நளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 169 முதல் 220
நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை
[தொகு]169. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுந் தையல்
குவளைக் கருநிழலுங் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரி லேறினான் சென்று.
நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளைக் காட்டுதல்
[தொகு]170. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்
பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.
171. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.
172. மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.
173. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.
174. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து.
175. ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து.
176. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் - கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை யழகு.
177. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ - கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்.
178. கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண்.
179. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்க ளத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்.
180. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்துவக்குஞ் சேய்.
181. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிக மென்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.
182. சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்.
183. சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு.
184. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீல மென்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்.
நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது
[தொகு]185. காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தா ருவந்து.
186. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரின்பத் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில்.
தமயந்தியின் ஊடல்
[தொகு]187. கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற - மன்னவனே
இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா
ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து.
188. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதன்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.
189. தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.
தமயந்தி புலவி தவிர்த்தது
[தொகு]190. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு.
ஊடல் நீங்கித் தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது
[தொகு]191. அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.
நள தமயந்தியர் கங்கை கண்டது
[தொகு]192. வேரி மழைதுளிக்கு மேகக் கருங்கூந்தல்
காரிகையுந் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறுங் கங்கைக் கரை.
அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது
[தொகு]193. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்குங் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன்.
நளன் தமயந்திக்குத் தன் வளநகரைக் காட்டியது
[தொகு]194. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மற்றின் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே யெங்கள் நகர்.
நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது
[தொகு]195. பொய்கையும் வாசப் பொழிலு மெழிலருவச்
செய்குன்று மாறுந் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.
தமயந்தியின் மக்கட் பேறு
[தொகு]196. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி யிரண்டு.
கலி நளனைச் சார முடியாதிருந்தது
[தொகு]197. ஆண்டிரண்டா றெல்லை யளவுந் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் - நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.
கலி நளனைச் சேர்ந்தது
[தொகு]198. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.
199. நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி.
கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது
[தொகு]200. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.
புட்கரன் உடன்பட்டுக் கலியுடன் சென்றது
[தொகு]201. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி யிளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.
புட்கரன் நிடத நாடடைந்தது
[தொகு]202. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.
நளன் புட்கரனைக் கண்டு வினாவியது
[தொகு]203. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி யென்னகொடி யென்ன - மிடற்சூது
வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்
செல்லுங் கொடியோன் தெரிந்து.
நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது
[தொகு]204. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து.
நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது
[தொகு]205. காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி.
206. அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து.
207. உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.
208. ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு.
நளனது மறுப்புரை
[தொகு]209. தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று.
புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது
[தொகு]210. நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் - துறையில்
கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது.
நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்
[தொகு]211. விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து.
212. காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயுந் தோளான் தனிமனம்போல் - நேரே
தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி.
213. வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணைய முரையென்ன - வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து.
214. பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேருந் தோற்றதற்பின் - வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி.
215. சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
பூவையரைத் தோற்றான் பொருது.
216. கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு.
புட்கரன் தமயந்தியைப் பந்தயமாக வைக்ககேட்டது
[தொகு]217. மனைக்குரியா ரன்றே வருந்துயரந் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று.
நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது
[தொகு]218. இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போது மென்றான் நளன்.
நளன் நகரைவிட்டுச் சென்றது
[தொகு]219. மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து
[தொகு]220. கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வலி.