உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் வரலாறு/சோழன் நலங்கிள்ளி

விக்கிமூலம் இலிருந்து

8. சோழன் நலங்கிள்ளி

கால விளக்கம்: கரிகாலன் காலம் கி.மு. 60 - கி.மு 10 எனக் கொண்டோம், சிலப்பதிகாரப்படி செங்குட்டுவன் காலம் கி.பி. 150-200 எனக் கொள்ளலாம்.[1] அக்காலத்துச் சோழன் நெடுமுடிக் கிள்ளி என்கிறது மணிமேகலை, அவற்குப் பிற்பட்டவனே கோச் செங்கட் சோழன் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. நெடுமுடிக் கிள்ளியுடன் கடைச் சங்க காலம் முடிவு பெற்றதென்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆதலின், தொகை நூற்களிற் கூறப்படும் சோழர் பலரும் ஏறத்தாழக் கரிகாலற்குப் பிற்பட்ட கி.மு. 10 முதல் செங்குட்டுவன் காலமாகிய கி.பி. 150 வரை இருந்தனர் எனக் கொண்டு, அச்சோழர் வரலாறுகளை இப்பகுதியிற் காண்போம்.

முன்னுரை:

சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன் என்பதே இவனைப்பற்றிய பாடல்களால் உய்த்துணரப் படுகிறது. இவன் பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். இவனைப் பற்றிப் 10 பாடல்கள்[2] புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்தூர் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது.

போர்ச் செயல்கள் : நலங்கிள்ளி பட்டம் பெற்றவுடன் தாயத்தார்க்குள் பகைமை மூண்டது. நெடுங்கிள்ளி என்பவன் ஆவூரில் இருந்த சோழ அரச மரபினன். அவன், நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தில் முடி கவித்துக் கொண்டு சோழப் பேரரசன் ஆனதும், உறையூர்க்கு ஒடி, அதனைத் தனதாக்கிக் கொண்டான்; கொண்டு, சூள் உரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.[3]

சூள் உரை: மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்’ என்று தாழ்ந்து இரப்பாராயின், அவர்க்குச் சிறப்புடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய எனது அரசாட்சியைக் கொடுத்து விடுவேன்; இனிய உயிரை வேண்டுமாயினும் கொடுப்பேன். என் அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் வலிமையை உணராது என்னை இகழ்ந்து அறிவில்லாதவன், யாவர்க்கும் விளங்கத் துங்குகின்ற புலியை இடறின குருடன் போலப் பிழைத்துப் போதல் அரிதாகும். மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின் கண் அகப்பட்ட வலிய மூங்கிலது நீண்ட முனையை ஒப்ப மேற்சென்று பொருவேன்; யான் அங்ஙனம் செய்யேனாயின், பொதுமகளிர் போகத்தில் எனது மாலை துவள்வதாக”

ஆவூர் முற்றுகை : இங்கனம் வஞ்சினம் உரைத்து நெடுங்கிள்ளியது ஆவூர்க் கோட்டையை முற்றுகை இட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே அமைதியாக இருந்து வந்தான்; வெளியே நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். கோட்டைக்கு வெளியே இருந்த நாட்டுப் புறங்கள் அல்லலுற்றன; போரால் துன்புற்றன. இக்கொடுமையையும், தாயத்தார் அறியாமையாற் செய்யும் கேட்டினையும் கண்டு இரங்கிய கோவூர் கிழார் என்னும் புலவர் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைப் பார்த்து, அறிவுரை பகர்ந்தார்.

“நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன; உருமேறு போல முழங்குகின்றன. உள் பகுதியில் உள்ள குழந்தைகள் பாலின்றி அழுகின்றனர்; மகளிர் பூவற்றவறிய தலையை முடிக்கின்றனர். (மகளிர் பலர் வீரர் இறத்தலால் கைம்பெண்கள் ஆயினர்; இல்லற வாழ்க்கையர் நின்னை நோக்கி ‘ஒலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ இவற்றைக் கவனியாமலும் இவற்றிற்கு நாணாமலும் இனிதாக இங்கு (கோட்டைக்குள்) இருத்தல் இனியதன்று. வலிய குதிரையையுடைய தோன்றலே! நீ அறத்தை உடையை ஆயின், ‘இஃது உனதன்றோ!’ என்று சொல்லிக் கதவைத் திறந்துவிடு; மறத்தை உடையை ஆயின், போரால் திறத்தல் செய்வாயாக. இவ்விரண்டும் இன்றிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருத்தல் நாணமுடைய செயலாகும்”[4] என்று உறைக்க உரைத்தார்.

பின்னர் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை விட்டு ஓடி உறையூர்க் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான்.

உறையூர் முற்றுகை: “நெடுங்கிள்ளியின் பிடிவாதத்தையும் நலங்கிள்ளி அவனை விடாது பின்தொடர்ந்து சென்று உறையூரை முற்றியிருந்ததையும் கண்டு மனம் வருந்திய கோவூர் கிழார் இருவரையும் உளம் உருகப் பார்த்து,

“நெடுங்கிள்ளி அண்ணலே, உன்னோடு பொருபவன் பனம்பூ மாலை அணிந்த சேர அரசன் அல்லன்; வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உனது கண்ணியும் ஆத்தியால் கட்டப்பட்டது. உன்னுடன் பொருவோனது கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது. ஆதலால், நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது சோழர் குடியே அன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலின் நீங்கள் இருவரும் அங்ஙனம் போர் இடுதல் தக்க செயலன்று. இச்செயல், தும்மைப் போன்ற வேந்தர்க்கு மனக்களிப்பை உண்டாக்குமே அன்றி உமக்கு நன்மை பயவாது. ஆதலின், இதனைத் தவிர்த்தலே முறை”[5] என்று இருவர் மனத்திலும் நன்கு பதியுமாறு புகன்றார்.

இளந்தத்தன்: இந்நிலையில் நலங்கிள்ளியால் பரிசில் பெற்ற இளந்தத்தன் என்ற புலவன் உறையூர்க்குட் புகுந்து நெடுங்கிள்ளியைக் காணவந்தான். அவன் பகைவனிட மிருந்து வந்ததால், ஒற்று அறிய வந்தவன் என நெடுங்கிள்ளி தவறாக எண்ணினான்; அத்தவற்றால் அவனைக் கொல்லத் துணிந்தான். இக்கேட்டைக் கேள்வியுற்ற கோவூர் கிழார் விரைந்து சென்று, நெடுங்கிள்ளியைக் கண்டு,

“ஐயனே, பழுமரம் தேரும் பறவைபோல நெடிய வழியையும் கவனியாது வள்ளல்களை நோக்கி வரும் எளிய புலவருள் இவன் ஒருவன், தான் வல்லபடி பாடிப் பரிசில் பெற நின்பால் வந்தவன்; அரசியல் ஒற்று முறைகளை அறிந்தவன் அல்லன். தான் கற்ற கல்வியால் தலை நிமிர்ந்து நடக்கும் புலவன் இவன். இவன் வந்த நோக்கத்தை அறியாது, நீ இவனைக் கொல்ல முயலுதல் கொடுஞ் செயலாகும்.” என்றார். அரசனும் அச்செயல் தவிர்ந்தான்.

உறையூர் முற்றுகை நலங்கிள்ளிக்கே வெற்றி அளித்ததென்பது தெரிகிறது. என்னை? நலங்கிள்ளி உறையூரை ஆண்டுவந்தான், அதனைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்று புறப்பாட்டு 68 கூறலாம் என்க. மேலும், நெடுங்கிள்ளி நலங்கிள்ளியுடன் போரிட ஆற்றாது, பலவாறு முயன்று, இறுதியில் ‘காரியாறு’ என்ற இடத்தில் (போரிட்டு) இறந்தான் என்பது தெரிகிறது. அதனால் அவன் ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனப்பட்டான்.[குறிப்பு 1][6]

பாண்டியருடன் போர்: நலங்கிள்ளி தன் ஆட்சிக் காலத்தில் பாண்டியருடன் போரிட்டான் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டில் அரண் மிக்க வலிய கோட்டைகள் ஏழு இருந்தன. நலங்கிள்ளி அவற்றைக் கைப்பற்றி, அவற்றில் தன் புலிக் குறியைப் பொறித்தான்.

பெரு வீரன்: இவன் எப்பொழுதும் போர்க்களத்திலிருந்து வந்தவன்; பகைவர் அஞ்சத்திக்க போர்களிற் பெருங்களிப்புக் கொண்டவன்; போர்முனையிற்றான் பாணர் முதலியோர்க்குப் பரிசளித்தவன்;[7] இவனிடம் சிறந்த கடற்படை இருந்தது: குதிரைப் படை இருந்தது : இவன் தேர்மீது செல்லும் பழக்கம் உடையவன்.[8] இவன் காலாட்படைகள் மூவகைப்படும். துரசிப்படை, இடையணிப்படை, இறுதியணிப்படை என்பன.[9] அவை போருக்குப் போகும் பொழுது முதற் படை பனைநுங்கைத் தின்னும். இடையணிப்படை, பனம் பழத்தின் கனியை நுகரும்; இறுதியணிப்படை சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்னும், அஃதாவது, தூசிப்படை முதலிலே அனுப்பப்படும்; அதுவே செய்வினையை முடித்துவிடும். தவறின் பிறகுதான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நுங்கு பழமாகும் காலம் ஆகும். இரண்டாம் படையும் தவறுமாயின் ஈற்றணிப்படை பின்னரே அனுப்பப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காலமே பனம்பழம் பனங்கிழங்காக மாறும் காலம் என்ன அழகிய நுட்பமான கருத்து![10] இதனால் நலங்கிள்ளியின் போர்த்திறம் பற்றிய அறிவை நன்கறியலாம் அன்றோ? படைகளை முன்னரே கொண்டு குவித்து வீணாக்கும் வினரைப் போலன்றித் தேவை உண்டாயின், ஒவ்வொரு படையாக அனுப்புதல் நன்முறையே அன்றோ?

பேரரசன்: இவன் கடற்படை வைத்திருந்தான் என்பதாலும் எப்பொழுதும் போர்க்களமே இடமாகக் கொண்டவன் என்பதாலும் இவன் பேரரசன் என்பதும், பகைவரை அடக்குதலிலே கண்ணும் கருத்துமாக இருந்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன. இதனை,

“சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போலச் சேர, பாண்டியர் குடைகள் இரண்டும் நின் குடைக்குப் பின்னே தோன்றுகின்றன. நீ பாடி வீட்டின் கண்ணே இருத்தலையே விரும்புகின்றனை நகரின் கண் இருத்தலை உடம்படாய், பகைவர் கோட்டைக் கதவுகளைத் தம் கோட்டாற் குத்தும், நின் யானைகள் அடங்கி இரா. போர்’ என்றவுடன் குதுகலித்துத் துள்ளும் நின்மறவர் போர் இன்றி வாடியிரார். ஆதலின் கீழ்க்கடல் பின்னதாக மேல் கடலினது அலை நின் குதிரையின் குளம்பை அலைப்ப வலமாக முறையே நீ வருவையோ என்று வடநாட்டரசர் ஏங்குகின்றனர்.”[11]

என்று கோவூர்கிழார் பாடியுள்ளது கொண்டும் அறியலாம். கோவூர் கிழாரது கூற்றால், இவன் பேரரசன் என்பதும், வடநாட்டரசரும் அஞ்ச்த்தக்க நிலையில் இருந்தவன் என்பதும் தெளிவுறத் தெரிகின்றன அல்லவா? இச்சோழன், விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்,” என்று கோவூர் கிழார் கூறினார்.[12] எனின், நலங்கிள்ளி பேரரசன் என்பதில் ஐயமுண்டோ? ‘பகைவரை வென்ற மாறுபாட்டால் மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளி’ என்று இவனைத் தாமப்பல் கண்ணனார்[13] பாராட்டியுள்ளமையும் இவன் பேரரசன் என்பதை உணர்த்துகிறதன்றோ? ‘நலங்கிள்ளியின் படைகள் இடமகன்ற உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து, மன்னரை வலிகெடுத்த மேம்பாட்டையுடையது. ‘அவன் உலகம் காக்கும் அரசன்’ என்று ஆலத்துார் கிழார் பாராட்டியிருத்தல் காண்க.[14]

புலவன்: இப்பேரரசன் தமிழ்ப் புலமை நிரம்பியவன் என்பது இவனது பாடல் கொண்டு உணரலாம். அதன் செந்தமிழ் நடை, பொருட் செறிவு, உவமை நயம் இன்ன பிறவும் சுவைத்தற்கு உரியன. நெடுங்கிள்ளியைப் பொருமுன் சொன்ன வஞ்சினப் பாடல் அது. அதன் பொருள் முன்னரே கொடுக்கப் பெற்றது. பாடல் புறப்பாட்டில்[15] கண்டு மகிழ்க.

புரவலன்: இவன் கோவூர் கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஆலத்துார் கிழார் முதலிய புலவர் பெருமக்களைப் பாராட்டி ஊக்கிய வள்ளல்; பாணர், கூத்தர், விறலியர் முதலியோரையும் பாதுகாத்து, அவர் வாயிலாக இசைத் தமிழையும், நாடகத் தமிழையும் நலனுற வளர்த்த தமிழ்ப் பெருமகன் ஆவன். “நமது சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு விலையாகக் கொடி கட்டிய வஞ்சிமாநகரையும் தருகுவன்; ‘விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக’ என்று மாடத்தையுடைய மதுரையையும் தருவன்; ஆதலின், நாமெல்லாம் அவனைப் பாடுவோம், வாரீர் பரிசில்  மாக்களே,”[16] என்று பஞ்சிலரைப் புரவலன் பால் அழைக்கும் கோவூர்கிழார் பாடல் இவனது வள்ளன் மையை விளக்கப் போதுமன்றோ?

புலவர் அறவுரை: போரில் சிறந்த நலங்கிள்ளிக்கு முதுகண்ணன் சாத்தனார் அளித்த அறவுரை சாலச் சிறந்ததாகும். அதன் சுருக்கம் பின்வருமாறு:

“என் இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளி, உலகில் தோன்றி மறைந்த மன்னர் பலராவர். அவருள் உரையும் பாட்டும் உடையோர் சிலரே. வளர்ந்தது குறைதலும், குறைந்தது வளர்தலும், பிறந்தது இறத்தலும், இறந்தது பிறத்தலும் கல்வியால் அறியப்படாத மடவோரையும் அறியக் காட்டி அறிவை ஊட்டி வரும் புலவரை என்றும் காப்பாயாக. நீ நல்ல வளநாட்டிற்குத் தலைவன். ஆதலால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நீ பெற்று வாழ்வாயாக நினது நாளோலக்கம் நின்னைத் தேடி வரும் பாண் மக்களால் சூழ்வதாகுக, பிறகு நினது மார்பம் நின் உரிமை மகளிர் தோள் சூழ்வதாகுக: நின் அரண்மனை முற்றத்தில் முரசு அதிரத் தீயோரை ஒறுத்து. நல்லோரை அருள் செய்து வரும் முறையை இனியும் கடைப்பிடிப் பாயாக. 'நல்வினை நலம் பயக்கும் தீவினை தீமை பயக்கும்’ என்பதை மறுப்பவர் உறவை நீ நாடா தொழிவாயாக நின்னை நாடிவரும் எளியார்க்கு உதவி செய்யும் இயல்பு என்றும் நின்பால் நிலைப்பதாக, நீ பாதுகாத்த பொருள் நின் புகழிடத்ததாக”

இப்புலவர் பெருமான் பொன்மொழிகள் அவன் உள்ளத்தை உருக்கின. இவரே அன்றிக் கோவூர் கிழாரும் முற்றுகையிட்ட காலங்களில் எல்லாம் அறிவுரை கூறித் தெருட்டியுள்ளமை மேலே கூறப் பெற்றது. நற்குணங்கள் ஒருங்கே பெற்ற நலங்கிள்ளி, இப் பெருமக்கள் அறிவுரைப்படி நடந்து வந்தான் என்று நாம் எண்ணுவதில் பிழை ஒன்றும் இல்லை.

அக்காலச் செய்திகள் சில : ‘ஞாயிற்றினது வீதியும் அந்த ஞாயிற்றின் இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும் காற்று இயங்கும் திக்கும், ஒர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவரைப் போல நாளும் இத்துணை அளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையவரும் உளர்.’[17] ........ இக்கூற்றால், அக்காலத்தில் விண்ணுரல் அறிஞர் இருந்தனர் என்பதை அறியலாம். நாளும் தம் கல்வியை வளர்த்து வந்த பேரறிஞர் இருந்தனர் என்பதை உணரலாம்.

‘கூம்புடனே மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும், அளவரும் முதலாகிய தகுதி இல்லாதோர் தம் புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்னே சொரியும் கடலால் வரும் பல பண்டத்தையுடைய நாட்டை உடையாய்!’[18] ............ இதனால், நலங்கிள்ளியின் காலத்தில் நடந்து வந்த கடல் வாணிகம் இத்தன்மைத்தென்பதை ஒருவாறு அறியலாம் அன்றோ?

‘கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட, எழுதிய, அழகு பொருந்திய அல்லிப்பாவை ‘அல்லியம்’ என்னும் கூத்தை ஆடும்’[19] ..... இதனால், ஒவியக்கலை சோணாட்டில் இருந்து வந்தமை அறியலாம், கூத்து வகைகள் பல இருந்தன; அவற்றில் அல்லியம் என்பது ஒன்று என்பதும் அறிந்தின்புறலாம்.

‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும்’[20] என்பதனால், நலங்கிள்ளி அரசியல் பொறுப்பை அழுத்தமாக உணர்ந்த செங்கோல் அரசன் என்பது செவ்விதின் விளங்கும் அன்றோ?

தம்பி மாவளத்தான்: இவனைப்பற்றி விவரமாக ஒன்றும் தெரியவில்லை. இவன் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரை ஆதரித்த வள்ளல், ஒருநாள் இவன் அவரோடு வட்டாடினான். அவன் கைகரப்ப, இவன் வெகுண்டான்; வட்டை அவர்மீது வீசி எறிந்தான். உடனே அவர் வெகுண்டு,‘நீ சோழன் மரபினன் அல்லை; அம்மரபில் வந்திருப்பின் நீ இங்ஙணம் செய்யாய்’ எனக்கடிந்தனர். அதுகேட்ட மாவளத்தான் தான் சினத்திற் செய்த சிறு செயலை எண்ணி வருந்தி நாணி நின்றான். அவனது உள்ள நிலையை நன்கு உணர்ந்த புலவர், தாம் அவனை வெகுண்டு கூறியதற்கு வருந்தி, அவனைத் தேற்றி மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியை அப்புலவரே அழகாகப் பாடியுள்ளார்.[21]


  1. Vide the Author's article in ‘Tamil Polil’. 1937-38, pp.31-34.
  2. புறம் செ, 27-33, 43-45, 47, 68, 73, 75, 225 382, 400.
  3. அகம் 73.
  4. புறம், 44.
  5. புறம் 45.
  6. புறம் 33.
  7. புறம் 33.
  8. புறம் 382.
  9. புறம் 225.
  10. புறம் 225.
  11. புறம் 31.
  12. புறம் 32.
  13. புறம், 43.
  14. புறம், 225.
  15. புறம், 73
  16. புறம் 32.
  17. புறம் 30.
  18. புறம்
  19. புறம் 33.
  20. புறம் 400.
  21. புறம், 43.
  1. இவனைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இளங்கிள்ளியோடு பொருதவன் எனச் சிலர் தவறாகக் கருதி எழுதியுள்ளனர். இதற்குக் காரியாற்றுப் போரைப் பற்றிய மணிமேகலை அடிகளிற் சான்றில்லை என்பது அறியற்பாலது.