காற்றில் வந்த கவிதை/சீதனம்

விக்கிமூலம் இலிருந்து
சீதனம்

ரு வேடிக்கையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. உழவர்களான அண்ணனும் தம்பியும் அந்தச் சம்பவத்திற்குப் பாத்திரமாக இருந்தார்கள்.

தம்பி காலை நொண்டி நொண்டி ஒரு மாலை நேரத்திலே வீட்டுக்கு வந்தான். உண்மையில் அவன் காலில் ஒரு தொந்தரவும் இல்லை. வேண்டுமென்று அவன் அப்படிப் பாசாங்கு செய்து நடிக்கிறான். வீட்டிலே அவனை அவன் மனைவி எதிர் பார்த்திருந்தாள். திண்ணையிலே அண்ணன் அமர்ந்திருந் தான். அண்ணி பக்கத்திலே நின்றாள்.

அவர்களைப் பார்த்ததும் தம்பி மேலும் அதிகமாக நொண்ட ஆரம்பித்தான். "தம்பி, ஏன் இப்படி நொண்டுகிறாய்? காலிலே என்ன?" என்று அண்ணன் பரிவோடு கேட்டான்

"அண்ணா, எனக்கு என் மாமனர் வீட்டிலிருந்து வ்ந்ததே சீர்க்கடாரி, அது பால் கறக்கும்போது உதைத்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டு தம்பி உட்கார்ந்தான்.  அண்ணனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. சீர்க்கடாரி இன்னும் வரவில்லை என்பதை அவன் இப்படிக் கிண்டலாகச் சுட்டிக் காண்பிக்கிறான் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியாமலா போகும்?

அண்ணன் இந்தக் கிண்டல் வார்த்தைக்குத் தன் பங்கையும் செலுத்த நினைத்தான். அவனுக்குத் தன் மாமனர் வீட்டிலிருந்து சீதனமாகப் பஞ்சு மெத்தை வர வில்லையாம். அதைத் தன் மனைவிக்குச் சுட்டிக்காட்ட எண்ணி, 'தம்பி, கால் வலியோடு கீழே உட்காராதே. உன் அண்ணி சீதனமாகக் கொண்டு வந்திருக்கும் பஞ்சு மெத்தையிலே படுத்துக்கொள்' என்றான் அவன்.

பெண்கள் இரண்டு பேரும் உள்ளம் வெதும்பினர்கள். அப்படி அவர்கள் துன்பப்பட வேண்டும் என்பதற்காகவே அண்ணனும் தம்பியும் பேசினார்கள்.

சீர்வரிசைகள் சரியானபடி உரிய காலத்தில் கொடுக்கா விட்டால் எத்தனையோ விபரீதங்கள் ஏற்படுவதுண்டு . கையில் பொருளிருப்பவர்களுக்கு இந்தத் துன்பம் இல்லை. தாராளமாக அவர்கள் சீதனம் கொடுக்க முடியும். அப்படிக் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒருவனைப்பற்றி ஒரு நாடோடிப் பாடல் வருணிக்கிறது. அவன் தந்த சீதனத்தைப் பாட்டிலேயே பாருங்கள்:

என்னென்ன வித்துவகை கொண்டுவந்தான்.பள்ளனவன்
முத்துச்சம்பா, மிளகுசம்பா, அன்னச்சம்பா, அழகுசம்பா
ஆயிரம் தானியங்கள் கொண்டுவந்தான் பள்ளனவன்
வெள்ளைக்குதிரை யுடன் விருதுகொண்டு வந்தானவன்
வெண்சாமரை யதுவும் கொண்டுவந்தான் பள்ளனவன்
செவ்விளநீர் தான் குடிக்க தென்னந்தோப்பு சீதனம்

நல்ல நல்ல பழம்பறிக்க மாந்தோப்பு சீதனம்
இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திர பள்ளனவன்
கோவிலுக்கு ஏற்ற நல்ல கொய்யாக்கனிகொண்டு
வந்தான்
சன்னதிக்கு ஏற்றநல்ல தார்வாழை கொண்டுவந்தான்
மாப்பிள்ளைக்கு ஏற்றநல்ல மணவரையும் கொண்டு
வந்தான்
இத்தனையும் கொண்டுவந்தான் தேவேந்திரப்
பள்ளனவன்