கலைக்களஞ்சியம்/இந்து மகாசபை

விக்கிமூலம் இலிருந்து

இந்து மகாசபை : இந்தியாவில் 1926-ல் இந்து - முஸ்லிம் சச்சரவு மும்முரமாகத் தலை தூக்கியது. நாட்டில் பல கலவரங்கள் தோன்றின. இவ்வமயத்தில் முஸ்லிம் லீக் வலுப்பெற்றது. சில காலமாகவே இந்துத் தலைவர்கள் தம் மதப் பாதுகாப்புக்காக ஒரு ஸ்தாபனம் அமைக்கவேண்டுமென்று விரும்பினர். மேற்கூறிய சூழ்நிலையில் 1928-ல் மதன்மோகன் மாளவியா போன்ற பேரறிஞர்களின் ஆதரவில் இவ் விருப்பம் கை கூடியது. இந்துக்களின் தருமத்தையும் பண்பாட்டையும் போற்றுவதற்கே இந்த ஸ்தாபனம் ஆதியில் உருவாக்கப்பட்டது.

ஆனால் 1930-ல் இந்து மகாசபையினர் அரசியல் துறையில் ஈடுபட்டு முஸ்லிம்களை எதிர்க்கத் தொடங்கினர். காங்கிரசு மத விஷயத்தில் கடைப்பிடித்த நடு நிலைமையைத் தீவிரமாகக் கண்டித்தனர். 1937 முதல் காங்கிரசு அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்ததும், மகாசபையில் அங்கத்தினர்கள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கன. ஆயினும் 1937-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகாசபையினர் படுதோல்வி அடைந்தனர்.

1938-ல் மகாசபை புத்துயிர் பெற்றதெனலாம். அவ்வாண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர். தீவிரக் கொள்கையுடைய இவர் இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இவரது நோக்கம் இந்துக்களின் வன்மையைப் பெருக்கி இந்து ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே. இந்துக்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கவேண்டுமென்று இவர் வற்புறுத்தினார்.

1938 முதல் காங்கிரசைப்போல மகாசபையும் ஆண்டுதோறும் தலைவர் தேர்தல், பொதுக்கூட்டம் நடத்துதல், செயற்குழு மாகாணக் குழுக்கள் அமைத்தல் முதலியவற்றைக் கையாண்டு வருகின்றது. 1939-ல் காங்கிரசு மாகாண அரசாங்கங்களிலிருந்து விலகியது தவறென சாவர்க்கர் கருதினார். பிறகு, காந்தியடிகள் லீக் தலைவர்களோடு ஒப்பந்தத்திற்காகப் பாடுபட்டதையும் கண்டித்தார். ஐந்தாண்டுகளாக மகாசபையின் தலைவராயிருந்த சாவர்க்கர் 1943-ல் பதவியிலிருந்து விலகவே, சியாம பிரசாத் முக்கர்ஜி தலைவரானார். இவரும் தீவிரவாதி; பாகிஸ்தான் கொள்கையை எதிர்த்தார்.

பாகிஸ்தான் இயக்கம் வலுவடையவே மகாசபையும் எதிர்ப்பை வலுப்படுத்தியது. காங்கிரசு முஸ்லிம்களுக்கு அளவற்ற சலுகை காட்டுகின்றதென்று மகா சபை 1947க்குப் பின்னரும் புகார் செய்தது. இந்திய அரசியல் அமைப்பில் மத விஷயத்தில் நடு நிலைமையை வற்புறுத்தி யிருப்பது பொருத்தமில்லாதது என்பது இக் கட்சியின் கருத்து. கே. க.