உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/ஏலேலோ ஐலசா

விக்கிமூலம் இலிருந்து

ஏலேலோ ஐலசா

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.யலிலே பெண்கள் அணியணியாகச் சென்று நாற்று நடுகிறார்கள். அவர்கள் பாதங்கள் சேற்றிலே மறைந்திருக்கின்றன. கையிலே நெற் பயிரின் இள நாற்றுகள் கற்றையாக இருக்கின்றன. இடக்கையில் நாற்றுக் கற்றையைப் பிடித்துக்கொண்டு வலக்கையால் ஒன்றிரண்டு நாற்றுக்களைப் பிரித்தெடுத்துப் பண்படுத்திச் சேறாக்கிய வயலிலே நடுகிறார்கள்.

வெய்யில் எரிக்கிறதென்றாலும் நடவு வேலையை விட முடியுமா? அந்தப் பெண்களின் உழைப்பே உலகத்திற்குச் சோறு வழங்க உதவுகிறது. உழுது பயிரிடுவோர் தமது கடமையை என்றும் செய்யவேண்டும். அப்பொழுதுதான் உலகம் பசியறியாமல் வாழும்.

உழைப்பால் ஏற்படும் சலிப்பைப் போக்குவதற்கு நாற்று நடும் பெண்கள் பாடுகிறார்கள். ஏலேலோ ஐலசாப் பாட்டு. எந்தப் பாடலானலும் சரி. அது சலிப்பைப் போக்குகிறதல்லவா? ஒருத்தி முதலில் பாட்டைத் தொடங்குகிறாள். அவள் முடிக்கும்போது ஐலசா ஐலசா என்று மற்றவர்கள் கூவுகிறார்கள். வேலையிலே புதிய உற்சாகம் பிறக்கிறது. பாட்டுத் தந்த உற்சாகம் அது:

சாலையிலே-ஏலேலோ
தகரக்கள்ளி-ஐலசா
சாஞ்ச தெல்லாம்-ஏலேலோ
திருகு கள்ளி-ஐலசா
திருகு கள்ளி-ஏலேலோ
பூவெடுக்க-ஐலசா
திருடு ரானே-ஏலேலோ
சின்னப் பையன்-ஐலசா
ஆறு வண்டி-ஏலேலோ
நூறு சக்கரம்-ஐலசா
நம்ம தச்சன்-ஏலேலோ
செய்த வண்டி-ஐலசா
மாட்டு வண்டி-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மாய மாக-ஏலேலோ
ஓட்டு ரானே-ஐலசா
மானத் திலே-ஏலேலோ
சாலை போட்டு-ஐலசா
மாதுளம் பூ-ஏலேலோ
பாவி ருக்கு-ஐலசா
அங்கிருந்து-ஏலேலோ
பேசுரானே-ஐலசா
ஆகாயத்தில்-ஏலேலோ
பேசுரானே-ஐலசா

ஏலேலோ ஐலசாப் பாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றின் இசை எளிமையானதாக இருந்தாலும்  உள்ளத்தைக் கவரக் கூடியது. அந்த இசையில் மக்கள் உடற் சிரமத்தையும் அலுப்பையும் மறக்கிறார்கள்.

இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

மண்ணை நம்பி-ஏலேலோ
மர மிருக்க-ஐலசா
மரத்தை நம்பி-ஏலேலோ
கிளையிருக்க-ஐலசா
கிளையை நம்பி-ஏலேலோ
இலையிருக்க-ஐலசா
இலையை நம்பி-ஏலேலோ
பூவிருக்க-ஐலசா
பூவை நம்பி-ஏலேலோ
பிஞ்சிருக்க-ஐலசா
பிஞ்சை நம்பி-ஏலேலோ
காயிருக்க-ஐலசா
காயை நம்பி-ஏலேலோ
பழமிருக்க-ஐலசா
பழத்தை நம்பி-ஏலேலோ
நீ யிருக்க-ஐலசா
உன்னை நம்பி-ஏலேலோ
நானிருக்கேன்-ஐலசா