்தைக் குறிப்பிடும் கருத்துத் தர்க்க ரீதியாகப் பார்த்தால் பழமையானது என்பது புலனாகின்றது. பெர்ட்ரண்டு ரஸ்ஸல், ஒயிட்ஹெட் ஆகிய அறிஞர்கள் ஜீனோவின் முரண்களை நவீனக் கணித முறைகளைக் கொண்டு விடுவிக்க முயன்றுவர்.

பத்தொன்பதாவது நூற்றாண்டுப் பௌதிக சாஸ்திரிகள் பிரபஞ்ச நிகழ்ச்சிகள் எல்லாம் காரண காரியத் தொடர்புடையன என்றும், அதனால் நியதிக்கொள்கையைப் பின்பற்றுவன (Deterministic) என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இக்காலத்துப் பௌதிக அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. சக்தியின் புறப்பாடு ஒழுங்காக நடைபெறுவதில்லை என்றும், விட்டுவிட்டு நடைபெறுவதாகும் என்றும் கூறுகிறது. பிளான்க் (Planck) என்பவர் கண்டு கூறும் பௌதிக விதி. ஒரு பொருள் உதாரணமாக ஓர் எலெக்ட்ரான் அல்லது மின் அணுத் தொடக்கத்தில் நின்ற இடத்தையும் அதன் வேகத்தையும் அறிந்து கொண்டாலும் அது இறுதியில் என்ன செய்யும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது என்று குவான்டம் எந்திரவியல் என்னும் நவீன பௌதிகப் பகுதி கூறும் நியதியிலாக் கொள்கை (Principle of Indeterminacy) கூறுகிறது. அப்படியானால் காரண காரிய உறவிலுள்ள நம்பிக்கையைத் துறந்துவிட வேண்டியதே என்று கூறுவார் உளர். அந்த நம்பிக்கையைத் துறக்க வேண்டாம், அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையினைத் திருத்தி அமைப்போம் என்று கூறுவாரும் உளர்.

இடம், காலம், காரணம் ஆகிய மூன்றையும் பற்றிய கருத்துக்களை அடியோடு திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தை உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சிகள் (Psychic Phenomena) காட்டுகின்றன. சாதாரணமாக இடம் என்பது மூன்று பரிணாமங்களுடையது. காலம் என்பது ஒரு பரிணாமமுடையது. ஆனால் உள்ளத்தின் அசாதாரண நிகழ்ச்சி ஆராய்ச்சியாளர் இடமும் காலமும் பல பரிமாணங்களுடையனவாகக் கூறுகிறார்கள். ஆகவே இடம், காலம், காரணம் ஆகிய மூன்று பதார்த்தங்களுக்கும் பதிலாக, அவற்றினும் அதிக அடிப்படையான கருத்துக்கள் உருவாகலாம் என்று தோன்றுகிறது. சீ. டி. கி.