காற்றில் வந்த கவிதை/குண்டு வயிறன்

விக்கிமூலம் இலிருந்து



குண்டு வயிறன்


சின்னக் குழந்தைக்குப் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். பாட்டைக் கேட்பதற்கு மட்டுமல்ல; எளிமையான பாட்டாக இருந்தால் தானே பாடுவதற்கும் குழந்தை விரும்புகிறது.

குழந்தைகளுக்காகத் தனிப்பட்ட பாடல்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. சந்தமும் ஓசையும் அவற்றில் முக்கியம்: குழந்தைக்குப் புரியும்படியான எளிய சொற்களிலும் மழலைப் பேச்சிலும் அவை இருக்க வேண்டும். சந்திரன் என்று சொல்லுவதற்குப் பதிலாக சந்தமாமா என்றால் குழந்தைக்கு நன்கு விளங்கும்.


ஆங்கிலத்திலே குழந்தைகளுக்காக உள்ள பாடல்களுக்குப் பொருளற்ற சந்தப் பாடல்கள் என்ற பெயர் உண்டு. ஏனெனில் அவற்றிலே பல பாடல்களில் சந்த நயத்தைத் தவிரப் பொருள் இருக்காது. தமிழிலே உள்ள நாடோடி வகையைச் சேர்ந்த குழந்தைப் பாடல்களில் பொருள் ஆழமற்ற பாடல்களையும் பொருள் நிறைந்த பாடல்களையும் காணலாம்.

குழந்தையைப் பார்த்துச் சாய்ந்தாடும்படி கூறுவதாக ஒரு பாட்டு வருகிறது.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
கொஞ்சுங் கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு

இதைப் பாடிக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஆடுவதில் குழந்தைக்கு அலாதியான ஓர் இன்பம் ஏற்படுகிறது.


நிலாவைப் பார்த்துக் குழந்தை கூவுகிறது; அதைத் தன்னிடம் வரும்படி கைகாட்டி அழைக்கிறது.

நிலா நிலா வா வா
நில்லாமல் ஓடிவா
மலை மேலே ஏறிவா
மல்லிகைப் பூக் கொண்டுவா


நிலாவின் வெண்கற்றைக் கதிர்கள் மல்லிகைப் பூக்களைப் போல இருக்கின்றன. முல்லைககதிர் என்றுகூட அவற்றை வருணிப்பதுண்டு.

இன்னும் சில குழந்தைப் பாடல்கள் கடவுள் வணக்கமாகவும் பக்தியிலே உள்ளத்தைச் செலுத்த உதவுவனவாகவும் இருக்கின்றன. சின்னக் குழந்தைக்கு அபிநயத்தோடு பிள்ளையார் வணக்கம் சொல்லிக் கொடுப்பார்கள்.

குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
விநாய கனைத் தொழு.

மற்றொரு பாடல் கடவுளுடைய அருளிலே உள்ள நாட்டத்தை விவரிக்கிறது.

பொழு தெப்போ விடியும்
பூ வெப்போ மலரும்
சிவனெப்போ வருவார்
அரு ளெப்போ தருவார்.