நளவெண்பா/கலிநீங்கு காண்டம்/பாடல் 361 முதல் 405
புகழேந்திப்புலவர் பாடிய நளவெண்பா
[தொகு]இருதுபன்னன் குண்டினபுரி அடைந்தது
[தொகு]361. ஆமை முதுகி லலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையா னாங்கு.
இருதுபன்னன் வீமராசனுக்குத் தன் வரவு அறிவித்தது
[தொகு]362. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.
வீமராசன் இருதுபன்னனை வினாவியது
[தொகு]363. கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.
இருதுபன்னன் மறுமொழி
[தொகு]364. இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மே லுள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.
நளன் மடைவாயிற் புக்கது
[தொகு]365. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதி லடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து.
நளன் புக்க மடைவாயிற் சிறப்பு
[தொகு]366. ஆதி மறைநூ லனைத்துந் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாம லெல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.
தமயந்தி நளன் செய்யும் மடைத்தொழிலை அறிந்துவரச் செய்தது
[தொகு]367. இடைச்சுரத்தில் தன்னை யிடையிருளில் நீத்த
கொடைத் தொழிலா னென்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து.
தமயந்தி தன் மக்களை நளன்பால் விடுத்தது
[தொகு]368. கோதை நெடுவேற் குமரனையுந் தங்கையையும்
ஆதி யரச னருகாகப் - போத
விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து.
தன் மக்களைக் கண்ட நளன் அவர்களோடு உரையாடியது
[தொகு]369. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.
370. மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோ மெங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் னென்றா ரழுது.
371. ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா வுயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணீ ருகுத்து.
372. உங்க ளரசொருவன் ஆளநீ ரோடிப்போந்
திங்க ணுறைத லிழுக்கன்றோ - செங்கை
வளவரசே யென்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி யெடுத்து.
373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
374. எந்தை கழலிணையி லெம்மருங்குங் காணலாம்
கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு.
375. மன்னர் பெருமை மடைய ரறிவரோ
உன்னை யறியா துரைசெய்த - என்னை
முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.
அச்செய்தியைக் கேட்ட தமயந்தியின் துயரம்
[தொகு]376. கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான்கண்டு
மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தா ளழுது.
377. கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டு மடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ வென்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து.
உள்ள நிலைமையைத் தமயந்தி தன் தந்தைக்கு அறிவித்தது
[தொகு]378. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்
கொற்றத் தனித்தேருங் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலா னென்றாள் குறித்து.
வீமராசன் நளனைத் தோற்றத்தால் அறிய முடியாது வாக்கினால் அறிந்தது
[தொகு]379. போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.
380. செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினா னோக்கித் தெளிந்தா னுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.
வீமராசன் நளனைத் தன் உருக்காட்ட வேண்டியது
[தொகு]381. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்குந் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் னுரு.
நளன் கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்ததும் சுய உருப்பெற்றதும்
[தொகு]382. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.
383. மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோ ரருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.
நளன் மக்கள் அவனைச் சுயவடிவில் கண்டு மகிழ்ந்து வணங்கியது
[தொகு]384. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலருங் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.
தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது
[தொகு]385. பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்
சீதக் களபதனஞ் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.
தமயந்தியின் துயரநிலை
[தொகு]386. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.
வானவர் நளனை வாழ்த்திப் பூமாரி பெய்தது
[தொகு]387. உத்தமரின் மற்றிவனை யொப்பா ரொருவரிலை
இத்தலத்தி லென்றிமையோ ரெம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.
கலி, நளனைத் தன்பால் வரம் கொள்ள வேண்டியது
[தொகு]388. தேவியிவள் கற்புக்குஞ் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகி லொப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன்.
நளன் கேட்ட வரம்
[தொகு]389. உன்சரிதஞ் செல்ல வுலகாளுங் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையே லென்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.
கலி நளனுக்கு வரமளித்து மீண்டது
[தொகு]390. என்காலத் துன்சரிதங் கேட்டாரை யானடையேன்
மின்கா லயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி.
வீமராசன் நளன் முதலியோர்க்கு விருந்தளித்தது
[தொகு]391. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையு மக்களையுங் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.
இருதுபன்னன் நளனிடம் தன் பிழை பொறுக்க வேண்டிப் பின் தன் நகர்க்கேகியது
[தொகு]392. உன்னையா னொன்று முணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீ ரயோத்தியார் மன்.
நளன் தனது மனைவி மக்களுடன் நிடதநாடு சென்றது
[தொகு]393. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேநீ ரளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.
394. தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி யெத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனு நம்பதிதான் மிக்கு.
சூரியோதயம்
[தொகு]395. இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்
கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.
நளன், மாவிந்த நகரைச் சார்ந்த ஒரு சோலையில் தங்கியது
[தொகு]396. மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில்.
நளன் புட்கரனுக்கு அறிவித்தது
[தொகு]397. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணைய முளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.
புட்கரன் நளனைக் கண்டது
[தொகு]398. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டா னெதிர்.
புட்கரன் நளனை நலம் வினாவியது
[தொகு]399. செங்கோ லரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோ லரசன் வினாவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்
யாவர்க்குந் தீதிலவே யென்று.
நளனும் புட்கரனும் மறு சூது ஆடியது
[தொகு]400. தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணைய மெனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து.
நளன் தன் நாடு முதலியன வென்று கொண்டது
[தொகு]401. அப்பலகை யொன்றி னருகிருந்தார் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து.
புட்கரன் யாவும் இழந்து தன் நாடு சென்றது
[தொகு]402. அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.
நளன் தன் நகரை அடைந்தது
[தொகு]403. ஏனை முடிவேந்த ரெத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகர மெய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன்.
நகர மாந்தரின் மகிழ்ச்சி நிலை
[தொகு]404. கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.
(பின்னுரை)
[தொகு]405. வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்து வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடத்திட்டான் பண்டு.
கலி நீங்கு காண்டம் முற்றும்
நளவெண்பா முற்றும்