காற்றில் வந்த கவிதை/வேகாத வெய்யில்

விக்கிமூலம் இலிருந்து

வேகாத வெய்யில்

வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வகையான தொழில்களைச் செய்யவேண்டி இருக்கிறது. கூலிவேலை செய்பவர்கள் பல பேர். வேறொருவரிடத்திலே வேலை செய்வதென்றால் அவருடைய விருப்பத்திற்கேற்றவாறு நடக்க வேண்டும். எல்லோராலும் அப்படி நடக்க முடிகிறதா?

அப்படிப்பட்ட வேலையை வெறுப்பவர்கள் உண்டு. பிறருக்கு அடங்கி வேலை செய்வதில் சிரமங்கள் பல இருக்கின்றன. இளகிய உள்ளம் படைத்தவர்கள் அவ்வளவு கண்டிப்பாக வேலை வாங்கமாட்டார்கள். கூலிக்காரர்களை மனிதரென்றே நினைக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து கூலி வேலையை விட்டொழித்தவர்களும் உண்டு.

கூடை முறம் கட்டுகிறவர்கள் பிறருக்குப் பணிந்து வேலை செய்ய வேண்டியதில்லை. சிரமப்பட்டுப் பல கூடைகள் முடைந்தால் ஊதியம் அதிகமாகக் கிடைக்கும். இல்லா விட்டால் ஊதியம் குறையும். பிறருடைய கண்டனம் இதிலே இல்லை. ஆனால், எல்லோரும் கூடை முறங் கட்ட முடியுமா? ஏதோ ஒரு சிலர்தான் இந்தத் தொழிலைச் செய்யலாம்.

மற்றவர்கள் வேறு வேலை தேடவேண்டும். மலைச் சாரலிலே உள்ள காட்டிற்குச் சென்று விறகு கொண்டு வந்து விற்றுச் சிலபேர் பிழைக்கிறார்கள். சுதந்திரமான வேலைதான் இது. ஆனால், இதிலும் எத்தனையோ சிரமங்கள் உண்டு.

விறகு வெட்டிக் கற்றை கற்றையாகக் கட்டித் தலையிலே சுமந்து வந்து பக்கத்திலே உள்ள ஊர்களிலோ பட்டணங்களிலோ விற்கவேண்டும். வெய்யிலென்று பார்க்க முடியாது: மழையென்று பார்க்க முடியாது. கல்லிலும் முள்ளிலும் நடக்க வேண்டிவரும். அதற்கெல்லாம் துணிந்துதான் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டும்.

விறகு வெட்டிப் பிழைக்கும் பெண்கள் பாடுவதாக ஒரு பாட்டுண்டு. அது அவர்களுடைய துன்பங்களையே எடுத்துக் கூறுகின்றது. துன்பங்களைக் கூறினாலும் அதைப் பாடுகின்ற போது கொஞ்சம் அலுப்புக் குறையத்தான் செய்கிறது. அதற்காகவே அப்பாடலைப் பாடுகிறார்கள். கேள்வியும் பதிலுமாகப் பாடல் வருகிறது.

வேகாத வெயிலுக்குள்ளே-ஏதில்லலோலேலோ
விறகெடுக்கப் போற பெண்ணே-ஏதில்லலோலேலோ
காலுனக்குப் பொசுக்கலையோ-ஏதில்லலோலேலோ
கத்தாளை முள் குத்தலையோ-ஏதில்லலோலேலோ

காலுப் பொசுக்கினாலும்-ஏதில்லலோலேலோ
கத்தாளைமுள்ளுக் குத்தினாலும்-ஏதில்லலோலேலோ
காலக் கொடுமையாலே-ஏதில்லலோலேலோ
கஞ்சிக்கே கஸ்டமாச்சே-ஏதில்லலோலேலோ



கஞ்சிக் கலயங்கொண்டு-ஏதில்லலோலேலோ
காட்டுவழி போரபெண்ணே-ஏதில்லலோலேலோ
கல்லுனக்குக் குத்தலையோ-ஏதில்லலோலேலோ
கல்லுமிதி வந்திடாதோ-ஏதில்லலோலேலோ

கல்லெனக்குக் குத்தினாலும்-ஏதில்லலோலேலோ
கல்லுமிதி வந்திட்டாலும்-ஏதில்லலோலேலோ
விதிவசம் போலாகனுமே-ஏதில்லலோலேலோ
வெளியெங்கும் நடக்கனுமே-ஏதில்லலோலேலோ

மத்தியான வேளையிலே-ஏதில்லலோலேலோ
மார்குலுங்கப் போர பெண்ணே-ஏதில்லலோலேலோ
கஞ்சி குடிக்கையிலே-ஏதில்லலோலேலோ
கடிச்சுக்க நீ என்ன செய்வாய்-ஏதில்லலோலேலோ

கஞ்சி குடிக்கிறதே-ஏதில்லலோலேலோ
கடவுள் செஞ்ச புண்ணியமே-ஏதில்லலோலேலோ
கம்மங் கஞ்சிக் கேத்தாப்பிலே-ஏதில்லலோலேலோ காணத்தொவையல் வைச்சிருக்கேன்-ஏதில்லலோ
லேலோ

கஸ்டப்பட்டுப் பாடுபட்டு-ஏதில்லலோலேலோ
களுத்தொடியச் செமக்கும் பெண்ணே-ஏதில்லலோ
லேலோ
எங்கே போய் விறகெடுத்து-ஏதில்லலோலேலோ
என்ன செய்யப் போராய் பெண்ணே-ஏதில்லலோ
லேலோ

காட்டுக்குள்ளே விறகொடிச்சு-ஏதில்லலோலேலோ
வீட்டுக்கதைச் சுமந்துவந்து-ஏதில்லலோலேலோ
காப்பணத்து விறகுவித்து-ஏதில்லலோலேலோ
கஞ்சிகண்டு குடிக்கனுமே-ஏதில்லலோலேலோ.

[கத்தாழை-கற்றாழை. கல்லுமிதி-கல் குத்தி ஏற்படும் ஒருநோய்.]