உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு/பாடல் 01-10

விக்கிமூலம் இலிருந்து
(புறநானூறு பாடல் 01-10 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பாடல்:01 (கண்ணிகார்நறுங்)

[தொகு]

கடவுள் வாழ்த்து

[தொகு]
(இறைவனின் திருவுள்ளம்)

பாடியவர்: பெருந்தேவனார்

[தொகு]
பாடப்பெற்றோர்
சிவபெருமான்
  1. கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
    வண்ண மார்பின் தாருங் கொன்றை;
    ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
    சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
    கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
    மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
    பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
    தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
    பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
    பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
    எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
    நீரறவு அறியாக் கரகத்துத்,
    தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

பாடல்:02 (மண்திணிந்த)

[தொகு]
(போரும் சோறும்)

பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.

[தொகு]


;பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.

  1. மண் திணிந்த நிலனும்,
    நிலம் ஏந்திய விசும்பும்,
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்,
    தீ முரணிய நீரும், என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
    போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
    வலியும், தெறலும், அணியும், உடையோய்!
    நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
    வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
    யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
    வான வரம்பனை! நீயோ, பெரும!
    அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம்பதின் மரும்பொருது, களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
    பாஅல் புளிப்பினும், பகல்இருளினும்,
    நாஅல் வேதநெறி திரியினும்
    திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
    நடுக்கின்றி நிலியரோ வத்தை; அடுக்கத்துச்,
    சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற், றுஞ்சும்
    பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
திணை
பாடாண் திணை;
துணை
செவியறிவுறூஉ, வாழ்த்தியலுமாம்.
சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது

பாடல்:03 (உவவுமதி)

[தொகு]
(வன்மையும் வண்மையும்!)

பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.

[தொகு]


;பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.

  1. உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
    நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
    ஏம முரசம் இழுமென முழங்க,
    நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
    தவிரா ஈகைக், கவுரியர் மருக!
    செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
    பொன் னோடைப் புகர் அணிநுதல்
    துன்னருந் திறல் கமழ்கடா அத்து
    எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
    கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
    பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
    நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
    பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
    விலங் ககன்ற வியன் மார்ப!
    ஊர் இல்ல, உயவு அரிய,
    நீர் இல்ல, நீள் இடைய,
    பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
    செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
    அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
    திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
    உன்ன மரத்த துன்னருங் கவலை,
    நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
    முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
    இன்மை தீர்த்தல் வன்மை யானே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது.

பாடல்:04 (வாள்வலந்தர)

[தொகு]

தாயற்ற குழந்தை!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.

  1. வாள்,வலந்தர, மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன!
    தாள், களங்கொளக், கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
    தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
    மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
    கறுழ் பொருத செவ் வாயான்,
    எருத்து வவ்விய புலி போன்றன;
    களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
    நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
    மாக் கடல் நிவந் தெழுதரும்
    செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
    அனையை ஆகன் மாறே,
    தாயில் தூவாக் குழவி போல,
    ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

திணை: வஞ்சி;

துறை
கொற்றவள்ளை
சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது.

பாடல்:05 (எருமைஅன்ன)

[தொகு]

அருளும் அருமையும்!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

பழங்குறிப்பு
  1. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டஞான்று நின்னுடம்பு பெறுவாயாகென,
    அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது.

பாடல்:06 (வடாஅதுபனிபடு)

[தொகு]

தண்ணிலவும் வெங்கதிரும்!

பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு.

  1. வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
    குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
    குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
    கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
    நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
    ஆனிலை உலகத் தானும், ஆனாது,
    உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
    தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
    பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
    செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
    கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
    சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
    பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
    பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
    இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
    வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
    நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
    செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
    மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
    ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
    தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
    தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
    மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!

பாடல்:07 (களிறுகடைஇய)

[தொகு]

வளநாடும் வற்றிவிடும்!

பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோ ன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி. துறை: கொற்றவள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.

  1. களிறு கடைஇய தாள்,
    கழல் உரீஇய திருந்துஅடிக்,
    கணை பொருது கவிவண் கையால்,
    கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
    மா மறுத்த மலர் மார்பின்,
    தோல் பெயரிய எறுழ் முன்பின்,
    எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
    ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
    கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
    இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
    தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
    மீனின் செறுக்கும் யாணர்ப்
    பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

பாடல்:08 (வையம்காவலர்)

[தொகு]

கதிர்நிகர் ஆகாக் காவலன்!

பாடியவர் : கபிலர்.

= பாடல்:01 கடவுள


பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : (சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே).
திணை : பாடாண். துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.

  1. வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
    போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
    இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
    ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
    கடந்து அடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
    பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
    மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

பாடல்:09 (ஆவும் ஆனியல்)

[தொகு]

ஆற்றுமணலும் வாழ்நாளும்

பாடியவர் : நெட்டிமையார்.

[தொகு]


பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.

துறை
இயன்மொழி.
குறிப்பு
இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,

இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.

‘ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்

கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்

எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்

செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின், நெடியோன்

நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!

பாடல்:10 (வழிபடுவோரை)

[தொகு]
குற்றமும் தண்டனையும்!

பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.

[தொகு]
பாடப்பட்டோன்
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை
பாடாண்.
துறை
இயன்மொழி.

வழிபடு வோரை வல்லறி தீயே!

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;

நீமெய் கண்ட தீமை காணின்,

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;

வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,

தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;

அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்

மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!

செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,

நெய்தருங் கானல் நெடியோய்!

எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_01-10&oldid=1397492" இலிருந்து மீள்விக்கப்பட்டது