காற்றில் வந்த கவிதை/மழைப் பாட்டு
பிச்சை எடுக்க வருகின்றவர்களில் எத்தனையோ வகை உண்டு. கூன், குருடு, நொண்டி முதலான உடற் குறைகளைக் காட்டிப் பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகை. இவர்களைக் கண்டவுடனே, ஐயோ பாவம் என்று இரக்கம் ஏற்படுவது இயல்பு. அதனால் மக்கள் இவர்களுக்குத் தங்களாலான உதவியைச் செய்யப் பரிவோடு முன்வருவார்கள்.
ஆனல், உடம்பிலே குறையில்லாமல் இருக்கிறவர்களிடத்திலே அவ்வளவு பரிவு ஏற்படுவதில்லை. தள்ளாத வய தென்றாலும் அதற்காக இரக்கம் பிறக்கும். நல்ல வாலிபப் பருவத்திலே பிச்சை கேட்க வருகின்றவர்களிடம் பொதுவாக இரக்கம் ஏற்படுவதில்லை. “உமக்கென்ன, ஏதாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?" என்று பலர் கேட்பார்கள்.
இள வயதுக்காரர்களென்ருலும் மழைப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தால் உழுது பயிர் செய்யும் விவசாயிகள் நிறைந்த கிராமங்களில் அவர்களுக்குத் தாராளமாகப் பிச்சை கிடைக்கும். மழைப் பாட்டுக்காரர்கள் வந்தால் விரைவில் மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
"மழை சீக்கிரம் வருமா?" என்று எல்லோரும் ஆவலோடு கேட்பார்கள்.
"குறி கேட்டு வந்திருக்கிறேன். மழை நிச்சயம் பெய்யும். குறி சொல்லாவிட்டால் நான் இங்கே மழைப் பாட்டுப் பாடிக்கொண்டு வருவேனா?’ என்பான் மழைப் பாட்டுக்காரன்.
குடியானவர்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாட்டுக் காரனுக்குப் பலவகையான தானியங்களைப் பிச்சையாகப் போடுவார்கள். அவனுக்கு நல்ல வரும்படி.
வழக்கமாக மழைப் பாட்டுக்காரன் தனியாக வர மாட்டான். கூடத் தன் மனைவியையும் கூட்டி வருவான். இருவருமாகச் சேர்ந்துதான் பாடுவார்கள்.
மழை எப்படிப் பெய்யும் என்பதை அவர்களுடைய பாட்டே அழகாகச் சொல்லும். ஊசி போல மின்னி மின்னி மழை பெய்யுமாம். ஊர் செழிக்கவும், பட்டணம் செழிக்கவும், காடு செழிக்கவும் மழை பெய்யுமாம். இதுவரை பெய்யாத அளவுக்குப் பெரிய மழை பெய்யுமாம்.
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயா மழை பெய்யுமாலோ
நல்ல மழை பெய்யுமாலம்மா
நாடு செழிக்கப் பெய்யுமாலோ
ஊசி போல மின்னி மின்னி
ஊர் செழிக்கப் பெய்யுமாலோ
காசு போலே மின்னி மின்னிக்
காடு செழிக்கப் பெய்யுமாலோ
பணத்தைப் போல மின்னி மின்னிப்
பட்டனமெல்லாம் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயா மழை பெய்யுமாலோ
நல்ல மழை பெய்யுமாலம்மா
நாடு செழிக்கப் பெய்யுமாலோ
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயா மழை பெய்யுமாலோ
[பெய்யுமால்-பெய்யும்; ஆல் என்பது அசை பேயா மழை-இதுவரை பெய்யாத அவ்வளவு பெரிய மழை. காசு போலே-பொற்காசு போலே. பணத்தைப் போலேவெள்ளிப் பணத்தைப் போலே.]
மழை பெய்கின்ற பருவம் பார்த்துத்தான் மழைப் பாட்டுக்காரர்களும் வருவார்கள். ஆதலால் அவர்கள் வாக்குப் பெரும்பாலும் பொய்யாகாது.
உழவனுடைய உள்ளம் எப்பொழுதும் தாராளமானது. புடன் செழிக்க வழி பிறக்கின்றதென்ருல் அவன் உள்ளம் பூரித்துப் போவான். பிறகு தானியம் பிச்சை போடுவதில் அவன் தயங்குவானா?