கலைக்களஞ்சியம்/அறுவடை எந்திரங்கள்
அறுவடை எந்திரங்கள் (Harvesting machinery): புல், தானியப் பயிர்கள், வேர்ப்பயிர்கள் ஆகியவற்றை அறுவடை செய்ய வெவ்வேறு வகை எந்திரங்கள் தேவை. அறுவடை என்பது முன்னர்க் கடினமானதும், நெடுநாட் செல்லத் தக்கதுமான செயலாக இருந்தது. அரிவாளும் கருக்கரிவாளுமே பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை அறுவடை செய்யும் கருவிகளாகப் பயனாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேனாடுகளில் அறுவடையை எளிதிலும் திறமையாகவும் செய்யும்
எந்திரங்கள் வழக்கத்திற்கு வந்தன. இந்நாளில் அங்கே பலவகையான அறுவடை எந்திரங்கள் பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவிலும் மற்றக் கீழ்நாடுகளிலும் இன்னும் அறிவாள் ஒன்றே விவசாயியின் ஆயுதமாக இருந்துவருகிறது. போரடிக்கும் எந்திரங்கள் சில நமது நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது விவசாயியின் பொருளாதார நிலை திருந்தாதவரை, மாட்டைக் கொண்டு போரடிக்கும் பழங்கால முறைகள் மறையமாட்டா.
புல்வெட்டி (Mower) : கால்நடைகளுக்குத் தீவனமாகும் புல்லை வெட்ட இந்த எந்திரம் பயனாகிறது. கால் நடைகளைக் கொண்டும், டிராக்டர்களைக் கொண்டும் இதை இயக்கலாம். இதில் ஓர் இருசில் பொருத்தப்பட்ட இரு சக்கரங்கள் இருக்கும். ஒரு சக்கரத்தின் அருகே சாய்வான விளிம்புள்ள பல்லிணையொன்று பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு பற்சக்கரத்தை ஓட்
டும். இச்சக்கரத்திலுள்ள ஒரு முளையுடன் ஒரு மரக்கம்பு பொருத்தப்பட்டிருக்கும். எந்திரத்தின் அறுக்கும் உறுப்பை இக்கம்பு இயக்கி, அதை வயலில் இழுத்துச் செல்லும்போது மேலும் கீழும் அசைக்கிறது. அறுக்கும் உறுப்பில் மூன்றங்குல இடைவெளியில் வரிசையாகக் கூரிய முளைகள் உள்ளன. இவற்றினிடையே அகப்படும் புல்லை வேகமாக இயங்கும் கத்தி வெட்டிவிடுகிறது. அறுக்கும் சட்டத்தின் அகலத்தை ஒட்டி இந்த எந்திரத்தின் அளவு குறிப்பிடப்படுகிறது. கால்நடைகளால் இயங்கும் எந்திரத்தின் அளவு 6 அடி. டிராக்டரால் இயங்கும் புல்வெட்டியின் அளவு 12 அடி. இந்த அளவு ஓர் அடிக்கு 1½ ஏக்கர் புல்வெளியை ஒரு நாளில் அறுவடை செய்யலாம். தானியப் பயிர்களை வெட்ட இவற்றைப் பயன்படுத்தினால் சேதம் அதிகமாகும்.
பயிர்வெட்டி (Reaper) : அறுவடை எந்திரத்தின் தத்துவத்தையும் அமைப்பையும் கொண்ட இந்த எந்திரத்தில் அறுக்கும் உறுப்பிற்குப் பின்னால் ஒரு மேடை இருக்கும். அறுக்கும் சட்டத்தின்மேல் நகரும் ஓர் உருளை தானியப் பயிர்களைச் சட்டத்தின் மேல் அழுத்துகிறது. வெட்டப்படும் பயிர் மேடையின் மேல் சேரும். மேடை நிறைந்ததும் பயிரை ஒன்றாகச் சேர்த்து வெளியே தள்ளிவிடலாம். இவ்வாறு அங்கங்கே தள்ளப்படும் பயிரைப் பின்னால் ஒன்றாகச் சேகரித்துக் கொள்ளலாம்.
பயிர் கட்டி (Binder) : இது வெட்டப்படும் பயிரைக் கட்டாகக் கட்டி வெளியே தள்ளுகிறது. வெட்டும் உறுப்பின் பின்புறத்தில் ரப்பர் வைத்த கித்தான் பட்டையொன்று நகரும். இது வெட்டப்பட்ட பயிரை ஓர் உயர்த்திக்குக் கொண்டு செல்கிறது. இந்த உயர்த்தி அதை வேறொரு அமைப்பிற்குக் கடத்தும். இது பயிர்களைச் சேகரித்து நூலினால் கட்டி வெளியே தள்ளும். குதிரையினால் இழுத்துச் செல்ல ஏற்றவாறு இது முதலில் அமைக்கப்பட்டது. தற்காலத்திலே மோட்டார் எஞ்சின்களால் இயக்கப்படும் இந்த எந்திரத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிழங்கு தோண்டி (Potato digger) : மேனாடுகளில் விளையும் கிழங்குப் பயிர்களில் உருளைக்கிழங்கு முக்கியமானது. கிழங்கு தரையினடியில் இருப்பதால் இதை அறுவடை செய்ய வேறுவகை எந்திரம் தேவையாகிறது. முன்னர் நீண்ட சட்டங்கள் கொண்ட கொழுவையுடைய கலப்பையினால் கிழங்குகளைத் தோண்டி யெடுத்தார்கள். ஆனால் இக்கருவியினால் கிழங்குகளைத் தோண்டி எடுக்கையில் அதனுடன் அதிகமான மண்ணும் கலந்து வந்தது. ஆகையால் இதைத் திருத்தி அமைத்தார்கள். இந்த எந்திரத்தின் தற்கால வடிவம் சுழலும் எந்திரம் என்றும், உயர்த்தி எந்திரம் என்றும் இருவகைப்படும். இவ்விருவகைகளிலும் வெவ்வேறு வடிவுள்ள கொழுவானது நிலத்தினுட் சென்று கிழங்கைத் தோண்டி எடுக்கிறது. மண்ணுடன் கலந்த கிழங்குகள் மேலே வந்து ஓர் அசைந்தாடும் கடத்தியை அடையும். இது எந்திரத்தின் சக்கரங்களின் சுழற்சியினால் இயங்குகிறது. கடத்தியின் அசைவினால் கிழங்கிலுள்ள மண் வேறாகப் பிரிகிறது. சுழலும் எந்திரத்தில் கடத்திக்குப் பதிலாகச் சுழலும் உறுப்பொன்று இருக்கும். இது கிழங்குகளைச் சேகரித்து உடனுக்குடன் எட்ட எறிகிறது.
போரடி எந்திரம் (Thresher) : பயிரை அறுவடை செய்த பின், அதிலிருந்து தானியத்தை வேறாகப் பிரிக்க வேண்டும். சமதளமான நிலத்தில் அதைப் போட்டுத் தடிகொண்டு அடித்தோ, கால்நடைகளை விட்டு மிதித்தோ போரடிப்பது பழைய முறையாகும். தற்கால எந்திரங்கள் தானியத்தைப் பிரிப்பதோடு, அதைத் தூற்றிப் பதரையும் மண்ணையும் அதிலிருந்து பிரிக்கின்றன. பெரிய எந்திரங்களில் தானியங்களை வகைப்படுத்தவும் மெருகூட்டவும் அமைப்புக்கள் இருப்பதுண்டு.
சுமார் 1½-2 அடி அகலமுள்ள சிறு எந்திரங்கள் முதன் முதல் பயனாகிவந்தன. குதிரைகளால் இழுக்கப்பட்ட இவற்றில் போரடிக்கும் உருளையானது பல்லிணையால் இணைக்கப்பட்டுத் திறமையாக வேலை செய்தது. தற்கால எந்திரங்கள் 5-6 அடி. அகல
முள்ளவை. இவை வார்ப்பட்டையால் டிராக்டர் கப்பியுடன் இணைக்கப்பட்டு, 15-20 குதிரைத் திறன் ஆற்றலுடன் இயங்கும்.
போரடி எந்திரத்தின் முக்கிய உறுப்புக்கள்: கொட்டும்புனல் (Feed hopper), அடி அறை (Beater chamberi) வைக்கோல் ஆட்டி (Straw shaker). ஊதி, வகைப்படுத்தும் சல்லடைகள், மூட்டை கட்டும் உறுப்பு ஆகியவை. புனலின் வழியே பயிரைக்
கொட்டினால் அது அடி அறையை அடைகிறது. அங்கு நிமிடத்திற்கு 1000 செலுத்தித் தானியத்தைப் பிரிக்கிறது. வைக்கோலானது ஆட்டியை அடைந்து, ஒன்று சேர்ந்து, எந்திரத்தின் பின்புறத்தை அடைகிறது. தானியமும் பதரும் அறையிலிருந்து வெளிவரும்போது ஊதியானது காற்றை ஊதிப் பதரைப் பிரிக்கிறது. தானியமும், கனமான அசுத்தங்களும் வகைப்படுத்தும் சல்லடைகளின் வழியே சென்று, துப்புரவாகிச் சுத்தமான தானியம் வெளியே வந்து, ஓர் உயர்த்தியின் பட்டையை அடைந்து மூட்டைக்குள் கொட்டப்படுகிறது. இந்த எந்திரத்தின் வேலைத்திறன் இதன் அகலத்தைப் பொறுத்தது. இரண்டடி அகலமுள்ள எந்திரம் சுமார் 16-20 நிமிடங்களில் ஒரு மூட்டைத் தானியத்தை அளிக்கும்.
கூட்டு எந்திரம் (Combine) : 1900ஆம் ஆண்டு வாக்கில் மோட்டார் எஞ்சின் விவசாயத்தில் வழக்கத்திற்கு வந்தது. அதிலிருந்து விவசாய எந்திரங்கள் விசேஷ அபிவிருத்திகளை அடைந்தன. புல்வெட்டி, பயிர்வெட்டி, பயிர்கட்டி, போரடி எந்திரம் ஆகிய எந்திரங்கள் அனைத்தின் தத்துவங்களையும் கொண்ட கூட்டு எந்திரம் தோன்றியது. அமெரிக்காவில் இது முதல் உலகப்போருக்குப் பின்னும், பிரிட்டனில் 1928ஆம் ஆண்டிலும் வழக்கத்திற்கு வந்தது. ரஷ்யா முதலிய வேறு பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான கூட்டு எந்திரங்கள் தற்போது வழக்கத்தில் உள்ளன. இந்த எந்திரத்தை அறுவடைக்குத் தயாரான வயலின்மேல் ஓட்டிச் சென்றால், இது பயிரை அறுத்துப் போரடித்துத் தூற்றித் துப்புரவு செய்து தானியத்தை மூட்டை கட்டிவிடுகிறது.
கூட்டு எந்திரங்கள் இருவகைப்படும். அவற்றில் ஒரு வகை எந்திரம் தானாக இயங்குகிறது. இதன் வேலைத்திறன் மண்ணின் தன்மையையும் பயிரின் தன்மையையும் பொறுத்து வேறுபடும். எந்திரத்தின் அகலத்தில் ஓர் அடிக்கு எட்டு மணி நேரம் வேலை செய்து, 1222 ஏக்கர் நிலம் அறுவடை செய்யலாம். போரடிக்கப்பட்ட வைக்கோல் வயலில் விடப்படும்.
வைக்கோல் துடைப்பங்களும் சேகரிகளும் (Hay sweeps and rakes) : புல் வெட்டியானது புல்லை வெட்டி வயலில் கிடத்துகிறது. கூட்டு எந்திரம் போரடித்த வைக்கோலை வயலில் விட்டுவிடுகிறது. இந்த வைக்கோலை ஒன்றாகச் சேகரிக்கத் துடைப்பங்களும் சேகரிகளும் பயனாகின்றன.
வைக்கோல் துடைப்பம் டிராக்டரின் முன்னால் பொருத்தப்படும் சீப்புப்போன்ற உறுப்பு. டிராக்டர் முன்னேறும்போது வைக்கோலும் புல்லும் முன்னால் சேரும். இதைத் தூக்கி ஒரு மூலையில் குவித்துவிடலாம். சேகரி என்ற அமைப்பு, குதிரையுடனோ, டிராக்டருடனோ இணைக்கப்படுகிறது. இது புல்லையும் வைக்கோலையும் ஒன்றாகச் சேகரித்து, வயலில் அங்கங்கே சீராகக் குவித்து வைக்கும். இதில் ஒருவகை எந்திரம் வைக்கோலைச் சீரான வரிசையாகக் குவித்து வைக்கும்.
புல் கட்டி(Hay baler) : இது இருவகைப்படும். முதலாவதை வைக்கோல் குவியலின் அருகே நிலையாக அமைத்து, இதிலுள்ள பெட்டிக்குள் புல்லைத் திணித்து, மேலிருந்தும் பக்கவாட்டிலும் எந்திரத்தால் அழுத்துகிறார்கள். உள்ளிருக்கும் புல் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் எந்திரம் அதைத் தானாகவே கட்டிவிடுகிறது.
இரண்டாம் வகைப் புல்கட்டியை டிராக்டர் வயலில் இழுத்துச் செல்லும். அப்போது அது புல்லைப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டிக்குள் தள்ளுகிறது. அங்கு அது ஓர் எஞ்சினின் உதவியால் மேலும் பக்கவாட்டிலும் அழுத்தப்பட்டுக் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் கட்டுக்களாகக் கட்டப்படுகிறது.
கையினால் வைக்கோலை அழுத்தும் எந்திரங்களைக் கொண்டு 1948ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் சோதனைகள் செய்தார்கள். நூறு ராத்தல் நிறையும் 4’×2’×2’ அளவுமுள்ள கட்டைக் கட்ட 15 நிமிடம் ஆகும் எனக் கண்டார்கள். ஆனால் சுமார் ரூ.1,500 விலையுள்ள இந்த அழுத்தியை வழக்கத்திற்குக்கொண்டு வர முடியவில்லை.