புறநானூறு/பாடல் 281-290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


281

நெடுந்தகை புண்ணே![தொகு]

பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ-காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!

282

புலவர் வாயுளானே![தொகு]

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணையும் துறையும் தெரிந்தில.

எ·குஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,
யாண்டுளனோ?’வென, வினவுதி ஆயின்,
. . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய,
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது, களத்துஒழி யதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,
நாநவில் புலவர் வாய் உளானே.

283

அழும்பிலன் அடங்கான்![தொகு]

பாடியவர்: அடை நெடுங் கல்வியார்
திணை: தும்பை துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்).

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்,
மன்றுள் என்பது கெட .. .. .. ¡னே பாங்கற்கு
ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க,
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்,
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்,
மென்தோள் மகளிர் நன்று புரப்ப,
.. .. .. .. .. ண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.

284

பெயர்புற நகுமே![தொகு]

பாடியவர்: ஓரம் போகியார்
திணை: தும்பை துறை: பண்பாட்டு

‘வருகதில் வல்லே ; வருகதில் வல்’ என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடிக் , காலின்,
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி, முன்னின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்,
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.

285

தலைபணிந்து இறைஞ்சியோன்![தொகு]

பாடியவர்: அரிசில் கிழார்
திணை: வாகை துறை: சால்பு முல்லை

பாசறை யீரே ! பாசறை யீரே !
துடியன் கையது வேலே ; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
பாணன் கையது தோலே ; காண்வரக்
கடுந்தெற்று மூடையின் .. .. ..
வாடிய மாலை மலைந்த சென்னியன்;
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த
மூரி வேண்டோள் .. .. .. .. ..
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக;
நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ;
அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய;
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.

286

பலர்மீது நீட்டிய மண்டை![தொகு]

பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை துறை: வேத்தியல்

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்,
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

287

காண்டிரோ வரவே![தொகு]

பாடியவர்: சாத்தந்தையார்
திணை: கரந்தை துறை: நீண்மொழி

துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்,
தண்ணடை பெறுதல் யாவது? படினே;
மாசில் மகளிர் மன்றல் நன்றும்,
உயர்நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

288

மொய்த்தன பருந்தே![தொகு]

பாடியவர்: கழாத்தலையார்
திணை: தும்பை துறை: மூதின் முல்லை

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

289

ஆயும் உழவன்![தொகு]

பாடியவர்: கழாத்தலையார்.
திணை, துறை. தெரிந்தில.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்,
பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி,
வீறுவீறு ஆயும் உழவன் போலப்,
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
மூதி லாளர் உள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை,
‘இவற்கு ஈக !’ என்னும்; அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி_பாண! பாசறைப்,
‘பூக்கோள் இன்று’ என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?

290

மறப்புகழ் நிறைந்தோன்![தொகு]

பாடியவர்: ஔவையார்
திணை: கரந்தை துறை: குடிநிலையுரைத்தல்

இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை,
எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_281-290&oldid=1397512" இருந்து மீள்விக்கப்பட்டது