புறநானூறு/பாடல் 271-280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


271

மைந்தன் மலைந்த மாறே![தொகு]

பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.
திணை: நொட்சி. துறை: செருவிடை வீழ்தல்.

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,
வெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!

272

கிழமையும் நினதே![தொகு]

பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொட்சி துறை: செருவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.

273

கூடல் பெருமரம்![தொகு]

பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை துறை: குதிரை மறம்

மாவா ராதே ; மாவா ராதே ;
எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே-
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?

274

நீலக் கச்சை![தொகு]

பாடியவர்: உலோச்சனார்
திணை: தும்பை துறை: எருமை மறம்

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,
தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்
எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;

275

தன் தோழற்கு வருமே![தொகு]

பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை துறை: எருமை மறம்

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்
வடிமாண் எ·கம் கடிமுகத்து ஏந்தி,
“ஓம்புமின், ஓம்புமின், இவண்!’ ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,
கன்றுஅமர் கறவை மான ;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.

276

குடப்பால் சில்லுறை![தொகு]

பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார்
திணை:தும்பை துறை: தானைநிலை

நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்,
இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்,
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்,
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.

277

சிதரினும் பலவே![தொகு]

பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

278

பெரிது உவந்தனளே![தொகு]

பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக்,
கொண்ட வாளடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

279

செல்கென விடுமே![தொகு]

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!

280

வழிநினைந்து இருத்தல் அரிதே![தொகு]

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்
திணை: பொதுவியல் துறை: ஆந்தப் பையுள்

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண ! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும்
மண்ணுறு மழித்தலைத் , தெண்ணீர் வாரத்,
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_271-280&oldid=1397511" இருந்து மீள்விக்கப்பட்டது