உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/குன்றுடையான் கதை

விக்கிமூலம் இலிருந்து
குன்றுடையான் கதை

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.குன்றுடையான் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? கொங்கு நாட்டுக் கிராமங்களுக்குச் சென்றால் இந்தக் கதையைக் கேட்கலாம். இது ஒரு நீண்ட கதை. இரண்டுபேர் எதிர் எதிராக அமர்ந்து உடுக்கையடித்துக் கொண்டு குன்றுடையான் கதையைப் பாட்டாகவே பாடுவார்கள். இடையிடையே வசனத்தில் விளக்கமும் வரும். ஆனால், கதை பெரும்பாலும் பாட்டாகவே நீளும். இதை அண்ணன்மார் கதை என்று சொல்லுவார்கள். பெரியண்ணன், சின்னண்ணன் என்ற இரண்டு சகோதரர்களின் வீர வரலாற்றையும், அவர்கள் செய்த போர்களைப் பற்றியும் இந்தக் கதையிலே கேட்கலாம். குன்றுடையான் இவர்களின் தந்தை. இரவு நேரங்களிலே கதை நடக்கும். ஒரு நாள் இரண்டு நாட்களில் முடிந்துவிடாது. மாதக் கணக்கிலே இது தொடரும். பாட்டுப் பாடுபவர்களுக்குத் தானியமாகவும் பணமாகவும் நல்ல வரும்படி கிடைக்கும். கொங்கு நாட்டு வேளாளர்கள் இக்கதையைத் தங்கள் இனத்தின் வரலாறாகவே கருதுகிறார்கள். கொங்கு நாட்டிற்கு  வந்து அங்கே அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் ஆதித்தம் பெற்ற விவரத்தை இந்தக் கதை நெடும் பாட்டுத் தெரிவிக்கிறது.

அண்ணன்மார் இருவரும் இன்று தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள். அவர்களிடத்திலே கொங்கு நாட்டு வேளாளர்களுக்கு மிகுந்த பக்தியுண்டென்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆண் குழந்தைகளுக்குப் பெரியசாமி, சின்னசாமி என்று பெயர் வைப்பது இவர்களிடையே பெரு வழக்கு. இந்தப் பெயர்கள் வீரர்களான அந்த இரு சகோதரர்களை நினைவூட்டுவனவாகும்.

அவர்களிலே பெரியசாமி பொறுமை வாய்ந்தவர்; நிதானமாக எதையும் ஆலோசித்துச் செய்பவர். சின்னசாமி அப்படியல்ல. மிகுந்த கோபக்காரர். சண்டையென்றால் அவருக்கு மிகுந்த விருப்பம். அவருடைய கோபத்தையும் வீரப் போரையும் வருணிப்பதென்றால் குன்றுடையான் கதையைப் பாட்டாகப் பாடுபவர்களுக்கு ஒரு தனி உற்சாகம். அவர்களுடைய பாட்டிலும், தொனியிலும், நடிப்பிலும் அவருடைய கோபத்தையும் வீரப் போரையும் நாம் உணரலாம்.

சின்னசாமிக்கு ஒரு சமயத்திலே வந்த கோபத்தை விளக்கும் பாடற் பகுதியை மட்டும் இங்கே பார்ப்போம்.

கோபம் பிறந்திட்டது-சின்னருக்குக்
கொள்ளி கொண்டு வீசுதிப்போ
வெள்ளரளிக் கண்கள் ரண்டும்-சின்னருக்குச்
செவ்வரளி பூக்குது பார்
நீல மலர்க் கண்கள் ரண்டும்-சின்னருக்கு
நெருப்புத் தணல் ஆகுதிப்போ
எட்டுக் கட்டு உருக்கி வார்த்த-சின்னருந்தான்
எம வாளைக் கையெடுத்தார்

கத்தி சுழட்டுறது-சின்னர் வேகம்
கார் மின்னல் மின்னுது பார்
ஆனையின் கூட்டத்திலே-ஒரு நல்ல
ஆளி வந்து பாய்ந்தது போல்
ஆடுகளின் கூட்டத்திலே-ஒரு நல்ல
வேங்கை வந்து பாய்ந்ததுபோல்
முன் வீச்சுக் காயிரமாம்-அங்கே அவர்
பின் வீச்சுக் காயிரமாம்
வெள்ளரிக்காய் வெட்டுவதுபோல்-சின்னருந்தான்
வீசி வீசித் தள்ளுராரு


சின்னசாமி கத்தி வீசினால் கார் மின்னல் மின்னுவதைப் போலிருக்குமாம். அவர் போர்க்களத்திலே புகுந்தால் ஆடுகளின் கூட்டத்திலே வேங்கைப்புலி பாய்ந்தது போலிருக்குமாம். வெள்ளரிக்காயை வெட்டுவது எவ்வளவு எளிது! அவ்வளவு எளிதாக அவர் பகைவர்களை வெட்டி வீழ்த்துவாராம்.

குன்றுடையான் கதை இன்றும் கொங்குநாட்டிலே மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. நாடோடிப் பாடல் வகையிலே இது மிக நீளமானது. இதன் மூலம் வரலாற்று உண்மைகளையும் காணலாம்.