கலைக்களஞ்சியம்/இந்தியாவில் யூதர்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியாவில் யூதர்: கி.பி. 71-ல் ரோம் நாட்டினர் எருசலேம் நகரத்தைத் தாக்கி அழித்தார்கள். அப்போது பல யூத குடும்பங்கள் (சுமார் 10,000 யூதர்) இந்தியாவில் மேற்குக்கரையில், மலையாளத்தில் குடியேறின. எட்டாவது நூற்றாண்டில் (சிலர் பத்தாவது நூற்றாண்டு என்று கருதுகிறார்கள்) பாஸ்கர ரவிவர்மன் என்னும் சேரநாட்டு மன்னன் யூதருக்குக் கொடுத்த சாசனம் இவர்களுடைய வரலாற்றைக் குறிக்கும் பழைய ஆதாரமாகும். இவர்கள் நிலச்சுவான்தார்களாகவும் வியாபாரிகளாகவும் இருந்ததாகத் தெரியவருகிறது. பம்பாய்க் கடற்கரையில் கொலாபாவில் குடியேறின யூதர் அரேபியாவிலுள்ள யெமன் (Yemen) நாட்டலிருந்து வந்தவர்கள். கி.பி.இரண்டாவது நூற்றாண்டில் இவர்கள் குடியேறினரென நம்பப்படுகிறது.

கொச்சியில் யூதர் வசிக்கும் பாகம் ஒன்று இப்போதும் பேர்பெற்றதாயுள்ளது. அங்கு அவர்களுடைய தேவாலயங்கள் (Synagogues) இருக்கின்றன. அவர்கள் வெள்ளை யூதர், கறுப்பு யூதர் என்ற இரு வகுப்பாகப் பிரிந்திருக்கிறார்கள். இந்நாட்டுக் குடிகளுடன் கலப்புமணம் செய்து கொண்டவர்களாகையால் ஒரு சாராருக்குக் கறுப்பு யூதர் என்ற பெயர் வந்ததுபோலும். கூ. ரா. வே.