கலைக்களஞ்சியம்/இந்து மதம்

விக்கிமூலம் இலிருந்து

இந்து மதம் : இதன் வரலாறு இருக்கு வேதத்தில் காணப்பெறும் மந்திரங்கள் என்னும் தோத்திரங்கள் இயற்றப்பெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இக்காலம் இன்னதெனத் தெளிவாக அறியப்படவில்லை. தோத்திரங்களுள் மிகப் பழையன கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்டிருக்கலாம். மந்திர காலம், அக்காலத்துக்குப்பின் வைதிகக் கிரியைகளை விரிவாக விளக்கும் பிராமணங்களின் காலம், அதன்பின் அத்யாத்ம உபநிடதங்களின் காலம் என இம் மூன்று காலங்களையும் சேர்த்து வேதகாலம் என்று கூறுவது வழக்கம்.

நெருப்பு, காற்று, மழை முதலிய இயற்கைச் சக்திகளை மக்கள் தெய்வமாக்கி வழங்கிவந்த நிலைமுதலாக ஒரே பரம்பொருளின் கூறுகளே அவை என்பதை உணர்ந்து, அப் பரம்பொருளை அனுபவிக்கும் நிலைவரை மனித உள்ளம் வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருப்பதை இம் மந்திரங்களில் காணலாம். பழைய கொள்கைகளை விடுத்து, இந்த நிலையை அடைய வேத காலத்துச் சமயப் புலவர்கள் இருட்டில் வழி தடவுவது போல் முயல்வது தெளிவாகப் புலனாகின்றது.

வேத மந்திரங்களில் வளர்ந்து வந்த மற்றொரு முக்கியமான கருத்துப் பிற்காலத்தில் இந்த மதத்தின் சிறப்புக்களாக அமைந்த தருமம், கரும நியதி என்பவற்றின் ஓர் அடிநிலையாகிய ‘ரித’ என்னும் பிரபஞ்ச நியதியாகும்.

பிராமணங்கள் காலத்தில் புரோகித வேள்விகளையும் பிரதானமாகக் கொண்ட ஒரு சமயம் எழுந்தது. ஆயினும் இந்தக் காலத்திலும் சில முன்னேற்றமான கொள்கைகள் தோன்றாமலிருக்கவில்லை. அவற்றுள் மிக முக்கியமானது வருணாசிரம தருமம் என்பதாகும்.

பிற்காலத்தில் எழுந்த இந்து அகச் சமயங்கள் யாவும் உபநிடதங்கள் என்னும் சிறந்த நீரூற்றுக்களிலிருந்தே தோன்றியவை. இந்த உபநிடதங்களின் காலத்தில்தான் இந்து மதத்தின் அடிநிலை உறுதியாக இடப்பட்டதாகும். பிற்காலத்தவர் எழுப்பிய தத்துவ விசாரணை மாளிகைகளுக்கெல்லாம் அடிப்படை அந்த உபநிடதங்களே. அவைகளை அருளியவர்கள் உண்மையை நேரில் கண்ட ஞானிகள். அவர்கள் வழிபாட்டை விட்டுத் தியானத்தை மேற்கொண்டவர்கள். சடங்குகள் செய்வதை நீக்கி ஆன்மஞானம் பெற விழைந்தவர்கள். பழைய தெய்வங்கள் மறைந்தன. ஆன்மாவுடன் ஐக்கியமான பரமான்மாவே போற்றப்பட்டது. கருமம் என்பது கிரியை என்னும் சுருங்கிய பொருளை விட்டு, மறுபிறப்புக் கொள்கை என்னும் விரிந்த பொருள் உடையதாயிற்று. இவ்வாறு கருமம், சமுசாரம் என்னும் இணைபிரியாத இரண்டு கொள்கைகளும் உறுதியாக நிலைபெற்று விடுகின்றன.

சூத்திர காலம் : புத்தர் பிறப்பு முதல் மௌரிய சாம்ராச்சியத்தின் அழிவு வரையுள்ள காலம் சூத்திர காலமாகும். இது வரலாற்றிற்கு உட்பட்ட காலம். சிரௌத, கிருஹ்ய, தரும சூத்திரங்கள் எழுந்த காலம் இதுவே. இந்தக் காலத்து மக்களுடைய மதநிலைமை பிராமண கால நிலைமைக்கு ஒப்பானது என்பதைச் சூத்திரங்களிலிருந்து அறியலாம். இந்தக் காலத்தில்தான் மதச் சடங்குகளைப் பிரதானமாக எண்ணும் வழக்கத்தை எதிர்க்கும் பௌத்தமதமும் ஜைனமதமும் தோன்றின. அவைகள் வேதங்களை ஏற்றுக் கொள்ளாவிடினும், பழைய மதக் கோட்பாடுகளில் காணப்பட்ட அறநெறிக் குறிக்கோள்களை ஏற்றுக் கொண்டன.

இதிகாச காலம் : மௌரிய சாம்ராச்சியம் அழிந்த பின் இந்து மதத்திடைப் பெரியதோர் மறுமலர்ச்சி தோன்றுவதாயிற்று. மௌரிய ஆட்சி வீழ்ச்சிக்கும் குப்த ஆட்சித் தோற்றத்துக்குமிடையே அதாவது கி.மு.200 முதல் கி. பி. 300 வரையுள்ள ஐந்நூறு ஆண்டுக் காலமே இதிகாச காலம் எனப்படுவதாகும். இந்தக் காலத்திலே இராமாயணம், பகவத் கீதை என்னும் மணி முடியுடன் கூடிய மகாபாரதம் ஆகிய இதிகாசங்களும், மனுவும், யாஞ்ஞவல்கியரும் இயற்றிய தரும சாஸ்திரங்களும், முக்கியமில்லாத சில உபநிடதங்களும், புராணங்களில் மிகப் பழையனவான சிலவும், தத்துவ சூத்திரங்களும் தோன்றின. இக்காலத்தில் தான் இந்திய மக்கள் கடல்கடந்து சென்று, சுமாத்ரா, ஜாவா, போர்னியோ, மலேயா, இந்தோ - சீனா ஆகிய நாடுகளில் குடியேறிப் பல இராச்சியங்களை நிறுவி, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தனராதலால் அதைக் கொண்டும் இந்தக் காலத்தை இதிகாச காலம் என்று கூறத்தகும்.

இதிகாசங்கள் எல்லா மக்களாலும் விரும்பிப் போற்றப்பட்ட நூல்கள். அவை உபநிடதக் கருத்துக்களைக் கதைகள், சம்பாஷணைகள், இலட்சிய புருடர்களுடைய வருணனை முதலியவற்றின் மூலம் பாமர மக்களுக்கும் விளங்கும்படி செய்தன. இந்தக் காலத்திலே ஆரிய திராவிடப் பண்பாடுகள் கலந்து கொண்டபடியால் வைஷ்ணவம் சைவம், சாக்தம் என்னும் உட் சமயங்களும் உருவாயின.

இந்த இதிகாச காலத்தில் ஏற்பட்ட முக்கியமான மறுமலர்ச்சி முதன் முதலாகப் பகவத் கீதையில் வகுத்துக் கூறப்பெற்ற அவதாரக் கொள்கை பொது மக்களிடையே பரவியதாகும். அதனால் வழிபாடு பிரதானமான நிலையை அடைந்தது. இப்போதுதான் வேதமதம் மாறி இந்துமதமாயிற்று.

கொள்கைகள் என்று கருதப் பெறுவன அனைத்தும் உருவாய் விட்டன. அவையாவன: 1. பிரமம் என்ற பரம்பொருள். 2. வேதமே பிரமாணம், 3. கருமம், மறு பிறப்பு, 4. வருணாசிரம தருமம், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள், 5. கரும, பக்தி, ஞானமார்க்கங்கள், 6. திரிமூர்த்தியும் தாரங்களும், 7. இஷ்ட தேவதை அதிகாரம் என்பன, 8. விக்கிரக ஆராதனைக்குரிய விதிகள், 9. வைணவ சைவ, சாகீத சமயக் கோட்பாடுகளும் வழிபாடுகளும், 10. புண்ணியத்தல யாத்திரையில் நம்பிக்கை.

புராண தந்திர காலம்: இந்து தருமத்தைப் பொது மக்களிடையே இதிகாசங்கள் பரவச் செய்ததைவிட அதிகமாகப் புராணங்கள் பரவச் செய்தன. இந்து அரசர்கள் ஆண்ட பொற்காலம் என்று கூறப்பெறும் குப்த மன்னர்கள் காலத்திலேயே புராணங்கள் தோன்றின. புராணங்களும், தந்திரங்களும், தரிசனங்களும் இந்து மதம் கி. பி. 300 முதல் 700வரையுள்ள காலத்தில் அடைந்த அபிவிருத்தியைக் குறிப்பிடுகின்றன. தெய்வ சக்தியை அன்னையாகப் போற்றும் சாக்த மதம் அபிவிருத்தி அடைந்து, தந்திரங்கள் என்னும் மதநூல்களைத் தோற்றுவித்ததும் இந்தக் காலத்தில்தான்.

ஆனால் புராணங்களையும் தந்திரங்களையும்விட மீமாம்சை, வேதாந்தம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய ஆறு தரிசனங்களைத் தோற்றுவித்த ஆன்ம விசாரணைச் சூத்திரங்களே மத விசாரணைக்கு மிக முக்கியமானவை. வேதத்தில் காணப்பெறும் கரும காண்டத்தை மீமாம்சையும், ஞான காண்டத்தை வேதாந்தமும் விளக்கிக் கூறுகின்றன. இந்த இரண்டும் சேர்ந்ததே இந்து மதத்தின் வைதிக தத்துவ சாஸ்திரமாகும். இவைகளில்தான், 1. பிராமணங்களின் ஏற்றத் தாழ்வு, 2. வேதத்தின் உண்மை, 3. கருமத்தின் அபூர்வ பலன், 4. ஜீவாத்மா பரமாத்மா தொடர்பு ஆகிய கொள்கைகள் உருவாயின. இந்தக் காலத்தில் தோன்றிய சூத்திரங்களுள் வேதாந்த சூத்திரங்களே கற்றோரால் போற்றப்பட்டுப் பிரஸ்தானம் என்னும் உயர்நிலைமை அடைந்துள்ளன. அதனால் உபநிட்தங்கள், பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள் என்னும் பிரஸ்தானத் திரயம் ஆகிய இந்து மதக் கோட்பாடு இந்தக் காலத்தில்தான் உண்டாயிற்று என்று கூறலாம்.

அடியார்கள், ஆசாரியர்கள் காலம் : கி.பி. 700 முதல் 1200 வரையுள்ள காலத்தில் பௌத்தமும் ஜைனமும் வீழ்ச்சி அடைந்து, பழைய வைதிக மதம் புத்துயிர் பெற்றது. அதன்பின் ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கராசாரியர் தோன்றி அத்வைதம் என்னும் கொள்கையைப் பரப்பவும், நான்கு மடங்களைச் சமய வளர்ச்சி நிலையங்களாக நிறுவவும் செய்தார்.

தென்னாட்டில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி மார்க்கத்தைப் போதித்து, பௌத்தம், ஜைனம் இரண்டையும் பின்னிடச் செய்தனர். பொதுமக்களுடைய சமய வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இந்த அன்பு நெறியே சங்கரருடைய தத்துவ ஞானத்தைவிட மிக முக்கியமானதாகும்.

ஆழ்வார்கள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களுள் தலை சிறந்தவர் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும். அழ்வார்கள் அருளிய காலாயிரப் பிரபந்தத்திலுள்ள பாடல்கள் உலக இலக்கியத்திலேயே பக்திச் சுவை நிறைந்த பாடல்களுள் சிலவாகும். அவை செய்யும் உபதேசத்தின் மிக முக்கியமான கூறு சாதி, பதவி, பண்பாடு என்னும் வேறுபாடு யாதுமின்றிக் கடவுள் எல்லோர்க்கும் எளியன் என்பதும், எல்லோரும் பக்தியினாலும் பிரபத்தியினாலும் முத்தி அடையலாம் என்பதுமாகும்.

ஆழ்வார்கள் காலத்துக்குப்பின் ஆசாரியர்கள் காலம். ஆழ்வார்கள் அனுபவ பக்தர்களும் கவிஞர்களுமாவர். ஆசாரியர்களோ, கல்விமான்களும் தத்துவஞானிகளுமாவர். வைணவ ஆசாரியர்களுள் தலைசிறந்தவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசிட்டாத்துவைத சித்தாந்தத்தை வகுத்த இராமானுசர்.

வைணவ மதத்திற்குப் பன்னிரண்டு ஆழ்வார்கள் எப்படியோ, அப்படியே சைவ மதத்திற்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள். வைணவ ஆசாரியர்கள் விசிட்டாத்துவைதத்தை வகுத்தது போலச் சைவ ஆசாரியர்கள் சைவ சித்தாந்தத்தை வகுத்தார்கள். அவர்களுள் தலையாயவர் மெய்கண்ட தேவர் ஆவர். நாயன்மார்களுடைய தோத்திரப் பாக்கள் எல்லாம் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பதினொரு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன. சிவபெருமானை ஆண்டவனாகவும், தந்தையாகவும், காதலனாகவும் பாவித்து அன்பு செய்யும் தோத்திரங்களாக உள்ள இப்பாசுரங்கள் உலகத்துப் பக்தி இலக்கியங்களுள் மிகச் சிறந்தனவாக விளங்குகின்றன.

அன்பு நெறி : அடுத்த காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடையே உள்ளது. இக்காலத்தில்தான் அன்பு நெறிக்குத் தத்துவ அடிநிலையாகத் தோன்றியவை மாத்துவருடைய துவைதமும் மெய்கண்டாருடைய சைவசித்தாந்தமும் ஆகும். இராமானந்தர், கபீர், நானக், மீராபாய், வல்லபர், சைதன்யர், துளசிதாசர், துகாராம் ஆகியோரும் இக்காலத்து எண்ணிறந்த பக்திப் பாடல்கள் இயற்றினர்.

நாட்டில் பல்வேறு பக்தி இயக்கங்கள் தோன்றிய போதிலும், அவற்றினிடைக் கீழ்க்கண்ட பொதுவான கூறுகள் காணப்பெற்றன: (1) அன்பும் அருளும் நிறைந்த கடவுளுண்மையில் நம்பிக்கை. (2) ஆன்மாக்கள் தனித்தனி என்பதில் நம்பிக்கை. (3) வீடு அடைவதற்குக் கரும ஞானங்களைவிடப் பக்தியே சிறந்த சாதனம் என்னும் எண்ணம். (4) குருபக்தியும் மந்திர வாயிலான தீட்சையும். (5) சாதி வேற்றுமை பாராட்டாமை. (6) சமய உணர்ச்சியை வெளியிட மக்கள் பொதுவாகப் பேசும் தமிழ் முதலிய மொழிகளைப் பயன்படுத்தல். (7) இறைவன் நாமத்தைச் செபித்தலால் நன்மை உண்டென்னும் நம்பிக்கை.

தற்கால மத அபிவிருத்திகள்: இந்தப் பக்தி இயக்கங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவரை வளர்ச்சி குன்றிப்போய்விட்டன. அதன்பின் ஆங்கிலக் கல்வியும்,மேனாட்டு விஞ்ஞான நாகரிகமும், பிரம சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம் போன்ற பல புகழ்பெற்ற மத இயக்கங்களைத் தோற்றுவித்தன. பல இந்து மத போதகர்கள் தோன்றி, இந்து மதத்தைத் தூய்மை செய்து, அதன் உண்மைகளைத் தம் அனுபவ வாயிலாக உறுதி செய்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பரந்த உலகத்தார்க்கும் அதன் சாரத்தையும் பெருமையையும் எடுத்து ஓதி வந்தார்கள். டீ. எஸ். ச.