உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு/பாடல் 21-30

விக்கிமூலம் இலிருந்து


பாடல்: 21 (புலவரை)

[தொகு]
(புகழ்சால் தோன்றல்!)

பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.

[தொகு]
பாடப்பட்டோன்
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை
வாகை.
துறை
அரசவாகை.

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!

நிலவரை இறந்த குண்டுகண் அகழி,

வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்

மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,

கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,

அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,

கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,

வேங்கை மார்பின் இரங்க வைகலும்

ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர்

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!

இகழுநர் இசையடு மாயப்,

புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!

பாடல்: 22

[தொகு]
(ஈகையும் நாவும்!)

பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை
வாகை.
துறை
அரசவாகை.

தூங்கு கையான் ஓங்கு நடைய,

உறழ் மணியான் உயர் மருப்பின,

பிறை நுதலான் செறல் நோக்கின,

பா வடியால் பணை எருத்தின,

தேன் சிதைந்த வரை போல,

மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,

அயறு சோரூம் இருஞ் சென்னிய,

மைந்து மலிந்த மழ களிறு

கந்து சேர்பு நிலைஇ வழங்கப்:

பாஅல் நின்று கதிர் சோரும்

வான உறையும் மதி போலும்

மாலை வெண் குடை நீழலான்,

வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த

‘ஆய் கரும்பின் கொடிக் கூரை,

சாறு கொண்ட களம் போல,

வேறு வேறு பொலிவு தோன்றக்

குற் றானா உலக் கையால்;

கலிச் சும்மை வியல் ஆங்கண்

பொலம் தோட்டுப் பைந் தும்பை

மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,

சின மாந்தர் வெறிக் குரவை

ஓத நீரில் பெயர்பு பொங்க;

வாய் காவாது பரந்து பட்ட

வியன் பாசறைக் காப் பாள!

வேந்து தந்த பணி திறையாற்

சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,

ஓங்கு கொல்லியோர், அடு பொருந!

வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!

வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே!

நிற் பாடிய அலங்கு செந்நாப்

பிற்பிறர் இசை நுவ லாமை,

ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!

‘மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே

புத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்து

இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,

வேறுபுலத்து இறுக்கும் தானையோடு

சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!

பாடல்: 23 (வெளிறில்நோன்)

[தொகு]
(நண்ணார் நாணுவர்!)

பாடியவர்: கல்லாடனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
திணை
வாகை.
துறை
அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,

களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!

கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,

சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்

கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்

கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்

கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;

வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்

கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்

வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்,

கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,

நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,

இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்

துன்னல் போகிய துணிவினோன், என,

ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை

ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட

கால முன்ப! நின் கண்டனென் வருவல்;

அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை

பூளை நீடிய வெருவரு பறந்தலை

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளில் அத்தம் ஆகிய காடே.

பாடல்: 24 (நெல்அரியும்)

[தொகு]
(வல்லுனர் வாழ்ந்தோர்!)

பாடியவர்: மாங்குடி கிழவர்

[தொகு]
'மாங்குடி மருதனார்' எனவும் பாடம்.
பாடப்பட்டோன்
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை
பொதுவியல்.
துறை
பொருண்மொழிக் காஞ்சி.

நெல் அரியும் இருந் தொழுவர்

செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,

தென் கடல்திரை மிசைப்பா யுந்து;

திண் திமில் வன் பரதவர்

வெப் புடைய மட் டுண்டு,

தண் குரவைச் சீர்தூங் குந்து;

தூவற் கலித்த தேம்பாய் புன்னை

மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்

எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;

வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்

முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்

இரும் பனையின் குரும்பை நீரும்,

பூங் கரும்பின் தீஞ் சாறும்

ஓங்கு மணற் குலவுத் தாழைத்

தீ நீரோடு உடன் விராஅய்,

முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;

தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய

ஒம்பா ஈகை மாவேள் எவ்வி

புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்

கயலார் நாரை போர்வில் சேக்கும்,

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,

குப்பை நெல்லின், முத்தூறு தந்த

கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!

நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது

படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;

நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு

நின்று மூத்த யாக்கை யன்ன, நின்

ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த

வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,

இரவன் மாக்கள் ஈகை நுவல,

ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய

தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,

ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ‘ஆங்கது

வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,

மலர்தலை உலகத்துத் தோன்றிப்

பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.

பாடல்: 25 (மீன்திகழ்)

[தொகு]
(கூந்தலும் வேலும்!)

பாடியவர்: கல்லாடனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை
வாகை.
துறை
அரசவாகை.

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,

உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,

நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,

உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,

பிணியுறு முரசம் கொண்ட காலை,

நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்

சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!

முலைபொலி அகம் உருப்ப நூறி,

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,

அவிர் அறல் கடுக்கும் அம் மென்

குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

பாடல்: 26 (நளிகடல்)

[தொகு]
(தோற்றார் நின் பகைவர்!)

பாடியவர்: மாங்குடி கிழவர்

[தொகு]
'மாங்குடி மருதனார்' எனவும் பாடம்.
பாடப்பட்டோன்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை
வாகை.
துறை
அரச வாகை.

நளி கடல் இருங் குட்டத்து

வளி புடைத்த கலம் போலக்,

களிறு சென்று களன் அகற்றவும்,

களன் அகற்றிய வியல் ஆங்கண்

ஒளிறு இலைய எ·கு ஏந்தி,

அரைசு பட அமர் உழக்கி,

உரை செல முரசு வெளவி,

முடித் தலை அடுப் பாகப்,

புனல் குருதி உலைக் கொளீஇத்,

தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!

ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,

நான்மறை முதல்வர் சுற்ற மாக,

மன்னர் ஏவல் செய்ய, மன்னிய

வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!

நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு

மாற்றார் என்னும் பெயர் பெற்று,

ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.

பாடல்: 27 (சேற்றுவளர்)

[தொகு]
(புலவர் பாடும் புகழ்!)

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சோழன் நலங்கிள்ளி.
திணை
பொதுவியல்.
துறை
முதுமொழிக் காஞ்சி.

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,

நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,

வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:

‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்

கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,

அறியா தோரையும், அறியக் காட்டித்,

திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,

அருள வல்லை ஆகுமதி; அருளிலர்

கொடா அமை வல்லர் ஆகுக;

கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

பாடல்: 28 (சிறப்பில்)

[தொகு]
(போற்றாமையும் ஆற்றாமையும்!)

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சோழன் நலங்கிள்ளி.
திணை
பொதுவியல்.
துறை
முதுமொழிக் காஞ்சி.
(சிறப்பு
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்

எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.)

‘சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,

கூனும், குறளும், ஊமும், செவிடும்

மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு

எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்

பேதைமை அல்லது ஊதியம் இல்,’ என

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,

அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-

வட்ட வரிய செம்பொறிச் சேவல்

ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்

கானத் தோர், நின் தெவ்வர்; நீயே’

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்

புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்

பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்

ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;

அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும், பெரும! நின்செல்வம்;

ஆற்றாமை நின் போற்றா மையே.

பாடல்: 29 (அழல்புரிந்த)

[தொகு]
(நண்பின் பண்பினன் ஆகுக!)

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சோழன் நலங்கிள்ளி.
திணை
பொதுவியல்.
துறை
முதுமொழிக் காஞ்சி.
(சிறப்பு
சிறந்த அறநெறிகள். )

அழல் புரிந்த அடர் தாமரை

ஐது அடர்ந்ற நூற் பெய்து,

புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்

பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,

பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!

பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்

தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க

முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,

கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,

ஒடியா முறையின் மடிவிலை யாகி

‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை’ என்போர்க்கு இனன் ஆகி லியர்!

நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,

வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு

பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்

பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,

கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,

சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை

ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்

கோடியர் நீர்மை போல முறை முறை

ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய

நகைப் புறனாக, நின் சுற்றம்!

இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!

பாடல்: 30 (செஞ்ஞாயிற்றுச்)

[தொகு]
(எங்ஙனம் பாடுவர்?)

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சோழன் நலங்கிள்ளி.
திணை
பாடாண்.
துறை
இயன்மொழி.
(சிறப்பு
தலைவனின் இயல்பு கூறுதல்.)

செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றிவை

சென்றளந்து அறிந்தார் போல, என்றும்

இனைத்து என்போரும் உளரே அனைத்தும்

அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,

களிறுகவுள் அடுத்த எறிகல் போல

ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட

யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,

புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_21-30&oldid=1397495" இலிருந்து மீள்விக்கப்பட்டது