உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அவரை

விக்கிமூலம் இலிருந்து

அவரை ஒரு சுற்றுக்கொடி. ஓராண்டு அல்லது சில ஆண்டுகள் வாழ்வது. வெப்பமான பிரதேசங்களிலெல்லாம் வளர்வது. இதன் தாய் நாடு இந்தியா. காட்டு அவரை வகைகள் சென்னை, வங்காளம் ஆகிய பகுதிகளில் வேலிகளில் படர்ந்திருக்கும். இந்தியாவில் இது நாடு முழுவதும் 7000 அடி உயரம் வரையிலும் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து எகிப்து, மேற்கு ஆசியா, சீனா, ஜாவா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பரவிற்று. அவரையில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. ஒன்று புன்செய்ப் பயிர். அது மொச்சை எனப்படும். மற்றொன்று வீட்டுத் தோட்டப்பயிர், மொச்சை சென்னை, பம்பாய், மத்தியப் பிரதேசம், பீகார் முதலிய பாகங்களில் விளைகிறது. மொச்சையில் சில வகைகளே உண்டு. அவற்றில் கறுப்பு, பழுப்பு, வெள்ளை, சிவப்பு விதைகள் உண்டு. வீட்டுத் தோட்டங்களில் பயிராகும் அவரையில் அநேக வகைகள் உண்டு. காயின் நீளம், அகலம், நிறம், மணம், சுவை, செடியின் நிறம், பூவின் நிறம் இவற்றிலெல்லாம் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகை அவரைகள் அழகுக்காக வளர்க்கும் செடிகளாக இருக்கின்றன.

புன்செய் நிலங்களில் கேழ்வரகு, சோளம், ஆமணக்கு முதலியவற்றோடு சேர்த்து மொச்சையைப் பயிரிடுகின்றனர். இதைமட்டும் தனியாகப் பயிர் செய்வதில்லை. விதைக்காகவே மொச்சை பயிரிடப்பட்டாலும், திருநெல்வேலி போன்ற சில இடங்களில் இது கால்நடைத் தீவனத்திற்கும், பசுமை உரமாகப் பயன்படுத்தவும் பயிரிடப்படுகிறது.

பயிர் செய்தல் : மொச்சை பலவிதமான நிலங்களிலும் பயிராகிறது. ஆயினும் குறுமண் நிலத்தில் நன்றாக விளைகிறது எட்டு அல்லது பத்து அடிக்கு ஒரு வரிசையாக விதைகளை நடுவார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 5-8 ராத்தல் விதை வேண்டும். பொதுவாக இதை ஆனி, ஆடி மாதங்களில் விதைத்து, மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 400 ராத்தல் வரையில் மொச்சைக்கொட்டை உண்டாகும். தோட்ட அவரை வகைகளில் ஒரு கொடியிலிருந்து 60-100 ராத்தல் காயைப் பெறலாம்.

மொச்சைப் பயிரில் விழும் பூச்சிகளில் அதிசூரா அட் கின்சனை (Adisura atkinsoni) என்னும் விட்டிலின்

அவரை-பல வகைகள்
உதவி : பருப்பு ஆராய்ச்சி நிபுணர்

புழு, காயையும் விதையையும் தின்றுவிடும். நாற்றமடிக்கும் பச்சை அவரைப்பூச்சி, இளங்கொடி, காய் இவைகளின் சாற்றை உறிஞ்சும். காமோக்சின் (Gam' moxene) என்னும் மருந்தைத் தூவினால் இப்பூச்சிகள் விழாமல் ஓரளவுக்குத் தடுக்கலாம். விதையில் பூச்சி உண்டாகாமல் இருப்பதற்கு அவ்வப்போது உலர்த்திச் சொத்தை விதைகளைப் புடைத்து எடுத்துவிட வேண்டும். விதைப்பதற்காக வைத்திருக்கும் மொச்சைக் கொட்டையைச் செம்மண் பூசி வைக்கலாம். மொச்சையும் அவரையும் நல்ல உணவுப் பொருள்கள். அவரையின் பசிய விதையையும், காய்ந்த கொட்டையையும், காய் முழுவதையும் கறி சமைக்கலாம். மொச்சையைக் கொட்டையாகவும் பருப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.

சீனதேசத்தில் இதிலிருந்து ஒருவித சேமியா செய்கிறார்கள். மொச்சைப்பொட்டு கால்நடைகளுக்கு நல்ல தீனி. அவரையிலையும் மஞ்சளும் அரிசிமாவும் கலந்து தோலில் உண்டாகும் கரப்பானுக்குப் பற்றுப் போடுவார்கள். காதுவலிக்கு இலையின் சாற்றையும் பிழிவதுண்டாம். காயின் சாற்றைக் காதுவலிக்கும் தொண்டைவலிக்கும் அஸ்ஸாம் நாட்டில் போடுகிறார்கள்.

குடும்பம்: லெகுமினோசீ (Leguminoseae); இனம் : டாலிகாஸ் லாப்லாப் (Dolichos lablab). டி. கே. பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவரை&oldid=1454107" இலிருந்து மீள்விக்கப்பட்டது