சோழர் வரலாறு/கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.

விக்கிமூலம் இலிருந்து

7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழர்

இரண்டாம் கரிகாலன்

முன்னுரை

இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் முதலிய பல பெயர்களைப் பெற்றான். இவனது வரலாற்றை விரிவாக அறிவதற்குச் சிலப்பதிகாரம், பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, எட்டுத் தொகையுள் உள்ள சில பாடல்கள், கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் ஆகிய அனைத்தும் துணை செய்கின்றன - ரேனாண்டு சோழர் முதல் கி.பி.14-ஆம் நூற்றாண்டு வரை பொத்தப்பி, நெல்லூர், சித்துார் முதலியவற்றை ஆண்டு வந்த தெலுங்கச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டு மகிழ்ந்தனர். எனின், இவனது பெருமையை என்னென்பது! கன்னட நாட்டிலும் சிற்றரசர் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் எனக் கூறிக் கொண்டனர் என்பது கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் அருஞ்செய்தியாகும். பிற்காலச் சோழராகிய விசயாலயன் மரபினரும் தம் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் இவனைக் குறித்து மகிழ்ந்தனர். எனின், இவன் வீரச் செயல்களும் சோழப் பேரரசை நிலை நாட்டிய இவனது பெருந் திறமையும் தமிழகத்தில் மறவாது போற்றப்பட்டமையும் அவ்வக் காலப்புலவர் தத்தம் நூல்களில் அவற்றைக் குறித்து வந்தமையுமே காரணமாகும். இனி, இப்பெருமகன் வரலாற்றை முறைப்படி காண்போம்.

இளமையும் அரசும்

இவன் இளஞ் சேட்சென்னி, என்பவன் மகன். ‘இளஞ்சேட் சென்னி’ என்ற பெயரானே, இவன் தந்தை முடி புனைந்து அரசாண்டவன் அல்லன், அரசனுக்கு இளையவன்; அரசு பெறாதே காலங் கழித்தவன்[குறிப்பு 1] என்பது பெறப்படுகிறது. இவன் அழுத்துார் வேள் மகளை மனந்தவன். அப்பெருமாட்டி நல்லோரையில் கரிகாலனைப் பெற்றாள். [1]கரிகாலன் வளர்பிறை போல வளர்ந்து பல கலைகளும் பயின்று ஒப்பற்ற இளஞ்சிங்க மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தனன்; தந்தையும் இறந்தனன். இறந்த அரசன் மைந்தன் பட்டம் பெற முனைந்தனனே, அன்றி யாது நடந்ததோ தெரியவில்லை; நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். நாட்டில் இருந்த நல்லறிஞர் பண்டைக்கால வழக்கம் போலக் கழுமலத்து[குறிப்பு 2] இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவினான். அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.

பின்னர் யாது நடந்ததென்பது விளங்கவில்லை. தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர்;[குறிப்பு 3] அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிப்போந்தான். தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற நல்லிசைப் புலவர் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.[குறிப்பு 4]

இவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால் ‘கரிகாலன்’ எனப் பெயர் பெற்றான் என்று சில பழம் பாடல்கள் பகர்கின்றன. இங்ஙனமாயின், ‘முதற் கரிகாலன்’ என்பான் கொண்ட பெயருக்கு என்ன காரணம் கூறுவது?[2]

போர்ச் செயல்கள்

இவனுடைய போர்ச் செயல்கள் பொருநர் ஆற்றுப் படையிலும் சிலப்பதிகாரத்திலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன:

(1) இவன் தமிழ் நாட்டைத் தன் அரசாட்சியிற் கொணர அவாவிச் சேர பாண்டியருடன் போரிட்டான். போர் ‘வெண்ணி’யில் நடைபெற்றது. ‘முருகன் சீற்றத்து உருகெழுகுரிசி’லான கரிகாலன் அவ்விரு வேந்தரையும் வெண்ணிப் போரில் அவியச் செய்தான். இதனைப் பொருநர் ஆற்றுப் படை பாடிய முடத்தாமக் கண்ணியார்,

     “இரும்பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை
     அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
     ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
     இருபெரு வேந்தரும் ஒருகளத்(து) அவிய
     வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
     கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.”[3]

என்று சிறப்பித்துள்ளார்.

(2) கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் என்ற மரபினர் இருந்தனர். அவருள் நாகர் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான்.

(3) கற்கா (பாலக்காடு), வேள் நாடு (திருவாங்கூர்), குட்டம் (கொச்சி), குடம் (தென் மலையாளம்), பூழி (வடமலையாளம்) ஆகிய பகுதிகளைக் கொண்ட சேர நாட்டை அடைந்தான்; அந்நாடுகளை வென்று கரிகாலன் தன் பேரரசிற் சேர்த்துக் கொண்டான்.

(4) இடை நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை நில அரசரை) வென்றனன்; இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடங்கியவர் ஆக்கினன்.

(5) இங்ஙனம் தமிழகத்தை அடிப்படுத்திய கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை)க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று,[4] தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்;[5] 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான்.[6]

(6) பின்னர்க் கரிகாலன் மலையமானாட்டை அடைந்தான். இது பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டது. இதனை ஆண்டவன் மலையமான். இவன் சோழன் ஆட்சிக்கு உட்பட்டவன் ஆயினான். வடுகநாடு

(7) வேங்கடம் வரை வெற்றிகொண்ட கரிகாலன், வடக்கு நோக்கிப் பெருஞ் சேனையுடன் புறப்பட்டான்; வடுகர் சிற்றரசர் பலரை வென்றான்.

வடநாடு

(8) பின்னர்க் கரிகாலன் நேரே இமயம் வரை சென்று மீண்டான், அப்பொழுது மகதப் பெருநாடு சுங்கர் ஆட்சியிலிருந்து கண்வ மரபினர் ஆட்சிக்கு மாறிவிட்ட காலமாகும். கி.மு. 73-இல் வாசுதேவ கண்வன் மகதநாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் கண்வர் மூவர் கி.மு. 28 வரை ஆண்டனர்.[7] அதற்குப் பிறகே மகதப் பெருநாடு ஆந்திரர் ஆட்சிக்கு உட்பட்டது. வலியற்ற கண்வர் ஆண்ட காலத்திற்றான் கரிகாலன் வடநாட்டுச் செலவு ஏற்பட்டதாதல் வேண்டும். அக்காலத்தில் கோசாம்பியைக் கோநகராகக் கொண்ட வச்சிரநாடும், உச்சையினியைத் தலைநகராக கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். அதனாற் போலும், கரிகாலனை வரவேற்று மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தர் அளித்தான்; அவந்தி வேந்தன் தோரணவாயில் வழங்கினான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.[8] பின் இரு வேந்தரும் சந்திரகுப்த மோரியன் காலமுதல் சிற்றரசராகவே அடிமைப்பட்டு ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்று வரலாறு கூறுதல் நோக்கத்தக்கது.[9]

ஈழநாடு

இங்ஙனம் இமயம் வரை இறுமாந்து சென்று மீண்ட கரிகாலன் இலங்கை நாட்டின் மீது தன் கருத்தைச் செலுத்தினான்; கப்பற் படை வீரரை அழைத்துக் கொண்டு இலங்கைத் தீவை அடைந்தான்; அதனை வென்று, தன் தண்டத் தலைவன் ஒருவனை ஆளவிட்டு மீண்டான்;[10] மீண்டபோது பன்னிராயிரம் குடிகளைச் சோணாட்டிற்குக் கொணர்ந்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

சோழப் பெருநாடு

கூடுரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ‘காகந்திநாடு’ என்று கல்வெட்டுகளிற் கூறப்படுகின்றன. ‘காகந்தி நாடு’ பற்றிய குறிப்பு பழங்காலத்ததாகக் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட மணிமேகலையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பிற்காலத்தில் ஆண்ட ரேனான்டு, பொத்தப்பிச் சோழர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ எனக் கல்வெட்டுகளிற் குறித்துள்ளனர். ‘காஞ்சி நகரத்தைக் கரிகாலன் புதுப்பித்தான்; தொண்டை மண்டலத்தைக் காடுகெடுத்து நாடாக்கினான்’ என்றெல்லாம் கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலிய அருந்தமிழ் நூல்கள் அறைகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேர நோக்கி, நடுநிலைமையினின்று ஆராயின், கரிகாலன் காலத்துச் சோழப் பெருநாடு வட பெண்ணையாறு முதல் கன்னிமுனைவரையும் பரவி இருந்தது, என்னில் முற்றிலும் பொருத்தமாகும்.

அரசியல்

தொண்டை நாடு: தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் வளப்படுத்திய பெருமை சங்ககாலத்தில் கரிகாற் சோழற்கே சாரும். இவன் தான் வென்ற தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை நாட்டை 4 கோட்டங்களாக அமைத்தான். அவையாவன: 1. ஆம்பூர் 2. இளங்காடு 3. ஈக்காடு 4.மணவில் 5. ஊற்றுக்காடு 6. எயில் 7. கடிகை 8. கலியூர் 9.களத்துார் 10. குன்றவட்டானம் 11. சேத்துர் 12. செங்காடு 13. செந்திருக்கை 14. செம்பூர் 15. தாமல் 16. படுவூர் 17.பல்குன்றம் 18. புழல் 19. புலியூர் 20. பையூர் 21.வெண்குன்றம் 22, வேங்கடம் 23. மணவூர் 24, வேலூர்.[குறிப்பு 5]

தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான்;[11] தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் ஒருவனை (இளந்திரையன்?) விட்டுத் தன் நாடு மீண்டான்.

சோணாடு: சோழநாடு என்றும் சோற்றுக்குப் பஞ்சமின்றி இருக்கச் செய்தவன் இவ்வளவனே. இவன் ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ யாற்றுப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற உளங் கொண்டான்; ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர். கரை அமைப்பு வேலை முடிந்தபின்,  கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். இப்புதிய முயற்சியால் சோணாடு பொன் கொழிக்கும் நாடாயிற்று. நாடு வளம் பெறச் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ எனப்புலவர் பாராட்டலாயினர். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’ எனப்பட்டான். காவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது.பொன்னிநாட்டைஆண்டமையால், சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர்.சோணாட்டின் சிறப்பைப் பொருநர் ஆற்றுப் படையுள் கண்டு மகிழ்க![12]

இவன் காவிரியாற்றை ஒழுங்குபடுத்தியதன்றிப் பல குளங்களைப் புதியனவாக எடுப்பித்தான்; கோவில்களைக் கட்டினான்; கோட்டை கொத்தளங்களை ஆங்காங்கு அமைத்தான் என்று பட்டினப்பாலை பகர்கின்றது.[13]

அமைதியுடைய வாழ்க்கை: இவனது தலைநகரமான பூம்புகாரில் கடற்கரை ஓரம் வாணிபத்தின் பொருட்டுச் சோனகர், சீனர், சாவகர் முதலிய பல நாட்டாரும் விடுதிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்; அவர்களுடன் உள்நாட்டு மக்களும் கலந்து உறவாடினர்; இரு திறத்தாரும் மனமொத்து வாழ்க்கை நடத்தினர். பெளத்த, சமண, வைதிக சமய மக்களும் பண்டைத் தமிழரோடு அமைதியுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதற்கென்ன காரணம்? கரிகாலனது செங்கோற் சிறப்புடைய அரசியலே அன்றோ?[14]

முறை வழங்கல்: கரிகாலனிடம் ஒருகால் முதியவர் இருவர் முறை வேண்டி வந்தனராம். அவர் இவனது இளமைத் தோற்றத்தைக் கண்டு ஐயுற்றனராம். அஃதுணர்ந்த இவன் முதியவன் வேடங்கொண்டு வழக்கைக் கேட்டு நேரிய தீர்ப்புக் கூறினனாம். அம்முதியவர் மனங்களிப்புற்றனர். உடனே அவன் தன் பொய் வேடத்தை அவர் முன் நீக்க, அவர்கள் இவனது பேராற்றலைக் கண்டு வியந்தனர், அதே சமயம் இவனது திறமையை ஐயுற்றமைக்கு நாணினராம். இச்செய்தி பழமொழி, முதலிய நூல்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

கடல் வாணிகம்: இம்மன்னன் காலத்தில் கடல் வாணிகம் சிறப்புற நடந்து வந்ததென்னலாம். பூம்புகார்ப் பட்டினத்தை வளப்படுத்திய பெருமை இவனைச் சார்ந்ததே ஆகும். அந்நகரில் பலபாடை மக்கள் கடல் வாணிகத்தின் பொருட்டுத் தங்கியிருந்தனர் என்பதை நோக்கக் கடல் வாணிகம், உயர்ந்த முறையில் நடைபெற்றதை நன்குணரலாம். புகார் நகர் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்தது. காவிரியின் இருமருங்கும் பூம்புகார் அமைந்திருந்தது. அவ்வாற்றில் மரக்கலங்கள் சென்று மீளத் தக்கவாறு ஆழ்ந்து அகன்ற துறைமுகம் இருந்தது. கடற்கரை ஓரம் கலங்கரை விளக்கம் இருந்தது; இறக்குமதியாகும் பண்டங்களைத் தீர்வை வரையறுத்துக் கடமை (custom) கொள்ளும் ஆயத்துறை (Custom House) கள் இருந்தன; பிறகு அப்பண்டங்கட்குச் சோழனது புலி இலச்சினை இட்டு, அவற்றை இட்டு வைக்கும் பண்டசாலைகள் (ware-house), கிடங்குகள் (godowns), உயர்ந்த மேடைகள் (Docks and Piers)இருந்தன. இறக்குமதியான பொருள்கட்குக் கணக்கில்லை. அவற்றின் விவரம் யாவும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், ஊர்காண் காதை உரை இவற்றிற் கண்டு தெளிக: விரிப்பிற் பெருகும். இக்குறிப்புகள் அனைத்துடனும், கீழ்க்கரை ஓரம் கிடைத்துள்ள ரோம நாணயங்களையும், சாதவாகனர் நாணயங்களையும் நோக்க - வெளிநாட்டு உள்நாட்டு வாணிகம் நடந்து வந்த உயர் நிலையை நன்குணரலாம். சுருங்கக் கூறின், கரிகாற் பெருவளத் தானது அரசாட்சி ‘பொற்கால ஆட்சி’ எனக்கூறலாம்.

செந்தமிழ் வளர்ச்சி: இச்செங்கோல் வேந்தர் ஆட்சியில் தமிழ் செம்மையுறவே வளர்ச்சிபெற்று வந்ததென்பது கூற வேண்டுமோ? இவனது தாய் மாமனான இரும்பிடர்த் தலையாரே பெருந்தமிழ்ப் புலவர்; அவராற் பாதுகாப்புப் பெற்ற இவனும் சிறந்த தமிழ் அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் என்பதில் வியப்பில்லை. இவனைப் பாராட்டிய புலவர் பலராவர். அவருள் இவனை பட்டினப்பாலையாற் புகழ்ந்து பாராட்டிய பெரும் புலவர் உருத்திரன் கண்ணனார் என்பவர். இவன் அவர்க்கு 16 லக்ஷம் பொன் பரிசளித்தான் என்பர். பட்டினப்பாலை படித்து இன்புறத்தக்க அழகிய நூலாகும். இவன் மீது பாடப்பெற்ற மற்றொரு பெரிய பாட்டு பொருநர் ஆற்றுப்படை என்பது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர். அப்பாவில் இவனுடைய போர்ச் செயல்கள், குணாதிசயங்கள் இன்னபிறவும் செவ்வனே விளக்கப் பெற்றுள்ளன. இவன் வரலாற்றை அறிய அது பெருந்துணை செய்வதாகும். இவனைப்பாடிய பிற புலவருள் காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் என்பவர் ஒருவர். இவர், கரிகாலன் தன் நண்பனான பாண்டியன் வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடன் இருந்த மகிழ்ச்சி மிக்க நேரத்திற் சந்தித்து, இருவரையும் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளார்.[15] கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் மருத்துவன் தாமோதரனார் என்பவர். இவர் கரிகாலனது அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்து, கடற்கரை இடத்துக் கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்லும் வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒப்பாய் நீ’ என விளக்கியிருத்தல் பாராட்டத்தக்கது. இவர் பின்னும் ‘வெற்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய நினது வெண்கொற்றக் குடை உவாமதி போன்றது என்று நினைந்து நின்பால் பரிசில் பெற யான் வந்தேன்”[16] எனக் கூறுதல், கரிகாலனது செங்கோற் சிறப்பை உணர்த்தி நிற்கின்றதன்றோ?

இக்கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர். இவர் சென்றவுடன் கரிகாலன் பரிசில் தரவில்லை: எக்காரணம் பற்றியோ காலம் தாழ்த்தான். அப்பொழுது புலவர் வருந்தி ஒரு பாட்டைப் பாடினார்; அதன் அகத்துக் கரிகாலன் சிறப்பைப் பொது முறையிலே வைத்துக் கூறியிருத்தல் கவனித்தற்குரியது.

“கரிகாலன் காற்று இயங்கினாற்போலும் தாவுதலை உடையதாகிய கதியையுடைய குதிரையுடன் கொடி நுடங்கும் உச்சியைக் கொண்ட தேர் உடையவன்; கடலைக் கண்டாற் போலும் ஒளி பொருந்திய படைக் கலங்களைக் கொண்ட சேனை வீரரை உடையவன்; மலையோடு மாறுபட்டுப் பொரும் களிறுகளை உடையவன் இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசம் உடையவன்; போரில் மேம்படும் வெற்றியை உடையவன்.”[17]

இக்கரிகாலனைப் பிற்காலத்திற் பாடிய புலவர் பலராவர். அவர்கள் பரணர், நக்கீரர், இளங்கோவடிகள் சயங்கொண்டார், சேக்கிழார் முதலியோர் ஆவர். இவன் காலத்தில் தமிழ்மொழி சிறந்த நிலையில் இருந்தது என்பது சங்க நூல்களைக் கொண்டு நன்கறியக் கிடக்கிறது. இவன், புலவர்தம் கல்வித் திறத்தைச் சீர்தூக்கிப் பட்டி மண்டபத்தையும் நல்லாசிரியர் ஒருங்கிருந்து ஆராய்ச்சி செய்யத்தக்க கலைக் கழகங்களையும்[18] அமைத்த அறிஞன் ஆவான். இப்பெருந் தகையாளன் புலவர்களை நன்கு வரவேற்று வேண்டிய நல்கித் தனக்கு அவர் மாட்டுள்ள ஆர்வமிகுதியால், அவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் கடப்பாடு உடையவனாக இருந்தான்.[19] வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரைப்பட்ட பெருநாட்டைத் தன் ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் சோழன், புலவர் பின் ஏழடி நடந்து சென்று மீளும் பழக்கம் உடையவனாக இருந்தான் எனின், இப்பெருமகனது பெருந்தன்மை யையும் தமிழ்ப்புலவர் மாட்டு இவன் வைத்திருந்த பெருமதிப்பையும், சிறப்பாகத் தன் தாய்மொழி வளர்ச்சியில் இவனுக்கிருந்த தனிப்பற்றையும் என்னெனப் புகழ்வது! இத்தகைய தமிழ்ப் பேரரசர் அரும்பாடு பட்டு வளர்த்த சங்கத் தமிழாற்றான் - நாம் இன்று ‘தமிழர்’ எனத் தருக்குடன் நிற்கின்றோம் என்னல் மிகையாமோ?

கலைகள் : கரிகாலன் காலம் செழித்த காலமாதலின் பல கலைகளும் ஓங்கி வளர்ச்சியுற்றன என்பதில் ஐயமில்லை. இசை, நாடகம் முதலியன வளர்ந்தோங்கின என்பது பொதுவாகச் சங்க நூல்களைக் காணும்போது நன்கறியலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் மாதவி நடித்தபோது இருந்த பல்வகை ஆசிரியர், கருவிகள், நடிப்பு முறைகள் இன்னபிறவும் கரிகாலன் காலத்தில் நன்னிலையில் இருந்தன என்பதில் ஐயமுண்டோ? இதன் விரிவெல்லாம் அடுத்த பகுதியிற் காண்க.

சமயம்: கரிகாலன் காலத்தில் சோழ நாட்டில் பல சமயங்கள் இருந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் வேண்டுகோட்படி தமிழரசர் பெளத்த சமயப் பிரசாரத்திற்கு நாட்டில் இடம் தந்தனர். அன்று முதல் சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும்;[20] வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙணம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

    “விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார்
    கண்ணுளார் கழலின் செல்வார் கரிகாலனை
    நண்ணுவார் எழில்கொள கச்சிநகர் ஏகம்பத்(து)
    அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே.”[21]

இவனது உருவச் சிலை ‘ஏகாம்பரநாதர்’ கோவிலில் இருக்கிறது. இவன் வைதிக வேள்விகளையும் செய்தவன் ஆவன்.[22]

இவனது அணிமிக்க கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தில்,

    “நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
    பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா” கப்

பல கோவில்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.

பிற அரசர்கள்: அக்காலத்துப் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியாவன்; சேர அரசன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை என்பவன்; சிற்றரசர் - ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துர்க் கிழான் தோயன் மாறன், சோழியஏனாதி திருக்குட்டுவன், கரிகாலனிடம் தோற்ற இருங்கோவேள் முதலியோர் ஆவர்.[23]

அரச குடும்பம்: கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் மகள் என்பது முன்பே கூறப்பட்டது. இவன் நாங்கூர் (சீகாழித் தாலூகா) வேள் மகளை மணந்து கொண்டான்.[24] இவளன்றி வேறு மனைவியர் சிலரும் இருந்தனர்.[25] ஆதிமந்தியார் என்ற மகளும் இருந்தனள்[26] என்பர். இக்கூற்று ஆராய்ச்சிக்கு உரியது.

இறுதி : கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் சோழப் பேரரசை ஏற்படுத்தி ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.[27]


  1. Tolkappiyam, Amgam. S. 30. Commentary.
  2. Vide K.N.S. Pillai’s ‘The Chronology of the Early Tamils’, p. 129 and its foot-note.
  3. பட்டினப்பாலை வரி 274-282.
  4. அகம், 141.
  5. பட்டினப்பாலை, வரி 275.
  6. செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவூர், சூணாம்பேடு முதலிய இடங்களில் உள்ள இக்கால முதலிமார்கள் தம்மைக் கரிகால் வளவனால் குடியேற்றப்பெற்ற வேளாளர் மரபினர் எனக் கூறுகின்றனர்.- Vide. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’ p. 34 foot-note.
  7. V.A. Smith's ‘Early History of India’ pp. 215-216.
  8. இந்திரவிழவூரெடுத்த காதை, வரி; 99-110
  9. Ibid. No. I.p. 369.
  10. ‘இலங்கை கி.மு. 44 முதல் கி.மு. 17 வரைக்குட்பட்ட 15 ஆண்டுகள் தமிழர் வசமிருந்தது’ என்னும், மஹா வம்சக் கூற்று இதனை உறுதிப்படுத்தல் காண்க- Vide ‘A Short History of Ceylon’ pp. 722-725 by Dr.W. Geiger, in ‘Buddhistic Studies’ ed. by R.C. Law.
  11. திருக்குறிப்புத் தொண்டர் புராணம்; செ 85.
  12. வரி 242-248.
  13. வரி 283-288.
  14. பட்டினப் பாலை ; வரி. 216-218. 199,207-8.
  15. புறம் 58.
  16. புறம் 60.
  17. அகம் 197.
  18. பட்டினப்பாலை; வரி. 169-171.
  19. பொருநர் ஆற்றுப் படை வரி. 76-129; 151;173.
  20. Asoka’t Rock Edicts 2 and 13.
  21. திருக்கச்சி ஏகம்பம்: ‘மறையானை’ என்னும் பதிகம்; 7-ஆம் பாடல்.
  22. புறம் 224.
  23. K.N.S. Pillai's Chronology of the Early Tamils.
  24. Thol. Porul S. 30 and its commentary.
  25. பட்டினப்பாலை, வரி, 295, 299.
  26. Sentamil, Vol.2, p. 114.
  27. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’, p.66.
  1. இங்ஙனம் அரசு பெறாது காலம் கழித்தவன் பல்லவ மரபினருள் இளங்கோ - விஷ்ணு கோப வர்மன் என்பது இங்கு நினைவு கூர்தற்குரியது. ஆயின், ‘அவன் மகன் முதலியோர் பல்லவ அரசராக விளங்கினர் என்பதும் இங்கு நோக்கத் தக்கது.
  2. கழுமலம் - சீகாழி. அங்கு யானை கட்டப்பட்டிருந்த இடம் இன்றும் இருக்கிறது.
  3. இப்பழக்கம், மூர்த்தி நாயனார் புராணத்தால் பாண்டியநாட்டிலும் இருந்ததென்பதை உணரலாம்.
  4. சந்திரகுப்த மோரியன் நந்தரால் சிறையில் இடப்பெற்றமை இங்குக் கருதத்தகும்.
  5. இவற்றைக் குறும்பரே அமைத்தனர் எனக் கூறலும் உண்டு.