நளவெண்பா/சுயம்வர காண்டம்/பாடல் 111 முதல் 168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


புகழேந்திப்புலவர் பாடிய நளவெண்பா[தொகு]

சுயம்வர காண்டம் 111- 168[தொகு]

இருளின் மிகுதியும் தமயந்தியின் துயரமும்[தொகு]

111. அள்ளிக் கொளலா யடையத் திரண்டொன்றாய்க்

கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்

புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்

இதயமே போன்ற திரா.

112. ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர்

வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க

இடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்

புடைவா யிருள்புடைத்தாற் போன்று.

113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்

தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்

பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே

ஓவாது முந்நீ ருலகு.

114. ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பே

தோன்றுங் கழுதுந் துயின்றதே - தான்தன்

உரைசோரச் சோர வுடல்சோர வாயின்

இரைசோரக் கைசோர நின்று.

115. அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்

இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் - இன்று

தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே

அவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு.

116. ஏழுலகுஞ் சூழிருளா யென்பொருட்டால் வேகின்ற

ஆழ்துயர மேதென் றறிகிலேன் - பாழி

வரையோ எனுநெடுந்தோண் மன்னாவோ தின்னும்

இரையோ இரவுக்கு யான்?

117. கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்

உருவிப் புகுந்ததா லூதை - பருகிக்கார்

வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை

உண்டுபோ கட்ட வுயிர்க்கு.

118. எழுந்திருக்கு மேமாந்து பூமாந் தவிசின்

விழுந்திருக்குந் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்

தூணோடு சேர்க்குந் துணையேது மில்லாதே

நாணோடு நின்றழியும் நைந்து.

119. விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே

சொரிகின்ற காரிருள்போற் சோரும் - புரிகுழலைத்

தாங்குந் தளருந் தழலே நெடிதுயிர்க்கும்

ஏங்குந் துயரோ டிருந்து.

120. மயங்குந் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று

உயங்கும் வறிதே யுலாவும் - வயங்கிழைபோய்ச்

சோருந் துயிலுந் துயிலாக் கருநெடுங்கண்

நீருங் கடைசோர நின்று.

121. உடைய மிடுக்கெல்லா மென்மேல் ஓச்சி

விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்

மாகாதல் வைத்ததோ மன்னவர்த மின்னருளோ

ஏகாத தென்னோ இரா.

122. விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்

கழுதும் வழிதேடுங் கங்குற் - பொழுதிடையே

நீருயிர்க்குங் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்

ஆருயிர்க்கு முண்டோ அரண்.

பொழுது புலர்ந்தமை[தொகு]

123. பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்

காசினியுந் தாமரையுங் கண்விழிப்ப - வாசம்

அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு

புலர்ந்ததே யற்றைப் பொழுது.

சூரியோதயம்[தொகு]

124. வில்லி கணையிழப்ப வெண்மதியஞ் சீரிழப்பத்

தொல்லை யிருள்கிழியத் தோன்றினான் - வல்லி

மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே

குணவாயிற் செங்கதிரோன் குன்று.

125. முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற

வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த

மாலை துவள முடிதயங்க வால்வளையும்

காலை முரசுங் கலந்து.

நளன் சுயம்வர மண்டபம் வந்தமை[தொகு]

126. மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்

கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்

குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்

சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்.

தமயந்தி சுயம்வர மண்டபம் வந்தது[தொகு]

127. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக

மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்

மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்

அருங்கேழ் மணிப்பூண் அங்கு.

128. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்

கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்

மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு

நெருங்கினவே மேன்மேல் நிறைந்து.

129. மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே

பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்

செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்

பொய்கைவாய் போவதே போன்று.

130. வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்

நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு

பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு

ஐவாளி நாணின்பால் இட்டு.

தோழி தமயந்திக்கு, அங்கு வந்திருந்த அரசர்கள் ஒவ்வொருவரையும் குறிபிட்டுரைத்தல்[தொகு]

131. மன்னர் குலமும் பெயரும் வளநாடும்

இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று

தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்

தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.

சோழ மன்னன்[தொகு]

132. பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்

சென்னி தடவுந் திருநாடன் - பொன்னின்

சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்

கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.

பாண்டிய மன்னர்[தொகு]

133. போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்

சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்

பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்

திரித்தகோ விங்கிருந்த சேய்.

சேர மன்னன்[தொகு]

134. வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்

குன்றருவி பாயுங் குடநாடன் - நின்றபுகழ்

மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்

மீதே சிலையுயர்த்த வேந்து.

குரு நாட்டரசன்[தொகு]

135. தெரியில் யிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை

அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்

பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்

வள்ளைக் குருநாடர் மன்.

மத்திர நாட்டரசன்[தொகு]

136. தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்

காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்

பத்திரத்தா லேற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்

மத்திரத்தார் கோமான் மகன்.

மச்ச நாட்டரசன்[தொகு]

137. அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்

வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்

பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்

மச்சத்தார் கோமான் மகன்.

அவந்தி நாட்டரசன்[தொகு]

138. வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த

பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா

தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்

இருங்கடா யானை இவன்.

பாஞ்சால மன்னன்[தொகு]

139. விடக்கதிர்வேற் காளை யிவன்கண்டாய் மீனின்

தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டின் - மடற்கமுகின்

செந்தோடு பீறத்தேன் செந்நெற் பசுந்தோட்டில்

வந்தோடு பாஞ்சாலர் மன்.

கோசல மன்னன்[தொகு]

140. அன்னந் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்

செந்நெ லரிவார் சினையாமை - வன்முதுகில்

கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்

தேனிருந்த சொல்லாயிச் சேய்.

மகத நாட்டரசன்[தொகு]

141. புண்டரிகந் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்

வண்டிரியுந் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்

போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய

தேர்வேந்தன் கண்டாயிச் சேய்.

அங்க நாட்டரசன்[தொகு]

142. கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவழக் கோடிடறித்

தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்

தந்தோ வெனவெடுக்கு மங்கநா டாளுடையான்

செந்தேன் மொழியாயிச் சேய்.

கலிங்கர் கோன்[தொகு]

143. தெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்

கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு

வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்

தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

கேகயர் கோன்[தொகு]

144. அங்கை வரிவளையா யாழித் திரைகொணர்ந்த

செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய் - கங்கையிடைச்

சேல்குளிக்குங் கேகயர்கோன் றெவ்வாடற் கைவரைமேல்

வேல்குளிக்க நின்றானிவ் வேந்து.

காந்தார வேந்தன்[தொகு]

145. மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது

தனேகு மன்னந் தனிக்கயிற்றில் - போநீள்

கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்

மழைக்கோதை மானேயிம் மன்.

சிந்து நாட்டரசன்[தொகு]

146. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்

சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்

பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்குந் தண்பணைசூழ்

மாச்சிந்து நாட்டானிம் மன்.

தேவர்கள் நளனுருவில் இருக்கத் தமயந்தி கண்டு தியங்கியது[தொகு]

147. காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்

தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த

மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணநின்று

ஊசலா டுற்றா ளுளம்.

148. பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்

நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து

மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்

பொற்றேர் நளனுருவாப் போந்து.

தமயந்தியின் சூளுரை[தொகு]

149. மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்

கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்

சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்

மன்னவனைத் தன்மனத்தே கொண்டு.

தமயந்தி நளனை அறிந்தமை[தொகு]

150. கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி

நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்

அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியது[தொகு]

151. விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்

கண்ணகன் ஞாலங் களிகூர - மண்ணரசர்

வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தைப்

பொன்மாலை சூட்டினாள் பொன்.

மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை[தொகு]

152. திண்டோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்

வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்

கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்

பூமாலை பெற்றிருந்த போது.

நளன் தமயந்தியுடன் சென்றமை[தொகு]

153. மல்லல் மறுகின் மடநா குடனாகச்

செல்லும் மழவிடைபோற் செம்மாந்து - மெல்லியலாள்

பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்

நன்மாலை வேலான் நளன்.

தேவர்கள், கலி எதிர்வரக் கண்டது[தொகு]

154. வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை

மாலை பெறாதகலும் வானாடர் - வேலை

பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியி லாக்கும்

இருங்கலியைக் கண்டா ரெதிர்.

இந்திரன் கலியின் வரவு வினாவியதும், கலியின் மறுமொழியும்[தொகு]

155. ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவத்

தீங்கு தருகலியுஞ் செப்பினான் - நீங்கள்

விருப்பான வீமன் திருமடந்தை யோடும்

இருப்பான் வருகின்றேன் யான்.

156. மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்

கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய

உள்ளக் கருத்தை யொழித்தே குதியென்றான்

வெள்ளைத் தனியானை வேந்து.

157. விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை

மண்ணரசற் கீந்த மடமாதின் - எண்ணம்

கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்தற்க்குங் கீழ்மை

கொடுக்கின்றே னென்றான் கொதித்து.

158. வாய்மையுஞ் செங்கோல் வளனும் மனத்தின்கண்

தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்

நெடுங்கற்பு மற்றவற்கு நின்றுரைத்துப் போனான்

அருங்கொற்ற வச்சிரத்தா னாங்கு.

நளனைக் கெடுக்கக் கலி துவாபரனைத் துணைவேண்டியது[தொகு]

159. செருக்கதிர்வேற் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட

இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க

உடனாக என்றா னுடனே பிறந்த

விடநாகம் அன்னான் வெகுண்டு.

சூரியோதயம்[தொகு]

160. வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை

மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்

வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்

தீயடங்க ஏறினான் றேர்.

தமயந்திக்குச் செய்த மணக்கோலம்[தொகு]

161. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற

பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்

சூட்டினார் சூட்டித் துடிசே இடையாளைப்

பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.

நளதமயந்தியர் திருமணம்[தொகு]

162. கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்

அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்

குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்

மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து.

நளதமயந்தியர் கூடிமகிழ்ந்தமை[தொகு]

163. செந்திருவின் கொங்கையினுந் தேர்வேந்த னாகத்தும்

வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்

நஞ்சுந் தொடுத்தனைய நாம மலர்வாளி

அஞ்சுந் தொடுத்தா னவன்.

164. ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி

இருவ ரெனும்தோற்ற மின்றிப் - பொருவெம்

கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்

புனற்கே புனல்கலந்தாற் போன்று.

165. குழைமேலுங் கோமா னுயிர்மேலுங் கூந்தல்

மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே

அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்

வல்லோடுங் கொங்கை மடுத்து.

166. வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்

ஈர விளவண்ட லிட்டதே -நேர்பொருத

காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்

ஓராறு பாய வுடைந்து.

167. கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்

செங்கையற்க ணோடிச் செவிதடவ - அங்கை

வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்

விளைபூசற் கொல்யானை வேந்து.

168. தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி

வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய

மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலுந் தானும்

புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு.

சுயம்வர காண்டம் முற்றும்