உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு/பாடல் 261-270

விக்கிமூலம் இலிருந்து


261

கழிகலம் மகடூஉப் போல!

[தொகு]

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: கரந்தை துறை: கையறு நிலை

அந்தோ! எந்தை அடையாப் பேரில்;
வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்,
வெற்றுயாற்று அம்பியின் எற்று ? அற்று ஆகக்
கண்டனென், மன்ற ; சோர்க, என் கண்ணே;
வையங் காவலர் வளம்கெழு திருநகர்,
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,
நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்,
கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய
கழிகலம் மகடூஉப் போல
புல்என் றனையால், பல்அணி இழந்தே.

262

தன்னினும் பெருஞ் சாயலரே!

[தொகு]

பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்)

நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-
ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

263

களிற்றடி போன்ற பறை!

[தொகு]

பாடியவர்
பாடப்பாட்டோர்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல ! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

264

இன்றும் வருங்கொல்!

[தொகு]

பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?

265

வென்றியும் நின்னோடு செலவே!

[தொகு]

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

266

அறிவுகெட நின்ற வறுமை!

[தொகு]

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்ப·றேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
ஆசாகு என்னும் பூசல்போல,
வல்லே களைமதி அத்தை- உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே!


267- 268 கிடைத்தில

[தொகு]

=== கருங்கை வாள் அதுவோ!=== 269

பாடியவர்: ஔவையார்
திணை: வெட்சி துறை: உண்டாட்டு

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை,
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்,
கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்,
தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.

270

ஆண்மையோன் திறன்!

[தொகு]

பாடியவர்: கழாத்தலையார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே-
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே ; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.
விழுநவி பாய்ந்த மரத்தின்,
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_261-270&oldid=1397510" இலிருந்து மீள்விக்கப்பட்டது