ஆறுமுகமான பொருள்

விக்கிமூலம் இலிருந்து

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஆறுமுகமான பொருள்


(கலைமணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்)


 


கலைமணி தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

நினைவு அறக்கட்டளையின்

இரண்டாவது வெளியீடு

‘ஆறுமுகமான பொருள்’
கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : அமரர்.கலைமணி.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், ஐ.ஏ.எஸ்.
உரிமை : ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜனி சுப்பிரமணியம்
வெளியீடு : கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்
நினைவு அறக்கட்டளை
‘பாஸ்கர நிலையம்’
31, 7வது குறுக்குத்தெரு
சாஸ்திரிநகர், சென்னை - 600 020
491 16 15
ஒளி அச்சுக் கோர்வை : அடையாறு மாணவர் நகலகம்,
அடையாறு, சென்னை - 600 020.
அச்சாக்கம் : மாணவர் மறுதோன்றி அச்சகம்,
பாரிமுனை, சென்னை - 600 001.
விலை : ரூ.30/

முகவுரை


“ஆறுமுகமான பொருள்” என்ற இந்த நூல் என் தந்தையார், தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், வெவ்வேறு கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உதிரிப்பூக்களைப் போலத் தனித்தனியாக, கந்த சஷ்டி விழாக்களின் போது வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரைகளை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. இறைவன் கண்களினின்று புறப்பட்ட ஆறு பொறிகளிலிருநது உருவான ஆறு குழந்தைகளை, அன்னை உமையவள் சேர்த்தனைக்க அறுமாமுகவன் உருவான கதை நமக்குத் தெரியும். அந்த உமையவளின் கருணையினாலே இந்தக் கட்டுரைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, "ஆறுமுகமான பொருள்" உருவாகியிருக்கிறது. ஆசிரியர் அந்த வெளியீடுகளுக்கு எழுதிய முன்னுரைகளையே இந்த நூலுக்கும் முன்னுரையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முன்னுரையே இந்த நூலுக்குச் சரியான விளக்கமாக அல்மைந்து விடும் என்றும் நம்புகிறேன்.

ஆசிரியர் தொண்டைமான் அவர்கள் வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி எழுதிய நூலில், முருகன் கோயில் கொண்டிருக்கும் தலங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவை முப்பதுக்கும் மேலிருக்கும். தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானுக்கு அடுத்தபடியாக முருகப் பெருமானுக்குத்தான் அதிகப்படியான கோயில்கள். அறுபத்துநான்கு என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். அதற்கும் மேலேயே இருக்கும். முருகன், தமிழ் மக்கள் தொன்று தொட்டு வணங்கி வரும் தெய்வம். ஆகவே முருகனைப் பற்றிய தத்துவங்களையும், செய்திகளையும் எத்தனை முறை சொன்னாலும், எப்படி எப்படிச் சொன்னாலும் அது தேனும் தினை மாவும் போல இனிக்கத்தான் செய்யும். அந்த நம்பிக்கையில்தான் “ஆறுமுகமான பொருள்” வெளி வருகிறது.

இந்த நூலுக்கு சித்தாந்தச் செல்வர், பேராசிரியர் டாக்டர் பா.இராமன் அவர்கள் அருமையான அணிந்துரை வழங்கியிருக்கிறார். அவர் சிறந்த ஆன்மீகச் செல்வர். நல்ல முருக பக்தர். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளிடத்தும், அவருடைய நூல்களிடத்தும் எல்லையில்லாத ஈடுபாடு உடையவர். பாம்பன் சுவாமிகளின் நூல்களுக்கு உரை எழுதுவதையே தம் வாழ்க்கையின் தலையாய பணியாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். இந்தக் கட்டுரைகளையெல்லாம் ஆர்வத்துடன் வரிவிடாமல் படித்து, அனுபவித்து இந்த அணிந்துரையை அளித்திருக்கிறார். உண்மையில் இந்த நூலுக்கே அது அணி சேர்க்கிறது. அவருக்கு நன்றி சொல்ல நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த முகவுரையை முடிக்கும் முன்னர் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நூல், ஆசிரியர், தொண்டைமான் அவர்களின் பேத்தி, டாக்டர் உமா தேவசேனாவின் நிதியுதவியுடன் "தொண்டைமான் அறக்கட்டளையின்” இரண்டாவது வெளியீடாக உலா வருகின்றது. டாக்டர் உமா தேவசேனா கந்த சஷ்டியன்று பிறந்தவள் என்பது பொருத்தமாகவும் அமைந்துவிட்டது.

ராஜேஸ்வரி நடராஜன்

பாஸ்கர நிலையம்

31, 7வது குறுக்குத் தெரு

சாஸ்திரி நகர், சென்னை - 20

சிவசிவ
திருவருள்திரு திருவண்ணமலை ஆதீனம்
தெய்வசிகாமணி பொன்னம்பல குன்றக்குடி - 630 206
தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிவகங்கை மாவட்டம்
[ஆதீனகர்த்தர்] தமிழ்நாடு
போன்
குன்றக்குடி - 04:577-54267
காரைக்குடி - 04555-37768
நாள் : 20.8.99


வாழ்த்துரை

கலைமணி தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் “ஆறுமுகமான பொருள்” என்ற நூலின் வாயிலாக நம்மை ஆறுமுகப் பெருமானிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் மலையின் உச்சியிலும் அலையின் ஓரத்திலும், சோலையின் நடுவிலும் என்று, எங்கும் கோயில்கொண்ட அருமை போற்றுதற்குரியது. ஆறுமுகத்தை அறிவியல் உண்மையோடு தொடர்புபடுத்தியிருப்பது ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது. "நாமார்க்கும் குடி அல்விலாம்” எனும் பாடல் பற்றிய ஆசிரியரின் கருத்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

செந்தூர் முருகன் காட்டும் அற்புதம் மகிழ்ச்சிக்குரியது. சூரன்வதை என்பது கொடிய அரக்க உடலை அழித்தது மட்டும் அல்ல. நம் உள்ளத்தில் மறைந்துள்ள ஆசை, கோபம், வஞ்சகம், பொறாமை முதலிய குணங்களை மாற்றுவதின் மூலமே அன்பினை அடைய முடியும். அன்புதான் அனைத்திற்கும் மூலம் என்பார்கள். நம்மிடம் உள்ள அரக்க குணங்கள் ஒழிய அருள் உள்ளம் மலரும்.

காவடி எடுக்கும் அருமைப்பாட்டை விளக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. முருகப்பெருமான் சூரபதுமனை மயிலாகவும், சேவற்கொடியாகவும் மாற்றியது பற்றிய விளக்கம் பெருமைக்குரியது. குமரகுருபரருக்கு அருள்பாலித்த அருமைப்பாடு எண்ணி எண்ணி நெகிழத்தக்கது. அரக்கனுக்கும் அருள்பாலித்த அருள் உள்ளம் எண்ணி

....2

திருமுறைகளே நமது மறை ★ திருக்குறளே நமது பொதுமறை

சிவசிவ
திருவருள்திரு திருவண்ணமலை ஆதீனம்
தெய்வசிகாமணி பொன்னம்பல குன்றக்குடி - 630 206
தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிவகங்கை மாவட்டம்
[ஆதீனகர்த்தர்] தமிழ்நாடு
போன்
குன்றக்குடி - 04:577-54267
காரைக்குடி - 04555-37768
நாள் : 20.8.99


..2..


இன்புறத்தக்கது. மிகச் சிறப்பாகக் குமரக் கடவுளின் அருள்பாலிக்கும் அன்பு உள்ளத்தையும் தெளிவுபட எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

அழகுக் கடவுள் குமரனை அழகும் அன்பும் அருளும் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

இந்நூலைத் தங்கள் தந்தையார் கனவு நனவாகும் வண்ணம் வெளியிடக் கடும் முயற்சி செய்த திருமதி.ராஜேஸ்வரி அம்மையார் அவர்களின் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் இணைப்பாக எழுதியுள்ள அருமை பாராட்டுக்குரியது. இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிட உதவிய பதிப்பகத்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி, வாழ்த்துக்கள்!

என்றும் வேண்டும் இன்ப அன்பு.


பொன்னம்பல அடிகளார்
 

திருமுறைகளே நமது மறை ★ திருக்குறளே நமது பொதுமறை

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

திருச்சிற்றம்பலம்

அருநூற்புலமை ஆன்றோர்
சித்தாந்தச் செல்வர்
பேராசிரியர் டாக்டர்
ப. இராமன், எம்.ஏ., பி.எச்.டி.

அணிந்துரை

"இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்ற தமிழ் விடு தூதுப் புலவரைப் போல் இருந்தமிழுக்காக இருந்த பெரியார். நம் வணக்கத்திற்குரிய திரு.தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். மாவட்ட ஆட்சியராய் உயர்ந்த பதவி வகித்தாலும் தமிழ்மொழி மீது ஆராக் காதல் கொண்டு தமிழுக்கும் சமயத்திற்கும் பெருந்தொண்டு செய்து வந்தார்கள். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றபடி தம் தமிழ்ப் பேச்சையும் எழுத்தையும் இறைவன் பெருமை பேசுவதில் பயன்படுத்தி வந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழன்னை ஈன்ற தவப்புதல்வர்களில் இச்சான்றோரும் ஒருவர் எனின் மிகையாகாது.

இவர்கள் எழுத்திலும் பேச்சிலும் எளிமை, இனிமை, ஆழமுடைமை, செந்தமிழ், நகைச்சுவை, ஆய்வுத் திறன், தெளிவான முடிவு முதலிய சிறப்புக்கள் பொதிந்து கிடக்கும். எளிதில் உணர்ந்து கொள்ள முடியாத இலக்கிய, சமயக் கருத்துக்களை, கதைகளை எடுத்துக் கூறி பாமரரும் புரிந்து கொள்ளச் செய்து விடுவார்கள்.

இவர்கள் கொண்டிருந்த தமிழ்ப் பற்றால் தமிழ்க் கடவுளான செவ்வேட் பரமனிடம் இவர்கள் அடைக்கலமானதில் வியப்பில்லை. 'ஆறுமுகமான பொருள்' என்ற அருமையான நூலில் இவர்கள் ஆறுமுகன் அடியார்களை அப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துகிறார்கள் என்பதை நூலுக்குள் நுழைந்தவுடன் அறிந்து மகிழலாம். இவ்வகையில் இவர்களை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனலாம்.

முதலில், 'ஆறுமுகமான பொருள் எனத் தொடங்கிக் கந்தர் சஷ்டி கவசத்தில் இந்நூல் முடிகிறது. பன்னிருகை வேலனுக்குப் பன்னிரண்டு கட்டுரை விளக்கம் தானே பொருத்தம்? ஆறுமுகன் பெருமையைச் சற்று கேட்டுச் சிந்தித்துத் தெளியும் போது நாள்தோறும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தால் தானே அக் கந்தவேள், நம் உயிருக்கும் உடம்புக்கும் கவசமாக இருந்து காத்தருள்வான்.

ஆசிரியர், "ஆறு முகமான பொருள்" என்ற கட்டுரையில் குணங்கள் அல்லது எலக்ட்ரான்களின் ஆறு கூறும் என்பவற்றின் உருவகமே ஆறு முகங்கள் என அறிவியல் வழிநின்று விளக்குகின்றார்கள். இந்த அறிவியல் காலத்திற்கு இத்தகைய விளக்கமன்றோ தேவை.

ஆறுபடை வீடு என்பதில் அறுமுகன் அடியார்களிடத்தில் குழப்பம் நிலவுகின்றது. ஆற்றுப்படை என்பதில் ‘ற்’ ஐ விட்டுவிட்டு ஆறுபடை என்று கூறிப் பின்பு படைக்கு வீடமைத்து அறுபடை வீடாக்கி விட்டார்கள் என மிக்க நயமாகக் கூறுகிறார்கள். "என்னுடன் வாருங்கள் முருகன் திருக்கோலத்தையும் திருத்தலப் பெருமையையும் காட்டுகிறேன்" என்று ஆறுபடை வீட்டிற்கும் நம்மை அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். எந்தச் செலவும் பயணத் துன்பமும் இல்லாமல் ஆறு திருத்தலக் காட்சியை அனுபவிக்கும்படி செய்துவிடுகிறார்கள். முருகன் குறிஞ்சி வேந்தனாகத் தோன்றி எப்படி எல்லாம் ஏனைய நிலங்களுக்கு வந்தான் என்ற செய்தியையும் அற்புதமாக விளக்கியுள்ளார்கள்.

முருகனைப் பாலனாய், குமரனாய், மங்கையர் மணாளனாய், வேடனாய், ஞானாசிரியனாய், சேனைத் தலைவனாய், புகழ்ந்து பாடியுள்ள முருக இலக்கியங்களைப் படித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்று கும்பிடு போட்டுவிட்டு நம் போன்ற சராசரி மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கி விடுவோம். இப்பெருந்தகை, வேலிறைவன், எறுமயில் ஏறி விளையாடியது எங்கே? ஈசருடன் ஞானமொழி பேசியது எங்கே? என்று அவன் மூர்த்தி வடிவங்கள் இருக்கும் இடமெல்லாம் தேடிக் கண்டுபிடிதது அந்தந்தத் தலத்திற்குச் சென்று கண்குளிரக் கண்டு களியுங்கள் என்று நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள். முருகனடியார்கள் இந்த வள்ளலுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

திருவாறெழுத்து என்னும் சரவணபவ ஒரு மகாமந்திரம். இதனைச் செபித்துவந்தால் இகத்தில் எல்லா நம்மைகளையும் அளிக்கும். இறுதியில் முத்தியையும் தரும். இதனைச் சரம் - நீர் வானம் - நாணற்புல், என்று பொரள் கூறி நாணற் புல் செறிந்த பொய்கையில் தோன்றியவன் (பவன்) என்று கூறுவது வழக்கம். இவர்கள் இப் பொருளுடன் வேறு நுட்பமான பொருளையும் கூறிவிட்டு இவற்றிற்குமேல் சரம் - நீர் வணம் = வசிப்பவன், அதாவது நீரில் வசிப்பவன். அதாவது பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணன் என்றார்கள். சரவணபவன் நாராயணனாகி விட்டானே! ஆம்! நாராயணன் தான். இவர்கள் சொல்லவில்லை. திருச்செந்தூர்ப் புராணம் சொல்கிறது. இப்படிச் சமரசம் கண்டு மால்மருகன், மருகனே மால் என்று காட்டுகின்றார். அருணகிரிநாதர், "அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி - அகமாகி, அயனென வாகி அரியென வாகி அரனென வாகி - அவர் மேலாய்” என்று பாடி மும்மூர்த்தியும் முருகமூர்த்தி என்றுதானே கூறுகின்றார்?

குழந்தையாய் இருந்தால் கொஞ்சலாம். குழந்தை வேலன் நமக்கு உதவமாட்டானே. இப்படிக் கோபிக்கிறாராம் படிக்காசுப் புலவர். இன்னமும் சின்னவன் தானா? படித்துச் சுவையுங்கள். ஆசிரியர் திருச்செந்தில் பற்றித் தனி ஆய்வே நடத்துகிறார். புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், தேவாரம், முதில் இலக்கியங்கள் மூலம் தலத்தின் தொன்மையை விளக்குகின்றார். திருக்கோயில் கட்டிய வரலாறு, பூசை, விரதம், விழாக்கள் எல்லாம் இதில் வகுத்துக் கூறுகின்றார். சூரசம்மாரத்தில் சம்மாரம் மட்டுமல்லாமல் சூரகாரியான மருகன் பொற்சிலையாக உள்ளான் என்று டச்சுக்காரர் திருடிச் சென்றதையும் வடமலையப்பன் என்றும் அடியார் கடலில் இருந்து மீட்டுவந்த வரலாற்றுச் செய்தியையும் சுவையடக் கூறுகின்றார்கள்.

பழநிமலையில், முருகன் கோவணாண்டியாக நிற்கின்றான். அவன் ஞானப்பழம், "அவன் துறவியானது நம்மை எல்லாம் துறவியாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக, மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக் கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று துறவு என்றெல்லாம் உண்டா?" என அற்புத விளக்கம் அளிக்கின்றார்கள்.

வடநாட்டில் சுப்பிரமணியன் கட்டை பிரமசாரியாம். ஏன் அப்படி? “தமிழ் நாட்டுக் குறமகள் நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு சொக்கி மரமாக நின்ற முருகன் வேறு எந்த நாட்டுப் பெண்ணையும் அதிலும் மராத்தியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க விரும்புவானா என்ன?" என்ன நகைச்சுவை பாருங்கள்.

கோலக்குமரன் அழகே ஆசிரியர் சிந்தையைக் கவர்ந்த தென்பதால் மிக அற்புதமாக அழகை வருணிக்கின்றார். அந்த அழகில் நாம் மயங்குகிறோம். சிக்கல் சிங்காரவேலன், எட்டுக் குடி வேலன், எண்கண் வேலன் மூவரையும் ஒரே சிற்பிதான் உருவாக்கினான். முதலில் சிக்கலில் இளமையிலும், எட்டுக் குடியிலும் முதுமையிலும், எண்கண்ணில் கண்பார்வை இழந்த பின்பும் சிலைகளை உருவாக்கினானாம். கண்பார்வையிழந்த பின் வடித்த சிலையின் அழகை வருணிக்க முடியாதென்றால் பார்வையிருக்கும்போது செய்த சிலைகளின் அழகை என்னென்று வருணிப்பது என்கிறார்கள் ஆசிரியப் பெருமகன்.

திருமுருகாற்றுப் படையின் செய்தி முழுவதையும் இலக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார்கள். சிவபெருமானைப் பார்த்து நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்ற அஞ்சா நெஞ்சன் நக்கீரன் நெஞ்சத்தில் சிவபெருமான் அதிகம் இடம்பெறவில்லை. சிவகுமாரனே அதிகம் இடம் பெறுகின்றான் என அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

“அருணகிரி, அன்று பிரமன் கீறிச் கீறிச் என்று கையால் எழுதிய எழுத்தைக் குமரன், செந்தூர் வேலவன் தன் காலாலேயே அழித்து விடுகிறான்" என்று ஆசிரியப் பெருமகனார் நகைச்சுவையோடு சொன்னாலும், செந்தூரான் நம் விதியை மாற்றுபவன் என்ற உண்மையை நினைவுறுத்துகிறார்கள்.

குமரகுருபரர் பாடியருளிய முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் தேனினும் இனிய இலக்கியம். இது ஆசிரியப் பெருமகனார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை. குழந்தை முருகன் அம்மை மடியில் தவழ்ந்து அப்பன் திருமார்பில் குரவையாடிப் பின் கங்கையில் குதித்துக் கண் சிவக்க விளையாட்டயர்ந்து பலகுறும்புகள் செய்ததை இவர்கள் நம் கண்முன்னே ஓவியமாகக் காட்டுகிறார்கள்.

திருமலை முருகனுக்குத் தனி ஒருவராக நின்று பெரிய கோயிலைக் கட்டியதுடன், முருகனுக்குச் சேர வேண்டிய சொத்துக்களை அபகரித்தவன் மீது வழக்குத் தொடுத்து வழக்கைப் பல்லாண்டுகள் நடத்தி வென்று அச்சொத்துக்களைக் கோயிலுக்கு உடைமையாக்கி நிருவாகமும் பூசைகளும், விழாக்களும் எக்காலத்தும் செம்மையாக நடைபெற ஏற்பாடு செய்த பெண்துறவி மறவர் குல மாணிக்கம் சிவகாமி ஆத்தாள் தொண்டினையும் பெருமையினையும் இப்பெருந்தகை மறவாது கூறியுள்ளார்கள். இவர்களின் குலகுருவான தண்டபாணி சுவாமிகள் திருமலையின் உச்சியிலிருந்து உருண்டார்கள். ஒரு துன்பமும் இல்லாமல் முருகன் காத்தருளினான். அதுபோல் இவர்கள் மூக்குக் கண்ணாடி பெருங்காற்றில் அடித்துச் சென்றுவிட அதைத் தேடி எடுத்துவரப் பணியாளை ஏவினார்களாம். என்ன அதிசயம்! கண்ணாடி சிறிதும் உடையாமல் கிடைத்துவிட்டதாம். 'கந்தரநுபூதி' பெற்ற இப்பெருமகனார்க்குக் கண்ணாடி என்ன? ஞானக் கண்னையே அவன் வழங்கியருளியுள்ளான்.

மதிப்பிற்குரிய அன்புச் சகோதரியார் திருமதி. இராஜேசுவரி நடராசன் அவர்கள் ஒப்பற்ற தம் தந்தையார் வகுத்த வழியே செம்மையான வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். ஆழ்ந்த இறையுணர்வும், நிறைந்த கல்வியறிவும், சொல்வன்மையும், சமய, இலக்கியத் தொண்டுணர்வும் மிக்கவர்கள் - தம் பெருமைக்குரிய தந்தையார் விட்டுச் சென்ற ஞானச் செல்வத்தை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் நூலாக வெளியிட்டு வருகிறார்கள். "ஆறுமுகமான பொருள்" அந்த வரிசையில் ஒன்று. ஆறுமுகனிடம் அடியார்களை ஆற்றுப்படுத்தும் அற்புத நூல். தலைமுறை தலைமுறையாக வைத்துப் போற்ற வேண்டிய ஞானச் செல்வம். இதனை வெளியிட முன்வந்த சகோதரியார் திருமதி. இராஜேசுவரி நடராசன் அவர்களுக்கு முருகனடியார்கள் சார்பிலும் அடியேன் சார்பிலும் வாழ்த்தையும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
ப. இராமன்

திருச்சிற்றம்பலம்

முன்னுரை

(தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்)

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் "பிள்ளையார்பட்டி பிள்ளையார்” என்னும் ஒரு சிறு நூலை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துப் பார்த்த அன்பர் ஒருவர், "நான் கந்த சஷ்டி தோறும் முருகன் தோத்திரங்கள் அடங்கிய சிறு புத்தகம் ஒன்றை வெளியிட்டு வழங்குவது வழக்கம். இந்த வருஷமும் அப்படி ஒரு சிறு நூலை வெளியிட விரும்புகிறேன். தாங்களே சின்னஞ்சிறிய புத்தகமாக முருகனைப் பற்றி எழுதிக் கொடுங்களேன்" என்றார். இப்படி அவர் கேட்டு, சில நாள் கழியும் முன்னரே, மனைவி மக்களுடன் திருச்செந்தூர் சென்று பேரக் குழந்தைகளுக்காகச் செலுத்த வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அங்கு இரண்டு நாட்கள் தங்கி செந்திலாண்டவனைத் தரிசிக்கும் பேறும் கிடைத்தது. “சரி. ஆண்டவனது கட்டளைதான் நண்பரது வேண்டுகோளாக வந்திருக்கிறது", என்று எண்ணினேன். திருச்செந்தூர் முருகனைப் பற்றியும், அவன் கோயில் கொண்டிருக்கும் மற்ற தலங்களைப் பற்றியுமே எழுத முனைந்தேன்.

* * *

ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழாவின் போது முருகனைப் பற்றிச் சிறு நூல் வெளியிட விரும்புகின்றனர். திரு.எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளையின் மக்கள். அவர்கள் திருநெல்வேலி சாலைக்குமரன் கோயிலில் நடத்தும் விழாவில் அந்த நூலை அன்பர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்கின்றனர். இந்த முயற்சியில் என் பங்காக சில வருஷங்களுக்கு முன், "திருச்செந்தூர் முருகன்" என்ற தலைப்பிலும், பின்னர் "மூவர் கண்ட முருகன்" என்ற தலைப்பிலும் இரண்டு சிறு நூல்கள் எழுதிக் கொடுத்தேன். இந்த வருஷம் “ஆறுமுகமான பொருள்” என்ற தலைப்பில் இச்சிறுநூலை எழுதிக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பணியை இனிவரும் கந்த சஷ்டி விழாக்களிலும் செய்து தர திருவருளை இறைஞ்சுகின்றேன். பெரியவர்களோடு பெண்களும் பிள்ளைகளும் இப்புத்தகத்தைப் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஆண்டவன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்குவதற்கு இத்தகைய பணி உதவும் என்று நம்புகிறேன்.

சித்ரகூடம்
திருநெல்வேலி
20.10.63

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆறுமுகமான_பொருள்&oldid=1548127" இலிருந்து மீள்விக்கப்பட்டது