சான்றோர் தமிழ்/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. தமிழ்நடை வளர்த்த
தமிழ்த் தென்றல்

வாழ்வும் பயனும்

இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின் றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.

பிறப்பும் கல்வியும்

திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெஸ்லி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.

சமயப் பணியும் ஆசிரியப் பண்பும்

சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல் லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். ஸ்பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்தி ரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.

இல்லறமும் எழுத்துலகமும்

1912ஆம் ஆண்டு ‘கமலாம்பிகை’ என்ற அம்மையாரை மணந்து, ஆறாண்டு கால இல்லறவாழ்வை மட்டும் பெற்று. மனைவியையும், ஈன்ற ஆண்மகவு ஒன்றையும் பெண்மகவு ஒன்றையும் இழந்தார். பின் திரு.வி.க. துறவி நிலை அடைந்தார். ஆனால் சமுதாயத் தொண்டினை உயிர் மூச்சாகக் கொண்டார். 1917ஆம் ஆண்டு ‘தேசபக்தன்’ என்ற நாளிதழி னைத் தொடங்கி, நாட்டுப் பற்றினைத் தமிழ் மக்கள் நெஞ்சிலே கொழுந்திடச் செய்தார், தொழிற் சங்கம் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து தொழிலாளர் தம் வாழ்வில் விடிவை உருவாக்க, ‘வாடியா’ என்பவரின் துணையுடன் 27-4-1918 அன்று ஆசியாவிலே முதன் முதலாகத் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார். பின், நாளிதழ் ஆசிரியராகவும், தொழிலாளரின் ஆதரவு பெற்ற தலைவராகவும், சிந்தனையைக் கிளறும் எழுச்சியுரைப் பேச்சாளராகவும் திகழ்ந்து இவருடைய பணி காங்கிரசு இயக்கத்தில் பொலி வுற்றது. பேச்சிலும், எழுத்திலும் பெருமிதம் காட்டி. எண்ணற்றோரைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கச் செய்தார். மொழி வேறு, இலக்கியம் வேறு. சமயம் வேறு, அரசியல் வேறு என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் ஒரே பார்வையில் கொண்டுவந்து ஆற்றிய பணி அவர்தம் தனித்தன்மையைக் காட்டி நிற்பதாகும். பக்கிங்காம் மில் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களின் வேதனைக்கு விடிவு கண்டார். தொழிலாளர் தலைவரானார்.

வாழ்வும் தொண்டும்

அவருடைய வாழ்வும் தொண்டும் ஒரு துறையினைச் சார்ந்ததாக இல்லை. பல்வேறு துறைகளில் தனிப்புகழ் பெற்று விளங்கிய தமிழ் முனிவர் அவர். ஆம். அவர் தொடாத துறை ஒன்றுமில்லை: தொட்ட துறைகயை அழகு படுத்தாமல் விட்டதில்லை” எனம் பாராட்டப் பெறும் அளவிற்கு அவர் அரசியல், சமயம், இலக்கியம், பொருளா தாரம், மகளிர் முன்னேற்றம், தொழிலாளர் நலம், இளைஞர் திறம், சீர்திருத்தம், நாட்டுயர்வு முதலான கோணங்களில் ஆரவாரமின்றி அமைதியாகத் தொண்டாற்றினார். மொழிப் பற்றும், சமயப் பற்றும், நாட்டுப் பற்றும் நிறைந்த அவர் நாடு விடுதலை பெற, மொழி நலம் சிறக்க, சமயப்பற்று மிளிரத் தகைசால் தொண்டாற்றினார். அவர்தம் தனித் தொண்டால் மகளிர் முன்னேற்றமடைந்தனர். இளைஞர் ஏற்றம் பெற்றனர்.

பேச்சும் எழுத்தும்

சிலருக்குப் பேச்சு கடல் மடைதிறந்தாற்போல் வரும். எழுத்து என்றால் ஒரு வரியும் ஓடாது. சிலர் எழுதி எழுதி நூல்களைக் குவிப்பார்கள். ஆனால் மேடையேறிச் சில மணித் துளிகளேனும் பேசுவதென்றால் மெய்ந்நடுக்கம் ஏற்பட்டு நாத்தழுதழுத்துச் சொற்களே வாயினின்றும் வெளிவராமல் நின்று விடுவார்கள். சிலருக்குப் பேச்சு வரும்; எழுத்து வரும்; ஆனால் பேசிய வண்ணம் எழுதியவாறு சொல்லும் எழுத்தும் செயலும் ஒத்த வாழ்க்கை-உள்ளும் புறமும் ஒன்றான வாழ்க்கையைக் காணல் அரிது. நாவும் நடப்பும் ஒன்றாக்கிச் செயல்வழிச் சான்றோராய்த் திகழ்ந்தவர் திரு.வி.க. ஆவார்.

திரு.வி.க, அவர்கள் நெஞ்சம் தேசியத்தில் ஊறித் திளைத்தது. அவர் காந்தியடிசுளின் கோட்பாட்டிலே கொண் டிருந்த ஆழமனஈடுபாடே. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் நூலாக விரிந்தது. பெண்களின் வாழ்வு துலக்கம் பெற்றுத் துரண்டா விளக்காய்ச் சுடர்விட வேண்டுமென்ற எழுச்சியே ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை’ எனும் நூலாக மலர்ந்தது. இன்றைய இளைஞர்கள் வீறு கொண்டோராய் மட்டுமின்றி, விடுதலைப் பணிபுரியும்

சா-8 வித்ததராய் விளங்க வேண்டும் என்ற கருத்தே ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’ எனும் நூலாகக் கனிந்தது. இலக்கியத்தை ஆய்ந்து காணும் நோக்கிற்கும், இசைவான எழில் நடைக்கும் காட்டாக நிற்பது அவர்தம் ‘நாயன்மார் வரலாறு’ ஆகும். பெரிய புராணத்துக்கும். காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் எழுதிய குறிப்புரைகள் அவர்தம் சமய அணுகு முறையைப் புலப்படுத்த வல்லனவாகும், ‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு’ என்னும் நூல் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றில் மிதந்த காலத்தின் எதிரொலி யாகும். திரு.வி.க.வின் எழுத்துப் படைப்புகளிலும். சொற் படைப்புகளிலும் முருகன் அல்லது அழகு. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி’, ‘உள்ளொளி’ என்பவை இந்த நூற்றாண்டின் நூல்களில் சிறப்பிடம் பெற்றவை என்கிறார் டாக்டர் மு.வ.

செஞ்சொல் நடைவேந்தர்

‘நடை’ என்பது எழுத்தாளரின் இயல்பையும், சித்தனைப் போக்கையும் வெளிப்படுத்தவல்லது என்பர். எளிமை, அமைதி, அடக்கம் இவற்றின் வடிவானவர் திரு.வி.க. ஆனால், அவர்தம் நடை வீறுகொண்டதாய், சிந்தனையைக் கிளறுவதாய். மிடுக்கு நிறைந்ததாய் விளங்கும் தெளிந்த நடையாகும். வாழ்வையும் இலக்கியத்தையும் ஒன்றாகக் கண்டு வாழ்ந்த திரு வி. க. வுடன் நெருங்கிப் பழகிய டாக்டர் மு.வ. அவர்கள், அவர்தம் நடையில் காணப்படும் வியத்தகு கூறுகளைத் தம் கட்டுரை யொன்றில், “எழுதும்போது இருந்த பண்பாடும் பேசும்போது வந்தது. பேசும்போது அமைந்த மிடுக்கு எழுதும்போதும் அமைந்திருந்தது” என்று குறிப்பிட்டுள்ளமை கருதத் தக்கதாகும். பேசுவதைப் போன்று எழுதியும், எழுதுவதைப் போன்று பேசியும் வந்தவர் திரு.வி.க. இரண்டிலும் வேறுபாடுகள் காண முடியாத அளவுக்குச் செஞ்சொற்கள் விரவி விழிப்பூட்டும் வியப்பு நடையைக் கையாண்டார்.

“அருமைத் தமிழ் மாணவர்களே! உங்கள் நாட்டை நோக்குங்கள். அஃது எப்படி இருக்கிறது? அருமைத் தமிழ்நாடு சின்னாபின்னமாகச் சிதறுண்டு கிடக்கிறது. காரணம் என்ன? தலையாய காரணம் என்ன? தாய் மொழியைப் பேணிக் காப்பாற்றாமையாகும். அதன் பால் பற்றுளங் கொள்ளாமை, ஒருபோது முடியணிந்து கோலேந்திக் கலையணிந்து அரியாசனம் வீற்றிருந்த நம் பேரன்னை-இப்போது எந்நிலையில் இருக்கிறாள்? அவள் முடியிழந்து கோலிழந்து கலையிழந்து நலமெல்லாம் இழந்து கிடக்கிறாள். அவள் உடற்கூறுகள் எல்லாம் ஊறுபட்டுக் கிடக்கின்றன. அவள் முகமெல்லாம் குறு மறுக்கள் எழுப்பட அவள் எழிலைக் கெடுத்துவருகின்றன. அவளிருக்கத் துச்சிலும் இல்லை. அவளைத் தூறும் புற்றும்மூடிக் கொள்ளுமோ என அஞ்சுகிறேன்.”

(இளமை விருந்து)

எளிய சொல்லாட்சிகளில் தெளிவும், தெளிவில் ஓர் அளவையியல் அணுகுமுறையும் அணுகுமுறையில் ஓர் உறுதியும் கொண்ட தன்மை மேற்காணும் நடையிலே காண முடிகிறது. எனவேதான் “இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி உரை நடையின் தந்தை”யென இவர் தனிச் சிறப்புடன் கருதப்படுகின்றார். -

கவிதைப் பணி

தொடக்கக் காலத்திலேயே உரைநடை எழுதியது போன்று செய்யுள் எழுதும் திறமும் அவர்க்கு வாய்த் இருந்தது. ஆனால் ஒய்வு ஒழிவற்ற அவர்தம் சொற்பொழிவு களும், நாள்தோறும் வாரந்தோறும் தம் ‘தேச பக்தன்’, ‘நவசக்தி’ இதழ்களுக்கு எழுதவேண்டும் என்ற கட்டாயமும், இவர்தம் செய்யுள் தொண்டிற்குத் தடை விதித்து வந்தன.

உரைநடை போலவே அவருடைய கவிதைகளும் மிகத் தெளிவாக இருக்கும். அவருடைய கவிதைகள் உள்ளத்து உணர்ச்சியை எழுப்புவன. ஆராய்ந்து எடுத்த எளிய சொற்களாலே ஆக்கப்பட்டன. கருத்தை வழுவாமலே கூறுவன.

தாம் எடுத்துக்கொண்ட கருத்துக்களைத் தெளிவுபடுத்தி உரைப்பது அவருடைய நடையின் சிறப்பு. அவருடைய கருத்துகள் இயற்கைக்கு மாறாகவோ, பகுத்தறிவுக்குப் பகையாகவோ இருக்கமாட்டா.

1931ஆம் ஆண்டில் ‘உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்’ என்றொரு சிறு செய்யுள் நூலினை இயற்றினார்.

“தமிழினைப்போல் உயர்ந்தமொழி
தரணியில்வே றெங்குமிலை
தமிழனைப்போல் மொழிக்கொலையில்
தலைசிறந்தோர் எவருளரோ.”

-உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்.

என்ற பாடலில் அவர்தம் மொழியார்வம் விளங்கக் காண லாம். அடுத்த ஆண்டில் அவர் இயற்றிய செய்யுள் நூல் ‘முருகன் அருள் வேட்டல்’ எனும் நூலாகும். ‘முருகன் அல்லது அழகு’ எனும் உரைநடை நூலினை 1925ஆம் ஆண்டில் எழுதினார் அவர். தம் மனத்திற்குப் பிடித்த இயற்கையில் இறைவனைக் கண்ட பாங்கில் எழுந்த நூலாகும் அது. 1938ஆம் ஆண்டில் ‘திருமால் அருள் வேட்டல்’ வெளியாயிற்று. தென்திருப்பேரை முதலாகத் திருமலை ஈறாகப் பல வைணவத் திருப்பதிகளில் கோயில் கொண்டுறையும் கோல நெடுமாலை வந்தித்து வழிபடும் நிலையில் இந்நூல் இயன் றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்கவதைக் காணலாம்.

“பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள்
பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம்
ஒன்றே அன்றோ கன்றே தெளியின்
ஒருவ நிற்கே மருவிய பெயர்கள்
பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி
எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி
எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி
பேரெலாம் நீயே பேரிலான் நீயே
பதியெலாம் நீயே பதியிலான் நீயே
உருவெலாம் நீயே உருவிலான் நீயே
மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே
எல்லாம் நீயே”

-திருமால் அருள்வேட்டல்.

என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.

திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.

“மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய்
மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய்
அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய்
அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய்
பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய்
பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை
பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின்
பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே”

-திருமால் அருள் வேட்டல்
1942ஆம் ஆண்டில் ‘பொதுமை வேட்டல்’ எனும் பெயரிய செய்யுள் நூலொன்றினை இயற்றித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். இந்நூலில் இயற்கை வாழ்வு, அருளின் பெருமை, நெஞ்சின் இயல்பு, சன்மார்க்க வாழ்வு முதலிய பொருள் குறித்து இவர் பாடியுள்ள பாடல்களைக் காணலாம். “திரு.வி.க. அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின், அது “பொதுமை வேட்டல்” என்னும் இந்த நூல் எனலாம்” என்பர் பெருந்தகை மு.வ. அவர்கள்.

“காலையிலே எழுந்துலவிக் கடன்க ளாற்றிக்
கதைபேசித் தொழில்புரிந்து காசு தேடி
மாலையிலே களித்துறங்கல் வாழ்க்கை யாமோ
மக்கள் நிலை அவ்வளவில் மாய்ந்தோ போகும்
மேலையுமே தொடர்ந்துசெலும் மேன்மைத் தன்றோ
விரியுலகில் விளம்பரமே விரும்பா தென்றுங்
காலடியில் தலைசாய்த்துக் கருத்தை வைத்துக்
கடன்கள்செய அருள்புரிவாய் கருணைத்தேவே!”

-பொதுமை வேட்டல்

என்று விண்ணப்பம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல் வாழும் நெறியை வகையுறப் புலப்படுத்தி நிற்பதாகும்.

1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறிஸ்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒலி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின் உயர்வே வாழ்வில் ஏற்றத்தைத் தரும்’ என்பதனை நயமுறப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம். தேவைக்கு மேல் ஈட்ட வேண்டும் என்ற சிந்தனையே எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம் என்பதனை இந்நூல் உணர்த்துகின்றது.

“தேவைக்கு மேலெண்ணாச் சிந்தை உயர்வெண்ணம்
மேவிட உந்திவிடும் மேல்”

“தேவைக்கு மேல்கினையாச் சித்தம் செகமானால்
யாவும் ஒழுங்குபடும் அன்று”

-புதுமை வேட்டல்

இந்த ஆண்டிலேயே ‘அருகன் அருகே அல்லது விடுதலை வழி’, ‘இருமையும் ஒருமையும்’ என்னும் இரு நூல்கள் வெளிவந்தன. அடுத்த ஆண்டில் அதாவது 1951ஆம் ஆண்டில் ‘சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்’, ‘முதுமை உளறல்’, ‘பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்’ எனும் மூன்று நூல்கள் வெளிவந்தன. இவ்வாறு அவர்தம் இறுதிக் காலத்தில் உரைநடை நூல்கள் குறைந்து செய்யுள் நூல்கள் மிகுந்ததற்குக் காரணத்தை அவரே பின் வரும் பாடலில் புலப்படுத்தியுள்ளார்.

“அந்த நாட்களில் சிந்தனைப் பொருள்களை
விழிகள் நோக்க எழுதுவன் கையால்;
அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப்
படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது;
பழைய வண்ணம் விழிகள் நோக்க
எழுதும் பேற்றை இழந்தவன் பாவி!
உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன்,
உளறலும் நூலாய் வெளிவரு கின்றது;
ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில்
பழம்பொருள் நூலைப் பகர்ந்தனன் உரையாய்
இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்

இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால்
இருமையும் ஒருமையும் அருகன் அருகே
பொருளும் அருளும் மார்க்கிஸ் காந்தி,
சித்தத் திருத்தல் செத்துப் பிறத்தல்
என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால்.
பழைய உரைநடை விழுமிய அகவல்
பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது;
உளறும் என் அகவலும் ஒருவித உரையே;
பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின்
கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்;
பாவின் அமைப்போ ஓவியம் ஆகி
உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்
மொழிநத பின்னும் அழிதல் அரிதாம்;
ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்”

-முதுமை உளறல்

‘முதுமை உளறல்’ என்ற நூலிற் காணப்படும் மேற்காணும் பாடல்வழி, திரு.வி.க. கண்பார்வை மங்கி, உடல் மெலிந்து, படுக்கையில் வீழ்ந்து கிடந்த போது அவருடைய சிந்தனை வேகமாகச் சிறகடித்துப் பறந்தபோது, எதுகை மோனையும் சீர் வரையறையும் உடைய செய்யுளில் தாம் எண்ணிய கருத்துகளை எடுத்தியம்புவது அப்பெரியாருக்கு எளிதாக இருந்தது. பார்வை பழுதுபட்ட பிறகு தாமே பேனாப் பிடித்து எழுத முடியாத நிலையில், எண்ணங்களை நெடுநேரம் நெஞ்சில் வைத்துத் தேக்கவும், அதை நினைவோடு காக்கவும், பின் தன்னைக் காண வந்தோரிடம் சொல்லி எழுத்துருவம் பெற வைக்கவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது செய்யுள் நடையேயாகும். மேலும் திரு.வி.க. அவர்களது புறக்கண்களைப் படலம் மறைத்துப் பார்வை பழுதுற்ற நேரத்தில் இயற்றிய செய்யுள் நூலகள் அனைத்தும் ஒப்பரிய கருத்துகளை, விழுமிய எண்ணங்களை வெளியிடுவன வாகும். கண்ணொளி மங்கிய நேரத்தில் அவர் கருத்தொளி மிகுந்திருந்தது; புறவொளி பாழ்பட்ட நேரத்தில் அகவொளி அமைதியில் பிறங்கிற்று எனலாம். இதனை அவரே,

“கண்ணொளி பட்டதும் கருத்தொளி முன்னிலும்
மேலும் விளங்கலைச் சாலத் தெளிந்தேன்;
ஒருபுலன் ஒடுங்கின் மறுபுலம் விளக்கம்
அதிகம் அடைதலின் அதிசயம் இல்லை”

-முதுமை உளறல்

என்று புலப்படுத்தியுள்ளார்.

அவர் உயிர் நீப்பதன் முன்னர் 1953ஆம் ஆண்டில் இயற்றிய நூல்-இறுதி நூல்-‘வளர்ச்சியும் வாழ்வும்’ என்பதாகும். இந்நூலில் அவர்தம் நைந்த உள்ளத்தினைக் காணலாம்.

“மக்கள் வளர்ச்சியில் சிக்கல் உறுதலென்?
பகுத்தறி வுடைய வகுப்போ காரணம்?
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் தளர்ச்சி யடைநதது;
மனிதன் என்றோ சலித்து விட்டான்;
காலங் கணித்துக் கோலல் அரிதே
எத்தனை யுகமோ? எத்தனை ஊழியோ?
இன்னும் அவன் வாழ் தொன்மை உலகம்
தெய்வ மயமாய் உய்ய வில்லை
சாந்தம் முற்றும் ஏந்த வில்லை
என்ன காரணம்? உன்னிப் பார்க்க:
மனிதன் முதன்முதல் இனிது வாழ்ந்தான்
உழைத்தும் உழுதும் பிழைத்து வந்தான்
ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
கல்வி பயிலாச் செல்வம் பெற்றான்
பொய்யும் அற்ற மெய்யில் நின்றான்
சுரண்டல் வாழ்வில் புரண்டா னில்லை,
பின்னே கெட்டான்; என்ன செய்வது,

ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
இழிவு வளரும் வழியைக் கண்டான்;
கொலையுங் களவுங் கள்ளுங் காமமும்
பொய்யும் வாழ்வில் மொய்த்துக் கொண்டன
சுரண்டல் வாழ்வு திரண்டு மதர்த்தது
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் உணர்ச்சி யற்றது.”

-வாழ்வும் வளர்ச்சியும்

இந்தப் பகுதியில் உலக மக்கள் இயற்கையைத் துறந்து, செயற்கையைப் பற்றி நின்று, அறந்துறந்து மறம் மிகுந்து வாழும் நெறியல்லா நெறியைக் கண்டிக்கிறார்.

இவ்வாறு திரு.வி.க. அவர்கள் 1931ஆம் ஆண்டு வரையில் இயற்றிய செய்யுள் நூல்களின் எண்ணிக்கை பதினான்காகும். இந் நூல்களில் அவர்தம் பொதுமையுணர்வும், இலக்கிய நெஞ்சமும் இனிது விளங்கக் காணலாம். திரு.வி.க. ஒர் உயரிய கவிஞர் என்பதனை இந்நூல்கள் தெரிவித்து நிற்கின்றன.

1953ஆம் ஆண்டு அவர் இறந்தபோது பி. ஸ்ரீ. அவர்கள், ‘பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம்தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம் என்ற கருத்துத் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய பணியின் எல்லையை நன்குணர்த்துகிறது.

இலக்கியச் செல்வராய், சமய மறுமலர்ச்சியாளராய், செந்தமிழ்ப் பேச்சாளராய், தொழிலாளர் தலைவராய், நாளிதழ் நாயகராய், அரசியல் தூயவராய் விளங்கித் தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் சீரிய இடத்தைப் பெற்றுச் செம்மாந்து நிற்பவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களே ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/7&oldid=1017797" இருந்து மீள்விக்கப்பட்டது