நளவெண்பா/கலிநீங்கு காண்டம்/பாடல் 317 முதல் 360

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


கலிநீங்கு காண்டம் 317 முதல் 360[தொகு]

தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் தீயிடைப்பட்ட ஒருவன் துயரக்குரல் கேட்டது[தொகு]

317. மன்னா வுனக்கபய மென்னா வனத்தீயில்

பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன

மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்

பழிவழியே செல்கின்றான் பார்த்து.

நளன் ஒரு பாம்பைத் தீயிடைக் கண்டது[தொகு]

318. ஆருந் திரியா அரையிருளில் அங்கனமே

சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்

திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்

டெரிவானைக் கண்டா னெதிர்.

நளன் தீயிடம் சென்றது[தொகு]

319. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்

ஆக்கி யருளா லரவரசை - நோக்கி

அடைந்தா னடைதலுமே ஆரழலோ னஞ்சி

உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து.

பாம்பு தனது வரலாறு கூறித் தன்னை விடுவிக்க வேண்டியது[தொகு]

320. வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்

ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால்

வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு

சந்தெடுத்த தோளானைத் தான்.

321. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்

கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்

விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்

படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.

322. என்றுரைத்த அவ்வளவி லேழுலகுஞ் சூழ்கடலும்

குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி

அரவரசைக் கொண்டகன்றா னாரணியந் தன்னின்

இரவரசை வென்றா னெடுத்து.

323. மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளா லொன்றுமுதல்

எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்

மாவலான் செய்த வுதவிக்கு மாறாக

ஏவலாற் றீங்கிழைப்பே னென்று.

324. ஆங்கவன்றா னவ்வா றுரைப்ப அதுகேட்டுத்

தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை

மண்ணின்மேல் வைத்துத் தசவென்ற வாய்மையால்

எண்ணினான் வைத்தா னெயிறு.

325. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா

வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்

கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை

விடாதான் திருமேனி வெந்து.

அரவை நோக்கி நளன் உரைத்தது[தொகு]

326. ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச்

சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்

றென்கா ரணமென்றா னேற்றமரிற் கூற்றழைக்கும்

மின்கா லயின்முகவேல் வேந்து.

அரவின் மறுமொழியும் அது அளித்த வரமும்[தொகு]

327. காயுங் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்

நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை

மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா

வேறாக்கிற் றென்றான் விரைந்து.

328. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்

தேனிறால் பாயுந் திருநாடா - கானில்

தணியாத வெங்கனலைத் தாங்கினா யிந்த

அணியாடை கொள்கென்றா னாங்கு.

329. சாதி மணித்துகில்நி சாத்தினால் தண்கழுநீர்ப்

போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்

துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே

ஒளிக்குநாள் நீங்கு முரு.

330. வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம்

ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்

தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால்

பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.

நளன் அக்கான் கடந்து சென்றது[தொகு]

331. இணையாரு மில்லா னிழைத்த உதவி

புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்

திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும்

எண்ணாக வேந்த னெழுந்து.

நளன் கடற்கரையைக் கண்டது[தொகு]

332. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்

கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு

தன்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு

கண்படா வேலைக் கரை.

நளன் கடற்கரையில் பலவற்றைக் கண்டு புலம்பல்[தொகு]

333. கொம்ப ரிளங்குருகே கூறா திருத்தியால்

அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி

திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை

உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.

334. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு

கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்

டஞ்சினா னாவி யழிந்தா னறவுயிர்த்து

நெஞ்சினா லெல்லாம் நினைந்து.

335. காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட

பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்

அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ ஓடி

ஒளிக்கின்ற தென்னோ வுரை.

336. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்

கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய

மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்

என்னினைக்குஞ் சொல்வீ ரெனக்கு.

நளன் அயோத்தி நகரை அடைந்தது[தொகு]

337. முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப

நன்னீ ரயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்

முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி

அருகுடைக்கும் நன்னாட் டரசு.

நளன் அயோத்தி மன்னனை அடைதல்[தொகு]

338. மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்று

ஊன்தேய்க்கும் வேலா னுயர்நறவத் - தேன்தோய்க்கும்

தார்வேந்தற் கென்வரவு தானுரைமி னென்றுரைத்தான்

தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று.

339. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்

செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயநீ

எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்

கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு.

340. அன்னம் மிதிப்ப அலர்வழியுந் தேறல்போயச்

செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா

மடைத்தொழிலுந் தேர்த்தொழிலும் வல்லன்யா னென்றான்

கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து.

தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது[தொகு]

341. என்னை யிருங்கானில் நீத்த இகல்வேந்தன்

தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்

புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த

உரைபகர்வ தானா ளுணர்ந்து.

342. காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்

சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற்

கென்றறைந்தா நேர்நின் றெதிர்மாற்றந் தந்தாரைச்

சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.

புரோகிதன் அயோத்தியை அடைந்தது[தொகு]

343. மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்

நன்னாடுங் கானகமு நாடினான் - மன்னு

கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி

அடைந்தா னயோத்தி நகர்.

புரோகிதன் கூறிய மொழிகேட்டு நளன் கூறிய மறுமொழி[தொகு]

344. கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்

போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று

சாற்றினா னந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்

ஏற்றினான் வந்தா னெதிர்.

345. ஒண்டொடி தன்னை யுறக்கத்தே நீத்ததுவும்

பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்

பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே

நீத்தானென் றையுறேல் நீ.

தமயந்தி வந்த புரோகிதனை வினாவியது[தொகு]

346. எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்

கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்

தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்

அலைப்பட்ட கொங்கையா ளாங்கு.

புரோகிதன் மறுமொழி[தொகு]

347. வாக்கினால் மன்னவனை யொப்பான் மதித்தொருகால்

ஆக்கையே நோக்கி னவனல்லன் - பூக்கமழும்

கூந்தலாய் மற்றக் குலப்பாக னென்றுரைத்தான்

ஏந்துநூல் மார்ப னெடுத்து.

தமயந்தி தன் இரண்டாஞ் சுயம்வரச் செய்தி அறிவிக்கச் செய்தது[தொகு]

348. மீண்டோ ர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை

பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட

கொடைவேந்தற் கித்தூரந் தேர்க்கோலங் கொள்வான்

படைவேந்த னென்றாள் பரிந்து.

இரண்டாஞ் சுயம்வரச் செய்தி கேட்டு இருதுபன்னன் கூறியது[தொகு]

349. எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்

றங்கோர் முரச மறைவித்தான் - செங்கோலாய்

அந்நாளும் நாளை யளவென்றா னந்தணன்போய்த்

தென்னாளுந் தாரானைச் சேர்ந்து.

350. வேத மொழிவாணன் மீண்டுஞ் சுயம்வரத்தைக்

காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்

என்செய்கோ மற்றிதனுக் கென்றா னிகல்சீறும்

மின்செய்த வேலான் விரைந்து.

நளன் அதுகேட்டுக் கூறியது[தொகு]

351. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்

இறவாத வேந்திழையா ளின்று - பறிபீறி

நெல்லிற் பருவரா லோடும் நெடுநாடா

சொல்லப் படுமோவிச் சொல்.

இருதுபன்னன் கூறிய சமாதானம்[தொகு]

352. என்மே லெறிகின்ற மாலை யெழில்நளன்தன்

தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்

காரணந்தா னீதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்

வாரணந்தா னன்னான் மறித்து.

நளனது தியக்கம்[தொகு]

353. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்

என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்

கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட

தெவ்வாறு கொல்லோ விது?

நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டிச் செல்ல உடன்பட்டது[தொகு]

354. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்

ஏவன் முடிப்ப னினியென்று - மாவிற்

குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை

மலர்த்தேன் அளிக்குந்தார் மன்.

355. ஒற்றைத் தனியாழித் தேரென்ன வோடுவதோர்

கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே

போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்

தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.

நளன் தேர் ஓட்டிய சிறப்பு[தொகு]

356. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்

சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்

தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே

தேர்கின்றா னூர்கின்ற தேர்.

357. மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்

நாலாறு காதம் நடந்ததே - தோலாமை

மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்

மால்கொண்டான் கோல்கொண்ட மா.

இருதுபன்னனது கணிதச் சிறப்பு[தொகு]

358. இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணில்

பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்

தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே

தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான்.

இருதுபன்னன் நளனிடம் கூறியது[தொகு]

359. ஏரடிப்பார் கோலெடுப்ப இந்தேன் தொடைபீறிக்

காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த

மாத்தொழிலு மித்தொழிலும் மாற்றுதியோ வென்றுரைத்தான்

தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.

கலி நளனைவிட்டு நீங்கியது[தொகு]

360. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்

தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்

பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே

காவலன்பால் நின்ற கலி.