புறநானூறு/பாடல் 311-320
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
311
சால்பு உடையோனே!
[தொகு]பாடியவர்: ஔவையார்
திணை: தும்பை துறை : பாண் பாட்டு
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்;
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
312
காளைக்குக் கடனே!
[தொகு] பாடியவர் : பொன்முடியார்
திணை: வாகை துறை: மூதின்முல்லை
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
313
வேண்டினும் கடவன்!
[தொகு]பாடியவர்: மாங்குடி மருதனார்
திணை: வாகை துறை : வல்லான் முல்லை
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.
314
மனைக்கு விளக்கு!
[தொகு]பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை துறை : வல்லான் முல்லை
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.
315
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
[தொகு]பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. துறை : வல்லான் முல்லை.
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.
316
சீறியாழ் பனையம்!
[தொகு]பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்,
சென்று வாய் சிவந்துமேல் வருக_
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.
317
யாதுண்டாயினும் கொடுமின்!
[தொகு]பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை
வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. ..
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.
318
பெடையடு வதியும்!
[தொகு]பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅ யோளடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.
319
முயல் சுட்டவாயினும் தருவோம்!
[தொகு]பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை துறை : வல்லாண் முல்லை
பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் க·டு உண்டென, வறிது மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை யணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
320
செய்தி
[தொகு]- ஆண்மகன்
ஆண்மகன் தன் சிற்றூர் மன்னன் ஆணையின்படி வேந்துவிடு தொழில்மேல் சென்றுள்ளான். அப்போது முதுவாய்ப் பாணன் ஒருவன் அவன் இல்லம் வருகிறான்.
- அவன் சிறுவர்கள்
ஆண்மகன் உழவர் குடியைச் சேர்ந்தவன். அவனைப் பார்த்த அவனது குழந்தைகள் அவனைப்போலவே விளையாடுகின்றனர். காட்டில் மேயும் ஆமான் குட்டிகளைப் பிடித்து ஏர்பூட்டி விளையாடுகிறார்கள்.
- வீட்டு முற்றம்
வீட்டு முற்றத்தில் தண்ணீர்ப்பானை வைக்கப்பட்டுள்ளது. அவ்வூரில் செம்மண் பள்ளத்தில் தோண்டிய கூவல் கிணறு ஒன்று இருந்தது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊறிய நீரைக் கொண்டுவந்து அந்த இல்லத்தரசி பழம்பானை ஒன்றில் ஊற்றிவைத்திருந்தாள்.
- முதுவாய் இரவலன்
அந்த வீட்டுப் பெருமகனிடம் பாடிப் பரிசில் பெற வந்தவன் முதுவாய் இரவலன். அவன் அங்கிருந்த முதுவாய்ச் சாடியிலுள்ள நீரை மொண்டு பருகினான்.
- இல்லவள்
இல்லத்தரசி முற்றத்தில் தினையைக் காயவைத்திருந்தாள். புறா, இதல், மறவு போன்ற பறவைகள் அவற்றை உண்டன. அதனைப் பார்த்து மகிழந்துகொண்டிருந்த அவள் இரவலனின் நிலைமையை உணர்ந்துகொள்கிறாள். இரவலனின் பசியைப் போக்க விரும்புகிறாள். அவள் சொல்கிறாள்.
- பொழுது போய்விட்டது. இனிமேல் புதிய திணையைக் காயவைத்துகு குற்றிச் சமைக்க இயலாது. எனவே நாங்கள் வைத்திருக்கும் முயல் கருவாட்டைச் சுட்டுத் தருகிறேன். வீட்டுக்குள் வந்து உண்டு இளைப்பாறுங்கள். வேந்துவிடு தொழில்மேல் சென்றவர் விரைவில் வந்துவிடுவார். வந்ததும் உன் பாடினி அணிந்துகொள்ளத்தக்க பொற்றாமரைப் பூவைச் சூட்டிவிடுவார் - என்கிறாள்.
</poem>