உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
உடம்பைக் காப்பாற்றும்
ஒன்பது இரகசியங்கள்
பல்கலைப் பேரறிஞர்
தேசிய விருதுபெற்ற நூலாசிரியர்
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
M.A., M. P. Ed., Ph.D., D. Litt., D. Ed., FUWAI
முன்னாள் துணைச் செயலர்,
தமிழ்நாடு கோகோ கழகம்,
தமிழ்நாடு.
எண்.8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 044 - 24332696
நூல் விவர அட்டவணை
நூலின் பெயர் | : | உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள் |
மொழி | : | தமிழ் |
பொருள் | : | உடல் நலம் |
ஆசிரியர் | : | டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா |
பதிப்பு | : | முதல் பதிப்பு - 31, டிசம்பர் 2000 இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009 |
பக்கங்கள் | : | 96 |
நூல் அளவு | : | கிரவுன் |
எழுத்து | : | 12 புள்ளிகள் |
தாள் | : | NS |
ஒளி அச்சு | : | குகன் கம்ப்யூட்டர்ஸ், சென்னை-8. (94442 92899) |
விலை ரூ 30.00 | ||
தயாரிப்பு | : | ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ் |
வெளியீடு | : | ராஜ்மோகன் பதிப்பகம், 8. போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. |
அச்சிட்டோர் | : | கலர் லிங்ஸ், சென்னை-600 005. |
முன்னுரை
உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.
உடம்பு என்பது, உலகத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப, மாற்றம் பெறுகிற தன்மை கொண்டது. மாறுபடுகின்ற உடலமைப்பின் கூறுபாடுகளை, சற்று கூர்ந்து அறிகிறபோது, அங்கே விளைகிற வேறுபாடுகளின் விபரீதமும் நமக்கு நன்றாகவே புரிகிறது.
உடலானது உலகச் சூழ்நிலைக்கேற்ப மாறிக் கொண்டு இருக்கிறது. அதனை நாம் அனுசரித்துவிட்டால், உடல் நலமாக இருக்கும். உறுப்புக்கள் வளமாக செழிக்கும்.
உலக அமைப்புடன் உடல் ஒத்துக் கொள்ளாமல் போகிறபோது, உடலுக்குள் நோய்களும், வலியின் வாய்களும் பேயாய் தின்ன ஆரம்பிக்கும்.
அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அக்கறை கொண்ட நமது முன்னோர்கள் சமையற்கட்டிலே பயன்படும் உணவுப் பண்டங்களில் எல்லாம் மருந்தாக பல பொருட்களை சேகரித்து, விருந்து படைத்து, மகிழ வைத்துச் சென்றனர்.
அதுபோலவே, மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறபோது, அர்த்தம் பொதிந்த மருத்துவச் சொற்களை,
அன்றாடம் பேசி, பழகுவதுபோல் அமைத்துச் சென்றிருகின்றனர்.
ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பேசுகிறபோது, அது உள்ளத்திலே பதிந்துவிடுகிறது. அவ்வாறு பதிந்துபோய், முதிர்ந்துபோன சொற்கள், உள்ளத்திலே உணர்வுகளை மீட்டிக் கொண்டு, மேன்மைப்படுத்த முனைகின்றன.
அவ்வாறு உணர்வுகளை மீட்டுகின்ற உத்வேகமான சொற்கள் ஒன்பதை இங்கே தேர்ந்து எடுத்துக் கொண்டு, அவைகள் காதிலே சொல்லுகின்ற விஷயங்கள் என்ன? கருத்துக்குள்ளே பொழிகிற இரகசியங்கள் என்ன? அவற்றை அறிகிறபோது அடைகிற அதிசயத்தன்மைதான் என்ன? அத்தியாவசியம் என்கிறபோது, அதன் அந்தரங்க நளினம்தான் என்ன? என்பனவற்றை அறிகிறபோது, எல்லோருக்கும் தெரிந்த சொல்லானது, நல் இரகசியமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘வாழ்க்கை’ என்ற சொல் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைக் காட்டுகிறது. ’மனிதன்' என்ற சொல் எப்படிப் பெருமையோடு வாழ வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. சாதாரண சுவாசம் என்று நாம் சலனப்படாமல் கூட இருக்கிறோமே. அந்த சுவாசமானது, எவ்வாறு அம்சமாக மாறுகிறது என்பதையெல்லாம் அறிகிறபோது வாய்விட்டுப் போற்றுகிறோம்.
சாப்பிடுவதில் உள்ள சமத்கார முறையும், உறங்கும்போது எப்படிப்பட்ட உடல்நிலை, மன நிலை இருக்கிறது என்பதையும்; எப்படியிருந்தால் உடல் எப்பொழுதும் அழகாக இருக்குமென்றும், உடை உடுத்துவதில் உள்ள ஒழுக்கம் என்ன? எப்படி இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பதை எல்லாம் ஆலங்கரை விளக்கமாகக் கண் முன்னே நின்று களிப்போடு வழி நடத்துகின்ற மந்திரச் சொற்களை, மனம் கவர்ந்த இரகசியச் சொற்களாக உங்கள் முன் படைத்திருக்கின்றேன்.
வாசகர்கள் இதை மிகவும் ஆர்வமாகப் படித்து, ஆழமாகச் சிந்தித்து, அறிவோடு பின்பற்றுகிறபோது கிடைக்க வேண்டிய எல்லா இன்பங்களும், நன்மைகளும் கிடைக்கும். கேடுகளையும் பாடுகளையும் துடைக்கும். உணர்ச்சிகளின் சேட்டைகளையும் ஓட ஓட விரட்டவும் செய்யும்.
இந்தப் பெறுதற்கரிய வாய்ப்பைப் பெறுங்கள். கற்று மகிழுங்கள். பெற்றுத் திகழுங்கள் என்று இந்த நூலை, உங்கள் வசம் உங்கள் கரங்களில் ஒப்படைக்கின்றேன். ஒளிதீபமாய் இந்த இரகசியங்கள் உங்கள் உள்ளத்திலே உயிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தட்டும். இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம். அன்பான வாழ்த்துக்கள்.
அன்பன்,
எஸ்.நவராஜ் செல்லையா
பொருளடக்கம்
உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்!
வாழ்க்கையில் வெல்வது என்பது நமது இலட்சியமாகும். அந்த வேள்விக்கு வழிகாட்டுவது இலக்கியமாகும்.
எதிலும் வெல்வது என்பது, எல்லோருடைய எண்ணங்களின் எழுச்சிதான் என்றாலும், எத்தனை பேர் வெற்றி மேடையிலே வீற்றிருக்கின்றார்கள்? வெற்றியின் வாசலிலே வந்து எத்தனையோ பேர் காத்துக் கிடக்கின்றார்கள்? காலம் கை கொடுக்குமா? கற்பனை சுகமளிக்குமா? கடவுளின் கருணை கடாட்சம் வெளிப்படுமா? என்று, பொய் மானை விரட்டிக் கொண்டு புயல் வேகத்தில் போகிற காலில்லா முடவனைப் போலவே, காலம் கழிக்கிறார்கள்.
சொல்லவந்ததைச் சுறுக்கென்று சொல்லி விட வேண்டும். இழுத்துப் பிடித்துக் கொண்டு, கேட்பவரின் காதுகளை அறுத்துக் கொண்டு, ஒரு நூதன காரியத்தைச் செய்கின்ற மற்ற எழுத்தாளர்களைப் போலல்லாமல், நாம் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம். அன்னையின் வயிற்றில் இருந்து “ஆ” என அலறிக் கொண்டு மண்ணிலே பிறந்து, விண்ணிலே பறந்து விதவிதமான கற்பனைகளில் மிதந்து, சிறகொடிந்த பறவைபோல செய்வதறியாது, தன்னையே இழந்து, கடைசியிலே, “ஓ” என அலறி உயிரை விடுகின்ற ரீங்கார நிகழ்ச்சிகளின் தொகுப்பல்ல வாழ்க்கை !
அகத்திலே ஊற்றெடுத்து, அந்தச் சுகத்திலே பெருக்கெடுத்து, அவற்றை முகத்திலே வெளிப்படுத்திக் காட்டுகின்ற வித்தைக்காரன் சத்தம்தான் வார்த்தைகள்.
ஒளிந்து கிடக்கின்ற உள்ளத்தை உலகத்திற்குப் பிழிந்து காட்டுகின்ற, உணர்ச்சி ஒலிகள்தான் வார்த்தைகள். வார்த்தைதான் வாழ்க்கை - வாழ்க்கைதான் வார்த்தை. ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கை அவன் பேசுகின்ற வார்த்தை போலவே அமைந்துவிடுவதும் உண்டு.
கம்பராமாயணத்திலே, கொம்பனாகக் காட்சியளிக்கின்றவன் கும்பகர்ணன். காலத்தால் அழியக்கூடாது என்பதற்காகக் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்கின்றான். தனக்கு நித்தியத்துவம் வேண்டும் என்று நினைத்து, நினைத்து நெடுங்காலம் நின்று பார்த்தான். கடைசியாகக் கடவுள் வந்தார். “உன் தவத்திற்கு மெச்சினோம். என்னப்பா வேண்டும்?” என்றார்.
கும்பகர்ணனோ உரைக்கவில்லை. உளறிவிட்டான். நித்தியத்துவம் வேண்டுமென்பதற்குப் பதிலாக நித்திரைத்துவம் வேண்டுமென்றான். அந்த வடிகாலற்ற வார்த்தையே அவனது வாழ்க்கையாக மாறிற்று.ஓங்கி உயர்ந்து உல்லாசமாக வாழ வேண்டிய கும்பகர்ணன், தூங்கி வழிந்து வாழ்க்கையையே தொலைத்து விட்டான். அவனது வார்த்தையும் வாழ்க்கையும் இலக்கியம் சிந்திக்காட்டுகின்ற இதமான இன்பமாக அல்லவா காட்சியளிக்கின்றது!
காவிய உலகத்தை விட்டு விடுவோம். இந்தக் கலிகாலத்திலே நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை நினைவிற்குக் கொண்டு வருவோம். என்னோடு ஒரு கல்லூரியில் பணியாற்றிய தமிழாசிரியர், ஒருவர் வார்த்தைகளைத் தனக்குச் சாதகமாக வளைத்து ஒடித்து வசமாக்கிக் கொள்கிற வித்தை கற்ற வித்தகர். அந்த ஞானத்தை அபரிமிதமாகப் பெற்றவர்.
அவருக்கும் ஒரு ஆங்கில ஆசிரியருக்கும் “யார் பெரியவர்?” என்பதில் ஒரு உள்மனப் போராட்டம். அவரை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்கைப் போல, இரண்டு காலில் தவமிருந்தார் தமிழாசிரியர்.
அந்த நாளும் பஸ் வடிவத்தில் வந்தது. கல்லூரி மாணவர்கள் சிலருக்கும், ஓட்டுனர், கண்டக்டருக்கும் இடையே ஒரு பிரச்சினையின் காரணமாகக் கை கலப்பு ஏற்பட்டது. ஆங்கிலப் பேராசிரியர் அங்கே வந்தார். “படிக்காத கூட்டம் போல (Illiterate mobs) போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். இடத்தை விட்டு அப்பாலே போங்கள்” என்று மாணவர்களைத் திட்டி விரட்டும் போது, திடீரென அங்கே தோன்றினார் நம் தமிழாசிரியர். அவரது படித்த அறிவில் வெடித்தது ஒரு ஒளி வெள்ளம். எதிராளியின் வார்த்தையைத் தனக்கேற்றபடி வளைத்தார். மரியாதையுள்ள மாணவர்களைப் பார்த்து “படிக்காத நாய்கள் (Illiterate dogs) என்று வெறித்தனமாக உங்களைப் பேசுவதா? ஏசுவதா?” என்றார்.
அவரது பாசமழையின் படபடப்பைப் பார்த்த மாணவர் கூட்டம், அவர் பக்கம் சாய்ந்தது. ஆங்கிலப் பேராசிரியரைக் கல்லூரியை விட்டு மாற்று என்று - கல்லூரிக்கு வெளியே நின்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் அவரை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றி அனுப்பியது.
வெற்றி பெற்ற தமிழாசிரியர் தான் பெற்ற வெற்றியின் இரகசியத்தை, கண்டவர்களுக்கும், காணாதவர்களுக்கும் சொல்லிக் கொண்டு திரிந்தார். அவர் பேசுகிற வார்த்தையும் அர்த்தம் உள்ளதுதானே.
அவர் குடும்பத்திலுள்ள ஒரு பெண் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணிடம் சில மாணவர்கள் செய்த சில்மிசத் தகவல், தமிழாசிரியரிடம் கொண்டு செல்லப்பட்டது. கோபம் கொண்ட அவருக்கு வார்த்தைகள் கொப்பளித்துக் கொண்டு வந்தன.
“காமர்ஸ் மாணவர்கள் எல்லோரும் காமுகர்கள்” என்று அடுக்கு மொழியில் அனல் பறக்கப் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட மாணவர்களில் சிலர், “காமுகர்கள்” என்ற வார்த்தையைச் சொன்னதற்காக தமிழாசிரியர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நொதித்து எழுந்தனர்.
பயந்துபோன தமிழாசிரியர், தன் வார்த்தை ஜாலத்தினால் வேறுவிதமாகத் திசைதிருப்பத் தொடங்கினார்.
காமர்ஸ் மாணவர்கள் என்று நான் சொல்லவில்லை. நான் பொதுவாகச் சொன்னேன் என்றார். அப்படி யென்றால் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எல்லாரும் காமுகர்களா என்று கோஷம் போட்டு கொடிபிடித்து கல்லூரியையே “உண்டு, இல்லை” என்று ஆக்கி விட்டார்கள்.
பயந்து போன தமிழாசிரியர் எங்கோ போய்ப் பதுங்கிக் கொண்டார். அவரது வார்த்தை ஜாலம் எடுபடாமல் போயிற்று. சனிபிடித்த அவரது நாக்கு ஒரு சரித்திரமே படைத்துவிட்டது.
பல நாட்கள் நடைபெற்ற ஸ்டிரைக் அவருக்கு எதிராகப் பயங்கரமாக மாறியதால், அவர் கல்லூரிப் பணியிலிருந்து ஒர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக மாற்றப்பட்டார். இங்கே இவரது வார்த்தை அவரை வாழவைக்கவில்லை.
ஆகவேதான், வார்த்தைதான் வாழ்க்கையாக வ்டிவெடுக்கிறது என்பதைச் சொல்ல வந்தோம்.
வாய் என்றால் வழி என்று அர்த்தம். நம் உடலிலே 'மூன்று வாய்கள் இருக்கின்றன. மலங்களை வெளியேற்றும் வாய். அது எருவாய். ஒன்று மக்களை உருவாக்கும் வாய். அது கருவாய். மனங்களை வெளிப்படுத்தும் வாய். அது திருவாய். அந்தத் திருவாயிலிருந்து தெள்ளருவியாகச் சொல்லருவியாக வருவதுதான், நாம் ஒடுகிற முயற்சியாகவும், தேடுகிற வாழ்க்கையாகவும் அமைந்துவிடுகிறது.
‘நானே உங்களுக்கு வார்த்தையாக விளங்குகிறேன்’ - என்பது ஒரு தெய்வத்தின் திருவாய் மொழியாகும்.
வார்த்தல் என்பதுதான் வார்த்தையாக வடிவெடுத்து வந்திருக்கிறது. வார்த்தல் என்றால் வழங்குதல், தந்து காத்தல், பெறுபவர்க்குப் பேரின்பம் ஊட்டுதல் என்பதாகும். நம்மை நாமே நலப்படுத்திக் கொள்ள, நமது வழிநடைப் பாதையைப் பலப்படுத்திக் கொள்ள, நெஞ்சுக்கு அமைதி தரும் விதமாக நெறிப்படுத்திக் கொள்ள வார்த்தைகள் உதவுகின்றன. 'பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன். பேசிய பிறகு அந்த வார்த்தை தான் உனக்கு எஜமானன்' என்பது பெரியோரின் வாக்கு. பேசாதவரை ஒரு மூடன் ஞானியாகத் தெரிகிறான் என்பதும் நம்மை வியக்க வைக்கின்ற விழுமிய வார்த்தையாகும்.
வாழ்க்கை வாழ்வதற்கே
எல்லோரும் ஏற்றுக் கொண்ட வேதாந்தம், சித்தாந்தம் இதுதான். வாழ்வதற்காகப் பிறந்தோமா? பிறந்ததற்காக வாழ்கிறோமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும், இடைப்பட்டு, தடைப்பட்டு, நடை கெட்டு, விடையற்று, விழுந்தும் விழாமல், அந்தரத்திலே இருக்கும் இந்திரலோகம் போல, அரட்டி, மிரட்டிக் கொண்டு இருக்கும் கேள்விகள்தான் இவை. எதற்காகப் பிறந்தோம் என்ற கேள்வி நியாயமானது தான். எதறகாக வாழ்கிறோம் என்று கேட்பது அநியாயமல்லவா?
ஜெகத்திலே தோன்றி இருக்கும் ஜீவன்கள் கோடானகோடி என்றால், அந்தக் கோடிகளிற் கோலோச்சி வந்த ஜீவன் மனிதப் பிறப்பல்லவா? அப்படிப்பட்ட ? மகாமேன்மையான, மகத்தான பிறப்பை, ஒராயிரம் காலம், பாரத் தவமிருந்து, வாராது வந்த மாமணியாகப் பெற்ற, இந்த மனித ஜீவியத்தை எதற்கு என்று கேட்டால் நிலைமை புரியவில்லையா? உண்மை தெரிய வில்லையா? நுண்மையும், திண்மையும் தெளிய வில்லையா?
“வாழ்க்கை இரகசியம்”
ஆக இந்த உலகில் மனித வடிவெடுத்து வந்ததற்காக வாழ வில்லை. வந்ததற்காக வாழ்வது என்பது விலங்கினம்போல் ஆகும். நின்று கொண்டே வாழ்ந்து மடிகின்ற தாவரங்கள் போலாகும்.
மனிதர்களாகிய நாம் எவ்வளவு பேறு பெற்று வந்திருக்கிறோம்! நமக்குச் சிரிக்கத் தெரியும். சிந்திக்க முடியும் பொலபொல வென்று பேச முடியும். பெரிய பெரிய வேலைகளை எல்லாம் திறமையாகச் செய்யவும் முடியும்
நம்மை வானளாவ பெருமைபடுத்திக் காட்டுகிற பேச்சு இருக்கிறதே. அதுதான் நமக்கு இறைவன் கொடுத்த பெரும் பொக்கிஷம் கண்முன்னே நடமாடும் காமதேனு.
அற்புத ஆற்றல் கொண்ட ஐராவதம. அனைத்தையும் அள்ளித்தருகின்ற அமுத சுரபி, கை நிறைய அள்ளித்தரும் கற்பகத்தரு.
அந்த அற்புதமான பேச்சைத்தான் ‘வார்த்தை’ என்றார்கள்.
அகத்திலே சுகமாகத் தோன்றி, நீராக ஒழுகி, நினைவாகப் பெருகி, ஒலியாக வருகிற அந்தப் பேச்சுதான், சிந்தையிலிருந்து ஊறிக் கசிந்து பேச்சாகப் பீறிட்டு வருகிறது. அந்தப் பேச்சின்பத்தை வைத்துக் கொண்டு தான் நமது மனிதகுல வாரிசுகள் மெய் மறந்து அலைகின்றன. நிலை மறந்து ஆடுகின்றன. தலைக்கனம் தாங்காமல் தள்ளாடிக் கொண்டு திரிகின்றன.
ஏன் இந்த நிலை மாற்றம்? ஏன் அந்தத் தடுமாற்றம்? அவர்கள் வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகளில் தரம் இல்லை. உரம் இல்லை. தகுதியும், திறமுமில்லை.
வாயிலிருந்து வருகிற வார்த்தைகள்தான் வாழ்க்கையை வடிவமைக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உண்மையாகவே உணர்ந்து இருந்தார்கள்.
வார்த்தைகள்தான் வாழ்க்கையை வளமாக்குகிறது என்கிற அனுபவங்களை அறிவுபூர்வமாக அறிந்து இருந்தார்கள். அதனால்தான் வார்த்தைதான் வாழ்க்கை. வாழ்க்கைதான் வார்த்தை என்ற ஒரு முழுமையான முடிவுக்கும் வந்திருந்தார்கள்.
இந்த முடிந்த முடிவினைத் தங்கள் சந்ததியார்களுக்கு நேரடியாகச் சொல்ல விரும்பினார்கள். சொல்ல விரும்பியதை வெளிப்படையாகச் சொல்லலாமா? அல்லது மறைமுகமாகச் சொல்லலாமா என்பதில் எற்பட்ட குழப்பமான நிலையில், மறைமுகமாகச் சொன்னால்தான் அதற்கு மரியாதை உண்டு என்று, தமிழர்கள் மரபிலேயே ரகசியமாகவே சொன்னார்கள்.
இதிலே என்ன சிறப்பு அம்சம் என்றால், சொன்னதை எல்லாம் வெளிப்படையாகத்தான் சொன்னார்கள். சொல்ல விரும்பிய விளக்கத்தை மட்டும் இரகசியமாகச் சொல்லிவிட்டார்கள்.
அன்றாடம் வாழ்க்கையை நடத்தக்கூடிய அவசியமான வார்த்தைகள் எல்லாம் வாழ்க்கையின் இரகசியத்தைச் சுமந்து கொண்டுதான் இருந்தன. அவற்றை ஆர்வத்தோடு பேசிய மக்களும் அர்த்தம் புரியாமலேயே பேசிப் பேசி மகிழ்ந்தார்கள். இருந்தாலும், வாழ்க்கையின் இரகசியத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. விண்டு பிடிக்கவும் முடியவில்லை.
வேடிக்கையாகச் சொல்வார்கள். “நாய்க்குக் கிடைத்தது தெங்கம்பழம்” என்று, முழுத்தேங்காயை உருட்டிக் கொண்டு இருந்த நாயின் பயனற்ற வேலை போல, மக்களின் வாயிலும் வந்த சொற்கள் காரியங்களைச் செய்ய உதவின. ஆனால், கருத்தை விளக்கவில்லை.
வாழ்க்கையை வாழ்வது ஒரு கலை என்றால், அதைப் பிறர் போற்றும் பெருமையுடன் வாழ்வது ஒரு தெய்வீகக் கலையாகும்.அப்படிப்பட்ட தெய்வீகக் கலையுடன், திவ்யமாக வாழும் ஒரு வாழ்க்கைக் கலையைத்தான் நமது முன்னோர்கள், நளினமாக நம்மிடம் தந்து போய் இருக்கிறார்கள்.
அத்தகைய நளினமும், ரம்மியமும் மிகுந்த இரகசியப் பெட்டகங்களாகிய வார்த்தைகளின் இரகசியங்களை இனிவரும் பகுதிகளில் நாம் பிரித்துப் பார்க்க இருக்கிறோம்.
இந்த இரகசியம் வாழ்க்கைக்கு அவசியமானது, அதே சமயத்தில் வாழ்வுக்கு வசியமானது. கேட்பதற்கு அதிசயமானது. கேட்ட பிறகு அதிரசமானது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நூறு இரகசியங்களை உடைத்துப் போட்டாலும், நமக்கு வேண்டிய அதி முக்கிய இரகசியங்களையே இங்கே எடுத்துக் கொள்ள இருக்கிறோம். நாம் சொல்லத் தயாராகிவிட்டோம். அவற்றை ஏற்பதும், நோற்பதும் உங்களது திறன். உங்களது கடன், உங்களது நலன்.
☐☐☐