கலைக்களஞ்சியம்/இந்துமத பாடசாலை, வாலாஜாபாத்

விக்கிமூலம் இலிருந்து

இந்துமத பாடசாலை, வாலாஜாபாத்: இது 1916 செப்டம்பர் 16ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையிலுள்ள வாலாஜாபாத்தில் பல மரங்களோடு கூடிய இயற்கை அமைப்புடைய நாற்பது ஏக்கர் நிலத்தில் ஓர் ஆசிரியருடனும் நான்கு மாணவருடனும் திரு.வா. தி. மாசிலாமணி முதலியாரால் தொடங்கப்பெற்றது. 1953-ல் 830 ஆண் பெண் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையை யெய்தியுள்ளது. இங்கு ஏழை மாணவர்களுக்கென ஒரு மாணவர் இல்லம் நடத்தப்பெறுகிறது. அதில் 650 மாணவர்கள் உள்ளனர். இங்குத் தமிழைத் தாய்மொழியாக உடைய குழந்தைகள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், பம்பாய், தென் ஆப்பிரிக்கா, மலேயா முதலிய நாடுகளிலிருந்தும் வந்து, கல்வி கற்று வருகின்றனர்.

கல்வி கற்கும் திறனுடைய ஏழைச் சிறுவர்களுக்கு, இலவசமாகக் கல்வியும் உணவும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொணர்தலும், எல்லா மாணவர்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் எவ்வித வேறுபாட்டுணர்ச்சியுமின்றி ஒன்றி வாழ்வதற்குப் பழக்குதலும், ஒரு தொழிற்சாலை அமைத்துத் தொழிற் பயிற்சி கொடுத்தலும், மாணவர்களை உயர்ந்த நற்குடிமக்களாக வாழச் செய்தலும், நாட்டை ஆளவேண்டிய முறைகளை நன்கு தெரிந்துகொள்ளச் செய்தலும் பள்ளியின் நோக்கங்களுள் முதன்மையானவை. பள்ளிக்கூடத்திலும் மாணவர் இல்லத்திலுமுள்ள எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்துகொள்ளுகிறார்கள். மாணவர் இல்லத்துக் குழந்தைகள் தங்களுக்குள் ஓர் ஆட்சி மன்றம் அமைத்துக்கொண்டுள்ளனர். முதலிலிருந்தே படிப்போடு தொழிலும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டு வருகிறது. துணி, சமக்காளம் நெய்தல், அச்சடித்தல் முதலியவை கற்பிக்கப்பெறுகின்றன. சில வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு நாளிலும் பாதி நேரம் படிப்பும், பாதி நேரம் தொழிலும் கற்று வருகிறார்கள்.