புறநானூறு/பாடல் 331-340

விக்கிமூலம் இலிருந்து


331

ஆழி அனையன்![தொகு]

பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

332

இல்லது படைக்க வல்லன்![தொகு]

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).
திணை: வாகை துறை : மூதின் முல்லை

கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக், குறிப்பின்
இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்
வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.

333

வேல் பெருந்தகை உடைத்தே![தொகு]

பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.

334

தங்கனிர் சென்மோ புலவீர்![தொகு]

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: வாகை துறை : மூதின் முல்லை

நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
‘உண்க’என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்,
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய்
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,
வம்பணி யானை வேந்துதலை வரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.

335

தூவாள் தூவான்![தொகு]

பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,’
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவேற் காளையும் கைதூ வானே.

336

கடவுள் இலவே![தொகு]

பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

337

பண்பில் தாயே![தொகு]

பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

338

இவர் மறனும் இற்று![தொகு]

பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.
வரலதோறு அகம் மலர . .. .. .. ..
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.
அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,
காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருத லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே - நேரிழை
உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?

339

ஓரெயின் மன்னன் மகள்![தொகு]

பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினத்தைப் பற்றிய குறிப்பு.

ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் தரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!

340

வளரவேண்டும் அவளே![தொகு]

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தற் பூக் குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
.. .. .. .. .. . . ..லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்-
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_331-340&oldid=1397518" இலிருந்து மீள்விக்கப்பட்டது