உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு/பாடல் 131-140

விக்கிமூலம் இலிருந்து


131

காடும் பாடினதோ?

[தொகு]

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி .

மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

132

போழ்க என் நாவே!

[தொகு]

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி.

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல
தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.

133

காணச் செல்க நீ!

[தொகு]

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது, காண்பறி யலையே;
காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்,
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

134

இம்மையும் மறுமையும்!

[தொகு]

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் துறை: இயன் மொழி

‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

135

காணவே வந்தேன்!

[தொகு]

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில்.

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை,
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித்,
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்,
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்,
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்,
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்,
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை! யானே: யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன்! மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், படுநர்,பரிசிலர், ஆங்கவர்,
தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு,
அன்ன வாக, நின் ஊழி; நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

136

வாழ்த்தி உண்போம்!

[தொகு]

பாடியவர் : துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த ப·றுன்னத்து
இடைப் புரைபற்றிப், பிணி விடாஅ
ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
பேஎன் பகையென ஒன்று என்கோ?
உண்ணா மையின் ஊன் வாடித்,
தெண் ணீரின் கண் மல்கிக்,
கசிவுற்ற என் பல் கிளையடு
பசி அலைக்கும் பகைஒன் றென்கோ?
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,
‘நின்னது தா’ என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்,
குரங் கன்ன புன்குறுங் கூளியர்
பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ?
‘ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
‘எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப’ வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும ! நீ நல்கிய வளனே.

137

நின்பெற்றோரும் வாழ்க!

[தொகு]

பாடியவர் : ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண். துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.

இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,
மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

138

நின்னை அறிந்தவர் யாரோ?

[தொகு]

பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பாணாற்றுப் படை.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஒழிய,
மீளினம் கலித்த துறைபல நீந்தி,
உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேரெண் ணலையே; நின்இறை,
’மாறி வா’ என மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

139

சாதல் அஞ்சாய் நீயே!

[தொகு]

பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
சுவல் அழுந்தப் பல காய
சில் லோதிப் பல்இளை ஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலிய ருமே,
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள்,
அருஞ் சமம் வருகுவ தாயின்,
வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே

140

தேற்றா ஈகை!

[தொகு]

பாடியவர் : ஔவையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_131-140&oldid=483245" இலிருந்து மீள்விக்கப்பட்டது