உள்ளடக்கத்துக்குச் செல்

புறநானூறு/பாடல் 91-100

விக்கிமூலம் இலிருந்து


91

எமக்கு ஈத்தனையே!தமிழ்கருத்து

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: வாழ்த்தியல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

92

மழலையும் பெருமையும்!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை. துறை: இயன் மொழி.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.

93

பெருந்தகை புண்பட்டாய்!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே.

94

சிறுபிள்ளை பெருங்களிறு!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.

95

புதியதும் உடைந்ததும்!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
தொண்டைமானிடம் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது.
திணை : பாடாண். துறை: வாண் மங்கலம்,

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

96

அவன் செல்லும் ஊர்!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
‘விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ?’ என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

97

மூதூர்க்கு உரிமை!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே;
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது?’ தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போ ரான்’ எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அ·து அறிந்துஆ டுமினே.

98

வளநாடு கெடுவதோ!

[தொகு]

பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம்.

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
தோள் கழியடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்,
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே;

99

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

[தொகு]

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,
பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல்,
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு,

100

சினமும் சேயும்!

[தொகு]

பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

கையது வேலே; காலன பு¨ ழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக
வெட்சி மாமலர், வேங்கையடு விரைஇச்,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரி வயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_91-100&oldid=1397503" இலிருந்து மீள்விக்கப்பட்டது