கலைக்களஞ்சியம்/இடையன் பூச்சி

விக்கிமூலம் இலிருந்து

இடையன் பூச்சி (Mantis) : கும்பிடு பூச்சி என்றும் இதைச் சொல்லுவார்கள். கரப்பான், வெட்டுக்கிளி முதலிய பூச்சிகளின் வமிசத்தைச் சேர்ந்தது. கடித்துண்ணும் தாடைகளையும், வளர்ச்சியில் இளம் பூச்சிப் பருவத்தையும் பெற்ற இப் பூச்சியின் முன்ஜதைக் கால்களின் இடை நீண்டும், தொடையும்முன்னங் காலும் வேறு பூச்சிகளைப் பிடித்துண்பதற்கேற்றவாறு அமையப்பெற்று மிருக்கின்றன. இப்பூச்சிகளின் மார்பின் முதற்பாகம் மற்றிரு பாகங்களைக் காட்டிலும் நீண்டிருக்கிறது. இரண்டு ஜதை இறக்கைகளும் கரப்பான் பூச்சிக்கிருப்பதுபோலிருக்கும். பெண் பூச்சி முட்டைகளை, உலர்ந்துபோய் நுரை போலக் காணும் கூண்டு ஒன்றினுள் வைக்கின்றது. சில நாட்கள் சென்று சிறு இடையன் பூச்சிகள் அதிலிருந்து வெளிவரும். காங்கைலஸ் (Gongylus) என்ற இடையன் பூச்சியின் பல பாகங்கள் இலைபோல் அகன்றிருக்கின்றன. அது பார்ப்பதற்கு ஒரு பூப்போல் இருக்கும். ஹம்பர்ட்டியெல்லா (Humbertiella) என்பது மரப்பட்டையின் நிறத்தையுடைய ஓர் இடையன் பூச்சி. ஜே. சா.