புறநானூறு/பாடல் 301-310
01-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
101-110 111-120 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200
201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
301
அறிந்தோர் யார்?
[தொகு]பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: தும்பை துறை : தானை மறம்
பல் சான்றீரே ! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்!
எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்
எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே!
‘பலம்’ என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி,
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி,
எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!
302
வேலின் அட்ட களிறு?
[தொகு]பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை துறை : குதிரை மறம்
வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும்,
தண்பெயல் உறையும், உறையாற் றாவே.
303
மடப்பிடி புலம்ப எறிந்தான்!
[தொகு]பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை துறை : குதிரை மறம்
நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்,
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
304
எம்முன் தப்பியோன்!
[தொகு]பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை துறை : குதிரை மறம்
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;’நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியடு, ஓராங்கு
நாளைச் செய்குவென் அமர்’ எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;
‘இரண்டா காது அவன் கூறியது’ எனவே.
305
சொல்லோ சிலவே!
[தொகு]பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை துறை : பார்ப்பன வாகை
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.
306
ஒண்ணுதல் அரிவை!
[தொகு]பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
307
யாண்டுளன் கொல்லோ!
[தொகு]பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை துறை : களிற்றுடனிலை
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன;
கான ஊகின் கழன்றுகு முதுவீ
அரியல் வான்குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு,
வெஞ்சின யானை வேந்தனும், ‘ இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்’ எனப்,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.
308
நாணின மடப்பிடி!
[தொகு]பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை துறை : மூதின் முல்லை
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே;
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
309
என்னைகண் அதுவே!
[தொகு]பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
திணை: தும்பை துறை : நூழிலாட்டு
இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்லரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றோர், ‘பாசறை
உளன்’ என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
310
உரவோர் மகனே!
[தொகு]பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை துறை : நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.